நன்றியுணர்ச்சி 

நான் எழுத்தாளன். வாழ்க்கையில் சாதித்தவர்கள் வீட்டிற்கு சென்று பேட்டி எடுப்பேன். இன்று, பிசினஸ் மேன் பிரதாப் வீட்டிற்கு செல்வதாக திட்டம். அவரிடம் முன் கூட்டியே, தா‌ன் வீட்டுக்கு வரப் போவதாக அறிவித்தாயிற்று.

நான் வண்டியில் அவர் வீட்டின் கேட் முன்னே நின்றேன். காவலாளி கேட்டை திறந்தார். உள்ளே சென்றேன். பெரிய வீடு. பத்து இருபது பேர் குடித்தனம் நடத்தும் அளவுக்கு இருந்தது அந்த வீடு. வீட்டினுள் சென்றேன். சோஃபாவில் உட்கார்ந்தேன். மாடிப் படியில் இருந்து சிரித்த முகத்துடன் கீழே இறங்கி வந்தார் பிரதாப். நான் எழுந்து வணக்கம் தெரிவித்தேன். “உட்காருங்க ஜெயன்” என சொன்னார். உட்கார்ந்தேன். அவரும் உட்கார்ந்தார். வீட்டில் வேலை செய்யும் ஒருவர் இர‌ண்டு கண்ணாடி டம்ளரில் ஜுஸ் எடுத்து கொண்டு வந்து குடுத்தார். நான், என் முன்னே இருக்கும் கண்ணாடி டேபிள் மீது வைத்தேன். ஒலியை பதிவு செய்யும் கருவியை ஆன் செய்தேன்.

” நீங்க எங்கு பிறந்து வளர்ந்தீங்க..உங்க இளமை கால வாழக்கை எப்படி இருந்துச்சு”

“ஒன்னும் வித்தியாசமான கதைலாம் இல்லைங்க..மிடில் கிளாஸ் குடும்பத்துல பிறந்து வளர்ந்தன்..பணண்டாவது வரைக்கும் படிச்சேன்.. படிப்பில பெருசா நாட்டம் இல்ல.. படிக்கறதே சம்பாரிக்கறது தான.. எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்.. பிசினஸ் பண்ணலாம்னு ஒரு எண்ணம் வந்துட்ச்சு.. பேப்பர் போட்டன்.. கொஞ்சம் கொஞ்சமா சம்பாரிச்சு.. பிரிண்டிங் பிரஸ் வெச்சன்.. தோ இப்போ இங்க இருக்கன்”

” எது உங்கள இவ்ளோ தூரம் வர வெச்சிருக்குனு நெனைக்கிறீங்க”

” எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு.. நெறைய சம்பாரிக்கனும்.. யாரையும் ஏமாத்தாம சம்பாரிக்கனும்.. எப்பையுமே வேல வேலன்னு தான் இருப்பன்.. பத்து இருபது பேர் செய்ற வேலைய ஒரே ஆளா செய்வன்.. நான் ஒரே ஆளாவே எல்லா வீட்டுக்கும் பேப்பர் போடுவன்.. அதனாலையே எனக்கு நெறைய பணம் கெடைக்கும்.. பத்து பேரு வாங்கற சம்பளத்த நான் ஒரே ஆளா வாங்குவன்.

” உங்களுக்கு எப்பயாச்சும் கர்வம் ஏற்பட்டிருக்கா”

“அப்போ அப்போ நான் பெரிய ஆளுன்னு தோனும்.. அப்பலாம் நான் அந்த ரூம்க்கு போவன்”

என ஒரு ரூம்மை காட்டினார்.

” என்ன இருக்கு அந்த அறையில்? ” என்று ஆர்வமுடன் கேட்டேன்.

” வாங்க” என கூப்பிட்டார்

நாங்கள் இருவரும் அந்த அறையின் முன் நின்றோம். கதவை திறந்து உள்ளே சென்றார். நான் அவர் பின்னே சென்றேன். உள்ளே ஒரு பத்து இருபது மண்டை ஓடுகள் இருந்தது. நான் ஒண்ணும் புரியாமல் அவரை பார்த்தேன். அவர் பேச ஆரம்பித்தார்.

“நான் பெரிய ஆளுன்னு நெனைக்கும் போதெல்லாம் இந்த மண்டை ஓடுகள பாப்பன். நானும் ஒரு நாள் செதை எல்லாம் அழுகி இந்த மாறி தான் இருக்க போறன் அப்டின்னு இது எனக்கு நினைவு படுத்தும். ஒரு விஷயம் நிரந்தரம் இல்லன்னு தெரிய வரும்போது அது மேல இருக்கற பற்றும் மறைஞ்சிறும் இல்லையா. பற்று அதிகமாக அதிகமாக நான் பாட்டுக்குனு என்னோட தனி உலகத்துக்கு போடுவன். அது உண்மை இல்ல பொய்யான உலகம். இந்த ரூமுக்கு வந்து உண்ம என்னனு நானே எனக்கு நெனைவு படுத்திப்பன்”

பேட்டி முடிந்தது. நான் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு வண்டியில் சென்றேன். நல்ல மனிதர். ஒரு விஷயம் மட்டும் என் மண்டையில் விடாமல் ஓடி கொண்டிருந்தது. அவர், அந்த அறைக்கு உண்மையை நினைவு படுத்தி கொள்வதற்காக மட்டும் சென்றிருக்க மாட்டார். அந்த மண்டை ஓடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் செல்வார் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *