தஞ்சாவூரில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்த போது கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது சிறுவாணி வாசகர் மைய வெளியீடாக வந்த கதாரசனைதான். இந்நூலை க.நா.சு வுக்கு சமர்ப்பணம் செய்திருந்தது அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியது.
அதேபோல இதிலுள்ள கட்டுரைகளும் என்னை வெகுவாக கவர்ந்ததோடல்லாமல் அட இவர் நம்மாளா இருக்காரே என்ற உணர்வை ஏற்படுத்தியது. தி.ஜா, நாஞ்சில் நாடன், ஆ.மாதவன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக இதிலுள்ள ஜெயமோகன் சில பதிவுகள் கட்டுரை இத்தொகுப்பின் உச்சம். கதாரசனை வாசித்த பின் இவ்வளவு நாளாக இவர எப்படி வாசிக்காமல் விட்டோம் என எண்ணினேன்.
சில நாட்கள் கழித்து கீரனூர் ஜாகிர்ராஜாவை பேசும் புதிய சக்தி ஆண்டு விழாவில் சந்தித்தேன் என்னை அறிமுகம் செய்து கொண்டு பிரபஞ்சனின் உடல்நிலை பற்றி விசாரித்தேன் பின் அடுத்த வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவிலும் சந்தித்து பேசிய பின் நானும் தஞ்சையில்தான் வசிக்கிறேன் சந்திக்கலாமா என 2, 3 முறை போனில் பேசிய போதும் சரியாக பிடி கொடுத்து பேசவில்லை. எனவே இவர் உரையாடலுக்கு லாயக்கற்றவர் போலும் என தவறாக நினைத்துக் கொண்டேன் சில நாட்களுக்குக்குப் பின் சி.எம்.முத்து 70 விழாவுக்குப் பின் நான், சாமிநாதன் பார்த்திபன் மற்றும் ஜாகிர் Sir உடனான உரையாடல் எங்கள் நட்புக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. அந்த சந்திப்புக்கு பின் அவர் சொன்னார் உங்கள கவிப்பேரரசு நேசன்னு தப்பா நினைச்சிட்டேன் என தமாசாக சொன்னார்
பின் தினமும் சந்தித்து உரையாட ஆரம்பித்தோம். ஞாயிறு கடை உண்டு நூல் அறிமுக விழாவில் ரொம்ப சந்தோசமாக இருந்தேன். காலையில் இருவரும் ஒன்றாகவே நடைபயிற்சி செல்வோம். போகும்போதே தெருவில் உள்ள மரங்கள் எதிர்ப்படும் நாய்கள், பூனைகள், மாடுகள், காகங்கள் கடைசியாக மனிதர்கள் என இப்படியாக எங்கள் உரையாடல் போகும். ஒவ்வொரு நாளும் ஒரு தெருவில் நடந்து கொண்டே தஞ்சையின் வீதிகளை ரசிப்போம். அப்படி போகும்போது தெருவுக்கு இவராக ஒரு பெயரைச் சூட்டுவார் உதாரணத்துக்கு ஒன்று ஓல்டு ஹவுசிங் யூனிட்டிலிருந்து துளசியாபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் ஒதிய மரங்களாக இருக்கும் எனவே இந்த சாலைக்கு ஒதியமரச்சாலை என பெயர் சூட்டினார் நானும் அதை ஆமோதித்தேன். காலையில் இருவரும் வாக்கிங் செல்வது போல விடுமுறை நாட்களில் தஞ்சையின் புறநகர் பகுதிகளையும், தஞ்சைக்கு அருகிலுள்ள சிற்றூர்களையும் என்னுடைய டூ வீலரில் சுற்றுவோம். ஒரு முறை அண்ணன் சுநீல் கிருஷ்ணனை சந்திக்க என்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே தஞ்சையிலிருந்து காரைக்குடி சென்று வந்தோம். அப்போது சுனில் அவர ஏன்டா இவ்வளவு தூரம் பைக்ல அழைத்துக் கொண்டு வந்தாய் என கடிந்து கொண்டார். பின்பு ஒரு முறை தஞ்சையிலிருந்து பூம்புகாருக்கு டூ வீலரிலேயே சென்று வந்தோம். பூம்புகாருக்கு 4 கி.மீட்டருக்கு முன்னால் சாயாவனம் உள்ளது அப்போது ச.கந்தசாமியின் சாயாவனம் நாவல் குறித்து பேசிக் கொண்டே பூம்பூர் கடற்கரைக்குச் சென்றோம். அப்படி வண்டியில் போகும்போது நன்றாக பாடுவார். இசையின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். ஒரு முறை திருவையாறு சென்று திரும்பிய போது தியாகய்யரைப் பற்றி ஒர் நாவல் எழுத வேண்டும் எனச் சொன்னார். எழுத்தாளர்களில் வண்ணதாசன் நல்ல ஓவியர் என்பது யாவரும் அறிந்ததுதான். ஜாகிர்ராஜா நல்ல ஓவியர் என்பது யாரும் அறியாதது. மேலும் அவருடைய கையழுத்து ரொம்ப அழகாக இருக்கும். கையெழுத்து அழகாக இருக்கும் என்பதாலேயே தி.ஜானகிராமனின் கோபுர விளக்கு பற்றி எழுதிய கட்டுரை, மௌனியின் பிரபஞ்சகானம் பற்றிய கட்டுரை, வண்ணநிலவனின் கரையும் உருவங்கள் போன்ற கட்டுரைகளின் கைபிரதியை நான் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். நாங்கள் இருவருமே நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அவரின் நகைச்சுவையை பற்றி பேசினால் பல நூறு சம்பவங்களைச் சொல்லலாம். அதே போல இருவரும் உணவை ரசித்து ருசிப்போம். உணவு, பயணம், இலக்கியம் என ஒத்த ரசனையுடைய ஒருவடன் பழகுவது ஓர் நல்ல அனுபவம். அந்த நாட்கள் திரும்ப வராதா என ஏங்குகிறேன் இப்போது. அடிக்கடி சந்திக்க தொடங்கிய சில சந்திப்புகளிலேயே பின்தொடரும் நிழலின் குரலை வாசிக்க வலியுருத்தினார். பின் சுந்தர ராமசாமி நினைவின் நதியில், அலெக்ஸான்டர் குப்ரினின் பள்ளம்(புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு), யசுனாரி கவப்பட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம், கேசவ ரெட்டியின் அவன் காட்டை வென்றான், திலீப் குமாரின் கடவு போன்ற நூல்களையும் கொடுத்து வாசிக்கச் செய்தார். கடவு வாசித்த அடுத்த நாளே திலீப் குமாருடன் என்னை போனில் பேசவைத்தார். அந்த அறிமுகத்துக்குப் பின் திலீப் குமாருடனான உரையாடல் இன்றும் தொடர்கிறது.
இப்படி பல அதிசயங்களை என் வாழ்வில் நிகழ்த்திக்காட்டினார். கொரோனா ஊரடங்கில் என் தங்கை கல்யாணத்துக்கு நகை வாங்க முடியாமல் தவித்த போது ஆசாரி ஒருவரிடம் நகை வாங்கித்தந்து தக்க சமயத்தில் என் மானம் காத்தார். தங்கை கல்யாணம் முடிந்த சில தினங்களில் நான் தஞ்சைக்கு திரும்பிய போது ஊரடங்கின் எல்லா நாட்களிலும் அவர் வீட்டிலேயே சாப்பிட்டேன். ஊரடங்கு தளர்த்தி உணவகங்கள் திறந்த பின்பும் கூட அவரது துணைவியார் ராஜியின் அன்பின் காரணமாக எனக்கு கல்யாணமாகி மனைவி வரும் வரை அங்கேயே சாப்பிட்டேன். சில எழுத்தாளர்கள் எழுத்தில் ஒன்றாகவும் யதார்த்தத்தில் வேறொருவராகவும் இருக்கிறார்கள் சாப்பாட்டு நேரத்துக்கு போனால் கூட சாப்பிட சொல்லமாட்டார்கள்( அன்பு, கருணை என்று நெகிழக் கூடியவர்கள், உலக இலக்கியங்கள் பற்றி பல ஆண்டுகளாக பேசக்கூடியவர்கள்) ஆனால் ஜாகிர்ராஜாவும் அவரது குடும்பமும் விருந்தோம்பலின் அடையாளம். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியது அவர்களுடைய உண்மையான அன்பு. அவர்கள் வீட்டில் அசைவம் சமைக்கும் போது எனக்காக சைவ உணவு சமைத்து தந்தார்கள். நான் அவ்வப்போது நெகிழ்வுடன் நினைத்துக் கொள்கிறேன்.
என் திருமண நிச்சயதார்த்ததில் என் நண்பர்கள் சார்பில் கலந்து கொண்ட ஒரே குடும்பம் ஜாகிர்ராஜாவின் குடும்பம் மட்டுமே. பின் அவர் குடும்பத்தில் ஒருவனாகவே மாறிப்போனேன். என் குழந்தை பிறந்த அன்று உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தேன் வேலையிலும் நிறைய பிரச்சனை அன்று என் உடன் குழந்தையைக் காண வந்ததும் அவரே. இன்றும் அவருடைய குடும்ப நிகழ்வுகளில் நான் இல்லாமல் இல்லை அதே போல என் குடும்ப நிகழ்வுகளில் அவரும் அவருடைய துணைவியாரும் இல்லாமல் இல்லை. என் மனைவியும் அவருடைய மனைவியும் நெருக்கமாக உரையாடுகின்றனர் இப்போது. முதன் முதலாக எனக்கு பிறந்தநாள் கொண்டாடியதும் அவர் வீட்டில்தான். அதே போல அவருடனான அறிமுகத்துக்கு பின் பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகளுக்கு இருவரும் சேர்ந்தே பயணிக்கிறோம். இத்தா நாவலை என்னுடைய ரூமில்தான் தங்கி எழுதினார் முதலில் திரைக்கதையாக எழுதத் தொடங்கி பின் நாவலாக வெளிவந்தது. பெரும்பாலான எழுத்தாளர்கள் இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள். ஆனால் ஜாகிர்ராஜா சினிமாவிலிருந்து இலக்கியத்துக்கு திரும்பியவர்.
அவருடனான உரையாடல்களில் அவருடைய இலக்கிய முன்னோடிகளான தஞ்சை ப்ரகாஷ், க.நா.சு, கு.ப.ரா, மௌனி, எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடனின் கும்பமுனி போன்றோர் இடம் பெறுவர். இதே போல தற்கால நவீன இலக்கியம் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் விவாதிப்போம். ஒரு முறை இலக்கிய முன்னோடிகளைப் பற்றி பேசும்போது இப்படிச் சொன்னார் “லா.ச.ராவும், தி.ஜாவும் கவிதை எழுதவில்லை எனினும் அவர்கள் இருவரும் கவிதைக்காரர்களே”. இது ஓர் அரிதான ஸ்டேட்மென்ட். தஞ்சை ப்ரகாஷ் பற்றிய அரிய செய்திகள், எம்.வி.வெங்கட்ராமின் மேனரிசம், வண்ணநிலவனை பேட்டி கண்டது, கோணங்கியின் உணவுப் பழக்கம், அசோகமித்ரனின் அறிவுரை, ஜெயமோகனுடனான கடிதத் தொடர்பு, பிரபஞ்சனின் மேன்சன் அனுபவம், நாஞ்சில் நாடனுடனான நெருக்கம் இப்படி பல விஷயங்களை சுவாசியம் குறையாமல் சொல்வார்.
அவருடைய மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க ஜெயமோகன் வீட்டுக்கு போன போது என்னையும் அண்ணன் சாமிநாதனையும் உடன் அழைத்துச் சென்றார். அந்த சந்திப்பு என் வாழ்நாளின் இனிய தருணங்களில் ஒன்று. சாமிநாதன் தஞ்சாவூர் ஓவியத்தை நினைவுப் பரிசாக ஜெயமோகனுக்கும், அருண்மொழி நங்கைக்கும் அளித்தார். அண்ணன் சாமிநாதன் வெண்முரசை முழுமையாக வாசித்தவர். நான், அண்ணன் சாமிநாதன், கீரனூர் ஜாகிர்ராஜா, ஜெயமோகன் மற்றும் அருண்மொழி நங்கை என எல்லோரும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினோம். வீட்டுக்கு போனதுமே அருண்மொழி நங்கை ரொம்ப உற்சாகமாகி காஃபியும், பக்கோடாவும் செய்து தந்தார். காஃபியை மட்டும் குடித்துவிட்டு உரையாடினோம். உரையாடலில் பின் தொடரும் நிழலின் குரல் வீரபத்திர பிள்ளை, வெண்முரசு, ஹாஜி அப்துல் ரஹ்மான், மற்றும் ஜெயமோகனுடைய மலபார் அனுபவங்கள், விக்ரமாதித்யன், நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், நகுலன், நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி எனச் சென்றது. போகும்போது சாப்பிடாமல் வைத்திருந்த பக்கோடாவை தாங்க நான் ரயில் போகும்போது சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக் கேட்டதும் அருண்மொழி சந்தோஷமடைந்து எடுத்துத் தந்தார். ஜெயமோகன்தான் ஆச்சரியமாக பார்த்தார். ஜாகிரும், சாமிநாதனும் இங்க வந்தும் உன் வேலையை காட்டிட்டியா என்று கடிந்து கொண்டனர். ஜெயமோகன் எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு புத்தகம் அன்பளிப்பாக தந்தார். எனக்கு இலக்கிய முன்னோடிகள் தந்தார். பின் ரயிலில் புறப்படும்போது ரொம்ப சந்தோஷத்துடன் பக்கோடாவை நான் மட்டும் சாப்பிட்டேன்.
அருட் தந்தை மரிய தன்ராஜ் அவர்களை சந்திக்க நாகமலைக்கு ஒருமுறை அழைத்துச் சென்றதும் நல்ல அனுபவம். ஃபாதருடனான உரையாடல் மகிழ்வாக இருந்தது. ஒரு பாஃதர் இவ்வளவு நவீன இலக்கியங்களை வாசித்துள்ளாரே என ஆச்சரியப்பட வைத்தார். அருட் தந்தை அவர்கள் எங்கள் இருவரையும் சாப்பிட வைத்து அனுப்பினார்.
ஒருமுறை இருவரும் என்னுடைய பைக்கில் நாகப்பட்டிணம் சென்ற போது நூருல் அமீன் பைஃஜி என்ற நண்பரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் எங்களை இன்முகத்துடன் வரவேற்று வெயிலுக்கு இதமாக அவில் மில்க் தந்து உபசரித்து உருது இலக்கியங்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் உரையாடினார். விடைபெறும்போது தன்னுடைய கனவுக்குள் கனவு என்ற நாவலை அன்பளிப்பாக தந்தார். பின் நாங்கள் இருவரும் நாகூர் தர்காவுக்குச் சென்றோம். சிறுவனாக இருந்தபோது பெரியப்பாவுடன் சிலமுறைகள் நாகூர் தர்காவுக்குச் சென்றிருக்கிறேன். இருந்தபோதும் ஜாகிர்ராஜாவுடன் சென்று திரும்பியது நல்ல அனுபவம்.
உணவில் எங்கள் இருவருடைய ரசனையும் பெரும்பாலும் ஒத்துப் போகும் உதாரணமாக பீர்க்ங்காய் சாம்பார், பாகற்காய் வறுவல், கத்தரிக்காய் வதக்கல் எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடித்தமானது. சில வேற்றுமைகளும் உண்டு. ஒருமுறை அவர் குடந்தை வந்தபோது கிருஷ்ணா பவனில் திருமால் வடை வாங்கி தந்தேன் சாப்பிட்டுவிட்டு ரொம்ப நல்லாருக்கு தஞ்சை வரும்போதெல்லாம் வாங்கி வாருங்கள் என்றார் ஆனால் நான் ஒருமுறை கூட வாங்கிச் சென்றதில்லை. நான் வெறுங்கையுடன் போகும்போது கூட அவரது துணைவியார் ராஜி அக்கா என் மனைவிக்கும், குழந்தைக்கும் ஏதாவது கொடுத்து அனுப்ப தவறியதில்லை.
கதாரசனைக்கு பின் காஃபிர்களின் கதை, துருக்கி தொப்பி, சாமானியர்களைப் பற்றிய குறிப்புகள், காலத்தை விஞ்சி நிற்கும் கலை, ஞாயிறு கடை உண்டு, கொமறு காரியம், தேய்பிறை இரவுகளின் கதை, பஷீரிஸ்ட், கருத்த லெப்பை, மீன்காரத் தெரு, மீன்குகை வாசிகள், வடக்கேமுறி அலிமா, ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் மற்றும் கடைசியாக வந்த ஹலால் வரை எல்லாவற்றையும் வாசித்துவிட்டேன். 2 வருஷத்துக்கு முன் பாரதி புத்தகாலயத்தின் யூ டியூப் சேனலுக்காக அவரை நேர்காணலுக்காக சந்தித்து உரையாடியது என் வாழ்வின் பெருமிதங்களில் ஒன்று. சென்ற வருடம் கீரனூர் புக்ஸ் வெளியீடாக வந்த அருட் தந்தை மரிய தன்ராஜின் மற்றவர்களின் சிலுவை தொகை நூலுக்கான ஆலோசனையில் என்னையும் சேர்த்துக் கொண்டது அவரின் பெருந்தன்மை. ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த கட்டுரையும் கூட என் வாழ்வின் பெருமிதங்களில் ஒன்று. எல்லா புகழும் கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கே.
வேலை நிமித்தம் குடந்தை வந்தபின் தஞ்சாவூரில் தவறவிட்ட விஷயங்களில் ஒன்று அவருடன் வாக்கிங் போகும்போது உரையாடும் உரையாடல். மேலும் இப்போதும் எனக்கு ஒரு அரிய புத்தகம் தேவைப்படும்போது முதலில் தேடுவது அவருடைய வீட்டில்தான். எப்போது வேண்டுமானாலும் அவருடைய புத்தக சேமிப்பிலிருந்து நான் எதையும் எடுத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறேன். இது போதும் எனக்கு.
கீரனூர் ஜாகிர்ராஜாவை வாசிக்கத் தொடங்குபவர்கள் பின்வரும் வரிசையில் வாசிக்கலாம். இங்கே அவருடைய படைப்புகளைப் பற்றி எழுதவில்லை எனினும் ஒன்றை மட்டும் சொல்கிறேன் யார் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜாவை வாசிக்கத் தொடங்குகிறாரோ அவர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் மொத்தப் படைப்புகளையும் வாசிக்க நேரிடும் ஏனெனில் இவருடைய எழுத்து ரொம்ப Read ability யுடன் இருக்கும். ஜாகிரிடம் நான் வியப்பது இந்த Read ability தான்.
கதாரசனை, காலத்தை விஞ்சி நிற்கும் கலை, கொமறு காரியம், பஷீரிஸ்ட், துருக்கி தொப்பி, வடக்கேமுறி அலிமா, ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன், மீன்காரத்தெரு, மீன்குகை வாசிகள், கருத்த லெப்பை, ஞாயிறு கடை உண்டு & தேய்பிறை இரவுகளின் கதை.
நல்ல பதிவு.
எழுத்தாளர் இயல்பு களை
சுவைபட சொல்லியுள்ளீர்கள்
அவரின் நாவல் ஒன்று வாங்கி
வைத்துள்ளேன் தங்கள் எழுத்து அதை வாசிக்க
தூண்டுகிறது மகிழ்ச்சி
Super Ayya. Eager to read ur next writing Vaalthugal ayya