அந்த கால் தான் எல்லாவற்றிற்கும் காரணம்; நானும் தான். ஆனால் தொடங்கியது கால் தான். எங்கள் பள்ளியில் நீளமான காலுறை அணிவதே வழக்கம் – நிபந்தனையும் கூட. யாருக்கும் அது நன்றாக இருந்து பார்த்ததில்லை.
அன்று ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒருபோல உடை, ஒருபோல காலுறை, ஒருபோல காலணி அணியும் நாள். ரேஷ்மாவின் – வெள்ளை நிற – காலுறையை அவள் அணிந்து கொண்டிருக்க நீளமான அவள் கால்களின் பூனை ரோமங்களை கண்டேன். நீளமான அந்த காலுறை அவளுக்கு மட்டும் ஏனோ அழகாக இருந்தது.
சர்வேஷ் அவளை கவனிக்க சொல்லி அன்றோடு மூன்று வாரங்கள் இருக்கும்; முதல் முறையாக அவளை நான் தெளிவாய் கவனித்தேன்: நேரான பார்வை தெளிவான கண்கள் , சங்கினிடையே மை வைத்தது போல கருவிழி… நீளமான காலுறை கீழே அவள் அணிவது என்னுடைய… காலணி? திணிக்க முயன்று தோல்வியுற்றவள் கவனித்தாள் : நான் அங்கே நிற்பதை.
‘உன்… ஷூ… ஐயோ…’ என வேகமாக கழட்டினாள். அவளுடைய அந்த முதல் மூன்று வார்த்தைகள்; அதை பின்னாட்களில் வேறு வேறு விதமாக கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். நானும் ஏதோ சொன்னேன் – சற்றே நீளமாக…
அந்த சந்திப்பை அவளிற்கு நினைவுபடுத்தும் விதமாய் விதம்விதமாய் குறும்புகளை அதன் பின்னாட்களில் செய்தேன்- எதையும் அவள் ஏறெடுத்து பார்க்கவில்லை.
எப்பொழுதும் போல் சர்வேஷ் போன் செய்தான். எப்பொழுதும் போல் தினகரனை பற்றி கேட்டான்… நான் அவன் மோச செயல்களை பற்றி சொன்னேன். எப்பொழுதும்… எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். அன்று – அவன் உளவாளியாகிய நான் – தினகரனின் சூடான சொற்களை சொன்ன நான்… அவளை கூர்ந்து ரசித்த என் கண்களை பற்றி சொல்லவில்லை.
நகராமல் நின்ற கடிகாரத்தை ஒத்த என்னுடைய நடவடிக்கைகள் எனக்கு புதிதாய் இருந்தது. சர்வேஷ் பள்ளி விட்டு சென்ற பின் ஒருமுறை போன் செய்து என்னிடம் பேசினான்; வகுப்பில் என்னுடன் மொத்தமாய் பேசியதை விட அன்று அதிகமாய் பேசினான். அந்த பேச்சின் முடிவில் நான் உளவாளியாக மாற்றப்பட்டேன். எனக்கும் அது பிடித்திருந்தது. ஏனென்றால் எனக்கு தினகரனின் வார்த்தைகளும், நடவடிக்கைகளும் சுத்தமாய் பிடிக்கவில்லை.
சர்வேஷிடம் ஒரு பிரச்னையும் இல்லை என சொல்ல தொடங்கினேன். என் கண்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டது அவளை ரசிக்க. தினகரனின் செயலால் ஒரு முறை அழுதாள்- சர்வேஷிடம் சொன்னேன். அவன் கூடிய சீக்கிரம்- பன்னிரெண்டாம் வகுப்பின் ஆரம்பத்தில்- வந்துவிடுவேன் என எனக்கு ‘ஆறுதல்’ அளித்தான். படபடப்பான பட்டாம்பூச்சியின் உணர்வுகளை ஒத்த உணர்வை அடைந்தேன். அழுத துக்கத்திலும் அழுத்தம் குறையாத அவள் கண்கள் எனக்கு (உண்மையான) ஆறுதல் அளித்தது- இதையும் அவனிடம் சொல்லவில்லை; ஒரு மாலை வேளை தளர்ந்த மொட்டு போன்ற அவள் முகத்தை ரசித்த தரிசனத்தையும் – அவனிடம் சொல்லவில்லை.
நான் சொல்லி மட்டுமே அவனுக்கு எல்லாம் தெரிகிறது என மிக பிந்தியே எனக்கு தெரிந்தது; நான் உளவாளி மட்டுமல்ல… அவனுடைய ஒரே தகவல் தொடர்பு. அது ஒருவித ராட்சசத்தனமான உற்சாகத்தை எனக்களித்தது.
பன்னிரண்டாம் வகுப்பிற்கு நாட்கள் நெருங்க… நீர் ஊற்றியும் வளராத செடியாக என் பற்றை உணர தொடங்கினேன்; நீடித்த அத்தவிப்பு புயலென அவன் வர போவது உறுதியெனில் வேரோடு கிள்ளப்பட்டுவிடும் என நினைத்தேன்- ஒருகணம்; புயல் வருவதற்குள் வேரூன்றி மரமாகிட வேண்டும் என துடித்தேன்- மறுகணம்; செடி வளர்ந்ததே யாருக்கும் தெரியாதே , மண்ணிற்குள்ளயே முடி மட்க வைத்து விடலாம் என குழம்பினேன்- மற்றொரு கணம். மறு கணத்திற்கும் மற்றொரு கணத்திற்கும் இடையே அவளிடம் பேசுவதற்கான துணிவும் வாய்ப்பும் ஒரு சேர வந்தது.
‘உன் ஊரு தென்காசியா?’ ஆம் என சொல்வாள் என எதிர்பார்த்த எனக்கு உரம் போல் அமைந்தது அவள் பதில்: உனக்கு…?
ஆண்டு விழாவில் சக பயணியாய் இருந்த காரணத்தினால் பல பொழுதுகள் பேச வாய்ப்பு கிடைத்தது. அவள் படித்து கொண்டேயிருக்கிறாள் என கிண்டல் செய்த ஒரு நாளில் அவள் சொன்னது: ஐஐடி’ல ஜாய்ன் பண்லானு இருக்கேன்… நெறைய படிக்கணும். ஓரிரு வாரங்களில் அவள் சார்ந்த பல விஷயங்களை கவனிக்க தொடங்கினேன்: பரிட்சைக்கு (ஐஐடி) ஆயுத்தமாகிறாள்- மிகத் தீவிரமாக; காலை சோம்பல்களை விரட்ட பல்வேறு பயிற்சிகள்… இதையெல்லாம் சர்வேஷிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது- சொல்லி வதைத்து உள்ளூர நகைத்து- சொல்லவில்லை…
பன்னிரண்டாம் வகுப்பு தொடங்கியது; மார்க் குறைவாக இருக்கிறது என தன் முன்னாள் மாணவனை சேர்க்கமாட்டேன் என்றது பள்ளி நிர்வாகம். வேறு பள்ளியில் அவன்- அருகிலேயே. அவ்வப்போது பார்ப்பேன். அவனுக்கு நான் தேவைப்படவில்லை; அவனே பின்தொடர்ந்தான்: பஸ் ஸ்டாப்களில் , மற்ற சந்தர்ப்பங்களில். அவளை யாராவது பின் தொடர்கிறார்களா என அறிய பின் தொடர்ந்தான். இருதலையாய் மலர்ந்து அப்போது ஒருதலையாய் நீடித்த அந்த உறவை நான் கவனித்தேன்- அவ்வப்போது.
அவளை அவன் பின் தொடர்கிற வேளைகளில் அவள் கால்கள் பூமியையே அளக்குமோ என்னுமளவிற்கு அவனுக்கும் அவளுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது அவள் கால்கள். அது ஏதோவொன்றின் முடிவு.
வேறு வேறு தளங்களில் நின்ற அவன்… பின் ஒரு நாள் பஸ் வர காத்திருந்த வேளை: காற்றடித்து சருகெல்லாம் தன் இஷ்டமின்றி எங்கெங்கோ புறப்பட்டு பறந்தது; கையில் புத்தகத்துடன் அவள்- என்னையோ அவனையே பார்க்காமல் (யாரையுமே)- பொறுமையாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது உணர்ந்தேன்: அது ஏதோவொன்றின் முடிவு மட்டுமல்ல- புதிய ஒன்றின் தொடக்கமும் கூட.