கேரளத்தில் இரு கவிதைப் போக்குகள் உண்டு. ஒன்று நாட்டுப்புறத் தன்மைகொண்ட கேரளப்பண்பாட்டில் இருந்து எழும் கவிதைகள். இன்னொன்று சம்ஸ்கிருதச் செவ்வியல் மரபில் இருந்து எழுபவை.இரண்டு அம்சங்களும் எல்லா படைப்புகளிலும் இருக்குமென்றாலும் மேலோங்கியிருக்கும் அம்சங்களை வைத்து அவற்றை மதிப்பிட வேண்டும். கேரள கவிதை சம்ஸ்கிருதச் செவ்வியல் மரபின் பலவீனமான நிழலாகவே இருந்தது. அதில் நாட்டார்ப்பண்பாட்டை கலந்து இன்றைய மலையாளத்துக்கு அடிப்படை அமைத்தவர் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன். அவரது அத்யாத்ம ராமாயணம், கிளிப்பாட்டு ஒரு திருப்புமுனை.
துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனை நாட்டாரழகியல் மரபின் முதல்புள்ளியாகக் கொண்டால் குமாரன் ஆசான், சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ள, இடச்சேரி கோவிந்தன் நாயர், பி.குஞ்ஞிராமன் நாயர் போன்றவர்களை அம்மரபின் தொடர்ச்சியாகச் சொல்லலாம். வள்ளத்தோள் நாராயண மேனன், உள்ளுர் பரமேஸ்வர அய்யர், ஜி.சங்கரகுறுப்பு போன்றவர்களை பண்டிதமரபின் நீட்சி எனலாம்.
அம்மாவுக்கு முதல் வரிசைக் கவிஞர்களில் மட்டுமே ஆர்வம் இருந்தது. இரண்டாம்வரிசைக் கவிஞர்களை அம்மா பொருட்படுத்தியதே கிடையாத. ”கவிதை ஆசாரிகள்” என்று வள்ளத்தோள், உள்ளுர் முதலியவர்களை ஒரே வரியில் நிராகரித்துவிடுவாள். “நல்ல கவிதை இளநீர் போல இருக்கும்” என்பது அம்மாவின் வரி.
இடச்சேரி கோவிந்தன்நாயரின் “பூதப்பாட்டு” கவிதையை அம்மா நன்றாகப் பாடுவாள். அம்மா அதைப்பாடும்போது மெல்ல மெல்ல அவள் ஒரு புள்ளுவத்தியாக மாறிவிடுவதுபோல் இருக்கும். அந்தப் பாட்டு புள்ளுவப்பாட்டின் மெட்டுக்குச் சரியாகப் பொருந்தி வரும். சமீபத்தில் அதை ஒரு டாக்டர் பாடி குறுவட்டாக வெளியிட்டிருந்ததைக் கேட்டேன். தேர்ந்த பாடுமுறையும் கம்பீரமான குரலும் கொண்டு இனிய மெட்டிலமைந்த அந்தப் பாடலை என் மனம் ஏற்கவில்லை. நான் அம்மா மெல்லிய கம்மிய குரலில் புள்ளுவர்குடம் விம்முவதுபோல பாடுவதையே மனதில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நாட்டுப்புறத்து ஐதீகம் ஒன்றின் விரிவாக்கம் அந்தப்பாடல். தவம் செய்து பிள்ளை ஒன்றைப் பெறுகிறாள் ஒரு அன்னை. அதை பூதம் ஒன்று துாக்கிச்சென்றுவிடுகிறது. குழந்தையைக் காணாத அம்மா பல இடங்களிலும் தேடி கடைசியில் பூதம் துாக்கிக்கொண்டு சென்ற கதையை அறிகிறாள். பூதத்தைப்பின் தொடர்ந்து செல்கிறாள். பூதம் பயங்கரமான தோற்றம் காட்டி அவளை மிரட்டுகிறது.அவளைக் கொல்ல வருகிறது. அவள் உயிருக்கு அஞ்சவில்லை. அஞ்சாதவர்களை பூதம் ஒன்றும்செய்ய முடியாது.
ஆகவே பூதம் அவளுக்கு ஆசை காட்டுகிறது. அந்தக் குழந்தைபோல பத்து குழந்தைகளை அளிப்பதாகச் சொல்கிறது. கட்டி கட்டியாக பொன்னும் வைரங்களும் அளிப்பதாக ஆசை காட்டுகிறது. அன்னையின் மனத்தை இளக்க அதனால் முடியவில்லை. அதன்பின் பூதம் இறங்கிவருகிறது. சாபத்தால் பூதமாக ஆன தன்னுடைய சாபமே இந்தக் குழந்தையை மார்போடணைத்து முலைகொடுத்து வளர்ப்பதன் மூலம் தீர்ந்துவிடுமென்றும் அந்தக்குழந்தை இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்றும் கெஞ்சுகிறது. அன்னை அதற்கும் இணங்கவில்லை.
பூதம் அன்னையை உதறி குழந்தையுடன் சென்றுவிட முனைகிறது. அக்கணமே தான் நாக்கைப்பிடித்திழுத்துக்கொண்டு உயிர்விடுவேன் என்றும் அதற்குமுன் பூதத்தை சபிப்பேன்என்றும் அவள் சொல்கிறாள். தாயின் சாபம் பெற அஞ்சிய பூதம் குழந்தையைக் கொடுத்துவிடுகிறது. ஆனால் ஒரு நிபந்தனை வைக்கிறது.குழந்தையை தாய் ஐந்து வயதுவரை வளர்க்கலாம். அதன்பின் பூதம் தேடிவரும்போது குழந்தையை கொடுத்துவிடவேண்டும். அந்த வசந்தகாலத்தில் குழந்தை மஞ்சள் கச்சை உடுத்து காணிக்கைகளுடன் தன்னுடன் வரத் தயாராக நிற்க வேண்டும். அம்மா சம்மதிக்கிறாள்.
ஐந்துவருடம் கழித்து குழந்தையைத் தேடி பூதம் வருகிறது. ஆனால் அதற்குள் அம்மாவின் குழந்தையைக் காக்க ஊரில் உள்ள எல்லா குழந்தைகளையும் மஞ்சள் ஆடை அணிவிக்கச் செய்து காணிக்கைகளுடன் வீட்டு முற்றத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். தன் குழந்தையை அடையாளம் காணமுடியாத பூதம் மனம்பதறி அழுதபடி ஊரெல்லாம் ஓடுகிறது. வசந்தகாலம் முழுக்க இரவெல்லாம் ஊரெங்கும் கதறியபடி அலைகிறது. மழைக்காலம் வந்ததும் தென்னையோலைகளின் ஒலியால் தேம்பி அழுதபடி திரும்பிச் செல்கிறது. பின்னர் வருடம்தோறும் வசந்தத்தில் கண்ணீருடன் பூதம் வந்து ஊரெல்லாம் குழந்தைகளைத் தேடிச் செல்கிறது. இளம்முகங்கள் தோறும் தேடிக்கொண்டே இருக்கிறது.
வருடம்தோறும் காணிக்கைபெறுவதற்காக பூத வேடமிட்ட தெய்யமாட்டக்காரன் வாளுடன் வீடு வீடாக வரும் வழக்கம் வடகேரளத்தில் உண்டு. அதற்குக் குழந்தைககள்தான் காணிக்கை வைக்க வேண்டும். அந்தப்பூதம் குழந்தைகளுக்கு அச்சமும் கவற்சியும் ஊட்டுவது.அதன் வருகையைப்பற்றி நிறைய கதைகள் உண்டு. அதிலொன்றின் மறு ஆக்கம் அக்கவிதை.சிறுவயதில் அக்கவிதையைப் படித்தபோது அம்மா அழுததாகச் சொன்னார். அப்போது அம்மாவுக்குக் கல்யாணமே ஆகியிருக்கவில்லை.
அம்மாவின் நட்டாலம் வீட்டில் ஒரு சிறு கண்ணாடி சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. நான் பெரியவனாகி நட்டாலம் சென்றபோதுகூட அதைப்பார்த்திருக்கிறேன். சின்ன வயதிலேயே அம்மா பெரிய மறதிக்காரி. எப்போதும் எதையோ தேடிக்கொண்டே இருப்பாள்.வீட்டுக்குள் அம்மா அலைவது போல தன் மனதுக்குள்ளும் அலைந்து கொண்டிருக்கிறாள் என்று நினைப்பேன். சின்னவயதில் தலைசீவிக் கொள்ள கண்ணாடியை தேடிச்தேடிச் சலித்ததனால் வீட்டுமுன் சுவரை தோண்டி அதில் கண்ணாடியை பதித்துவைத்தாள்.
ஆனால் மூத்த அண்ணா அன்று மாலை வீடு திரும்பியபோது வீட்டுச்சுவர் தோண்டப்பட்டிருந்ததைக் கண்டார். கடும் கோபம் கொண்டு “எடீ” என்று கூவினார். “ஆரெடீ சுவரை தோண்டியது?” என்றார். அம்மா வந்து கதவருகே நின்று “நான் தான் தோண்டினேன்”என்றாள். மூத்தமாமா கோபத்துடன் பாய்ந்து வந்தபின் அப்படியே நின்றார். அவரால் அம்மாவை அடிக்க முடியாது. அம்மா அப்படியே அவரது இறந்துபோன அம்மா காளிவளாகத்து பத்மாவதியம்மாவின் சாயல். “அகத்துபோடீ” என்று பெரியமாமா வேறுபக்கம் நோக்கி உறுமினார்.
ஆனால் அம்மா அதன்பின் அந்த கண்ணாடியில் ஒருமுறை கூட முகம் பார்க்கவில்லை. நாலைந்துநாள் கழித்துத்தான் பெரியம்மா அதைக் கவனித்தாள். “ஏண்டி….அண்ணா ஒன்றும் சொல்லவில்லையே..நீ அதில் தலைசீவிக்கொள்” என்றாள். அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. பெரியம்மா பலமுறை சொல்லிப் பார்த்தார்கள். தோழிகள் சொன்னார்கள். இளைய அண்ணா கூப்பிட்டு “சரிடீ…அண்ணா சும்மா ஒரு வார்த்தை சொன்னார். அவ்வளவுதானே? அண்ணாதானே? நான் சொல்கிறேன்” என்று சொல்லிப்பார்த்தார். கடைசியில் மூத்த அண்ணாவே கூப்பிட்டு “நீ பதிச்ச கண்ணாடிதானே..பார்த்துக்கோ ..நான் ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.” என்றார். அதன்பின்புதான் அம்மா அந்தக் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.
அம்மாவுக்குக் கொஞ்சம் தாமதமாகவே கல்யாணமாகிறது. அம்மாவின் மூத்த அக்காவுக்கும் இரண்டாவது அக்காவும் நல்ல சொத்துள்ளவர்களைக் கல்யாணம் செய்து வைத்தார் மூத்த அண்ணா. ஆனால் நாயர் சொத்துக்கள் விசித்திரமான சட்டச்சிக்கல்களில் நீதிமன்றத்தில் சின்னா பின்னமாகிக்கொண்டிருந்த காலம். அவர்களின் வாழ்க்கை சுகப்படவில்லை. ஆகவே சின்னவளுக்கு அரசாங்க உத்தியோகம் உள்ள மாப்பிள்ளைதான் என்று அவர் முடிவு செய்திருந்தார். அன்றெல்லாம் நாயர்களில் அரசாங்க வேலை என்றாலே போலிஸ் அல்லது ராணுவ வேலைதான். இரண்டும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.
கடைசியில் அப்பா வந்தார். அப்பாவுக்கு ஒரு கண்ணில் சிறு வயதில் சிம்பு குத்தி கலங்கிவிட்டது. முன்வழுக்கை. அம்மாவுடன் சண்டை பிடித்து தனியாக வேறு இருந்தார். ஆகவே அவருக்கும் நெடுங்காலம் பெண் கிடைக்கவில்லை. அப்பா கடும் கோபக்காரர் என்று ஏற்கனவே புகழ்பெற்றிருந்தார். அதைச்சொல்லி பெரிய மாமா தயங்கினார். ஆனால் அம்மா பெரிய அழகி. பையன் பெண்ணின் காலடியில் விழுந்து கிடப்பான் என்று பெரியம்மா சொன்னாள். கல்யாணம் நடந்தது. 1960 டிசம்பர் மாதம்.
அடுத்த வருடமே அண்ணா பிறந்தார். அதற்கடுத்த வருடம் நான். ஒன்றரை வருடம் கழித்து தங்கை. தங்கை அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது பிரசவத்துக்காக அம்மா நட்டாலம் வந்தாள். அம்மாவைப் பார்க்க வந்த அப்பாவுக்கும் அம்மாவின் மூத்த அண்ணாவுக்கும் ஏதோ சிறு பிரச்சினைக்காக பேச்சு முற்றியது. அப்பா வழக்கம்போல இரண்டாவது வசனத்துக்கே பாய்ந்த பெரிய மாமாவை அடித்தார். அவர் திருப்பி அடித்தார். அப்பா மன்வெட்டி ஒன்றை எடுத்து அவரை வெட்டுவதற்காகப் பாய்ந்தார். அவர் கீழே கிடந்த கடப்பாரையை எடுத்து அப்பாவின் தலையில் அடித்தார்.
அப்பா கிட்டத்தட்ட மூன்றுமாசம் மார்த்தாண்டம் மிஷன் ஆஸ்பத்திரியில் கிடந்தார். பஞ்சாயத்துப் பேசி போலீஸ் வரை புகார் போகாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்பாவின் அம்மா“அவன் செத்தால் சொல்லியனுப்புங்கள், புலைகுளி அடியந்திரத்துக்கு வருகிறேன்” என்று சொல்லியனுப்பிவிட்டார். அம்மாவின் அண்ணா அவர்கள் வீட்டிலிருந்து எவரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அப்பா அவரது அம்மாவை ஒருமுறை வீடு புகுந்து அடிக்கப் பாய்ந்ததற்குப்பின்னால் அவரது முகத்திலேயே பாட்டி விழிப்பதில்லை. ஆனால் கர்ப்பிணியான அம்மா தன்னந்தனியாக அருமனையில் இருகுழந்தைகளுடன் தங்கி தினமும் மார்த்தாண்டம் வந்து அப்பாவைப் பார்த்துக்கொண்டாள்.
படுக்கையில் கிடந்து அப்பா அம்மாவை வசைபாடினார். துணிமாற்றவோ சாப்பாடு கொடுக்கவோ அம்மா செல்லும்போது அம்மாவை எட்டி அறைந்தார். அம்மாவை அடிக்கமுடியாதபோது கையில் கிடைத்தவற்றை துாக்கி வீசுவார். மெல்ல அப்பாவுக்கு உடல்நிலை சரியாகியது. ஆனால் கடைசிவரை அவருக்கு தலைவலி இருந்தது. கழுத்து மெல்ல நடுங்கிக்கொண்டிருக்கும். பிரசவம் நெருங்கியபோது அம்மாவுக்கு வேறு வழி இல்லை. பெரியம்மா வந்து அம்மாவையும் என்னையும் அண்ணாவையும் கூட்டிச்சென்றார்.
நட்டாலத்தில் விஜி பிறந்தபோது அப்பா பார்க்க வரவில்லை. பெரியம்மா அம்மாவிடம் அப்பாவுக்கு கடிதம் எழுதச்சொன்னாள். “விஷயம் அவருக்குத் தெரியுமே, கடிதம் தேவையில்லை” என்று அம்மா சொல்லிவிட்டாள். அப்பாவை அழைத்துக் கடிதம் எழுதும்படி ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் வந்து அம்மாவிடம் கெஞ்சினார்கள். அம்மா பொருட்படுத்தவில்லை. மக இயல்பாக புத்தகம் படித்துக்கொண்டு கவிதைகளைப் பாடிக்கொண்டு இருந்தாள்.
அம்மாவுக்குத் தெரியாமல் விஜிக்கு இருபத்தெட்டாம் நாள் இடுப்பில் நுால்கட்டும் சடங்குக்கு அப்பாவை அழைக்கப்போன அம்மாவின் தம்பி காளிப்பிள்ளையை அப்பா முஞ்சிறை சார் பதிவாளர் அலுவலக வாசலில் வைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்து படித்து வெளியே தள்ளினார். அப்பாவை அழைக்க பஞ்சாயத்துக்குச் சென்ற ஊர்ப்பெரியவர்களுக்கெல்லாம் தென்திருவிதாங்கூரின் புகழ்பெற்ற கெட்டவார்த்தைகள் நிறையவே கிடைத்தன. சிலருக்கு அடியும் கிடைத்தது, கருங்கல் வாசுதேவன் ஆசான் பதிலுக்கு அப்பாவை அடித்து துாக்கிப் போட்டுவிட்டு வந்தார். மெல்ல எல்லோரும் பின்வாங்கினார்கள்.
அம்மா பொருட்படுத்தவேயில்லை. ஆரம்பத்தில் வீம்பாக இருந்த அம்மாவின் அண்ணாக்கள் மறைமுகமாக அம்மாவிடம் அப்பாவுக்கு ஒருகடிதம் எழுதும்படிச் சொல்லிப்பார்த்தார்கள். அம்மா நேரடியாக மூத்த அண்ணாவின் கண்களைப் பார்த்து “என் சொத்து இங்கே என்னிடம்தானே இருக்கிறது? என் பிள்ளைகளை நான் வளர்ப்பேன்“என்று சொன்னாள். பெரியமாமா சோர்ந்து பின்வாங்கினார். அம்மாவை எல்லாரும் பழி சொன்னார்கள். ”அவ யட்சியாக்குமே” என்றார்கள்.
அந்த நிலையில் அப்பாவின் அம்மா நட்டாலத்துக்கு வந்தார். அப்பா முகத்தில் விழிக்காமல் மூன்று வருடங்களாக இருந்தவர் அவர். அப்பாவின் கல்யாணத்துக்கு வந்ததுடன் சரி. அதன்பின் அப்பா ஆபிஸ் சென்றபின்னர் ரகசியமாக வீட்டுக்கு வந்து எங்களைக் கொஞ்சிவிட்டுச் செல்வார். அப்பா ஆஸ்பத்திரியில் இருந்த நாட்களில் நாலைந்துமுறை அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்து பணம் கொடுத்துச் சென்றார். மகனைப்பார்க்க வரவேயில்லை. பாட்டி லட்சுமிக் குட்டியம்மா ஒரு மகாராணியின் தோரணைகொண்டவர். முன்னால் ஒரு கூலிக்காரன் வாழைத்தார் கருப்புகட்டி சுமையுடன் நடக்க பின்னால் வெள்ளைவேட்டியும் மேலாடையும் அணிந்து குடையை ஊன்றி தலை நிமிர்ந்து பாட்டி வந்து நட்டாலம் வீட்டு முற்றத்தில் நின்று “ஆரெடா?” என்றுஅழைத்தார்.
பாட்டியைப்பார்த்ததும் நட்டாலத்தில் எல்லாருக்கும் பரபரப்பு. மாமாக்கள் வந்து பாட்டிமுன் கைகட்டி நின்றார்கள். பாட்டி அம்மாவை தனியறைக்கு அழைத்துச்சென்றாள். “அவன் ஒரு முரடன்..அவன் தந்தையின் குணம் அது.நீயும் அவனைக் கைவிட்டால் யாரையாவது கொலைசெய்துவிட்டு ஜெயிலுக்குப் போவான். இல்லாவிட்டால் யாராவது அவனைக் கொல்வார்கள். நீ என்னுடன் வா. நான் உன்னை அவனுடன் சேர்த்து வைக்கிறேன்“ என்றுஅழைத்தாள். “கொண்டு விட்டவர் வந்து கூப்பிடட்டும்” என்று அம்மா திடமாகச் சொல்லிவிட்டாள்.
அதன்பின் எந்த முயற்சியும் எவரும் எடுக்கவில்லை. அப்படியானால் சட்டப்படி விவாகரத்து செய்துவிடுவோம். வேறு திருமணம் செய்யலாமே என்று பெரியமாமா சொன்னார். அம்மா நிறைய சொத்து உள்ளவள் ஆதலினால் அது எளிய விஷயம். அம்மாவுக்கு மறுமணத்தில் சம்மதம் இல்லை என்று சொல்லிவிட்டாள். ஆனால் விவாகரத்துக்கு சம்மதம் என்றாள். அப்பாவுக்கு விவாகரத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சட்டப்படி நாயர் ஸ்திரீ தன் கணவனை, கணவன் சம்மதம் இல்லாமல்கூட விவாகரத்து செய்துகொள்ளலாம். மேல்நடவடிக்கை தொடங்கியது.
அப்பா அந்த நோட்டீசை எடுத்துக்கொண்டு நட்டாலம் வந்து கோயில் முகப்பில் நின்று தாவிக்குதித்து கெட்டவார்த்தை பொழிந்தார். வேடிக்கை பார்த்தவர்களை அறையப்போனார். அப்போதுஅம்மா எந்தக்கவலையும் இல்லாமல் திண்ணையில் அமர்ந்து பாடியபடி புளி குத்தி கொட்டை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்பாவை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கோயில் திருவிழாவுக்குக் கொடி ஏறியிருந்தது. ஆகவே ஊரெல்லாம் கூட்டம். அம்மாவைத்தவிர அனைவருமே அப்பாவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
இரண்டாம்நாள் திருவிழாவில் கூட்டுப்பொங்கலிட்டபோது எனக்கு யாரோ பொங்கல் ஊட்டிவிட்டார்கள். அந்த உருளியில் களிம்பு ஏறியிருந்திருக்க வேண்டும். எனக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. நாட்டுவைத்தியம் பலனளிக்கவில்லை. உள்ளுர் கம்பவுண்டரும் குணப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் ரத்தமும் சீதமும் போக ஆரம்பித்தது. கருங்கல்லி்ல் பெரிய டாக்டர் பார்த்து ஊசி போட்டுக் குணப்படுத்தினார். மூன்றாம் நாள் மீண்டும் ஆரம்பித்தது. மீண்டும் ஊசி போட்டபோது நான்குநாள் சரியாக இருந்தது. மீண்டும் ஆரம்பித்தது.
இருபது நாட்களில் நான் மெலிந்து துணிப்பொம்மை போல் ஆகிவிட்டேன். இளநீர் அல்லாமல் எந்த உணவும் ஒத்துக்கொள்ளவில்லை. கைகால்கள் குழைந்து எழுந்து அமரக்கூட முடியாமலாகிவிட்டது. மார்த்தாண்டம் மிஷன் ஆஸ்பத்திரியில் என்னை பலநாள் வைத்திருந்தார்கள். சற்று குணம் தெரிந்து முதல் வாய் பாலோ மாவோ உள்ளே சென்றதும் மீண்டும் ஆரம்பித்துவிடும். இருபதுநாட்களுக்குப்பின் குணமடைந்து நட்டாலம் வீட்டுக்கு கொண்டுவந்து நாலைந்து நாள் சரியாக இருந்தேன். ஓரளவு நன்றாகவே சாப்பிட்டேன். மறுநாள் காலையில் நான் படுத்திருந்த பாயெல்லாம் ரத்தம் கலந்த பேதி.
என்னை துணியில் பொதிந்து துாக்கி எடுத்துக்கொண்டு பஸ்சில் மீண்டும் மார்த்தாண்டத்துக்குக் கொண்டுசென்றாள் அம்மா. கூட பெரியம்மாவும் உண்டு. மார்த்தாண்டத்தில் பஸ் இறங்கியபோத எதிரே அப்பா வந்தார். துணிக்குள் உலர்ந்த கருவாடுபோல சாம்பல் பூத்திருந்த என்னைப் பார்த்து வாய் திறந்து பிரமித்து நின்றார். பாய்ந்துவந்து என்னைப் பிடுங்கினார். துணிக்குள் நான் ரத்தமும் சலமுமாக கொழகொழத்தேன். தோளில் துாக்கிக்கொண்டு அப்பா சாலைவழியாக ஓடினார். அவரது சட்டையெல்லாம் ரத்தமும் மலமும் வழிந்தது. அம்மா பின்னால் ஓடினாள்.
அப்பா என்னை குழித்துறை பிளட்சர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார். குழத்துறையில் டாக்டர் பிளட்சரும் நெய்யூரில் டாக்டர் சாமர்வெல்லும் அன்று புகழ்பெற்ற மருத்துவர்கள். கிறிஸ்துவின் பொருட்டு மருத்துவ சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட வெள்ளையர்கள் அவர்கள். பிளட்சர் என்னைக் குணப்படுத்தினார். என்னுடைய நோய் ஒருவகை ஒவ்வாமைஎன்று உணர்ந்து அவர் ஒரு புதிய சிகிழ்சையை மேற்கொண்டார். பிற டாக்டர்கள் எனக்கு உணவு தருவதை நிறுத்தினார்கள். பிளட்சர் எனக்கு உணவை அளித்தார். நான் கரைத்த கஞ்சி சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன். வயிற்றுப்போக்கும் தொடர்ச்சியாக இருந்தது. பின்பு மெல்ல மெல்ல வயிற்றுப்போக்கு குறைந்தது. முழுமையாக நின்றது.
நான் குணமாகி வீடு திரும்ப இருபது நாள் ஆகியது. ஆஸ்பத்திரியிலேயே அம்மா அப்பாவுடன் சமாதானம் ஆனாள். மீண்டும் சண்டை போட்டு மீண்டும் சமாதானமானாள். ஆஸ்பத்திரியில் இருந்து என்னை அப்பா அருமனை வீட்டுக்குக் கொண்டுசென்றார். அம்மா கூடவே வந்தாள். அப்பாவுடன் சேர்ந்து வாழலாமென்ற முடிவை அம்மா அப்போதுதான் எடுத்தாள். இருபத்திரண்டு வருடம் கழித்து தற்கொலைசெய்து கொள்வதுவரை அந்தஉறவு கசந்து கசந்து நீடித்தது.
பதினைந்து வருடம் கழித்து அதைப்பற்றிச் சொல்லும்போது அம்மா இடைச்சேரி கோவிந்தன் நாயரின் பூதப்பாட்டை நினைவு கூர்ந்தாள். “நுாறுநுாறு வருடங்களாக அந்த குழந்தைக்காக ஏங்கி அழுது தேடி வந்துகொண்டிருக்கிற பூதத்தின் பாசம் பெற்ற தாயின் பாசத்தை விடப்பெரியது இல்லையா? நியாயப்படி தெய்வம் பிள்ளையை பூதத்துக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்” அம்மா சொன்னது புரிய எனக்கு அஜிதன் பிறக்க வேண்டியிருந்தது.