“ஹலோ, யாரு?”

“என்னது யாரா! பொறம்போக்கு. வேற நம்பர்ல இருந்து கூப்டா கொர‌ல் கூடவா மாறும். நல்லா கேட்டுக்க… நம்பர் 20, சார்சங்கர் தெரு. சரியா?”

“ஹலோ… நெஜமா நீங்க யார்னே தெரியல”

சிறிது நேரம் மௌனம்.

“அய்யோ.. சாரிங்க”

போன் கட்டானது.

மதன் பல நிறுவனங்களுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருந்தான். எதாவதொரு நிறுவனத்தில் இருந்தாவது அழைப்பு வராதா என்று.  பார்த்தால் ராங் நம்பர்.

“ச்ச.. என்னடா இது நாம எதிர்பார்க்கறது வராம என்ன என்னமோ வருது”.

மதன் ஹாஸ்டலில் தனியாக தங்கிக் கொண்டிருப்பவன். அவன் பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள். அவன் அப்பா சொல்வார், “நமக்கு உக்காந்து சாப்பட்ற அளவுக்கு சொத்து இருக்கு.  எதுக்கு நீ வேலைக்கு போகனும்”. அதற்கு மதன், “அதுதான் எனக்கு பிடிக்கல, வந்தமோ இருந்தமோ செத்தோமானு இருக்கறதுல எனக்கு இஷ்டம் இல்ல. எதாச்சும் பண்ணனும், கஷ்ட படனும், அப்பதான் வாழ்ற ஃபீல் வரும்”.

மணி ஒன்று முப்பது இருக்கும். ஹாஸ்டலுக்குச் சென்று படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. எழுந்து மாடிக்குச் சென்றான். அப்படியும் இப்படியுமாக நடந்து பார்த்தான். இங்கே இருந்து கீழே விழுந்து விடலாமா என அவனுக்குக் தோன்றியது. ச்சீ.. என்ன இது பைத்தியக்கார தனம் என்று தலையில் அடித்து கொண்டான்.

படிக்கட்டுகளை பார்த்து கொண்டிருந்தான். அதுவும் அவனை திரும்பி பார்ப்பது போல் ஒரு கணம் தோன்றிற்று. திடீரென, “நம்பர் 20 சார்சங்கர் தெரு” என அவன் மனதில் தோன்றி மறைந்தது. ஏன் திடீரென எனக்கு அது தோன்ற வேண்டும். கடவுள் வழி காட்டுகிறார் என மதனுக்கு தோன்றியது. கீழே இறங்கி, சட்டையைப் போட்டு கொண்டு, வெளியே கிளம்பினான்.

ஆட்டோவை பிடித்து, சார்சங்கர் தெருவை அடைந்தான். வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. மனதில் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்றான். வீடு மிகவும் அழகாக இருந்தது. குறிப்பாக, ஒழுங்காக இருந்தது. ஏனோ, அவனுக்கு இந்த வீட்டில் செயற்கை தனம் இருப்பதாக தோன்றியது. ஆனால், நிஜத்துடன் கலந்திருப்பதால், எங்கே நிஜம் ஆரம்பிக்கிறது, எங்கே செயற்கை தனம் ஆரம்பிக்கிறது என குழம்பினான். ஒரு ஓவியம் இருந்தது. அதில், திறந்தவெளியில் பெரிய யானை, அதன் ஒரு கால் சிறிய கயிற்றை கொண்டு கட்ட பட்டிருந்தது. இன்னொரு, போட்டோ மாட்ட பட்டு இருந்தது. கணவன், மனைவியாக இருக்க வேண்டும். போட்டோவை பார்த்துக் கொண்டிருக்கையில், யாரோ வருவது போல் அவனுக்கு சத்தம் கேட்டது. கப்போர்ட்டில் சென்று ஒளிந்து கொண்டான். அங்கிருந்து, அவனால் வெளியே பார்க்க முடிந்தது.

படிக்கட்டில் இருந்து ஒருவன் கீழே இறங்கினான். சிவப்பு சட்டையும், மஞ்சள் ஷார்ட்ஸும் அணிந்திருந்தான். மூஞ்சை பார்த்தால், தூங்கி எழுந்தவன் போல் தெரிந்தது. சோஃபாவில் உட்கார்ந்தான். டிவியை ஆன் செய்தான். அவன் திரும்பி பார்த்தான். மீண்டும், டிவியையே பார்த்தான்.  சேனலை மாற்றினான். Surplus Channel ஐ வைத்தான். அதில் ஐட்டம் சாங்க் ஒன்று ஓடி கொண்டிருந்தது. அதையே, கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏய் ஷர்மிளா, இங்க வாடி”

“என்னங்க”

“என்ன பண்ணிட்டுருக்க”

“காப்பி “

“வா.. டான்ஸ் ஆடலாம்”

“என்னது..  காப்பி போட்டுக் கிட்டே இருக்கேனே”

“அது இருக்கட்டும்.. நீ வா”

“வேணாங்க.. நான் வரல”

“மவளே.. இப்போ மட்டும் நீ வரல.. கன்னத்திலேயே ஒன்னு வைப்பான்.. ஏய் திட்ட வைக்காத.. நல்ல மூட்ல இருக்கன்.. அரை நிமிஷம் போச்சு.. சீக்கிரம் வாடி”

அவன் முன்னே வந்து நின்றாள்.

“என்னடி இது பத்னி வேஷம்.. “

அவள் ஆட ஆரம்பிக்க, அவனும் எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான்.

மதன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒளிந்திருந்தான்.

பாட்டு முடிந்தது. அவன் மூச்சிறைக்க சோஃபாவில் உட்கார்ந்தான். அவள் பழையபடி ஆடையை சரிசெய்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவனுக்கு ஃபோன் வந்தது. ஆன் செய்து பேசினான். பேசிவிட்டு எறிந்தான். முகத்தில் கோபம்.

“அது செய்.. இது செய்னு.. சாவடிக்கிறான்”

ஷர்மிளா காப்பி எடுத்து வந்து கொடுத்தாள். அவளை உற்றுப் பார்த்தான். காப்பியை குடித்து கொண்டே, “என் ரூம்ல கோட்டும், பேன்ட்டும் இருக்கும் பாரு போட்டுகிட்டு வா”. அவள் அவனையே புரியாமல் பார்த்தாள். அவன்,” ரூம்க்கு வழி சொல்லனுமா” எனக் கேட்டான். அவள் அறைக்குச் சென்று  அணிந்து வந்து நின்றாள்.

“முட்டி போடு”

கணவன் எழுந்து நின்றான். கன்னத்தில் பளாரென ஒரு அரை விட்டான். அவள் அப்படியே கீழே விழுந்தாள். அவளை எழுப்பி, முகத்தை பிடித்து கொண்டு, விடாமல் பளார் பளாரென அறைந்து கொண்டே இருந்தான்

“சாவு.. சாவு.. சாவு.. சாவு.. சாவு…”

அவளை கீழே படு என உத்தரவிட்டான். படுத்தாள். கூந்தலைப் பிடித்து தர தர என இழுத்து கொண்டே ஓடினான். அவள் அலறினாள்.

மதனின் கால் நடுங்கி கொண்டு இருந்தது. கண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டு இருந்தது.

அவன் ஓடுவதை நிறுத்தினான். மேலே சென்றான். அவள் எழுந்திருக்க முடியாமல் எழுந்து நின்றாள்,  முடி கண்ணா பின்னாவென கலைந்து கிடந்தது. கன்னம் பழுத்திருந்தது. அறைக்கு சென்று, சேலையை மாற்றி, முடியை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள். அவன் வெளியே கிளம்பியபடி  “அழகி…” என கொஞ்சினான்.

உள்ளே சென்றாள். கதவு திறந்து கிடந்தது. இதுதான் சரியான நேரம் என நினைத்து மதன் வெளியே வந்தான். கதவை சாத்த மறந்துவிட்டோம் என ஞாபகம் வந்து ஷர்மிளா வந்தாள்.

“யார் நீ?” அவள் அதிர்ந்தபடிக் கேட்டாள். திகைத்து நின்றாள்.

மதன் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.

ஷர்மிளா, அவனை உற்றுப் பார்த்து விட்டு கதவைச் சாத்தினாள். கையைக் காண்பித்து அழைத்தாள். மதன் தயங்கினான். முகத்தை கோபமாக வைத்து கொண்டு “வா” என்றாள். மதன் ஷர்மிளாவை நெருங்கினான்.

“இங்க நடந்ததெல்லாம் பாத்தியா?”

மதன் தலையை ஆட்டினான்

“அதோ இருக்குல்ல ரூம். அங்க செவப்பு ஷர்ட்டும், மஞ்ச ஷார்ட்ஸும் இருக்கும். அதான் பாத்து இருப்பியே. அத போட்டுக் கிட்டு வா”

மதனுக்கு புரிந்து விட்டது. ஆனால் எந்த வித சலனமும் இன்றி மேலே சென்று அணிந்து கொண்டு, அவள் முன் நின்றான்.

“முட்டி போடு”

மதன் முட்டி போட்டான். பளாரென ஒரு அரை விட்டாள். அவனைப் படுக்கச் சொல்லி, துடைப்பத்தை எடுத்து வந்து முதுகில் விடாமல் அடித்தாள். மதன் பல்லைக் கடித்தான், கண்களில் நீர் வடிந்தது. மீண்டும் அவனை முட்டி போடச் சொல்லி, அவன் முடியைப் பிடித்து பேய் பிடித்தவள் போல் ஆட்டினாள். கூடவே  சத்தமாகச் சிரித்தாள்.

“ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..”

சிரிப்பதை நிறுத்தினாள். சோஃபாவில் தடாலென உட்கார்ந்தாள். மதன், மேலே சென்று ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்தான். ஷர்மிளா, மதனைப் பார்த்துவிட்டு உட்காரச் சொன்னாள். சிறிது தயங்கிய பின்பு உட்கார்ந்தான்.  அவள் சமையலறைக்குச் சென்று காப்பி போட்டு எடுத்து வந்தாள். அவனிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தாள். குடித்தார்கள். அமைதி. மதன், முடித்துக் கீழே வைத்தான்.

“காப்பி சூ‌ப்ப‌ர்” என்றான். ஷர்மிளா சிரித்தாள்.

“நேத்து நைட்டு தான் ரெண்டு திருட்டு பசங்க வீட்டுக்குள நொழஞ்சு களவாட பாத்தாங்க.. அவரு போட்டு பொளந்து போலீஸ்க்கு கால் பண்ணி சொல்ட்டாரு.. இன்னைக்கு மட்டும் நீ மாட்டி இருக்கனும்.. சட்னி தான் நீ”

என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

இப்போ மட்டும் சட்னி ஆகலயா எனச் சொல்லலாம் என மதனுக்குத் தோன்றியது ஆனால் சொல்லாமல் அவள் கூடச் சேர்ந்து சிரித்தான்.

“எங்க வீட்டு பால்கனில ரெண்டு பூனைங்க வரும். ஒரு கருப்பு பூன, இன்னொன்னு வெள்ள பூன. நான்தான் அடிக்கடி அதுக்கு பால் தயிர்னு போடுவேன், என்னனு தெரில நேத்துல இருந்து வெள்ள பூனை காணும். எங்க போச்சுனே தெரில..

 அரை மணி நேரம் நேரம் பேசி கொண்டு இருந்தாள். மதனுக்கு ஏனோ துக்கமாக இருந்தது.

“ரூம்ல  பொம்மை  இருந்துச்சு.. நீங்க செஞ்சதா”

“ஓரிகாமிய சொல்றியா”

“ஆமா, அதான்”

“நான் தான் செஞ்சேன்”

“சூப்பரா இருந்துச்சு”

ஷர்மிளா சிரித்தாள்

“இன்னொன்னு சொல்லவா”

“சொல்லு”

“ஏன் நீங்க இங்க இருக்கீங்க. ஒவ்வொரு நாளும் நரகமா இல்லையா”

“இந்த வீட்டு வாசப்படிய தாண்டினா.. கேக்க நாதி இல்ல.. பிச்சதான் எடுக்கணும்.. ரோட்ல தான் படுக்கனும்.. சும்மா விட்ருவானுங்களா”

சிறிது நேரம் மௌனம் நிலவியது

” நான் மொதலையே சொல்னும்னு நெனச்சன்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. “

ஷர்மிளா மெல்லியதாகச் சிரித்தாள்

“கல்யாணம் பண்ணிக்கலாமா.. நான் உங்கள சந்தோஷமா வெச்சிப்பன்.. தங்கத் தட்டுல வெச்சு தாங்குவன்..”

“எனக்கு இங்கதான் எழுதி வெச்சிருக்கு”

இவள் நிஜமாகவே சொல்கிறாளா, இல்லை சமாளிக்கிறாளா என ஒரு கனம் தோன்றிற்று. மதனுக்கு அந்த யானையின் படம் தென்பட்டது.

“சரி கெளம்பிறியா.. அவரு வந்துற போறாரு”

மதன் எழுந்தான்.

“உனக்காக எப்பவுமே எங்க வீட்டு கப்போர்ட் தெறந்து இருக்கும்”

“எப்பவுமே வா?”

இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அவர் சீக்கிரம் சாவனும்னு கடவுள வேண்டிக்கிறன்”

“அப்டிலாம் சொல்லாத, வாய்ல அடி”

என பதட்டத்துடன் சொன்னாள். உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பாளோ?. கடவுளுக்குதான் வெளிச்சம்.

“பை.. ஷர்மிளா”

அவன் கிளம்பினான்

“கேக்க மறந்துட்டன்.. உன் பேரு என்ன?” என்றாள்.

“மதன்”

“அப்டியா… அவர் பேரும் மதன் தான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *