ண் மூடி கத்ரி கோபால்நாத்தில் லயித்திருந்தவரை மொபைல் எழுப்பியது. ராஜி அக்கா.

“ரெடியாய்ட்டியா மணி?”

”இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன் அக்கா”.

”டிராஃபிக் ஜாஸ்தியாவறத்துக்குள்ற வந்துடு”.

”இன்னிக்கு சண்டே தானே அக்கா”.

”எல்லாரும் இப்டி நெனச்சுட்டுத்தான் சண்டே வெளில கிளம்பிடறாங்க”.

”சரி..சரி.. கிளம்பிடறேன்”.

அக்கா பெண் ஹிட்லர்.

மலர் சின்னப் புன்னகையுடன் வந்தாள்.

”என்ன ஹிட்லர்கிட்டருந்து ஆர்டர் வந்துருச்சா?

”அக்காடி..சரி .உன் கையால ஒரு காஃபி கொடு  கிளம்பறேன்.”

”தஞ்சாவூர்காரங்களுக்கு பொண்டாட்டியோட இந்த காஃபி மேலதான் ரொம்ப பித்து”.

”நல்ல காஃபி. நல்ல ரசனை. இதுல  ஊர் எங்க வந்தது?

காஃபி வழக்கம் போல் அமர்க்களமாயிருந்தது.

”என் பட்டுக் குட்டி காஃபினாலே காஃபிதான்.. அந்த கைக்கு..”

”அய்யாசாமி. போது.ஆளவிடுங்க எப்டி போறீங்க”.

”ஓலா போட்டுக்கறேன்”.

தலையசைத்தாள்.

ழைப்புமணி உள்ளே இசைத்தது.

அக்கா கதவைத் திறந்தார்.

”என்ன மணி இவ்ளோ லேட்?

”செக் இன் டைமுக்கு இன்னும் மூணு மணி நேரம்இருக்கே”.

”ஆமாம். இருந்தாலும் சீக்ரம் போறது நல்லதுதானே?

”அக்கா. ஒரு டவுட். வருஷா வருஷம் ஆறு மாசம் அங்கதான இருக்க. அங்கேயே இருந்திடவேண்டியது தானே?

”அது எப்டிடா மணி அங்கேயே இருந்திட முடியும். நீ இங்கதானடா இருக்கே. அப்றம் அண்ணாமலையார வருஷம் முழுக்கப் பாக்காம இருக்க முடியுமா?

”அய்.. அக்கா. அண்ணாமலையாரைச் சொல்லு.. அவரு கூட ஏன் என்னச் சேத்துக்ககறே?

அக்கா அருகில் வந்து தலையைக் கோதிவிட்டாள். ”என்னடா இப்டி சொல்லிட்டே. அம்மா உன்ன என்கிட்ட தானே ஒப்படச்சிட்டுப் போனா..”

”சரி.. சரி. எத்தனை பேக் இருக்கு. லக்கேஜ் லிமிட் தாண்டிடப்போவுது”.

“இந்ததடவை கொஞ்சம் கூட தான். காசு கட்டிக்கலாம்னு ரவி சொல்லிட்டான்.”.சொல்லி அக்கா சிரித்தார்.

“எதுவும் விட்டுப் போகலைதானே?”

“செக் லிஸ்ட் வச்சிட்டு டிக் அடிச்சுருக்கேன்ல. ரவி ஐடியா.”

சமத்து அக்கா.

“மணி ஒரு நிமிஷம் ரூக்கு வாயேன்”.

ஒற்றை சாவியை நீட்டினார். “இந்தப் பீரோவைத் திற.”

திறந்தார்.

“இந்தா.. இதுல அம்பதாயிரம் இருக்கு வச்சுக்கோ.”

“வேண்டாங்க்கா.”

“வச்சுக்கோடா. ரவிதான் கொடுக்கச்சொன்னான்.அடுத்த மாசம் ஜானு குட்டிக்குக் காது குத்தப் போறீங்கதானே. நான் தான் இருக்க முடியாது.”

“நான் சமாளிச்சுக்குவேன்கா”.

“உன்னால சமாளிக்க முடியாதுன்னு கொடுக்கலை. மெடிக்கல் செலவு வேற உனக்கு அதிகமாய்ட்டே வருதுல”.

மெளனமாயிருந்தார்.

“முன்வாசல் தோட்டம் பத்திதான்டா கவலையா இருக்கு”.

“ஏன்?”

“பக்கத்து வீட்டு நடராஜன் கிட்ட சொல்லிருக்கேன். கேட் வாசல் சாவி கொடுத்துருக்கேன். செடிக்கு தினமும் தண்ணீ ஊத்த சொல்லிருக்கேன்”. 

“நான் பக்கத்துல இருந்தா நானே ஊத்துவேன்”.

“அது முடியாதுடா. தினமும் வர முடியாதுல்ல. நடராஜன் ஊத்துவார்.”

“டெய்லியா?”

“ஆமாம். அவரும் செடிப் பிரியர் தான்”.

“அதுக்காக.. பக்கத்து வீட்டுக்கு வேலை பாப்பாங்களா?”

“உன் கிட்ட பிடிக்காததே இதுதாண்டா. நெகடிவ்வாகவே யோசிப்பே.”

“மலர் மாதிரியே உனக்கும் என்னை குறை சொல்லலேன்னா தூக்கம் வராதே?”

“கோச்சுக்காதடா? மலர் மாதிரி ஒரு ஆள் தான் உன்ன சமாளிக்க முடியும்”.

“சரி. அக்கா அந்த குளிர் உனக்கு ஒத்துக்குதா?”

“அதெல்லாம் ரவி பாத்துக்குவான். பர்மனெண்ட்டா அங்க ஒரு நெபிலைஸர் செட் இருக்கு”.

“பாத்து கவனமா இரு”.

“கவலப் படாதேடா. ரவி பாத்துக்குவான்“.

“பாத்துகுவான்..”

“என்னடா இழுக்கறே?”

“அந்த ஊர் கிளைமேட் அப்டி”.

“பாத்துக்கலாம். எனக்கு அங்க ஒண்ணும் ஆகாது. இந்த ஊர்ல அண்ணாமலையார் மண்ணுல தான் என் உயிர் போகும்டா.”

“அய்யே என்ன அக்கா இது அபசகுனமா?”

“இல்லடா.. மனசில பட்டத சொல்றேன். இதுதான் என்னோட கடைசி ட்ரிப்னு நினைக்குறேன்”.

“போக்கா.”

அக்கா சிரித்தார். அசடு.

வெளியே கார் ஹார்ன் கேட்டது. 

“வண்டி வந்துடுச்சு. வெய்ட் அதிகமா இருக்கும். எதையும் தூக்கிடாதே. ரோல் பண்ணிட்டு வா.”

தவு திறந்தே இருந்தது.

ஹாலில் இருந்த டிவியில் அதீத மேக் அப்புடன்  அந்தப் பெண் சாபமிட்டுக்கொண்டிருந்தாள்.

கிச்சனில் சப்தம் கேட்டது.

“கதவைத் திறந்து போட்டுட்டு என்ன பண்றே?”

“அக்கா கிளம்பிட்டாங்களா? சரியான கெளண்டருக்கு முன்னாலதான் உக்காந்துருக்காங்க?”

“அதுல்லாம் அக்கா ஷார்ப்”.

“தம்பி மாதிரி இல்லேன்னு சொல்லுங்க”.

“ஏய்”.

சிரித்தாள்.

பையை நீட்டினார்.

“என்ன?”

“சீத்தாப்பழம்”.

“இப்ப எதுக்கு?”

“சாப்பிடத்தான். இப்பதானே சீசன். கிடைக்கறப்பச் சாப்பிட்டுக்கணும்”.

“சரி. அக்கா என்ன கட்டளை போடுட்டுப் போனாங்க?“

“எப்ப பாரு.. பையனப் பத்தியே லொடலொடன்னு பேசிட்டு இருக்கு. அம்பதாயிரம் காசு கொடுத்துச்சு”.

“இப்ப எதுக்கு?”

“ஜானு காது குத்துக்கு. எரிச்சலா வருது. எப்ப பாரு பையன் புராணம்”.

“இப்ப ஏன் கோபப்படுறீங்க?”

“கோபம்லாம் இல்லே”.

“பின்ன பொறாமையா?”

மெளனமாயிருந்தார்.

கண்கள் இளகின.

“என்ன?”

“உன் புள்ளயும் இருக்கானே?”

“என் புள்ள.. இப்ப என்னாச்சு?“

“பாத்து பாத்து செஞ்சோம். இப்டி ஆய்ட்டான்”.

“என்ன ஆய்ட்டான்”.

“நம்பள பாக்க இந்தியா வந்து எத்தன வருஷம் ஆச்சு?”

“ம்.அது இருக்கும் அஞ்சு வருஷம்”.

“அதவிடு. கடைசியா அவன் என்கிட்ட பேசினது எப்ப?“

“கிராமத்துல இருக்குற நம்ப வீட்ட வித்தா எவ்ளோ பணம் கிடைக்கும்னு கேக்கறதுக்காகப் பேசினான்”.

“இதெல்லாம் விபரமா ச் சொல்லு. அவன் மேல கோபம் இல்லையா உனக்கு?“

“இல்லை.”

“எப்டி இப்படி இருக்கே?”

“இங்க  பாருங்க. ச்சும்மா வாயக் கிளறாதீங்க. எதாவது சொல்லிடுவேன்.“

“சொல்லேன்.”

“நல்லா யோசிச்சுப் பாருங்க .சின்ன வயசுல அவன என்ன பாடுபடுத்தினீங்க”.

“என்ன படுத்தினேன்?”

“எப்ப பாரு படி படின்னு நச்சு பண்ணிட்டே இருப்பீங்க. லீவ் நாள்ல கூட அவன் வெளில போகக்கூடாது. எல்லாப் புள்ளைங்களும் வெளில விளையாடிட்டு இருக்கறப்ப இவன் ஹிண்டு பேப்பர் படிச்சுட்டு இருப்பான். இல்லேன்னா டிக்‌ஷனரி.”

“முடிச்சுட்டியா? அவன் நல்லதுக்குத் தானே பண்ணினேன்.”

“இதச் சொல்லியே அவன அடிமை மாதிரி நடத்தினீங்க. பத்து வயசுலேயே வெளிஊர் ஸ்கூல் ஹாஸ்டல்லப் போட்டிங்க”.

“அந்த ஸ்கூல்ல படிச்சதாலதான் இன்னிக்கு கனடால இருக்கான்”.

“அன்னைக்கு அவன் என் கையை புடிச்சிட்டு அழுததை என்னால இன்னும் மறக்க முடியல.”

“இன்னும் மிச்சம் இருக்கா?”

“சின்ன வயசுல அவனத் தூக்க மாட்டீங்க. குளிக்க வைக்க மாட்டீங்க. ஸ்கூல் கொண்டு போய் விடமாட்டீங்க. யூனிஃபார்ம் தேச்சு கொடுக்கமாட்டீங்க. ஷூஸ் போட்டு விட மாட்டீங்க.”

“அவனுக்கு சுயமா எல்லாம் செஞ்சுக்க கத்துக் கொடுத்தேன்.”

“அதெல்லாம் இல்லை. அதை நீங்க வேலையா நினச்சதாலதான் நீங்க செய்யலை”. 

“வேலைதானே. அவன் வேலையை அவன் செஞ்சிக்க வேணாமா?”

“அத சந்தோஷமா நீங்க நினச்சிருந்தா செஞ்சிருக்கலாம். எத்தனை தடவை அவனக் கட்டி முத்தம் கொடுத்துருக்கீங்க. நமக்கு ஒரே பிள்ளைங்க.”

“இதெல்லாம் செஞ்சிதான் அவன் மேல எனக்கு பாசம் இருக்குன்னு நிரூபிக்கணும்”.

“யார் கிட்டயும் நிரூபிக்க இதெல்லாம் யாரும் செய்றதில்ல. அவன் சந்தோஷத்துக்காக மட்டுமில்ல. முக்கியமா உங்க சந்தோஷத்திற்காகத்தான்.”

“அதுக்காக இப்ப அவன் பழி வாங்கரான்னு சொல்லுறீயா?”

“இல்ல. உங்க அக்கா பையனை பாருங்க. அவங்க ரெண்டு பேரும் அவன எப்படி தாங்குனாங்க. இப்ப அவன் தாங்குறான்.”

மெளனமாயிருந்தார்.

“உங்க அக்காகிட்ட போய் அவங்க பையனைப் பத்தி எவ்ளோ கம்ப்ளெய்ண்ட் பண்ணிருப்பீங்க.”

“ஆமாம். ஸ்கூல் படிக்கறப்பவே டீக்கடைல போய் நின்னான்.”

“அதெல்லாம் அவங்க பெருசாவே எடுத்தக்கலையே. அவங்க பையனை அவங்க நம்பினாங்க. இது ம்யூச்சுவல் ரெஸ்பெக்ட். நம்ப புள்ளைங்கறதுக்காக நாம அவங்களை இல்ட்ரீட் பண்ணலாமா?”

“சரி. தப்பு தான். நான் இப்ப என்ன பண்ணனும்?”

“இப்ப நீங்க சீத்தாப்பழம் கொடுத்துட்டு என்ன சொன்னீங்க?”

“இந்த சீசன்ல மட்டும்தான் கிடைக்கும்னு சொன்னேன். அதுக்கென்ன?”

“ம்.. அதான். பழம் மட்டுமில்லேங்க. சில சந்தோஷங்களும் சீசனல் தான். கிடைக்கறப்ப ருசிச்சுக்கணும். கிடச்சப்ப வியாக்கியானம் பேசிட்டு மிஸ் பண்ணிட்டு கிடைக்காதப்ப ஏங்கக் கூடாது.”

“அப்ப என்ன என்னதான் பண்ணச் சொல்றே?”

“இந்த சீசன்ல என்ன கிடைக்குதோ அத ருசிங்க…ரசிங்க.”

“அப்டின்னா?”

“நம்பளச் சுத்தி எவ்ளோ புள்ளைங்க இங்கிலீஷ் கத்துக் கொடுக்க ஆள் இல்லாம தவிக்குதுங்க. நீங்க இங்க்லீஷ் டீச்சர் தானே. ஒரு பத்து பேருக்கு சொல்லிக் கொடுங்க.”

“யாரும் காசு கொடுக்க மாட்டாங்க.”

“காசு எதுக்குங்க.. உங்க சந்தோஷத்துக்காக செய்ங்க”.

யோசித்தார்.

மெளனமாயிருந்தார்.

“என்னங்க”?

“சொல். அப்றம்?”

“எல்லா புள்ளைங்களும் நம்ப புள்ளைங்கதான். அவங்களுக்கு உதவி பண்ற காரியம் எதை வேணும்னாலும் செய்யுங்க. அது ஒரு சந்தோஷம். பழம் சாப்பிடற சந்தோஷ்ம்.”

புன்னகைத்தார்.

புன்னகைத்தாள்.

அழகி.

”இப்ப இந்த சீத்தாப்பழத்தைச் சாப்பிடுங்க.”

பழமும் இனித்தது.

 

                                                                      ****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *