மனவோட்டத்தைப் பின்தொடர்தல்  (ஈழ எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் கதைகளை முன்வைத்து)

மனித மனம் பல்வேறு மையங்களின் தொகுப்பு. இந்த ‘மையங்கள்’ நமக்குள் இருக்கும் பலவிதமான உணர்வுகள், நினைவுகள், ஆசைகள், பயங்கள், துயரங்கள், மகிழ்ச்சிகள், பழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன. இவை ஒன்றோடொன்று பெரும்பாலும் மாறுபட்டவையாக, எதிர்மறையாக செயற்படுகின்றன. அதனால் மனம் எப்போதும் ஒரே கோட்டில் இயங்குவதில்லை. இதனால்தான் ஒரே விஷயத்தைப் பற்றி ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் சந்தேகமும் ஆர்வமும் மனத்துக்குள் எழுகின்றன.

ஆனால், சிலருக்குச் சில நேரங்களில், இந்த மையங்கள் ஒன்றுக்கொன்று நிறைந்து இசைவாகிவிட்டால், அந்த மனிதனின் செயல்பாடு மிகவும் எந்திரம் போல மாறிவிடும். ஏனெனில், அவர் மனத்தில் வேறு கருத்துகள் மோதவில்லை; ஒரு வழி மட்டுமே தெரிகிறது. இதனால் அவர் சிந்தனை மிகவும் சூழ்ச்சியற்ற, இயந்திரத்தின் இயக்கம் போல ஒரே மாதிரியாகவே நடைபெறும். இது ஆழமான சிந்தனை அல்ல; வாழ்வை உணர்ந்து புரிந்து செயல்படுவதும் அல்ல.

மனத்தில் ஒரு தூண்டுதல் (stimulus) — அது ஒரு கேள்வியாக, ஒரு நிகழ்வாக, ஒரு நினைவாக எழும்பும்போது, அது மனத்தின் இந்த மையங்களுக்குள் சுழன்று செல்கிறது. அந்தத் தூண்டுதல், மனத்தின் ஒரு மையத்திலிருந்து மற்றொன்றிற்குத் தாவி பல வினாக்களாகவும் பல பதில்களாகவும் உருமாறுகிறது. இதுவே “மன ஓட்டம்”. இந்த மன ஓட்டம் எப்போதும் ஓர் ஒழுங்கைத் தேடிக்கொண்டே இருக்கும். காரணம், மனம் தன்னுள் சமநிலையை உருவாக்கும் இயல்புடையது.

‘இந்த மன ஓட்டம் தடையின்றி, தடுமாறாமல், இடைநிறுத்தமின்றிச் சீராகப் பாய்வதே ‘சிந்தனை’ ஆகும். இதை ஓடிக் கொண்டிருக்கும் தெளிந்த ஆற்றோடு ஒப்பிடலாம். ஓர் இடத்தில் தடுப்பு இல்லை, கற்கள் இல்லை, சுழலும் நீரோட்டம் இல்லை. சிந்தனை ஓட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், யதார்த்தத்தில் நம் மனம் ஒருபோதும் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

மன ஓட்டம் இயங்குவதைக் கடிகாரத்தின் நொடிமுள்ளோடு ஒப்பிட்டு விளக்கலாம். கடிகார நொடி முள் ‘டிக்-டிக்’ என்று துடித்து துடித்து நகரும். அதுபோல நம் மன ஓட்டமும் தடைப்பட்ட இடங்களைக் கடந்து, துடித்து முன்னேறுகிறது. இந்தத் துடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் மனம் ஓர் ஒழுங்கை உருவாக்குகிறது. இந்த ஒழுங்கே ‘கருத்து’. அப்படியென்றால் ‘கருத்துக்கள்’ என்பது, அந்த நொடி நொடியாக மனம் உருவாக்கும் சிறு வடிவங்களே!

ஆனால், கருத்துகள் எப்போதும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டே இருக்கும். ஏனெனில், வாழ்க்கை கொடுக்கும் தூண்டுதல்களுக்கு நம் மனம் ஒரே மாதிரி பதில் அளிக்காது. ஒருபுறம் “இதுதான் சரி” என்ற கருத்து எழும்; அதே நேரத்தில் “ஆனால், இது தவறாகவும் இருக்கலாம்” என்ற எதிர்க் கருத்தும் எழும். இந்த மோதலே ‘மனக்குழப்பம்’.

சில நேரங்களில் இந்தக் கருத்துகள் தற்காலிகமாகச் சமரசப்படலாம். ஒரு சமநிலை ஏற்பட்டது போல தோன்றலாம். இதுவே ‘மனத் தெளிவு’. ஆனால், அந்தத் தெளிவு நீடிக்காது. ஏனெனில், மனம் தொடர்ந்து புதிய தூண்டுதல்களைப் பெறும்; புதிய கருத்துகள் உருவாகும். இலக்குகளுக்கு ஏற்ற கருத்துகளும் எதிரான கருத்துகளும் சம அளவில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அதனால் கருத்துகளின் மோதல் ஒருபோதும் முழுமையாக முடிவுறாது.

ஆக, மனம் என்பது எப்போதும் அசைவுடன் இருக்கும் பல மையங்களின் களம்; சிந்தனை என்பது அவற்றுக்கிடையே சீரான ஓட்டம்; கருத்து என்பது அந்த ஓட்டத்தின் ஒழுங்கு வடிவம்; கருத்துவேறுபாடே மனக்குழப்பம்; தற்காலிக சமநிலையே மனத் தெளிவு.

ஒரு மனிதன் எந்த இலக்குகளைத் தேர்வு செய்கிறான் என்பது வெறும் வெளிப்புற சூழல் காரணமாக மட்டும் அமையாது. அவனுடைய ஆழ்மனம் — அதாவது நெஞ்சின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் நினைவுகள், நம்பிக்கைகள், பயங்கள், ஆசைகள் — இவைதான் உண்மையில் அவன் இலக்குகளை உருவாக்குகின்றன. இந்த ஆழ்மனத்தை உருவாக்குவது அவன் வாழ்ந்த சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மரபு, குடும்ப பழக்கங்கள் முதலியவை. ஒரு குழந்தை வளரும்போதே அவன் பார்த்து உணர்ந்த அனைத்து மரபார்ந்த சித்தாந்தங்களும் அவன் உள்ளுக்குள் தேங்கி, பின்னர் அவனுடைய இலக்குகளாக வெளிப்படுகின்றன.

இலக்குகள் உருவானதும் அவற்றை நிறைவேற்ற உதவும் எண்ணங்கள், கருத்துகள், விருப்பங்கள் ஆகியவற்றை ஆழ்மனம் முன்னிறுத்தும். நாம் வாழ்வில் எதனை வேண்டுமென நினைக்கிறோமோ, அதற்கேற்ற கருத்துகள் மட்டும் அடிக்கடி நம் மனத்தில் எழும். உதாரணமாக, ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள ஒருவருக்கு நிறங்கள், காட்சிகள், வடிவங்கள் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது வரும். அதுபோலவே, ஒருவரின் இலக்கு மருத்துவராக வேண்டும் என்றால், அவன் மனம் தொடர்ந்து அதை நோக்கித் தன்னைத் தள்ளும் எண்ணங்களை உருவாக்கும்.

ஆனால், மனித மனம் ஒரே கோட்டில் அமைந்தது அல்ல. இலக்குகளுக்கேற்ற கருத்துகள் மட்டுமல்லாமல், அவற்றுக்கு எதிராக இருக்கும் சிந்தனைகளும் மனத்தில் எழும். “இது சாத்தியமா?”, “நான் முடியுமா?”, “வேறொரு பாதை நல்லதா?” போன்ற சந்தேகங்களும் தோன்றும். இந்த இலக்கை முன்னிறுத்தும் எண்ணங்களுக்கும், அதற்கு எதிராக மோதும் எண்ணங்களுக்கும் இடையே மனம் அவ்வப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும். இதுவே மனிதனின் அடிப்படை மனநிலை.

இந்த எண்ண மோதல்கள் ஒருபோதும் முழுமையாக நிறைவடையாது. அவற்றின் இடைச்சிக்கலில் உருவாகும் குழப்பமே நம்மை மேலும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும். இந்த அக மோதல்களே மனிதனைத் தனது வாழ்க்கையின் உண்மையைக் கண்டுபிடிக்கத் தொடர் முயற்சியை நோக்கித் தள்ளுகின்றன. அந்த உண்மை தேடலே “மெய்யான தேடல்”.

எழுத்தாளர்கள் இதை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் எழுத்தின் தொடக்கத்தில் எதிர்கொள்ளும் முதல் சவால் — மனித மனத்தின் இத்தகைய ஊசலாட்டங்களைப் படைப்பாக்குவது. மனிதன் மனத்தில் நடக்கும் இந்த முடிவில்லா மோதல்களைக் கதைகளாக, கவிதைகளாக, நாவல்களாக மாற்றுவது எளிதல்ல. ஆனால், அதுவே ஒரு படைப்பாளியின் உண்மையான பணி.

மெய்யான தேடலை ஏங்கியவாறு, மன உள் மோதல்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதில்தான் படைப்புலகின் மிகப்பெரிய சாதனை இருக்கிறது. பல எழுத்தாளர்கள் இந்தச் சாதனையை நோக்கிப் பயணிக்கிறார்கள்; சிலர் அதைப் பிறருக்கு உணர்ச்சியாக, சிந்தனையாகக் கொடுக்கிறார்கள். பலரால் முடியாத இந்த உள்விழிப்பை, மனத்தின் ஆழத்தில் பதிந்த போராட்டத்தை எழுத்தின் மூலம் உயிர்ப்பிக்க முடிந்தால், அது மிக உயர்ந்த கலைச் சாதனையாகும்.

அத்தகைய சாதனையைத் தமது எழுத்துகளின் வழியாக மிக நுட்பமாக நிகழ்த்தியவர் ஈழத்தின் முன்னணி எழுத்தாளரான மு. தளையசிங்கம். அவரது கதைகள் மனித மனத்திலுள்ள மோதல்களையும் ஆழ்மனத்தின் செயல்பாடுகளையும் மிகத் திறமையாக வெளிப்படுத்துகின்றன. அவரின் எழுத்து வாசகரைத் தனது சொந்த மனத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரே நேரான பாதை அல்ல. அது ஒன்றின் மேல் ஒன்று நெருக்கி அடுக்கப்பட்ட, ஒற்றுமையற்ற, உயரத்திலும் தாழ்விலும் வேறுபடும் பல கட்டங்களின் பிணைப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்டமும் ஒரு காலகட்டம், ஓர் அனுபவம், ஒரு சூழல், ஒரு மனநிலை ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதலாம். சில கட்டங்கள் நமக்கு இனிமையானவை; சில கட்டங்கள் கடினமானவை; சில விசித்திரமானவை; சில மாற்றத்தைத் திணிப்பவை. இப்படி எல்லாம் கலந்துதான் மனித வாழ்க்கை பெரிய சங்கிலி போல அமைகிறது.

இந்த அடுக்குகளுக்குள் தனிமனிதனின் பயணம் எப்படி இருக்கும்? அது ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு நிகழ்பவை அல்ல. வாழ்க்கையில் நாம் ஒரு கட்டத்தில் நின்று, அங்கேயுள்ள அனுபவங்களைச் சேர்ந்து, அந்தச் சூழலில் கலந்து, பின்னர் அதன் தாக்கத்துடன் அடுத்த கட்டத்துக்குத் தாவிச் செல்கிறோம். ஒரு மாணவர் பள்ளிக் கட்டத்தைக் கடந்து கல்லூரிக்குச் செல்வது ஓர் எடுத்துக்காட்டு. ஓர் இளைஞன் திருமண வாழ்க்கைக்குள் வருவது மற்றொரு எடுத்துக்காட்டு. இவை அனைத்தும் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கான தாவுதல்தான்.

ஆனால், இங்கே முக்கியமான உண்மை ஒன்று உள்ளது: திரும்பப் பெற முடியாத மாற்றமே வளர்ச்சி. வளர்ந்துவிட்டோம் என்றால் பழைய நிலைமையை மீண்டும் முழுமையாகப் பெற முடியாது. அதுவே வளர்ச்சியின் இயல்பு. எனவே, தனிமனிதனின் வளர்ச்சி என்பது தொடர்ந்து முன்னோக்கி, புதிய கட்டங்களுக்குத் தாவிச் செல்லும் ஒரு பயணம். அது பின்நோக்கி இயங்குவதில்லை.

ஒரு கட்டத்தை ஒருவர் கடந்துவிட்ட பின், அந்தக் கட்டத்தில் நின்றிருக்கும் சூழலும் மனிதர்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றனர். அந்தச் சூழல் தனது இயல்புப்படி வளர்ச்சியை அடைகிறது. அப்போது, ஒருவர் தாம் பழைய கட்டத்திற்குத் திரும்ப முயன்றால், அவர் புரிந்து கொள்ள முடியாத பெரும் வேறுபாட்டுக்குள் விழ வேண்டியுள்ளது. குழந்தை வயதை நினைத்து, பெரியவரான ஒருவர் மீண்டும் குழந்தை மனநிலைக்குத் திரும்ப முடியாதது போல, வாழ்க்கையின் எந்தக் கட்டத்திற்கும் அப்படியே திரும்புவது சாத்தியமில்லை.

பழைய சூழல் முற்றிலும் மாறிவிட்டதால், அந்த நிலையினுள் புதியவராகி நுழைவது மனத்திற்கு மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கும். மனிதனின் மனம் பழைய நினைவுகளில் இருந்த “அதேபோன்ற சூழல்” ஒன்றை எதிர்பார்க்கும். ஆனால், உண்மையில் அங்கே இருக்கும் நிலைமைகள் முற்றிலும் புதிதாகிவிடும். இந்தப் புதிய நிலையால் அவர் அங்குள்ளவர்களோடும் சூழல்களோடும் இணைந்து போக முடியாமல் தவிப்பார். தன் சொந்தமாக நினைத்த அந்தச் சூழலே இப்போது அவரைப் பகைவரைப்போல், அள்ளி எறிவது போலத் தோன்றும்.

இதனால், ஒரு கட்டத்திற்குத் திரும்ப முயலும் ஒவ்வொரு தருணமும் மனிதன் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறான். காரணம், மனம் நினைக்கும் பழைய அனுபவம் அங்கே இல்லை; உண்மையில் உள்ள புதிய அனுபவத்தை ஏற்க மனம் தயங்குகிறது. அவர் அக்கட்டத்தில் வாழ்ந்த போதிலும் இப்போது அங்கே அவருக்கு அந்நிய உணர்வு மட்டுமே ஏற்படும். பழைய வீடே புதியவர்களின் வீடாகி, அதில் அவர் விருந்தினராக மாறுவதுபோல இது உணரப்படும்.

வாழ்க்கையின் அனைத்து கட்டங்களும் முன்னேறு திசையில் மட்டுமே இயங்குகின்றன. மனிதன் கடந்த கட்டத்திற்குள் மீண்டும் செல்ல முயல்வது, பாய்ந்த நீரை மீண்டும் கையில் சுருட்ட முயல்வது போன்றது. அவன் வளர்ச்சியின் இயல்பே முன்னேற்றம்; பின்னோக்கிப் போவது எப்போதும் அழுத்தத்தையும் அந்நியத்தையும் மட்டும் தரும். 

“தேடல்” கதையில் ஒரு மனிதன் தாம் எப்போதோ வாழ்ந்த மிகப் பழைய வாழ்க்கைக் கட்டம் ஒன்றிற்கு மீண்டும் பின்நோக்கிச் செல்வதைத் தீர்மானிக்கிறார். இந்த முடிவே அவரது மனத்திற்குப் பெரும் சோதனையாக மாறுகிறது. மனித மனம் கடந்த காலத்தை அழகாக்கி, நினைவில் வைத்துக் கொள்ளும் இயல்புடையது. ஆனால், அந்த நினைவுகள் உருவாக்கிய உலகம் யதார்த்தத்தின் உலகத்துடன் ஒருபோதும் ஒன்றாக இருக்காது. இந்த வேறுபாடே கதையின் மைய அனுபவமாகிறது.

கதையின் நாயகன் தாம் முன்னர் படித்த கல்லூரிக்கு மீண்டும் வருகிறார். அங்கே அவர் பார்த்த ஒவ்வொரு பொருளும் — வகுப்பறை, நாற்காலி, நடைபாதை, மரங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் — அனைத்தும் அவர் நினைத்திருந்த வடிவத்திலிருந்து மாறியுள்ளன. சிலவற்றின் வடிவம் மட்டும் மாறியிருக்கலாம்; சில முற்றிலும் மறைந்துவிட்டிருக்கலாம்; சில புதியவைகளாக உருவாகியிருக்கலாம். ஆனால், அந்த மாற்றங்களை அவரது மனம் ஏற்க மறுக்கிறது. ஏனெனில், அவர் நினைத்திருப்பது “நினைவுகளின் கல்லூரி”. ஆனால், அவர் முன்னே நிற்பது “இப்போது இருக்கும் கல்லூரி”. இவ்விரண்டின் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

அவர் மனத்திற்குத் தொடர்ந்து பழைய காலத்தின் காட்சிகள் தோன்றுகின்றன. அவர் தோழர்களுடன் சிரித்த நாட்கள், அந்த இடத்தில் நடந்த உரையாடல்கள், ஆசிரியர்கள் குறிப்பிட்ட விஷயங்கள், அவர் கனவு கண்ட பாதைகள் — இவை அனைத்தும் தெளிவான காட்சிகளாக மனத்தில் எழுகின்றன. இந்தப் பழைய காட்சிகளைத் தற்போது அவர் காணும் மாறிய சூழலோடு ஒப்பிட முயன்றாலும் ஒரேயொரு விஷயம்கூடத் தன் நினைவுகளின் அமைப்புடன் பொருந்துவதில்லை. அவர் நினைத்திருந்த வடிவ சட்டத்திற்குள் புதிய சூழல் எதுவுமே அடங்க மறுக்கிறது. இது அவருக்குப் பெரிய ஏமாற்றத்தை உருவாக்குகிறது.

உண்மையில் நிகழ்ந்தவை எல்லாம் இயற்கையான மாற்றங்களே. காலம் கடந்தால் ஓர் இடம் மாறுவது சாதாரணம். ஆனால், அந்த இயல்பான மாற்றத்தைப் பற்றி அவர் மனம் ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. அவர் எண்ணியது, “அதே கல்லூரியே இருக்கும், அதேபோலத்தான் இருக்கும்” என்பதே. இந்தக் கற்பனை உடைந்து போகும் போது மனம் தாம் “ஏமாற்றப்பட்டோம்” என்று உணர்கிறது. இது உண்மையான ஏமாற்றமல்ல; ஆனால், மனத்தின் எதிர்பார்ப்பு உடைந்ததால் ஏற்படும் தாழ்வுணர்ச்சி.

இந்த ஏமாற்றம் மன அழுத்தமாக மாறுகிறது. மாற்றங்களை ஏற்கத் தயங்கும் மனம் அதிகமாகக் குழம்புகிறது. அவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் பக்குவம் அவருக்கு இல்லை. இதனால் அவர் அந்த இடத்தில் இருக்க முடியாமல் ஓடிவிடுகிறார். அந்த ஓட்டம் பயத்திலிருந்து அல்ல; அந்த மன உளைச்சலிலிருந்து தப்பிக்க நினைக்கும் பாதுகாப்பு முயற்சி. அந்த இடத்தைவிட்டுத் தள்ளிச் செல்லும்போது மட்டுமே அவரது மனம் அழுத்தத்திலிருந்து சிறிது விடுபடத் தொடங்குகிறது.

ஒரு காலத்திற்குப் பிறகு, தற்கால மாறுபாடுகளின் நினைவுகள் மங்கிவிடுகின்றன. மனம் பழைய தெளிவற்ற அமைதியில் திரும்பிப் போகிறது. பின்னர் அவர் நிம்மதியடைகிறார். ஏனெனில், மனம் பழைய காயங்களை மறந்து புதிய சமநிலையை உருவாக்கும் இயல்புடையது.

இந்தக் கதை மனித மனம் “கடந்ததை மீண்டும் பெற விரும்பும்” இயல்பையும், “கடந்தது மாறிப்போய்விட்டது என்பதை ஏற்க முடியாத” உள் போராட்டத்தையும் முழுமையாகப் பதிவு செய்கிறது. இது மனித மனத்தின் உண்மையான செயல்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

 “எல்லை கடந்த ஒரு வெறுப்பு அவனை அங்கிருந்துத் துரத்திக் கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது ஒரு நாளும் தான் அங்கு வாழ்ந்ததாகவே தெரியவில்லை”

கல்லூரி என்பது ஒரு கல்வி நிலையம் மட்டுமல்ல; அது ஒரு மனிதன் முழுமையான ஆளுமையாக உருவாகும் மிக முக்கிய காலகட்டம். மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும் நேரத்திற்கு முன்பே அவர்களின் உடலிலும் மனத்திலும் ஒரு முதிர்ச்சிக் கட்டம் ஏற்பட்டிருக்கும். உடல் வளம் பெறுகிறது; சிந்தனைத் திறன்கூடி வருகிறது; உணர்ச்சிகள் நெருடலாகவும் ஆழமாகவும் மாறத் தொடங்குகின்றன. இந்த நிலையில்தான் அவர்கள் கல்லூரி அனுபவங்களில் மூழ்குகின்றனர். இந்த அனுபவங்கள் சாதாரண சம்பவங்களாக மட்டும் இருக்காது; இவை அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் முக்கியமான அடிப்படை நினைவுகளாக மாறுகின்றன. பிறகு அவர்கள் வாழ்க்கையில் எங்குச் சென்றாலும் இந்தக் கல்லூரி நினைவுகள் இனிய அதிர்வுகளாக மனத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

இந்நிலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான மன மாற்றம் “அன்பு” பற்றியது. கல்லூரி வயது என்பது ஒருவர் தம்மை யாராவது புரிந்துகொள்ள வேண்டும், நேசிக்க வேண்டும் என்று தார்மீகமாக நாடும் காலம். அதேபோல், தாங்களும் ஒருவரை நேசிக்க வேண்டும் என்ற தேடலிலும் இருப்பார்கள். இது எந்தத் தவறான உணர்ச்சியிலும் தொடங்குவது அல்ல; அது மனித மனம் இயல்பாகத் தேடும் பாசம் மற்றும் நெருக்கம் பற்றியது. மனம் தனிமையைத் தாங்க முடியாததால், ஒருவரின் அன்பை நாடி தன் மனத்தை மற்றொருவரிடம் சேர்த்துக்கொள்ள முயலும்.

இந்தத் தேவைகள் நிறைவேறும் தருணத்தில் இரு மனங்களுக்கு இடையே உருகிய பாசம் உருவாகும். அவர்கள் தங்களைப் பற்றியும் எதிர்காலக் கனவுகளையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இதே சமயத்தில் இன்னொரு உண்மை நடக்கிறது—அன்பின் அருகே காமம் ஒளிந்து நிற்கிறது. மனித மனம் நெருக்கத்தை உருவாக்கும் பொழுது உடல் நெருக்கத்தையும் தானாகவே நாடத் தொடங்குகிறது.

இந்த நிலையில் உருவாகும் உணர்வு பலருக்குக் “காதல்” என்று தோன்றும். ஆனால், அவை உண்மையான காதலா அல்லது உடல் ஈர்ப்பா என்பது பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. காரணம், அவர்கள் திருமணம், பொறுப்பு, எதிர்கால வாழ்க்கை போன்ற விஷயங்களை இன்னும் முழுமையாகச் சிந்திக்கத் தெரிந்த நிலைமையில் இருப்பதில்லை. அவர்கள் தேடுவது உணர்ச்சி நெருக்கம் மற்றும் உடலின் புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டிய ஆர்வம் மட்டுமே.

இதனால், கல்லூரி வயதில் உருவாகும் காதல்கள் பெரும்பாலும் “உடல் தொடுகை” என்ற நிமிட உணர்ச்சியில் முடிகின்றன. இது தவறானது என்று குற்றஞ்சாட்டப் படுவதில்லை; ஆனால், அது முழுமையான காதல் அல்ல என்பதை உணர வேண்டும். உண்மையான காதல் என்றால் பொறுப்பும் எதிர்காலக் கவலையும் ஒன்றாக வாழ வேண்டிய உறுதியும் கூடவே வரும். ஆனால், இந்த வயதில் உருவாகும் உறவுகள் அவ்வளவாக ஆழமடையாமல், உடனடி உணர்ச்சி அவசரத்தில் மட்டுமே இயங்குகின்றன.

இந்த உண்மையைச் சொல்வது விமர்சனம் அல்ல; அது மனித மனம் கல்லூரி வயதிலே இயற்கையாகச் சந்திக்கும் உளவியல் மாற்றங்களின் விளக்கம். இவ்வாறு கல்லூரி காலத்தில் உருவாகும் அன்பும் காமமும் அனுபவத்தின் வழி மாணவர்களின் மனத்தைக் கட்டமைத்து, அடுத்தடுத்த வாழ்க்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படைப் படிகளாகிறது.

‘தேடல்’ கதையின் நாயகன் தன்னைத் தானே யோக்கியனாகப் பாவித்துக் கொள்வதன் மூலமும் பிற ஆண்களைச் சாடுவதன் மூலமும் சாந்தியின் காதலை ஐயுறுவதன் மூலமும் அவன் உடல் தொடுகைகளைப் பெரிதும் விரும்பும் பாலினமாகப் பெண்களையே கருதுகிறான். ஆனால், எழுத்தாளர் இதற்கு மாறான கருத்து நிலைபாட்டில் இருக்கிறார் என்பதை,

“முன்னால், பின்னால், பக்கத்தில் எல்லாம் பெண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவு எப்பவுமே நின்றதில்லை. ஒருநாள் திருப்திக்கு அவ்வளவு போதும்”

என்ற வரியில் மூலம் அறிய முடிகிறது.

ஒருவரின் உண்மையான “சுயம்” என்பது அவரின் இயல்பு, உண்மை மனோபாவம், நேர்மை, சுதந்திரம் போன்றவற்றின் தொகுப்பு. ஆனால், சிலர் தமது இயல்பை மறைத்துக் கொண்டு, வெளிப்படையாக அழகாகவும் மேம்பட்டதாகவும் தோன்றும் போலித்தனமான பண்புகளை அணிந்து கொள்வார்கள். இதைப் போல நடக்கும் நாயகன், தன் போலித்தனத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதைத்தான் பெரிய உயர்வு என்று நம்பவும் முயல்கிறான். தன் மனத்தில் உருவாக்கிக் கொண்டுள்ள அந்தச் செயற்கைக் கோட்டைதான் அவனுக்கு ‘வாழ்க்கையின் உச்சி’ என்று தோன்றுகிறது. ஆனால், அதுவே உண்மையான உயர்வு அல்ல; அது அவன் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டுள்ள கண்ணுக்குத் தெரியாத கூண்டே.

அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு, இயல்பாகவும் நேர்மையாகவும் வாழும் நல்லசிவம் போன்றவர்கள் அசிங்கமாகக்கூடத் தோன்றுவார்கள். ஏனெனில், போலித்தனமானவர்கள் உண்மையைச் சந்திக்கத் தயங்குவார்கள். உண்மையான மனிதரை அவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் மனம், உண்மையைப் பார்த்தாலே சஞ்சலப்படுகின்றது. அதனால் நேர்மை, தெளிவு, சுத்தமான உணர்வு கொண்ட மனிதர்கள் அவர்களுக்கு ஆபாசமாகவும் கெட்டதாகவும் தெரிகின்றனர். இது அவர்களுடைய மனதின் குறை; பிறரின் தவறு அல்ல.

இயல்பான வாழ்வின் அடிப்படை சாரம் என்ன என்பது தெரியாதவர்களும் தெரிந்தும் அதனை ஏற்க மறுப்பவர்களும் வாழ்க்கையை தவறான கண்களால் பார்ப்பார்கள். உலகில் மற்றவர்கள் அனுபவிக்கும் சாதாரண விருப்பங்கள், எளிய கனவுகள், உண்மையான உணர்ச்சிகள் ஆகியவை அவர்களுக்கு மிகத் தாழ்வாகக் கூடத் தோன்றும். ஏனெனில், அவர்கள் தமது போலி அடையாளத்தில் பெருமை கொள்ளும் அளவிற்குத் தங்களை மயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இயல்பான மனிதநேயத்தை அவர்கள் புரிந்துகொள்ள முடியாது.

கதையின் நாயகனைப் போன்ற பாசாங்குக்காரர்கள் தங்கள் உண்மையான சுயத்தை உடைத்துக் கொள்ளவே முடியாது. அதேசமயம், மற்றவரையும் அவர்களின் இயல்பான வாழ்க்கை வழியில் செல்லவிட மாட்டார்கள். அவர்கள் நின்றுவிடாத “இறுதிய தடைக்கல்” போல இருக்கிறார்கள். பெரிய கல்லை வழியில் வைத்தால் எப்படித் தடை உண்டாகிறதோ, அதுபோலவே அவர்கள் சமூகத்தின் இயல்பான, நேர்மையான முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகிறார்கள். அவர்களை விலக்க முடியாத “இரும்புத் திரை”யாகக்கூட நாம் உணரலாம்.

மு. தளையசிங்கத்தின் கருத்தில் முரண்பாடு உடையவர்களும்கூட இக் கதையின் வடிவம், உட்சாரம், மனிதநேயம் சார்ந்து அவரையும் இக்கதையையும் ஏற்றுக்கொள்வர். ஏனெனில், இது தனிப்பட்ட மனிதரைப் பற்றிய கதை மட்டுமல்ல; ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் “நல்லதம்பி” என்ற சிறிய நல்லுணர்வைப் பற்றிய நம்பிக்கையும் இதிலுள்ளது. மனிதனின் உள்ளார்ந்த நல்லுணர்வு ஒருபோதும் அழியாது என்று சொல்லும் எண்ணமே இந்தக் கதையின் அடிப்படை. மனித மனம் எவ்வளவு மாசடைந்திருந்தாலும் அதன் ஆழத்தில் நல்ல விதை இருக்கும்; அந்த நம்பிக்கையில்தான் இந்தக் கதை பேசப்படுகிறது.

குரு – சிஷ்யை என்பது உயர்ந்த உறவு. அறிவும் ஒழுக்கமும் சார்ந்த தூய பந்தம். ஆனால், மனிதர்கள் ஆண்–பெண் என்ற இயல்பான உடல்-மனம் உடையவர்கள் என்பதால், அந்த உயர்ந்த துறையிலும்கூட உள்ளார்ந்த ஈர்ப்பு, எதிர்ப்பால் இயங்கும் இயற்கை விதிகள் நழுவி வந்துவிடுகின்றன. இதை நாம் மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் கல்வித்துறையில் இருக்கும் பலர் தமக்குக் கீழ்ப் படிக்கும் மாணவியரின் கவர்ச்சியையும் இளமையின் அழகிய பொலிவையும் உள்ளுக்குள் இரசிப்பது இயல்பாகவே நடந்துவிடுகிறது.

மனிதன் எவ்வளவு ஒழுக்கம் காத்தாலும் உள்ளார்ந்த இயற்கையை முழுமையாக அடக்குவது எளிதல்ல. பலர் திடமான மனத்துடன் தமக்கே கட்டுப்பாடு விதித்து வாழ முயற்சி செய்வர். அவர்களின் உள்ளம் ‘இது சரியல்ல’ என்று எச்சரிக்கும். ஆனால், சில நேரங்களில் அவர்கள்கூட அறியாமல் சின்ன விடுபடல் உருவாகிறது. அந்தச் சிறிய தருணத்தில் மாணவியரின் அழகும் இளமைத் தன்மையும் சிரிப்பில் கலந்த நிர்ப்பாவமும் அவர்களின் விழியில் பளிச்சென்று புகுந்து பின் மீள்கிறது. அந்தக் கணம் சாதாரண மனித உந்துதலாக இருந்தாலும், அது நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

இது ஆசிரியர்–மாணவி உறவிற்கே மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. ஆசிரியை–மாணவன் உறவிலும் இதே இயற்கை செயல்பாடு நிகழ்கிறது. இளமையின் சக்தியும் மனத்தின் அடித்தளத்தில் மறைந்து இருக்கும் ஈர்ப்பும் ஒருவரின் கவனத்தை இன்னொருவரின் மீது தாற்காலிகமாகச் சாய்த்துவிடுவது மனித இயல்பே. ஆசிரியையருக்கும் பருவ வயதின் மாணவரின் மென்மையான முகபாவங்களும் தன்னம்பிக்கை கலந்த செயல்பாடுகளும் சிறிய ஈர்ப்பை உண்டாக்கலாம். இதுவும் அதே மனித உணர்வுகளின் வெளிப்பாடே.

ஆனால், இவ்விரு தரப்பினரும் சமூக ஒழுக்கத்தைப் புரிந்து கொள்ளும் புத்தியும் பொறுப்பும் உடையவர்கள். அதனால் இந்தச் சின்ன ஈர்ப்பை “அழகியல் பார்வை” என்று முலாமால் பூசி, மனத்தின் அடுக்கில் தள்ளி வைக்கிறார்கள். ஆசிரியர் மாணவியைக் காணும்போது “இளம் மலர் போல இருக்கிறாள்” என்ற அழகியல் பார்வை மட்டும் நினைவில் கொள்ளப்படுகிறது; உண்மையான ஈர்ப்பு மனம் மறுக்கப்படுகிறது. அதேபோல் மாணவனைக் கண்டு ஆசிரியை “அவனுடைய கூர்மையான பார்வை அழகாக இருக்கிறது” என்று நினைத்தாலும் அதை ஒரு மனித நயத்தின் கோணத்தில் வைத்தே புரிந்துகொள்வார்கள்.

இவ்வாறு இருவரும் அறிந்தே மறப்பதும் மறந்தே அறிதலும் நடக்கிறது. இது மனித மனம் தனது இயற்கையும் சமூகம் விதித்த ஒழுக்கமும் ஆகியவற்றுக்குள் சமநிலை காப்பதற்காகப் பயன்படுத்தும் பாதுகாப்பு முறை. இந்த இரசிப்பு வெளிப்படாமல், எவருக்கும் தீங்கு விளைவிக்காமல், உள்ளீடாகவே கரைந்துவிடும்போது அது இயல்பான மனித உணர்வாகவே தங்கி விடுகிறது.

மனிதன் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அவன் மனிதனாகவே இருக்கிறான். அவனுடைய கண்களும் உணர்ச்சிகளும் அவனுடன் செல்லும். ஆனால், அதைக் கட்டுப்படுத்தி வாழ்வதே உண்மையான ஒழுக்கமும் கல்வியின் மதிப்பும் ஆகும்.

“வீழ்ச்சி” கதையில் வரும் நாயகன் ஒரு வரலாற்றாசிரியர். ஆசிரியர் என்றால் அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் முன்மாதிரி. ஆனால், அந்த நாயகன் மனம் தனது கடமையிலிருந்து விலகிப் போய், முற்றிலும் வேறொரு திசையில் தன் ஈர்ப்பை திருப்பிக் கொள்ளுகிறது. அவர் வாழும் வீட்டின் ஜன்னல் வழியே தெருவில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் நடந்து செல்கின்றனர். அவர்களின் இளமை, சிரிப்பு, துடிப்பு, பெண்மையின் இயற்கை அழகு ஆகிய அனைத்தும் நாயகனின் மனத்தை ஈர்த்துவிடுகின்றன. இந்த ஈர்ப்பு உடலியல் போக்கு அல்லது வெளிப்படையான ஆசை அல்ல; அவர் அதை “அழகியல்”, “இரசனை” என்ற பெயரில் நெகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்.

ஆனால், இந்த இரசனையில் மூழ்கியிருக்கும்போது அவர் ஆசிரியர் என்ற கடமையை மறந்துவிடுகிறார். அவர் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்த வேண்டியது என்பது அவரது பொறுப்பு. எனினும், ஜன்னல் வழியாகப் பார்க்கும் காட்சியின் மயக்கம் அவரைத் தனது கடமையிலிருந்து விலக்கி விடுகிறது. 

பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனைகூட அவனுள் எழவில்லை. அவர் மனத்தைத் தட்டிய எழுப்ப, “இது பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம்” என்று உரைக்க வானொலி அறிவிப்புத் தேவையாக உள்ளது. இதுவே அவரது உள்ளார்ந்த வீழ்ச்சியின் துவக்கக் குறியாகப் படைக்கப்படுகிறது.

ஆசிரியர் பொது மனிதராக இருந்தாலும், அவரது மனத்தில் நடப்பது சாதாரண ஈர்ப்பின் வெளிப்பாடு மட்டும் அல்ல; இது கடமை மற்றும் இரசனையின் மோதல். ஒரு புறம் அவர் செய்ய வேண்டிய பொறுப்பு—பள்ளி, வகுப்பு, மாணவர்கள், பாடங்கள். இன்னொரு புறம் அவரைக் கட்டிப்போடும் இரசிப்பு—இளமை, அழகு, பெண்மையின் இயல்பு. இந்த இரண்டு சக்திகளுக்கிடையே நடக்கும் மோதல் கதையின் மையமாகிறது.

இந்தப் போராட்டத்தைக் கதை வெறும் அழகியல் ஈர்ப்பாக மட்டும் காட்டவில்லை. எழுத்தாளர் அதை லௌகிகம்—ஆன்மிகம் என்ற பெரிய பரிமாணத்தில் வாசகரிடம் காட்டுகிறார். லௌகிகம் (பூமி சார்ந்த இன்பத் துறைகள்)—அதாவது ஈர்ப்பு, இரசனை, அழகு. ஆன்மிகம்—அதாவது கடமை, பொறுப்பு, ஒழுக்கம், மனிதனின் மேம்பட்ட நிலை. வரலாற்றாசிரியரான நாயகன் இந்தக் கடினமான மோதலில் தள்ளாடுகிறார். அவர் ஆன்மிகமாக வாழ வேண்டியவர்; ஆனால், லௌகிகம் நுழைந்து மனத்தை ஆட்கொள்கிறது.

கதை முழுவதும் இந்தப் போராட்டம் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது. மாணவியரை இரசித்துக்கொண்டே பள்ளிக்குச் செல்ல வேண்டிய கடமையை மறந்துபோகும் நிகழ்ச்சிதான் வாசகருக்குக் காட்சியாகத் தரப்படுகிறது. ஆனால், அது கதைத் தீமையின் சிறிய வெளிப்பாடு மட்டுமே. அதன் பின்னால் மனித மனத்தின் ஆழத்தில் நடக்கும் பெரிய போராட்டம் ஒளிந்திருக்கிறது. மனிதனின் உள்ளீட்டில் இருக்கும் பலவீனம், ஈர்ப்பின் வலிமை, கடமையின் தளர்ச்சி, ஒழுக்கத்தின் மறைவு ஆகியன அந்தச் சிறு தருணத்தில் அடுக்கடுக்காக வெளிப்படுகின்றன.

நாயகனின் இந்த “விழிப்பு – மறத்தல் – விழித்தெழுதல்” சுழற்சியை மனித மனம் தன் பலவீனங்களால் எவ்வாறு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை சின்னமாகவும் இந்தக் கதை செயல்படுகிறது.

ஒருவர் இறந்துவிட்டால், அந்த மரணம் முதலில் தோன்றுவது போல் ஒரே ஒருவருக்கே நேர்ந்த தனிப்பட்ட இழப்பு ஆகும். மரணம் என்பது இறந்தவருக்கே முடிவு. ஆனால், அவனைச் சூழ்ந்திருக்கும் உலகம், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் ஆகியவற்றின் இயல்பு முற்றிலும் வேறு. ஒருவர் இறந்த உடனே, அவர் வாழ்க்கை நிற்கிறது; ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்க்கை தொடர்கிறது. இது வாழ்க்கையின் மிகப் பெரிய எதார்த்தங்களில் ஒன்று.

உறவினர்கள் தாங்கள் உணரும் துயரத்தைவிட, அவர் இறந்தபின் செய்ய வேண்டிய நடைமுறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அஞ்சலி, கிரியைகள், சடங்குகள், உறவினர்கள் வருகை, ஏற்பாடுகள் என இத்தனைக்கும் நடுவே ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்ற உணர்வு சிறிது நேரம் மட்டுமே தாக்கத்தைக் கொடுக்கிறது. அதன் பின், மனிதன் செய்யவேண்டிய காரியங்களின் நெடியப் பட்டியலில் அடுத்தடுத்த கட்டங்கள் அவர்களை முன்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

இதனால் ஒருவரின் மரணம் அவரின் உறவினர்களுக்குத்  தற்காலிக அனுபவமாக மட்டுமே நிற்கிறது. சில நாள்கள் துயரம், சில நாள்கள் நினைவு, ஆனால் காலத்தோடு அந்த மரணம் அவர்களின் மனத்தில் “முன்னேறிச் சென்ற கட்டம்” ஆகிவிடுகிறது. பழைய அத்தியாயம் போல அது முடிவடைகிறது. வாழ்க்கை மீண்டும் இயல்பிற்குத் திரும்புகிறது.

ஆனால், இந்த எதார்த்தத்தைக் கதையின் நாயகன் மனத்தளவில் ஏற்க முடியவில்லை. மற்றவர்கள் போல மரணம் “முடிந்த நிகழ்வு” என்று அவனால் உணர முடியவில்லை. மரணம் என்பது ஒருவருக்குப் பிறகு மற்றவர்கள் முன்னேறிச் செல்லும் மாற்றங்களைக் காட்டும் எளிய வாழ்க்கைச் சட்டம் என்று அவன் புரிந்துகொள்ளாது. அவனது மனம் மிகவும் வேறுவிதமான எதிர்வினையை வெளிப்படுத்துகிறது.

அதே சமயம், அவனது மனம் ஏற்கனவே பள்ளி, ஆசிரியப்பணி, தினசரி பொறுப்புகள் ஆகியவற்றிலிருந்து வெறுப்புடன் விலகத் தொடங்கியுள்ளது. அவ்வுலகம் அவனுக்குள் தொடர்ந்து சோர்வையும் புறக்கணிப்பையும் ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் அமைதியான நிலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆழ்மன தேடல் அவனுள் அதிகரிக்கிறது.

இதனால், உறவினர்கள் மரணத்தை இயல்பாக எதிர்கொள்ளும் போதும், அதே மரணத்தை நாயகன் ஆழமான ஆன்மிக வினாவாகப் பார்க்கிறான். “மரணம் இவ்வளவு சாதாரணமா? மனிதர்கள் எவ்வளவு எளிதில் கடந்து, முன்னேறிச் செல்கிறார்கள்? உயிர் என்பது இவ்வளவு தற்காலிகமா?” போன்ற வினாக்கள் அவனது மனத்தைத் தள்ளாடச் செய்கின்றன. உலகின் அசட்டுத்தனமான முன்னேற்றம் அவனுக்குப் புரியவில்லை. இதனால்தான் அவனது மனம் வேறொரு நிலையை — மெய்ஞ்ஞானம், ஆன்மிகம், தத்துவம் போன்ற அமைதியின் தளங்களைத் தேட ஆரம்பிக்கிறது.

அவன் தன் பணியையும் பள்ளியையும் வெறுக்கத் தொடங்குவது இவ்வகை ஆன்மிகத் தேடலின் அறிகுறியாக ஆகிறது. அவன் மனம் உலகியலான பொறுப்புகளிலிருந்து விலகி, வாழ்க்கையின் அடித்தள உண்மைகளைக் குறித்துச் சிந்திக்க விரும்புகிறது.

இவ்வாறு, மரணம் என்ற அனுபவம் சாதாரண நிகழ்வாக மற்றவர்களுக்குத் தெரிந்தாலும், நாயகனின் மனத்தில் அது ஆழமான உளவியல், ஆன்மிக மாற்றத்தின் துவக்கமாக மாறுகிறது. மனித மனம் எப்படி ஒவ்வொருவருக்கும் வேறுவேறு உலகை உருவாக்குகிறது என்பதை இதன் வழியாக நுட்பமாக அறியமுடிகிறது. அதனால்தான் அவர் மனம், “அரைவட்ட வாழ்க்கையில் முழு உயிரே போகிறது” என்று நொந்து கொள்கிறது. 

நாயகனின் மனம் இரண்டு பெரிய பிரிவுகளால் நிரம்பியுள்ளது. ஒரு பகுதியை அவரது கற்பனை உலகம் ஆக்கிரமிக்கிறது. அவர் விரும்பும் விஷயங்களை மனக்கண்களால் விரித்து ரசிக்கிறார். உண்மையில் இல்லாத காட்சிகளையும் மனம் வரைகிறது. அவை அவருக்குச் சுதந்திர நிலையைத் தருகின்றன. வெளிப்புற உலகின் கட்டுப்பாடுகள் இந்நிலைக்கு இடையூறு செய்ய முடியாது. மனம் ஒரு வெற்றுப்பகுதியாக விரிவடைந்து, அவர் விரும்பும் காட்சிகளை எடுத்துக்கொண்டு அதில் முழுவதுமாக கரைந்துவிடுகிறது. இந்தச் சூழலில் அவர் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். அது அவரின் பாதி மனத்தை நிரப்புகின்றது.

ஆனால் மனத்தின் மற்றொரு பகுதி வேறு விதமான அனுபவத்தால் நிரம்புகிறது — அதாவது, மரணம், பிரிவு, வாழ்வின் துன்பம் போன்ற நிஜங்கள். இவை அவரின் உளத்தில் இருண்ட நிலையை உருவாக்குகின்றன. இன்பமும் துன்பமும் ஒரே மனத்தில் கலந்து நிற்பதால் அவர் சீரான அமைதியை காண முடியாமல் போகிறார்.

மேகமற்ற நீல வானம் முதலில் எவ்வளவு இனிமையாக, அமைதியாக இருக்கும்! அதில் வெளிச்சம், தெளிவு, அழகு எல்லாமே காணப்படும். ஆனால், சிறிது நேரத்திற்குப் பின்னர் மேகங்கள் மெதுவாக வந்து வானத்தை மூடத் தொடங்குகின்றன. வானம் கருமை அடைகிறது. ஒளியும் களையும் குறையும். அதற்கிடையே இடியழல், மின்னல், மழை ஆகிய அனைத்தும் வானத்தை அமைதியற்ற, எரிச்சலான பரப்பாக மாற்றுகின்றன.

இதேபோல் நாயகனின் மனநிலையும் மாறுகிறது. முதலில் ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளில் மனம் கரைந்து அவர் நிரம்பித் திளைக்கிறார். ஆனால், திடீரென வானொலியின் இரைச்சல் அவரின் அந்த அமைதியை இழுக்கிறது. திடீர் குரல், செய்திகள், அறிவிப்புகள் என எல்லாம் அவரின் மனத்தை வலுக்கட்டாயமாக இழுத்து மற்றொரு திசைக்குத் தள்ளுகின்றன. அவை சொல்வதைக் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்குள் உருவாகிறது. அச்செய்திகளைப் பற்றிச் சிந்திக்கிறார். காரணம், விளைவு, சம்பவங்கள் என மனத்தில் அனைத்தும் ஓடுகின்றன. இதனால் அமைதியை இழக்கிறார்.

பின்னர் மீண்டும் ஜன்னல் காட்சிகளில் மனம் லயிக்கிறது. அங்கே சற்றே அமைதி. ஆனால், மீண்டும் கடமைகள் அழைக்கின்றன. லௌகிகச் செயல்கள்—பள்ளி, பொறுப்பு, கடமை—அவை மீண்டும் அவரை இழுக்கின்றன. மனம் இடைவிடாது இவை இரண்டுக்கிடையே ஊசலாடுகிறது. வானொலி – ஜன்னல் – கடமை – கற்பனை – பதட்டம் – களைப்பு. இறுதியில் அவர் மனம் வீதியில் விழுந்து கிடக்கும் ஒருவரைப் போல சோர்வுற்ற நிலையில் தவிக்கிறது. ஒருபுறம் முடிவற்ற வானம்—அதாவது, கற்பனை, சுதந்திரம், எல்லையற்ற மனஉயர்வு. மறுபுறம், வெறுமையையே தேடி அலையும் குழம்பிய மனித மனம்—அதாவது உண்மையின் அடர்த்தியான சுமை.

இந்த இரண்டு நிலைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மனநிலையைத் தொட்டபடியே கதை நகர்கிறது. மனித மனத்தின் இன்ப–துன்ப அலையாட்டத்தை மிகவும் நுட்பமாகவும் எளிமையாகவும் இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது.

“வீழ்ச்சி” கதையின் தத்துவ அடுக்குகளைப் புரிந்துகொள்ள முதலில் மு. தளையசிங்கம் படைக்கும் காட்சியின் அமைதியைக் காண வேண்டும். அலையற்ற நடுக்கடல் என்பது ஓர் உவமை. கடல் அமைதியாக இருந்தாலும் அதன் அடியில் புரளும் இரகசியங்களைப் போல, மனித உள்ளமும் வெளிப்படையாக அமைதியாக இருந்தாலும் உள்ளே எண்ணற்ற போராட்டங்களைச் சுமக்கிறது. அதுபோல, வான்வெளியும் அகமனமும் இரண்டுமே பரந்தவை; அப்பரப்பு எவ்வளவு பரவலாக அமைந்திருக்கிறதோ, அதேபோல மனித மனமும் முடிவற்ற சிந்தனைகளால் நிரம்பியுள்ளது. கணிதத்தில் ‘இணைகோடுகள்’ எவ்வாறு ஒருவரை ஒருவர் தொடாமல், பிரியாமல் நீண்டுச் செல்கின்றனவோ, அவ்வாறே மனிதரின் உலகப் பார்வையும் அவனது அகப் பார்வையும் ஒன்றுக்கொன்று சேராமல், ஆனால் ஒன்றையொன்று குறிப்பிடும் வகையில் பயணிக்கின்றன என்ற சொல்லாக்கமே இங்கு இடம்பெறுகிறது.

“வீழ்ச்சி” என்ற தலைப்பு, நேரடி பொருளில் விழுவது என்பதாக இருந்தாலும் மு. தளையசிங்கம் அதனை மனிதரின் லௌகிக வாழ்வின் அர்த்தமின்மைகளைக் குறிக்கும் சின்னமாகப் பயன்படுத்துகிறார். வாழ்வில் ஒருவருக்கொருவர் புரியாத குழப்பங்கள், மனத் தெளிவின்மை, ஒழுங்கற்ற அனுபவங்கள் ஆகியவை மனிதனை ‘ஆழ்மன வீழ்ச்சி’ எனும் நிலைக்குத் தள்ளுகின்றன. இந்த உள்மன தடுமாற்றங்களை எழுத்தின் நுணுக்கத்தால் கதையாக்கும் திறமை மு. தளையசிங்கத்திற்கு நன்றாக  வாய்த்திருக்கிறது. அதனால், இவர் கதைகளில் சித்திரங்கள் போல உடைந்து கிடக்கும் மனநிலைகளை ஒருங்கிணைத்து ஒரே கதைச் சரடாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மனிதன் தன்னைக் குறித்து உருவாக்கிக் கொள்ளும் மனவட்டம் என்பது மிக முக்கியமான கருத்து. ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி ‘அறியாமை—அறிவு—மரபு—அச்சம்’ ஆகிய கூறுகளாலான மனவட்டத்தை உருவாக்கிக் கொள்கிறான். சமூகம் திணிக்கும் நெறிகள், புத்தகங்கள் வழங்கும் கருத்துக்கள், குடும்ப மரபுகள் வழங்கும் கட்டுப்பாடுகள் ஆகியன அனைத்தும் சேர்ந்து அந்த வட்டமாகிறது. மனிதன் இதனைத் தன் வாழ்க்கையின் பாதுகாப்புக் கோட்டையாகக் கருதி அதிலிருந்து வெளியே வரமாட்டான்; அதேபோல, பிறர் உட்புகுவதையும் விரும்பமாட்டான். இது அவனது தனித்தன்மை, பயம், மாற்றத்திற்கான எதிர்ப்பு ஆகியவற்றின் கலவையாகும்.

பெண்கள் இந்த மனவட்டத்தை ஆழமாக நம்புவதாகப் பிறருக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் தான் முதலில் இந்த வட்டத்தை உடைத்து வெளியே வர முயற்சி செய்வர். ஒருபோதும் கடுமையாகத் தெரிந்தாலும் மாற்றத்திற்கான திறன், அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் வலிமை, வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ளும் உணர்ச்சி ஆகியவற்றில் பெண்கள் பல இடங்களில் முன்னிலையில் இருப்பதைக் கதைகள் காட்டுகின்றன. இது பெண்ணின் பலவீனம் காரணமாகவா, பரந்த மனப்பான்மை காரணமாகவா? என்ற வினாவை எழுப்புகிறார் எழுத்தாளர். இவ்வாறு வினாக்களின் வழியாக வாசகரைச் சிந்திக்க வைப்பதே மு. தளையசிங்கத்தின் எழுத்துப்பாணி.

இந்த ‘வட்டம்’ என்ற மன அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மு. தளையசிங்கம் பல கதைகள் எழுதியுள்ளார். சான்றுகள் – ‘தேடல்’, ‘கோட்டை’, ‘ரத்தம்’, ‘தொழுகை’. இவற்றுள் ‘கோட்டை’ கதையே இந்த மனவட்டங்களின் இயல்பை ஆழமாக ஆராய்ந்து, அவற்றை உடைக்க மனிதன் எவ்வாறு பாடுபடுகிறான் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இந்த வட்டங்களையே மு. தளையசிங்கம் ‘கோட்டைகள்’ என்று குறிப்பிடுகிறார். மனதில் கட்டிய உயர்ந்த சுவர்களாகவும் நம்மை நாமே உருவாக்கிக் கொண்ட சிறைகளாகவும் அவை விளங்குகின்றன. அவற்றை உடைக்காமல் மனிதன் உண்மையான சுதந்திரத்தையும் பரந்த பார்வையையும் அடைய முடியாது என்பதை அவரது கதைகள் நினைவூட்டுகின்றன.

மு. தளையசிங்கத்தின் ‘கோட்டை’ கதையில் நாயகனாக வரும் தியாகு பொதுவான மனிதனின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உருவாக்கிக்கொள்வது போல, தியாகுவும் மனவட்டத்தை, ஒரு ‘கோட்டையை’ உண்டாக்கி அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், ராஜி என்ற பெண்ணின் உலகம், அவளுடைய சிந்தனை, அவளுடைய மனவட்டம் ஆகியவைத் தியாகுவை ஆழமாகக் கவர்கின்றன. அதனால், அவளைப் புரிந்துகொள்வதற்காகவும் அவளது வாழ்க்கைக்குள் நுழைந்து அவளிடம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் முயற்சி செய்கிறான். இந்த முயற்சி அவன் பார்வையில் தவறான அத்துமீறல் அல்ல; மற்றவரை ஆள நினைக்கும் வன்முறையும் அல்ல; மாறாக, சமூகத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துத் தனக்கு உரிய சுதந்திரத்தைப் பெற முயல்கிற மனப்புரட்சி.

ஆனால், மு. தளையசிங்கம் இந்தப் போராட்டத்தைச் சிறந்த புரட்சி எனக் காட்ட விரும்புவதில்லை. நாயகன் தியாகு உண்மையில் உறுதியான புரட்சியாளர் அல்லர் என்பதையே அவர் காட்டுகிறார். மாற்றத்தை விரும்புவது அனைவருக்கும் எளிது; ஆனால், மாற்றத்திற்கான மனத் தெளிவும் துணிவும் அதற்கேற்ப செயல்படும் தைரியமும் இல்லாவிட்டால், அந்த விருப்பம் வெறும் ஆசையாகவே முடிந்துவிடும். இதைத் தியாகுவின்மூலம் மு. தளையசிங்கம் மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார்.

தியாகுவின் புரட்சி வெளிப்படையாகப் பார்க்கும்போது பெரிய மாற்றத்திற்கான முயற்சி போலத் தோன்றலாம்; ஆனால், உள்ளார்ந்த விஷயத்தில் இது போலியான புரட்சி. அவர் ராஜியின் வட்டத்திற்குள் நுழைய விரும்புகிறார்; ஆனால், அதற்கு முன் தன்னைச் சுற்றியுள்ள கோட்டையை உடைக்க முயலவில்லை. தன்னிடமுள்ள அச்சங்கள், மரபு பயங்கள், சமூகக் கருத்துகளைப் பற்றிய நெருக்கடிகள் ஆகிய அனைத்தையும் அவர் தீவிரமாக எதிர்கொள்வதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று சொற்களால் பேசுவதில் வல்லவர்; ஆனால், அவற்றைச் செயலில் காட்டவேயில்லை. அவருக்குள் அவை செயல்படவேயில்லை.

உள்ளம் மாற்றமில்லாமல், வெளியில் புரட்சியைப் பேசுவது பயனற்றது. அதனால் தியாகு போன்றவர்களை எழுத்தாளர் இக்கதையின் மூலம் வட்டமிட்டுக் காட்டுகிறார். இவர்களைப் போன்ற ‘வாய்ச்சொல் வீரர்களால்’ சமுதாய முன்னேற்றம் தடைபடும் என்பதையும் வெளிப்படையாகக் கூறுகிறார்.

‘இலட்சியவாதம் பேசுவோர் பெரும்பாலும் வாய்ச்சொல் வீரர்களே’ என்ற கருத்தும் இதைத்தான் நோக்குகிறது. இலட்சியம் மீது தீவிரமாக ஈடுபாடு கொண்டவர், அதை நடைமுறையில் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், அது வெறும் மொழிச் சலசலப்பாகவே இருக்கும்.

அதேபோல், ‘புரட்சிகளைப் பற்றிக் காதலுடன் பேசுபவர்கள், மனதளவில் அவற்றின் மீது பற்றற்றவர்களே’ என்பதும் கசப்பான உண்மை. பலர் ‘மாற்றம் வேண்டும்’ என்று சொல்வார்கள்; ஆனால், மாற்றம் ஆரம்பிக்க வேண்டியது தமக்குள்ளேயென்பதை உணரமாட்டார்கள். தியாகுவும் அதே வகையிலானவர்தாம். ராஜியின் உலகத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராட்டம் நடத்தியாலும் தன்னுடைய சுவர், தன்னுடைய கோட்டை, தன்னுடைய குறைகள் ஆகியவற்றை உடைக்க எந்த முயற்சியும் செய்வதில்லை.

இந்த உண்மையை வாசகரின் முன் நிறுத்துவதே ‘கோட்டை’ கதையின் மையம். மாற்றத்தை விரும்புபவன் முதலில் தன்னுள்ளேயுள்ள கோட்டைகளை உடைத்தால் மட்டுமே வெளிப்புற உலகைப் புரிந்து கொள்ளவும், மற்றவர்களின் மனவட்டங்களில் நுழையவும் முடியும் என மு. தளையசிங்கம் உணர்த்துகிறார்.

மு. தளையசிங்கம் தனது கதைகளில் மனிதர்கள் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளையும், அவை நடைமுறையில் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்துக்காட்டுகிறார். ‘கோட்டை’ கதையிலும் அதையே மிகத் தெளிவாகக் காணலாம்.

ராஜி என்ற கதாபாத்திரம் வெளிப்படையாகக் கற்பின் முக்கியத்துவம், ஒழுக்கம், குடும்பப் பாங்கு போன்றவற்றை வலியுறுத்திப் பேசும் பெண். ஆனால், மனித மனம் எப்போதும் சொல்லும் வார்த்தைகளுக்குச் சமமாக நடக்காது. சூழ்நிலைகள் மாறும் பொழுதுகளில், அவளது சொந்த உணர்வுகளும் அவளைத் தளரச் செய்கின்றன. அவளுக்கு சாதகமான சில தருணங்களில், அவள் பேசிய ‘கற்புவாதம்’ நிலைமாறி விடுகிறது.

இந்த நிலைமாறல் அம்பலமானபோது, தனது பொறுப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள, தவறை மறைக்க, குற்றத்தை மறைத்து ஒதுக்க, ஆமை தன் ஓட்டுக்குள் புகுவது போல, ராஜியும் மீண்டும் ‘கற்பு’ என்ற கவசத்தையே தூக்கிக் காட்டுகிறாள்.

எப்படி ஆமை அதன் ஓட்டையே எப்போதும் சுமந்து திரிகிறதோ, அதுபோல சில பெண்கள் ‘கற்பு’ என்ற சமூக உயர்வு தரும் ஒருவிதமான கவசத்தைத் தன்னுடன் எப்போதும் சுமந்து திரிகிறார்கள் என்று எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார். அதைக் காப்பாற்ற வேண்டிய உயர்ந்த நெறியே அல்லாமல், வெறும் பாதுகாப்பு உத்தியாக மட்டுமே பயன்படுத்துவதையே மு. தளையசிங்கம் விமர்சிக்கிறார்.

கதையின் உச்சநிலையில், ராஜி–தியாகு உறவு குறித்து தியாகுவின் மனைவி சரோஜா அறிந்து விடுகிறாள். இது ராஜியிடமிருந்தே வெளிப்படையாகச் சரோஜாவுக்குத் தெரிவதாகச் சித்தரிக்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு குடும்பத்தை உடைக்கும் இரகசிய உறவுகளையும் கட்டுப்பாடற்ற உடலுறவுகளையும் மு. தளையசிங்கம் ஆதரிப்பதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். அவர் கதாபாத்திரங்களின் தவறுகளைச் சமரசப்படுத்துவதோ, அவற்றை நியாயப்படுத்துவதோ அல்ல; மாறாக, அவற்றின் மனநிலைகளை நுட்பமாகச் சித்தரித்து வாசகரின் விழிப்பைக் கூர்மையாக்குகிறார்.

ராஜியின் திடீர் மாற்றம்—முதலில் கற்பைக் கோஷமிட்டுப் பேசுவது, பின்னர் தன் உணர்வுகளுக்குள் சரிந்து செல்லுவது, இறுதியில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் கற்பின் பெயரைத் தூக்கிக்காட்டுவது—இவற்றை எழுத்தாளர் படிப்படியாகப் புரிந்துகொள்ளத்தக்க வழியில் கதையின் வழியாக வரைந்து காட்டுகிறார். இதனால் பெண்கள் ‘கற்பு’ என்ற மதிப்பை உண்மையான ஒழுக்கத்தின் அடையாளமாக அல்லாது, செயற்கையான கேடயமாகப் பயன்படுத்துவதை அவர் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் பெண்களுக்கு எதிரானது அல்ல; அந்த கற்பின் தவறான பயன்பாட்டையே குறிக்கிறது.

அதே நேரத்தில், ‘முழுச் சுதந்திரம்’ என்ற பெயரில் ஆண்கள் செய்கிற அத்துமீறல்களையும் எழுத்தாளர் கூர்மையாகக் கண்டிக்கிறார். ஆண்கள் சுதந்திரம் என்ற பெயரில் உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்துவது போல, பெண்கள் ‘குடும்பப்பாங்கு’ என்ற பெயரில் தங்கள் பாவனைகளை மறைக்கிறார்கள் என்பதை மு. தளையசிங்கம் காட்டுகிறார். அவர் இதை ஒரு சம்பவத்தைப் போல அல்ல, கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த மனவெழுச்சிகளை வைத்து, வாசகர் அனுபவிக்கும் படியாகச் சொல்கிறார்.

‘தேடல்’ கதைக்குப் பிறகு, மனநிலைகளை மிக வலுவாகப் பதிவு செய்திருக்கிறார் எனக் கருதப்படும் கதை ‘கோட்டை’. மனித மனம் எவ்வாறு தன்னைச் சுற்றிக் கோட்டைகளை அமைக்கிறது, அவற்றை எப்படி உடைக்க இயலாமல் தவிக்கிறது, எப்போது அந்தக் கோட்டை போலி நெறிகளாக மாறுகிறது ஆகிய அனைத்தையும் மிக நேர்மையான முறையில் மு. தளையசிங்கம் வெளிப்படுத்துகிறார்.

மனித சமூகம் நம் வாழ்வை ஒழுங்கில் வைத்திருக்க நல்ல நெறிமுறைகளையும் ஒழுக்க விதிகளையும் வலியுறுத்துகிறது. நல்லதைச் சிந்தித்தல், நல்லதைப் பேசுதல், நல்லதைச் செய்வது, அனைத்தையும் சுத்தமாகவும் புனிதமாகவும் நோக்குவது ஆகிய அனைத்தும் மனிதனை உயர்வாக நடத்த உதவும் கட்டுப்பாடுகள். இவ்வாறான ஒழுக்கவியல் வழிகாட்டுதல்கள் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை எழுத்தாளர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், முக்கிய வினாவினை அவர் முன்வைக்கிறார்: தீயவற்றைப் பற்றிய அறிவே இல்லாத ஒருவர், நல்லவற்றை உண்மையிலும் ஆழமாகவும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ஒருவர் ‘நல்லவை’ மட்டும் அறிந்திருந்தால்  போதாது; அவற்றுக்கு எதிர்மறையான தீயவை எவை என்பதையும் அறிய வேண்டும். வாழ்க்கை எப்போதும் ஒன்றே ஒரு முகத்தைக் காட்டாது. அதில் பேரழகும் இருக்கிறது; அதேசமயம் அச்சுறுத்தல், அசிங்கம், கொடுமை, கொச்சைத் தன்மை ஆகியவையும் இருக்கின்றன. இத்தகைய இருபக்கங்களையும் அறிந்தவன் மட்டுமே நல்லவற்றின் உண்மையான பலத்தையும் அதன் அவசியத்தையும் உணர முடியும். ஒரு நபர் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்ப வேண்டும் என்றால், அவன் முன்னால் நல்லதும் தீயதும் இரண்டும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வு செய்யும் திறன் உருவாகும்.

ஆனால், சிலருக்குத் தீமைகள் குறித்து எந்தத் தெளிவும் அறிமுகமும் கிடையாது. அவர்கள் தீய சொற்கள், தீய நிகழ்வுகள், தவறான செயல்கள் ஆகியவற்றின் அர்த்தம், விளைவுகள் ஆகியவற்றையும் அறியமாட்டார்கள். இவர்கள் முழுக்க நல்லவற்றால்தான் சூழப்பட்டிருப்பார்கள்; அதுவே அவர்களின் உலகமாகிவிடும். இப்படிரி தீமைகள் குறித்த பூரண அறியாமையோடு இருப்பவர்களுக்கு நல்லவற்றை நம்மால் திணிக்கத்தான் முடியும். ஏனெனில், அவர்கள் அதை உணர்ந்து ஏற்றுக் கொள்வதில்லை; ‘அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற கட்டாயத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு செயல்படுவர்.

ஆனால், ஒரு கட்டத்தில், அவர்கள் நல்லவற்றின் வட்டத்துக்குப் புறம்பான சம்பவம் அல்லது சொற்களைக் காணும்போது அவையே அவர்கள் வாழ்வில் பெரிய அதிர்வை ஏற்படுத்தும். நம் ஊரில் முதன்முதலாகக் கடும் மழையைப் பார்த்த குழந்தைபோல், அவர்கள் மனமும் திடீரென பாதிப்படையும். கொச்சையான மொழி, அசிங்கமான காட்சி, தீய நோக்கம் கொண்ட எந்தச் சம்பவமாயினும் இவற்றை முதன்முதலாகப் பார்க்கும் போது, அவர்களின் மனம் சமநிலையை இழந்து சரிந்து விடும். ஏனெனில், அத்தகைய ஆபாசத்தையும் தீய நிகழ்வுகளையும் எதிர்கொள்ளும் உள் வலிமை அவர்களிடம் உருவாகியிருக்காது.

‘ரத்தம்’ என்ற கதை இந்த நிலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே! நல்லவற்றால் மட்டுமே நிரப்பப்பட்டு, தீமைகள் குறித்த அறிவில்லாமல் வளர்க்கப்பட்ட ஒருவருக்கு அசிங்கமான சம்பவம் நேரடியாக எதிரெதிர் வந்தபோது ஏற்படும் உளச்சரிவு, மனவெறுப்பு, பயங்கரம் ஆகியவற்றை ‘ரத்தம்’ கதை சித்தரிக்கிறது. இது வெறும் மனிதனின் வீழ்ச்சி அல்ல; பயிற்சியற்று காக்கப்பட்ட நிர்ப்பாவமான மனம் வெளி உலகத்தைக் கண்டு நடுங்கிவிழும் தருணம்.

நல்லவற்றை வளர்ப்பது தவறு அல்ல, ஆனால் தீயவற்றின் நிழல்களையும் அறியாமல் வளர்ப்பது மனவளர்ச்சியைப் பாதிக்கும். நன்மையும் தீமையும் இரண்டையும் புரிந்தால்தான் வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் விளங்கும். சமூகத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சுத்தம்–ஒழுக்கம் என்ற சுற்று வட்டத்துக்குள் மட்டும் அடைத்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் இயல்பான நிழல்களையும் ஒளிகளையும் நேராகப் பார்க்கும் திறன் குறைந்து விடும். இதுபோன்ற அழுத்தப்பட்ட வளர்ச்சியைச் சந்தித்தவராகவே சோமு காணப்படுகிறான்.

 நல்லதும் தீயதும் என்ற இரு முனைகளும் உலகில் இருக்கின்றன என்பதை மனம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், சோமுவிடம் அந்த மனத்தயாரிப்பு இல்லை. அப்படிச் சமநிலையற்ற மன நிலையில் அவர் எந்தக் கொச்சையான சொல்லைக் கேட்டாலும் சமூகத்தில் இயல்பாக நடந்துகொள்ளப்படும் மனிதப் பாவனைகளைப் பார்த்தாலும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கி விடுகிறார்.

ஒரு விதத்தில் சோமுவின் மனம் மெல்லிய கண்ணாடி போல. வெளியில் இருந்து வரும் சிறு அதிர்ச்சியும் அதை முறியச் செய்யும். குழந்தைப் பருவத்தில் பெற்ற ‘அதீத நெறிமுறைப் பயிற்சி’ அவருக்குச் சிலம்பாட்டம் போல இருந்தது; வெளியுலகின் அசிங்கங்கள், தவறுகள், சீர்கெட்ட சொற்கள், இயல்பான மனித ஆசைகள் ஆகியவற்றைக் காணும்போது, எங்குப் போய் நிற்க வேண்டும் என்பதை அறியாமல் வெறும் வான்வெளிக்குள் தள்ளப்பட்டதைப் போலத் திகைக்கிறான். நல்லெண்ணத்தால் பூசப்பட்ட போலி வாழ்க்கைதான் வாழப்பட்டதாகவே அவன் உணர்கிறான். உண்மையான அனுபவங்களே இல்லாத வாழ்வு, உள்ளுக்குள் பரந்த வெறுமையை உருவாக்குகிறது.

இதுபோன்ற உளவியல் குழப்பம் ‘தொழுகை’ கதையிலும் ஆறுமுகத்தின் மூலமாகத் தெரிகிறது. ஆறுமுகம் காமத்தையும் பக்தியையும் ஒரே நூலால் தைத்துவிட்டு, இரண்டையும் ஒன்றுபோல புனிதமாகக் கருதுகிறான். காமம் என்பது மனிதனின் இயல்பு; ஆனாலும் அதற்கும் அது சார்ந்த குழப்பத்திற்கும் இடையில் நிலைநின்று அதைச் சமநிலைப்படுத்தும் திறன் அவனுக்கு இல்லை. அவன் மனமும் ஒரு விதத்தில் ‘அதீத புனிதப்படுத்தல்’ என்ற வலையிலேயே அடைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அடக்கப்பட்ட மனநிலைகளில் பாலியல் பருவம் சம்பந்தமான குழப்பங்கள் உருவாகுவது இயல்புதான்; இதனை எழுத்தாளர் ‘ஓவர் பொட்டென்ஷியல் பேபி’ என்ற கிண்டல் மூலம் அதைத் தொடுகிறார்.

ஆனால், இந்த இரு கதாபாத்திரங்களுக்கு எதிர்மறை முகமாக ‘ரத்தம்’ கதையில் வரும் கமலம் அல்ல, ‘தொழுகை’ கதையில் வரும் செல்லம்மாள். செல்லம்மாள் வாழ்க்கையை நேராகப் பார்க்கிறாள். காமம் என்பது உடலின் ஆசை; அதை ஒழுங்கான பாவனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதை மறைத்துப் புனிதமாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவள் நம்புகிறாள். அதனால் காமத்தைக் காமமாகவே அணுகுகிறாள். அவளின் பார்வையில் காமத்தில் அவமதிப்பு ஒன்றும் இல்லை. மனிதநேர்மை போலவே அதன் இடமும் முக்கியமே.

கதையின் முடிவில் முத்துவுக்குச் செல்லம்மாள் அம்மனாகவும் செல்லம்மாளுக்கு முத்து சிவபெருமானாகவும் தெரிவது, அவர்கள் இருவரும் இந்த இச்சையை எந்தப் போலிப்புனிதத்திலும் சிக்காமல் நேரடியாக மனித ஆசையாகவே அணுகுகின்றனர் என்பதைக் காட்டுகிறது. காமத்தை மறைத்துத் தவறாகப் பார்க்காமல், அது என்ற உண்மையில் அணுகும்போது, அது மனித உறவில் இயல்பாக உருகிவிடும் என்பதை எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறு மனித மனம் எப்படி வளர்ப்பு முறைகளால் மாறுகிறது, ஆசையின் இயல்பும் புனிதத்துடன் எப்படி ஒட்டி நிற்கிறது, பாசாங்கும் உண்மையும் இடையே எப்படிக் கதாபாத்திரங்கள் அலைபாய்கின்றன என்பதை இக்கதைகளின் வழியே காணமுடிகிறது.

ஒரு பொருள், ஓர் உணர்வு, ஓர் அனுபவம் எந்த வடிவத்தில் இருக்கிறதோ, அதே வடிவத்தில் அதை உணர்வதே அதன் உண்மையான தரிசனம். அதைக் கற்பனையால் அழகு பூசி தூய்மையும் புனிதமும் முலாம்பூசி மாற்றி விடும்போது, அதன் உண்மை இழக்கப்படுகிறது. மு. தளையசிங்கம் கூறவருவது மனிதன் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்ச்சியும் அதன் இயல்பில்தான் முழுமை பெறுகிறது; அதை மறைத்தாலோ, வெவ்வேறு பெயர்களால் அழைத்தாலோ அதன் சாரம் கைகளில் சரிந்துவிடும்.

மனித வாழ்க்கை பல அடுக்குகளால் சூழப்பட்டுள்ளது. “இது நாகரிகமல்ல”, “இது புனிதம்”, “இது கெடுவானது”, “இதைச் சொல்லக் கூடாது” போன்ற பல கட்டுப்பாடுகள் ஒன்றின் உண்மையை மறைக்கும் கவசங்களாக இருக்கின்றன. சான்றாக, காமம், கோபம், பயம், இன்பம், வெறுப்பு ஆகியவை மனிதனின் இயல்பான உணர்ச்சிகள். ஆனால், சமூகம் இதில் சிலவற்றைக் கூடுதல் தூய்மையாகவும் சிலவற்றைக் கொச்சையாகவும் குறிக்கிறது. அதன்பேரில் மனிதன் உண்மையை மறைக்கத் தொடங்குகிறான். மு. தளையசிங்கம், இந்த மறைப்பே மனித மனத்தை முறையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளுகிறது என்கிறார்.

எழுத்தாளரின் எழுத்துநேர்த்தி என்பது வெளிப்புற நிகழ்வுகளைப் புகைப்படம் போல வரைவது மட்டுமல்ல. அந்நிகழ்வுகள் கதாபாத்திரத்தின் உள்ளத்தில் உருவாக்கும் அசைவுகள், அதிர்வுகள், புண்கள் ஆகிய அனைத்தும் உண்மையான சாரங்கள். மனித மனம் ஓர் ஓவிய பலகை போன்றது. வெளியில் நடக்கும் நிகழ்வு வண்ணத் துளி போல அதன்மேல் விழும் போது, அந்த வண்ணம் மனக் களத்தில் எப்படிக் கலக்கிறது, எத்தனை விதமான தடங்கள் உருவாகின்றன என்பதுதான் உண்மையான கதை. மு. தளையசிங்கம் இதையே தன் எழுத்தின் ஆழத்தில் கையாளுகிறார்.

அவர் காலத்தில் பல எழுத்தாளர்கள் வெளிப்புற காட்சிகளை விரிவாகச் சித்தரித்து வெற்றிபெற்றிருந்தாலும் உள்மனத்துக்குள் எழும் நுண்ணிய உணர்வு அலைகளை வடிவமைப்பதில் மு. தளையசிங்கம் தனித்து நின்றார் எனலாம். ஒருவரின் உள்ளத்தில் ஒரு சம்பவம் எவ்வாறு கீறுகிறது என்பதை “ஒளிபரப்பு” போலக் காட்டும் தைரியம் அவருக்கிருந்தது. ஆனால், அவர் வெறும் அதிர்ச்சியை மட்டுமே எழுத்தாக்கவில்லை; அந்தக் கீறலின் மூலம் உருவாகும் எண்ணங்கள், குழப்பங்கள், உணர்ச்சித் துளிகள் ஆகிய அனைத்தையும் அழகான சொற்களின் கோவையாக்கிக் கதையாக மாற்றினார்.

மு. தளையசிங்கம் எழுதிய கதைகளில், வெளியில் நடப்பதைவிட மனிதனின் உள்ளத்தில் நிகழ்வதே முக்கிய இடம்பிடித்துள்ளன. மனத்தின் இருண்ட சுரங்கங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று, அங்குள்ள ஒளி–நிழல்களின் விளையாட்டை மிக நுட்பமாகக் காட்டியவர். இதற்காகவே சுந்தர ராமசாமி அவரை “தமிழ் இலக்கிய வானில் ஒரு துருவ நட்சத்திரம்” என்று அழைத்தார். துருவ நட்சத்திரம் போல மு. தளையசிங்கம் தெளிவாகத் தன் நிலையிலிருந்து ஒரே வகை ஒளியைத்தான் வழங்கினார். அது உண்மையின் ஒளி, மறைக்கப்படாத மனஉணர்வின் ஒளி. உணர்ச்சியின் உண்மையை மறைக்காமல் அதன் இயல்பில் பார்த்தால்தான் மனித மனத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். அதையே மு. தளையசிங்கம் தன் எழுத்தின் மூலம் மாபெரும் கலை வடிவமாக மாற்றிக் காட்டியுள்ளார்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *