அலுவலக வளாகமே அமைதியில் ஆழ்ந்திருந்தது. பத்துமணிக்கு மேல் ஆள் நடமாட்டம் துப்புரவாக இல்லாமல் ஆகிவிடும். காவலாளி ஒன்பது மணிக்கு வந்து எல்லா அறைகளையும் ஒருமுறை சோதனை இடுவார். காலியான இருக்கைகள் அவருக்கு நன்கு அறிமுகம் உள்ளவை. யாரும் உள்ளே இருந்தால் அவை அவருக்குக் காட்டிக்கொடுத்து விடும். பீரோக்களில் ஒட்டப்பட்டிருக்கும் சாமிப்படங்கள் கண்களில் படும்போது மட்டும் கும்பிடுகள் போட்டுக்கொள்வார்.
கைத்தடியால் தட்டியபடி அலுவலகம் முழுக்க சோதனை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிடும். அதன்பிறகு வயர் கூடையில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுக் கேரியரைப் பிரிப்பார். ஆண்டுமுழுக்க இரவுப் பணி என்பதால் சாயந்திரத்திற்கு மேல்தான் அவரின் மனைவி சமைப்பாள். எட்டுமணிக்கு பாத்திரங்களில் சுடச்சுட அடைத்துக்கொடுத்து அவரை வழி அனுப்பிவைப்பாள். எனவே அவர் அலுவலகம் வந்து சேர்ந்து சாப்பிட அமரும்போதும் சூடு தணியாமல் இருக்கும்.
பிள்ளையார் கோவிலில் நிரந்தரமாக குடியிருக்கும் கோணக்காது சரியான நேரத்தை ஊகித்து அறிந்து வந்து வாலாட்டி நிற்கும். முதல் காரியமாக ஒரு கைப்பிடி சோற்றை அள்ளி நாயின் முன்னர் தரையில் வைப்பார். அது உடனே பாய்ந்து தின்ன ஆரம்பிக்கும். அவர் சாப்பிட்டு முடிக்கும் கடைசி வேளையிலும் ஒரு கையளவு சோற்றை அள்ளி நாய்க்குத் தருவார். கடைசி சோற்றிற்கு மட்டும் அன்றைய குழம்பின் சுவை.
முப்பதாண்டுகளுக்கும் மேல் அந்த அலுவலகத்தில் இரவுக்காவலாளி அவர். அது மாவட்டத்தின் தலைமை அலுவலகம். முன்பு வெள்ளைக்காரன் கட்டிய சிவப்புச் செங்கல் கோட்டை. எதிரே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றிற்கும் அலுவலகக் கட்டிடங்களுக்கும் இடையே அடர்ந்த மரங்கள் இருந்தன. நாள்பட நாள்பட வெட்டப்பட்டு, சிறிய செடிகள் வைத்து அழகு படுத்தப்பட்டன. ஒருமுறை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட முதலையைக் கூட அவர் அலுவலக வாசலில் பார்த்திருக்கிறார். பாம்புகள் மிகச் சாதாரணம்.
புதிய கட்டிடம் வந்தபிறகு அவருக்கு வேலைகள் குறைந்தன. டெலிபோன் அருகில் தரைத்தளத்தில் படுத்துக்கொண்டால் போதும். இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்குப் போய்விட்டு பஸ் கிடைக்காமல் தங்கிச் செல்ல ஊழியர்கள் சிலர் வருவதுண்டு. பஸ் விட்டு இறங்கியதும் நேராக ஒயின்ஸ் ஷாப் சென்று வாங்கி வைத்துக்கொள்வார். சாப்பிடும் முன்னர் தாக சாந்தியை தவற விடுவதில்லை.
மழைக்காலங்களில் தான் அவருக்கு வேலை அதிகம் இருக்கும். வீடுகள் இடிந்து விட்டன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு, மின்சாரம் வரவில்லை என்று மாவட்டம் முழுவதும் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றைக் குறித்துக்கொள்வார். மழைக்காலங்களில் முறைப்பணிக்கு என்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டாலும் சரியான நேரத்தில் அவர்கள் வருவதில்லை. சில நாட்களில் அவர்களின் வேலையை இவரே பார்த்துக்கொள்வார். சிலரிடம் இருந்து பிரதிபலனாக விலை உயர்ந்த மிலிட்டரி பாட்டில்கள் கிடைக்கும்.
அவருக்குப் பழகிவிட்டதனாலோ என்னவோ படுத்த உடன் துாக்கம் வந்துவிடும். முறைப்பணிக்கு வருகிறவர்களால் அவ்விதம் துாங்கிவிட முடியாது. இரண்டு மூன்று மணி வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். அவரிடம் பழங்கதைகளைக் கேட்டுக்கொள்வார்கள். முப்பதாண்டுகளின் கதை என்பது சும்மாவா? நிறைப் பேருக்கு தனியாக பெரிய கட்டடத்தில் தங்கப் பயம். பேய்களை நம்பக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.
ஆற்றின் கரை நெடுக சுடுகாடுகள். முன்பெல்லாம் பிணங்கள் எரியும் வாசனை கப்பென்று அறைக்குள் நிறையும். கொசுக்களைச் சமாளித்துவிடலாம். அந்த நாற்றத்தை தடுக்க முடியாமல் போனபோதுதான் குடிக்க ஆரம்பித்தார். தென்கோடி புளிய மரத்தில் பேய்கள் இருப்பதாகப் நீண்ட நாட்களாக பேச்சு உண்டு. அதேபோல் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அலுவலகத்திற்கு வரும் வழியில் குந்தி அமர்ந்து இருப்பதாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறார். அவருக்கும் பேயை ஒருநாளாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசைதான். பலநாட்கள் வீம்பிற்காகவே எங்கெங்கோ சுற்றி அலைந்திருக்கிறார். பேயைப் பார்த்ததாக பிறர் சொன்ன இடங்களில் விடிய விடிய அமர்ந்திருக்கிறார். அவர் கண்களில் ஒன்றும் தட்டுப்படவில்லை.
ஒரு முறை சோதிடர் ஒருவா் சொன்னார். அவர் சாதகத்தில் பேய்களை நேரில் காணும் லக்கணம் இல்லை என்று.
வெளியே நாயின் ஓலம். விட்டு விட்டு குரைத்தது. அந்த குரைப்பின் சத்தம் அவரை எழுப்பியது. போர்வையை விலக்கி எழுந்தார். கதவைத்திறந்து வெளியே எட்டிப்பார்த்தார். நாய் மக்கள் மன்றத்தின் வாசலை நோக்கி நின்று எக்கி எக்கி குரைத்தது. என்னவாக இருக்கும்?
கைத்தடியை எடுத்துக்கொண்டார். நாய் அவரின் வருகையை அறிந்ததும் ஆவேசம் கூடி வெறிகொண்டு குரைத்தது. நாயின் குரைப்பு அதிகரிப்பதைக் கேட்டு அவருக்கும் மெல்லிய நடுக்கம் எடுத்தது. “களவாணிப்பய எவனும் வந்து ஒதுங்கி இருக்கிறானோ“
மக்கள் மன்றத்தின் வாசலில் போதிய வெளிச்சம் இல்லை. இருள் அப்பிக்கிடந்தது. உற்றுப்பார்த்தார். ஒரு உருவம் அமர்ந்திருந்தது. மிகச்சிறிய பீடம் போன்ற இருப்பு.
கைத்தடியை தரையில் ஓங்கித் தட்டி..“இந்தா…யாருல அது..இங்க என்ன சோலி உனக்கு?” என்று நெருங்கினார்.
உருவம் அசையவில்லை. ஒரு உருவத்தின் பின்னால் இருந்து மேலும் இரண்டு உருவங்கள் கிளைத்தன. அவை ஏற்கனவே இருந்த உருவங்களில் பாதி அளவே இருந்தன. அவருக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தன. நாய் அவருக்கு முன்னே நின்று இடைவிடாமல் குரைத்தது.
டார்ச் எடுத்து வந்து பார்க்கலாம் என்று திரும்பினார். நெஞ்சில் பலமாக துடிப்பினை உணர்ந்தார். வியர்வை வேறு பொங்கியது.
அலுவலகத்தின் வாசலுக்கு வந்தார். தபால் கிளார்க் குமரேசன் நின்று கொண்டிருந்தான்.
“எங்க போயிட்டு வர்றீக..கதவு திறந்து கிடக்கேனு வாசல்ல நிக்கேன்”
“ஒண்ணுக்குப் போனேன்”
“நாய் ஏன் கூப்பாடு போடுது?”
“பாம்பா இருக்கும்”
கதவைச் சாத்தி விளக்கை அணைத்தார். குமரேசன் அவன் பிரிவிற்குச் சென்றான். உடன் ஆள் இருப்பது ஆறுதலாக தோன்றியது. வெளியே நாய் இன்னும் குரைத்துக்கொண்டிருந்தது. விடியட்டும் என்று விழித்துக்கொண்டே காத்திருந்தார்.