சந்தனம்

மாரியின் கையிலிருந்த தூரிகை கீழே விழுந்தபோது அதன் மயிரிழைகளில் அப்பியிருந்த சிவப்பு சாயம், கீழே இருந்த முனியப்பசாமியின் முகத்தில் ஒரு கோடிழைத்து தரையில் விழுந்தது.

பார்த்து வரைவதற்கென்று ராஜாங்கம் ஐயா அவரது வீட்டில் இருந்து கொடுத்து அனுப்பிய இரண்டடி சிலை அது. சிலையை கையில் எடுத்து தன் கைலியால் முனியப்பசாமியின் முகத்தை துடைத்த போது, மாரியின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் விம்மியழும் சத்தம் மண்டபம் முழுக்க எதிரொலித்தது. சுடுகற்களை கொண்டு காரை பூசி கட்டப்பட்ட அந்த மண்டபத்தில் சன்னல்களே கிடையாது. ஆறு அல்லது ஏழு நபர்கள் மட்டுமே இருக்க கூடிய சிறிய அளவிலான மண்டபம் அது. அவன் கடைவாயில் இருந்து வடியும் எச்சிலை துடைத்தபடி  முனியப்பசாமியின் சிலையை பார்த்து அழுது கொண்டிருந்தான். அவன் அழும் சத்தம் மண்டபத்தைத் தாண்டி வெளியே பெய்யும் மழையின் ஓசையோடு சேர்ந்துகொண்டது.

இப்போது நிறமிழந்து சிதைந்து இருக்கும் முனியப்பசாமியின் உருவம், மாரி தன் இளமையில் வரைந்தது. ஆஜானுபாகுவான தோற்றமும் கருத்த  உடலும் சடை முடியும் திருநீறு அணிந்த நெற்றியும் ஓங்கிய அரிவாளும் முறுக்கிய மீசையும் கொண்டு முனியப்பசாமியே நேரில் நிற்பது போலிருக்கும். மாரி அந்த ஓவியத்தை வரைந்த போது முனியப்பசாமியே மாரியோடு இருந்ததாகவும், அவரும் மாரியும் சேர்ந்து அந்த ஓவியத்தை வரைந்ததாகவும் ஒரு கதை உண்டு. அதன்பின் மாரி எந்த படமும் வரையவில்லை. அருகில் இருந்த ஊர்களில் இருந்து வந்த அழைப்புகளையும், பெரும் தொகைகளையும் அவன் ஏற்கவில்லை. இன்று மீண்டும் அதே முனியப்பசாமியின் உருவத்தை வரைய அழைக்கவும், மாரி மறுக்கவில்லை.

திடீரென்று விழிப்புற்றவனாய் கையில் இருந்த சிலையை வெளியே மழையில் வைத்துவிட்டு மண்டபத்தினுள் வந்தவன், தூரிகையை எடுக்க முயன்றபோது அதன் எடை கூடியிருந்தது. இரு கைகளையும் பயன்படுத்தி எடுக்க எத்தனிக்க அதன் எடை மேலும் அதிகமாகியிருந்தது. தோல்வியடைந்தவனாய் தன் இரு கைகளையும் சிகப்புநிறச்சாயம் இருந்த வாளியில் முக்கியெடுத்து பழைய முனியப்பசாமியின் சுவர் எங்கும் பூசி, ஓவியத்தை முற்றாக மறைத்தான். மீண்டும் சாயவாளியில் கைகளை முக்கியெடுத்து தன் உடல் முழுக்க பூசிக்கொண்டான். தரையில் சிந்திய சாயம், சுவர், மாரி எல்லாமென அந்த மண்டபம், ஒரு போர் முடிந்த களத்தை ஒத்திருந்தது.

நேரமாகியும் மழையின் வேகம் குறையவில்லை. மெதுவாக மண்டபத்தை விட்டு வெளியே வந்த மாரி, முனியப்பசாமியின் சிலை அருகே அமர்ந்து கொண்டான். மழை அவன் மீதிருந்த சாயத்தை கரைத்தது. மழையோடு  கூடி மாரியும் கரைந்து போய்க்கொண்டிருந்தான். மாரி முனியப்பசாமியின் சிலையை பார்த்து நிதானமான குரலில், “அன்னைக்கு அந்த படத்த வரையிரப்ப முனியப்பசாமியே நான்தானடா…” எனக்கூறி ஆக்ரோஷமாக சிரிக்கலானான்  .

அப்போது காற்றில் சந்தன மணம் பரவியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *