இதுதான் கடைசி என்றோம்! அன்றைய சந்திப்புடன் நம் கதை முடிந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. உடலால் நீ அருகிலில்லை என்றாலும் அந்த புளிய மரத்தின் நிழலோடு நிழலாக எனை நீ தழுவிக் கொண்டிருந்ததை நான் உணராமலில்லை. உன் மூச்சுக்காற்று என் கழுத்தில் படர, கூசி உனை ஆசையாய் ஏறிட்டுப் பார்த்தேன். உண்மையில் எங்கிருந்தோப் பறந்து வந்த எருக்கம் விதையின் பஞ்சிழைகள்தான் எனைத் தொட்டுச் சென்றதோ..? அல்லது என் நிலையைக் கண்டு வர உன் நினைவுகளை வழக்கம் போல் நீதான் அனுப்பியேதும் வைத்திருந்தாயோ..? வாசனைகள் நாசியடைக்க நஞ்சேறியவன் போல் கிறங்கினேன். நாற்றிடுக்குகளில் நகரும் நண்டு போல் என் சட்டைக்குள் ஊடுருவிய உன் விரல்கள் இடுப்பிலிருந்து மார்பிற்கு மலையேறவும், நாற்புற வரப்பாய் உன்னை இறுக்க அணைத்துக் கொண்டேன். உன் காற்றுக்கரங்கள் என்னைக் கூட்டிச் சென்ற ஏகாந்த திசைகளில் பறந்தலைந்ததை எல்லாம் இப்போது வெறும் மாயைகள் என்று தலையைத் தொங்கப்போட்டுக் கொள்வேனா? ஞாபகத்தில் பல நாட்கள் அங்கே நீயும் கூட திரிந்து வந்திருப்பாய். நானில்லாத என்னோடு எத்தனை தவிப்புகளையும், கிலேசங்களைப் பகிர்ந்தாயோ! மனம் கவர்ந்த மயில் உதிர்த்துச் சென்ற பீலியொன்றை எடுத்து எடுத்துப் பார்ப்பவனாய் நானுமிங்கே வரம் தந்த உன் நினைவுகளை நிதம் மீட்டி உய்கிறேன். கண் கொண்ட, கண்கொத்திப் பீலியே சுழற்றினால் திரும்புகிறாய். சிரிக்கிறாய். நிறுத்தினால், நின்றும் கொல்கிறாய்! ஒரு குழந்தை பிடித்திருக்கும் பேய் பொம்மைப் போல மிரட்டுகிறாய்! உனக்கு மிரளவும், மயங்கவும் என் கண்களும் பழக்கப்பட்டுவிட்டன. உன்னை நினைப்பதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன் தெரியுமா? மற்ற நேரங்கள் போல் அந்நேரத்தில் தொல்லை செய்கிறாய் என்றே சொல்ல மாட்டேன். ஒவ்வொரு நாளும் உன்னை சந்திக்கும் அழகிய கனவுகளால் நிரம்பி வழிவதும் எத்தனை கொடுப்பினையான உறக்கம்! உன்னை மீண்டும் மீண்டும் காணத்தான் கண்மூடிடத் துடிக்கிறேன் ஒவ்வொரு இரவிலும். ஆனாலும் நாம் சந்தித்து எத்தனையோ ஆண்டுகள் ஆயிற்றுதானே? ஒருவேளை சந்தித்துக் கொண்டாலும் கிடை ஓட்டி வந்த சிறுவர்கள் போலத்தான் மேய்ச்சலுக்கு பின் அவரவர் வீட்டிற்குத் திரும்பியிருப்போம்!
மயிர்
ஆசிரியர்: இராயகிரி சங்கர்
மயிர்
ஆசிரியர்: இராயகிரி சங்கர்