முடிவிலி

           அலுவலகத்தில் இருந்து நான் வெகுதுாரம் வந்துவிட்டேன். மிகச்சரியாக சொல்வது என்றால் நுாற்று ஐம்பத்து எட்டு கிலோ மீட்டர்கள். ஆனால் இன்னும் உள் நடுக்கம் நின்றபாடில்லை. கால்களில் உதறல் இருந்து கொண்டே இருக்கிறது. கண் இமைகளில் என் கட்டுப்பாட்டையும் மீறிய இமைப்புகளை உணர்கிறேன். ஆழ்ந்த பெருமூச்சுக்களை வெளியே விட்டும் எதுவும் மாறிவிடவில்லை.

    ஒரு பெரு நகரத்திற்கு உரிய அத்தனை அலட்சியங்களோடுதான் அந்நகரமும் இருந்தது. நான் திட்டமிடாமல்தான் நகருக்கு வந்திறங்கினேன். என் அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தேன். யார் யாரோ என்னைப் பிடித்து நிறுத்தி என் கழுத்தில் கடித்து இரத்தத்தை உறிஞ்சத் துடித்துக் கொண்டிருப்பதாக தோன்றியதும் நழுவி ஓடினேன்.  நடந்து செல்லும்  தொலைவுதான் அலுவலகத்திற்கும் பஸ் நிலையத்திற்கும். சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்த பேரூந்து வெளியே ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. கையைக் காட்டி மறித்து ஏறினேன். ”க்ணிங்” என்று உள்ளே மணி அடித்தது. டம் என்று பேருந்தின் முன் கதவு அறைந்து மூடும் ஒலி.

“எவ்விட”

     சமநிலப்பரப்பு மறைந்து மலையேற்றம் ஆரம்பித்ததும் என் மனதில் மெல்லிய அமைதி வந்து படிந்தது. இருபுறமும் மரங்களின் பசும்செறிவு. வலதுபுறம் சரிந்து ஏறி தடித்து சுருங்கி விரிந்து செல்லும் மலைத் தொடர். இடதுபுறம் ஓ….வென வாய் பிளந்து கிடக்கும் முகடுகளின் இடைவெளி. பேருந்து ஒரு பாம்பைப்போல வளைந்து நெளிந்து திணறி ஏறியது.

         இத்தனைப் பச்சையை சமவெளியில் ஒருபோதும் கண்டதில்லை. என் நிலம் பஞ்சப் பராரியைப் போன்றது. வறண்டு திடப்பட்டு நடப்பதற்கே சரள்கள் குத்தும் வன்முறையை கொண்டது. விரைந்து ஓடி விட முடியாது. பனைமரங்கள் அசையாமல்  வெளியை வெறித்து நிற்பதைக் காணும்போது அடிவயிற்றில் எப்போதுமே ஒரு கலவரம் தோன்றும். வெகுதொலைவில் விழும் ஒரு காய்ந்த ஓலை மட்டை எழுப்பும் ஒலி மனக்கலவரத்தை மேலும் அதிகரிக்கும். அடர் பச்சையின் தொடர் ஓட்டத்தைக் கண்டு மனம் சாந்தம் கொண்டது. அப்பாடா என்று நன்றாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். பெயர் அறிந்திராத ஆயிரக்கணக்கான மரங்கள் விருட் விருட்டென்று கடந்து சென்றன. சில சரிவுகளில் உடலைக்கீறி சிரட்டையில் குருதி வடிக்கும் ரப்பர் மரங்கள். ரப்பர் மரங்கள் இருக்கும் பகுதியில் ஏதோ அமானுஸ்யம் உறைந்து கிடப்பதைப் போன்ற பிரமை. மற்ற பகுதியில் உள்ள மரங்களைப் பார்க்கும்போது அவை காலம் காலமாக கட்டற்ற சுதந்திர வெளியில் திளைத்துக் கிடப்பவை என்று தோன்றும். ரப்பர் மரங்கள் ராணுவ ஒழுங்கோடு வரிசையாக நின்றிருப்பதாக நினைவில் எதிரொலித்தன.  ஒழுங்கின் வன்முறை என்று நான் முணுமுணுத்துக் கொண்டேன். ஒழுங்கு என்பது மனித குலத்தை மெல்ல மெல்ல சிலுவையில் ஏற்றும் ரசவாதம். கடும் ஒழுக்கவாதிகள் என்போர் முற்றாக மென்னுணர்வுகள் மரத்துப்போனவர்கள்.

உடனே என் உயர் அதிகாரிகளின் முகங்கள் நினைவில் வந்தன. ஒரு அலுவலகம் என்றால் உயரதிகாரிகள் இல்லாமலா? உயரதிகாரிகள் என்போர் நடை உடை பாவனைகளில் அதிகாரத்தை சதா ஏந்தித்திரிபவர்கள். அவர்கள் அவர்களைவிட உயரதிகாரிகளின் முன் பம்முவதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும். அதிகாரம் மனிதர்களை பலகீனர்களாக மாற்றிவிடுகிறது. பல சமயங்களில் கோமாளிகளாக.

உயர் அதிகாரிகள் முன் நான் ஒருபோதும் அமர்ந்ததில்லை. எத்தனை இருக்கைகள் காலியாக இருந்தாலும் நான் நிற்க வைக்கப்படுவேன். என் சொற்களில் பணிவும் ‘நான் உங்கள் அடிமை’ என்கிற பவ்யமும் வெளித்தெரியும் வண்ணந்தான் அவர்களின் முன் நான் முணுமுணுக்க முடியும். அலுவலகத்தின் நான்கு புறங்களிலும் மூன்று விதமான உயர் அதிகாரிகள். அவர்களின் அறைகள் நான்கு திசைகளிலும் பரவிக்கிடந்தன. உயர் அதிகாரிகளில் உச்சபட்ச அதிகாரம் கொண்டிருப்பவருக்கு ஈசான மூலையில் அதிகபட்ச இருக்கைகள் கொண்ட அறை. சதா குளிர் உறைந்தது. நற்மணம் ததும்பும். பரிவாரத் தெய்வங்களைப் போல அவர்களின் அறைகளை நெருங்கும்போதே உள்ளே வழிபடும் மனம் இயல்பாக வந்து படிந்துவிடும். திக்திக் என்று நெஞ்சு பதறக் கூடச் செய்யும்.

பல்வேறு விதமான பாவனைகள் உயர் அதிகாரிகளிடம் உண்டு. பெருந்தன்மை, பெருங்கருணை, சத்திய ஆவேசம், உலகை உய்விக்கும் தீரம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டம் தன் கடமையை செய்தே ஆகவேண்டும் என்கிற வீராப்பு. இப்படி பல விதங்களில். ஆனால் அவை எல்லாம் ஒரே புள்ளியில் குத்தி ஒன்றிணையும். அது தன்னைவிட படிநிலையில் குறைந்த நிலையில் உள்ள ஒரு அலுவலர் என்றால் அவர் மீது தனக்கு ஏகபோக சுதந்திரம் இருக்கிறது என்கிற பாவனைகள் வெளிப்படும் பார்வையைக் கொண்டிருத்தல்.  ஒரு அடிமையை எதிர்கொள்ளும் எஜமானனைப் போன்ற மிதப்பு.

என் தந்தை எனக்கு எத்தனையோ முறை அறிவுறுத்தினார். அலுவலக வேலை என்பது சாகும்வரை அடிமை வேலை என்று. அவரும்  அலுவலக ஊழியர்தான். ஐம்பத்தெட்டு வயதிற்கு பிறகே தனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பது அனுபவமானது என்பார். படிக்கும் வரை தான் மிகுந்த மகிழ்ச்சியோடு சுற்றி அலைந்ததை நினைவு கூர்வார். மூன்று வேளை உணவுக்கு அப்போது உத்தரவாதம் இல்லை என்றபோதும். அவர் நடையிலேயே ஒரு அடிமைக்குரிய கோணல் நிரந்தரமாக வெளித்தெரியும்.

அலுவலக ஊழியராக சேர்ந்த உடனே என்னுடைய நல்லியல்புகள் மாறத் தொடங்கின. உண்மையில் ஏழை மக்களுக்கு எதாவது சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் பணியில் சேர்வதற்கு முன் எனக்கு இருந்தது. நிரந்தர வருமானமும் மறைவாக வரச்சாத்தியமுள்ள லஞ்சமும் அலுவலக ஊழியத்தின் பெறுமதிகள் என்பதை உங்களைப் போலவே நானும் அறிந்திருந்தேன். நான் எண்ணியது போல இங்கே எதுவும் இல்லை. பணியில் சேர வந்த முதற்கணம் கொண்டு அது தெரிய ஆரம்பித்தது. ஒரு அலுவலகத்தில் உள்ள மனிதர்களுக்கும் அலுவலகத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போதும் அவர்கள் மற்றவர்களில் இருந்து தனித்தே தெரிகிறார்கள். ஊழியர்களின் உடல்மொழியில் ஒரு சிறப்பின்மை அப்பட்டமாக வெளிப்படும். அது எண்ணங்களில் ஏற்படும் அழுகல். தன் மீதும் பிறர் மீதும் உண்டாகும் வெறுப்பினால் ஏற்படும் வெதும்பல். சேவையை கட்டாயமாக்கியதன் பின்விளைவு.

ஒரு நாள் என் கைகளும் கால்களும் அழுகி புண்கள் நிறைந்து நிணம் வெடித்து சீழ் வழிந்தது. இரண்டு கைகளையும் அசைக்க முடியவில்லை. கண்கள் பீழையால் நிறைந்து அடைத்துக்கொண்டன. சிறிய துவாரங்கள் ஊடாக நான் பார்க்க நேரிட்டது. கால்கள் ஒவ்வொன்றும் கண்டு கண்டாக வீங்கி யானைக்கால் நோய் வந்தவருடையதைப் போல மாறியிருந்தது. சட்டென்று விழிப்பு வந்ததும்தான் நிம்மதி அடைந்தேன். ஆனால் அக்கனவு இன்றுவரை எனக்கு அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப்போல வேறொரு கனவும். அது செய்தே ஆகவேண்டிய முக்கிய காரியம் ஒன்றை மறந்து  செய்யாமல் இருந்துவிட்டேன் என்ற ஒரு நினைவு மீட்டல். மின்னதிர்ச்சியைப் போல மனதில் தோன்றி சட்டென்று ஆளைக்குலுக்கி விழிப்படைய வைக்கும். அவ்வளவுதான் இத்தோடு வாழ்க்கை முடிந்தது என்ற கற்பனைப் பதற்றம். எழுந்து அமர்ந்து அருகில் வைத்திருக்கும் தண்ணீரை நெஞ்சு நனைய குடித்த பின்னர்தான் ஆசுவாசம் ஏற்படும்.

நான் மிகையாகச் சொல்வதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

உங்கள் குடும்பத்தில் எவரேனும் அலுவலகப்பணியில் இருக்கிறார்களா? அவர்களிடம் சென்றுப் பேசிப்பாருங்கள்.

தலைக்கு மேலே நுனி பளபளக்கும் கூர்தீட்டிய கத்தி ஒன்று சதா தொங்கிக்கொண்டே இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலைதான் ஒவ்வொரு அலுவலக ஊழியருடையதும். அல்லது கால்களிலும் கைகளிலும் இரும்புச்சங்கிலியால் பிணைத்துக்கிடக்கும் ஒரு மிருகத்தைப் போன்ற நிலை. மிருகத்தின் தளைக்கயிறு ஆளாளுக்கு நீளத்தில் வேறுபடும். காலந்தவறாமல் இடப்படும் உணவின் தரங்களில் சில வேறுபாடுகள் இருக்கலாம். அவ்வளவுதான்.

நான் என் அழகிய பெயரை இழந்து முதலில் ஏ2 ஆனேன். என்னைவிட ஐந்து வயது குறைந்த என் உயரதிகாரி “ஏய் ஏ2  அந்த பைலை எடுத்துட்டு வா” என்று அழைத்த போது என் தன்மானம் அடிவாங்கியது. அதன் பிறகு மெல்ல மெல்ல என் சுயமரியாதை,  நானும் மதிப்பிற்குரிய ஒரு பிரமுகர்தான் என்ற கர்வம் என ஒவ்வொன்றாக அடிவாங்க ஆரம்பித்தன. என்னை ஒன்றுக்கும் லாயக்கற்ற ஒரு நடைபிணம் என்று கண்டடைய இந்த பதினைந்து ஆண்டுகள் உதவியிருக்கின்றன. மற்றபடி நீங்கள் அறிந்திருக்கும் பிரம்மாணடத்தில் பத்து விழுக்காடு கூட எனக்குத் தெரியாது.

என் மேஜை அதன் எதிரில் உள்ளே மரப்பீரோ, வயர் பின்னிய நாற்காலி.உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுள்ள கோப்புகள்.அவற்றில் எவர் எவரோ தன் வாழ்நாட்களை இழந்து புரிபடாத எழுத்துக்களாக மாறிக்கரைந்த நிரந்தர அடையாளங்கள். கோப்புகள் சென்று திரும்பும் புதிர்ப்பாதைகள் விநோதமானவை. அவை என்று நகரும் என்று திரும்பி வரும் என்பதை என்னால் கணிக்கவே முடியாது. சில கோப்புகள் என் ஆருடங்களையும் மீறி நிரந்தரமாக காணாமல் போய்விடும். கோப்புகள் ஊழியர்கள் விட்டுச்சென்ற காலச்சுவடுகள். புழுங்கி மண்டி நசுங்கி காலப்போக்கில் உதிர்ந்து ஒன்றும் இல்லாமல் போகக்கூடியவை.

“ஓணம் பம்பர்..ஓணம் பம்பர்…ச்சேட்டா…ஒன்னு எடுக்கட்டா?”

இருபத்தைந்து கோடிகள். நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சீட்டு. ஒரே சீட்டு. ஒற்றைக்கு ஒரு சீட்டு.

லாட்டரிச்சீட்டின் லிபிகள் புரியவில்லை. நடைபாதை வியாபாரி விளக்கிச் சொன்னார்.

இருபத்தைந்து கோடிகள் என் கைக்கு வர ஒரு சாத்தியம் அந்த லாட்டரிச் சீட்டு. சிப்பந்தியின் கைகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சீட்டுகள்.அவற்றில் எதோ ஒன்றுதான் உண்மையில் கோடிகளை அள்ளித்தரக் கூடியது. பல லட்சங்களில் ஒன்று. வாழ்வில் ஒரு முறை ஒரு நபருக்கு வாய்க்கும் கடவுளின் ஆசி.

”முந்நுாறு”

பாலித்தீன் கவரில் வைத்து நீட்டினார். வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். திடீரென்று ஒரு விடுதலை உணர்வு என்னிடம் தோன்றியது. இந்த வாழ்க்கை இத்தோடு முடியப்  போவதில்லை. மீட்சிக்கு ஆயிரம் வழிகள் உண்டு. கைகள் புது தெம்பு அடைந்தன. கால்களில் அதுவரை இருந்த நடுக்கம் மட்டுப்பட்டது. நம்ப முடியாதபடி மனம் சட்டென்று பீதி சூழ்ந்த இருள் வெளியில் இருந்து விடுபட்டது. மெலிதாக ஒரு பாடலை முணங்கியபடி என்னைக் கடந்து சென்ற பெண்ணின் பின்புறத்தை வெறிக்க ஆரம்பித்தேன். பெண்ணைக் குறித்த எண்ணங்கள் எதுவுமே இல்லாமல் கடந்த ஐந்துமணிநேரம் நான் வாழ்ந்திருக்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

  1. மனிதன் மெல்லுணர்வால் செதுக்கப்பட்டவன். அவனுடைய அப்போதைய மன உணர்வுகளால் வாழ்பவன்.அது மகிழ்ச்சியோ சோகமோ வெறுப்போ பொறாமையோ எல்லாம் அந்தந்த சூழலுக்கேற்ப வடிவமெடுக்கின்றன அல்ல்து தோன்றுகின்றன. இக்கதை தான் அடைபட்ட ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால் தன் சுதந்திரம் அடிபட்டுப்போகிறது என்றும் தன் விடுதலை வாழ்வுக்கு அது வழி வகுக்கவில்லை என்றும் புலம்பிச்செல்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தனிமனித இருத்தலியல் சார்ந்து அழுத்தமான புனைவாக வந்துள்ளது. இருத்தலியல் சிந்தனையாளர் ஜீன் பால் சார்தரே, ஆல்பர்ட் காம்யூஸ் போன்றவர்களை இன்றைய நவீன வாழ்க்கை இருத்தலியல் பற்றிப் பேசியவரகள். அவர்களின் கருத்தியல்களை இக்கதை முன்வைக்கிறது. தனி மனித வாழ்க்கை இவ்வாறுதானே அமைந்துவிடுகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிப்பது. அதையும் ஒரு மெல்லுணர்வுகொண்டே தப்பிக்கிறார் கதைசொல்லி. ஒரே ஒரு பாம்பர் டிக்கட் தன் வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறது என்று யூகித்துக்கொள்வது எவ்வளவு அர்த்தமற்றது. இருப்பு சார்ந்த சிக்கலிலிருந்து தற்கலிகமாக விடுபட இன்னொரு மெல்லுணர்வு உதவுவது எத்துணை பெரிய அபத்தம். எத்தனை பெரிய நகைமுரண். நல்ல கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *