மெயின் ரோட்டுக்கு போகும் குறுக்கு சந்து அது.கொஞ்சம் பெரிய சந்தும் கூட நுழைந்து நடக்கும் போது எதிரே வந்த காருக்கு வழிவிட்டு திரும்பி நின்றேன். ஒரே நேரத்தில் ஒரு கார் ஒரு இருசக்கர வாகனம் செல்ல இடம் இருக்கும்.கார் கடந்து போன பிறகுதான் கவனித்தேன் வலது கையால் வண்டியோட்டியபடி இடது கையில் செல்பேசியில் பேசிக் கொண்டு குமரன் வருவதை.
ஆச்சர்யம் தாங்கவில்லை நேற்று இரவு கடைசி மெசேஜ் போட்ட பிறகு ரீ சார்ஜ் முடிந்து விட்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காலையில் வேலைக்கு வர வேண்டும் அதுவும் அன்று முதல் நாள் என்பதால் அம்மாவின் போன் மூலமும் பேச நேரம் இல்லை. சரி வேலைக்கு சேர்ந்து விட்டு அங்கிருந்து யாரிடமாவது வாங்கி பேசலாமென்றால் புதிய இடம் வேறு தயக்கமும் பயமும் இருந்தது. மாலை வரை பதட்டத்துடனே நேரத்தை கடத்தியாகிவிட்டது . அதோடு வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது மருத்துவமனையின் கடுமையான உத்தரவு. வேறு எப்படியோ வேலை முடிந்து வெளியே வரும் நேரமறிந்து என்னைப் பார்க்க வந்து விட்டது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது.
குமரன் என்னையும் அங்கு எதிர்பார்க்கவில்லை. முகத்தில் கோபம் கலந்த நகைப்புடன் இரு சக்கர வாகனத்தை ஒரு ஓரமாக வாகனங்கள் போக வழிவிட்டு நிறுத்தி சைடு ஸ்டேன்ட் போட்டார்.
”என்னாடி போன் பண்ணா எடுக்கல . நேத்து நைட்டு போட்ட மெசேஜ்க்கு பதிலில்ல என்னதான் நா நெனக்குறது சொல்லு.”
பதில் சொல்ல தடுமாறினேன். கண்களில் நீர் கோர்த்ததை மறைக்க முயன்றேன். எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் விளக்கின் வெளிச்சம் என் மீது ஒரு கணம் பாய்ச்சி மறைந்ததில் கண்டுபிடித்து விட்டார். நகைப்பு மாறி பதை பதைப்புடன் என்ன சொல்வதென உதடுகள் இறுகி மலர்ந்தது. உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.
“இல்ல ராத்திரியே கடைசி மெசேஜ் போட்ட பெறவு ரீசார்ஜ் முடிஞ்சிருச்சி என்ன செய்யுறதுன்னு தெரியல . புள்ளய அம்மாட்ட பாத்துக்க சொல்லிட்டு வேலைக்கு வர்ற அவசரத்துல அம்மா போன்லந்து பேசவும் முடியல, பக்கத்துலேயே உக்காந்துகிட்டு . கையில காசு வேற இல்ல, ஒவ்வொரு தடவையும் ஒங்கள தொந்தரவு பண்ண மனசு கஷ்டமாயிருக்கு நா என்ன செய்ய” என்றேன்
“சரிடி பரவாயில்ல சொல்ல வேண்டியதுதானே . எனக்கு ஒரு செரமமும் இல்ல . உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன் . சரி இப்ப பேசலாமா ? நேரமிருக்கா?”
“இல்ல இப்ப இங்க வேணாம் ஆஸ்பிட்டல்லந்து யாராவது வருவாங்க போவாங்க அதனால நா வீட்டுக்கு பஸ் ஏறுனப்புரம் பேசுங்க . இன் கமிங் இன்னும் இருக்கு”
சட்றென்று தலை குனிந்தபடி குமரன் தலையாட்டி சரி “உன் விருப்பம்” என்றபடி வாகனத்தை திருப்பிக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு போவதற்கு எனக்கு பாதையை விட்டு விலகி சென்று விட்டார். முகம் மாறிவிட்டது. மகிழ்சியாக இல்லை . என்னால் அவருக்கும் கஷ்டம். என் முகம் காட்டி குடுத்திருக்குமா? அவரிமிருந்து மறைக்க முடியுமா? என யோசித்தபடி நடந்தேன்.
பேருந்து நிறுத்தத்திற்கும் ஆஸ்பத்திரிக்கும் நூறு மீட்டர் தூரமே இருக்கும். பின்னால் யாராவது வருகிறார்களா என பார்த்தவாரே பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்.
நல்லவேளை. அன்றுதான் பழக்கமான ரம்யா எனக்கு முன்னதாகவே வந்து விட்டதால் மனம் சீரடைந்து பதைபதைப்பு குறைந்தது.
பேருந்திற்காக காத்திருக்க துவங்கினேன். மணி ஏழுக்கு மேல் ஆகிவிட்டதால் வேலை முடிந்து வீட்டுக்கு போவோர்கள், தங்களின் ஊர் போக பரபரப்புடனும் சோர்வுடனும் செல்போனில் தன் வீட்டாருடன ஏதாவது வாங்கி வர வேண்டுமா ? அல்லது நலம் விசாரித்தலும்,பெண்கள் பேசுவது வெளியே தெரியாமல் பேசுவதும், என ஒரே சந்தடி.
மனம் அமைதியடைந்தாலும் வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போது ஆஸ்பத்திரியின் ஒரு பங்குதாரரான பெண் மருத்துவர் அழைத்து சொன்னது மனதிலோடிக் கொண்டிருந்தது.குமரன் இதை எப்படி எடுத்துக் கொள்வார். அம்மாவிடம் சொன்னால் என்னவாகும்? மீண்டும் வேலைக்கு தடை விழுமா?எதிர்காலம் குறித்த கவலை மெலிதாக படியத்துவங்கியது.
பேருந்து வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மனம் மீளமீள அதையே நினைத்தது. என்னையறியாமல் கண்களில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்து. அங்கு வெளிச்சம் அதிகமில்லை என்பதால் புடவையால் யாருக்கும் தெரியாத வண்ணம் கண்களை துடைத்துக் கொண்டேன்.
கணவனால் திருமணமானதிலிருந்து இரண்டு பிள்ளை பெறுவது வரை கஷ்டம். வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம்தான். கணவன் டிரைவர்.தனியாக பல இடங்களுக்கும் உள்ளூர் சவாரியும் செய்து வந்தான். குடிப்பழக்கமும் பெண்கள் சகவாசமும் உண்டு என்பது திருமணத்திற்கு பிறகே தெரியவந்தது.ஆறுமாதத்தில் என் மீது வெறுப்பும், சந்தேகமும் பட ஆரம்பித்தான்.பொறுமையாக இருந்து குடும்பத்தை நடத்தினாலும் . என்னை கொடுமை செய்வது அவனின் வாடிக்கை. அது மேலும் மேலும் தொடர்ந்ததோடல்லாமல் குடிப்பழக்கம் அதிகமாகி வேலைக்கே போகாமல் குடித்து விட்டு வருவதும். பணம் கேட்டு அடித்து அம்மாவிட்டிற்கு போக சொல்வதும் , கண்ட நேரங்களில் குடிபோதையில் வற்புறுத்தி வன்புணர்வு கொள்வதும், தொடர்ச்சியாக நடந்தது.
நான் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் என்னுடன் வேலைகளை பகிர்ந்து கொண்ட ஆண்களோடு முடிச்சிட்டு பேசி . சில சமயம் ஆஸ்பத்திரிக்கே போய் குடிபோதையில் வம்பிழுத்து விட்டு வருவதும் நடந்ததால் . காவல் நிலையத்தில் புகாரளித்து அவர்கள் விசாரித்து இருபுறமும் பேசிப் பார்த்தனர். அங்கு தலையாட்டி விட்டு வீட்டிற்கு வந்து இரண்டு மூன்று நாட்களில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாக தொடர்ந்ததால் போலீசார் “இது போல நிறைய தடவை நடந்துவிட்டது, நீங்கள் வழக்கறிஞர் மூலம் விவாகரத்து செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள்.
வழக்கறிஞர் இதற்கு கணவனும் ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் முடிவுக்கு வரும் என்றதால் அம்மாவிடம் பேசி ஊர்ப்பஞ்சாயத்தில் வெட்டி விட்டு இப்போது அம்மா வீட்டோடு வந்து விட்டோம். பிள்ளைகள் படிப்பு செலவு , வீட்டு செலவு ஆகியவற்றை சமாளிக்க பணம் தேவை. வேலைக்கு திரும்பவும் போக அம்மாவிடம் என் நிலையை விளக்க வேண்டியதில்லை . அவருக்கு தெரியுமென்றாலும் புரிய வைக்க முயற்சித்து இப்போதுதான் வேலைக்கு சேர்ந்தேன் .
அம்மாவுக்கு நான் கஷ்டப் பட்டாலும் கணவனோடு வாழ்வதையே வற்புறுத்தினார். அவன் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ள பல முறை என்னிடம் சண்டையிட்டார். இரண்டாவது குழந்தை பிறந்து நான்கு வருடமே ஆகியபடியால் அம்மாவாலும் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாமல் மிருந்த சிரமத்திலிருந்தேன். வேலையில் இருக்கும் நேரத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும் தானே.
குமரனை கேட்டால் உடனே ஏதாவது வேலை கிடைத்துவிடுமென்பதால் அவரை தொடர்பு கொண்டேன். எனக்கு குமரனை திருமணத்திற்கு முன்பே தெரியும்.
அந்த ஆஸ்பத்தியிலும் அவர் தான் எலக்ட்டிரிக்கல் துறையில் வேலையும், பராமரிப்பும் செய்து வருவது தெரியும்
இது போல நான்கு மருத்துவமனைக்கும் அவரே பராமரிப்பு வேலைகளைப் பார்த்தார். என் நிலமைகளை முன்பே அவருக்கு சொல்லியிருக்கிறேன், போதையோடு கணவன் வந்து சண்டையிட்டதும் அவருக்குத் தெரியும். அப்படி அடிக்கடி பேசிக் கொள்வதும் கஷ்டங்களை அவரிடம் சொல்லி ஆறுதலும் அவ்வப்போது செலவுக்கு பணம் வாங்கிக் கொள்வதுமுண்டு. கணவனால் துன்பம் அதிகமானதால் என் மனம் குமரனை நாட ஆரம்பித்தது. அவர்தான் முதலில் என் மீதான ஆசையை வெளிப்படுத்தினார்
அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு . ஒரு ஆணும் பெண்ணும் .பெண்ணிற்கு திருமணமாகி விட்டது. மகன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறான். கணவன் மனைவியிடையே மனப்பிரச்சனை ஏதுமில்லை. அவரின மனைவிக்கு உடல்நிலை எட்டு வருடங்களாக சரியில்லை. அவருக்கு அங்கு கிடைக்காத சுகத்திற்காக என்னை கேட்டார். உடலிச்சையே குமரனை என்னை அனுகத் தூண்டியது. பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு முறை பார்த்துவிட்டு என்னிடம் பேச வந்தார். இதற்காக மனைவியிடம் பேசிவிட்டு அவருடைய ஒப்புதலோடு தான் என்னிடம் பேச வந்தார் என பின்னர் அறிந்தேன்.
“எனக்கு ஒங்கிட்ட ஒன்னு கேக்கனும் கேக் லாமா ?”
”கேளுங்க” என்றேன்.
”எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு, எப்படி சொல்றதுன்னு புரியல, ஆனாலும் சொல்லிட்டா தான் நிம்மதி.எனக்கு நீ வேணும் ஓடனே பதில் சொல்லவேணாம் டையம் எடுத்துக்க அப்புறம் சொல்லு. ஒரு வாரம் போதுமா, இப்ப ஒனக்கு நைட் டியூட்டி அடுத்த வாரம் பகல் டியூட்டில சொல்லிடு”
எனக்கு அவர் இதைத்தான் கேட்பார் என புரிந்து கொண்டேன். பெரும்பாலான ஆண்களின் குணம் எனக்கும் தெரியும்.கணவனால் எந்த நன்மையும் இல்லை என்பதும் எனக்கும் ஆணின் துணை தேவை .
்சரிங்க நீங்க இப்படி கேப்பிங்கனு முன்னாடியே தெரியும். உங்களுக்கு வசாயிடுச்சுன்னு கேக்காம இருந்தேன். இல்லேன்னா மொதல்லயே நானே கேட்டுருப்பேன்” என்றேன் சிரித்தபடி
“என்னாம்மா சொல்ற” என அதிர்ந்தார்.
“ஒங்க நடை , உடை. அழகு உடல கட்டுமஸ்தா வச்சிருக்கிங்க . மொகம் கோணாம உதவி செய்யுறீங்க , அன்பு பாசம் காட்டுறீங்க எனக்கு அது தான வேணும் வயசானா என்ன பொம்பளக்கி அன்பும் பாசமும் மொகம் கோணாம பாத்துகிட்டா அதுவே போதுங்க ” என்றேன்
பேருந்துகள் வருவதும் போவதும் அதன் ஒலிப்பான்களும் லைட் வெளிச்சமும் எங்களை கடந்து சென்றது. பேருந்து நிலையத்தின் எப்பக்கம் திரும்பினாலும் யாரோ உற்று பார்ப்பது போன்ற தோற்றத்தை தந்து கொண்டிருந்தது. பேருந்துகளில் பயணம் செய்வோரும் எங்களை பார்த்தும் பாராமல் போவதாக கற்பனையான பரவசத்தை பரப்பி வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை நிருபித்துக் காட்டியது.
அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திருமணமான போது கூட இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படவில்லை.
அதன் பிறகு இரண்டாவது குழந்தை என் கணவன் மூலம் உண்டாகும் வரை நானும் குமரனும் பல தடவை ஒன்றாக இருந்தோம். குழந்தை பேறுக்கு அம்மாவீட்டிற்கு போனவள் இரண்டாண்டுகள் அவரை சந்திக்க முடியவில்லை . பேச முடியவில்லை செல்போன் உடைந்து பழுதாகியது. என்னால் வீட்டை விட்டு வெளியில் போக முடியவில்லை . குழந்தை பிறப்பிற்காக மருத்துவமனை வந்ததும் குழந்தை பிறந்தது அறுவை சிகிச்சையால் தான். நண்பியின் செல்போன் மூலம் புகைப்படம் அனுப்பியிருந்தேன். பதிலாக அவரும் என் மகள் போல என செய்தி அனுப்பினார். மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பார்த்து விட்டு “ஏதாவது உதவி வேண்டுமா ?” என்றும் கேட்டார். நான் தான் உங்கள் ஞாபகம் மட்டும் போதும் என்றேன்
மூன்றாவது ஆண்டில் தான் செல்போன் வாங்க முடிந்தது. அதுவும் அவர் தான் வற்புறுத்தி வாங்கித் தந்தார். அம்மாவீட்டிலும் சில நேரங்களில் அம்மாவின் பேச்சை தாங்க முடிவதில்லை . ஏதாவது திட்டுவதும், மீண்டும் கணவனின் வீட்டிற்கு போகச் சொல்வதுமாக இருந்தார்.
ஒரு தடவை கூட கணவன் அவனாக குழந்தையைப் பார்க்க வரவில்லை. அம்மா அழைத்த போது வந்து சமாதானம் சொல்லவில்லை. என் உடல் மீதும் நான் எப்பொழுது வேலைக்கு போவேன் என்பதே அவன் கேள்வியாக இருந்தது . எனக்கு சுத்தமாக அவனுடன் வாழ விருப்பமில்லாமல் போனது.
குழந்தை அழுவதும் அதை சமாதானபடுத்துவதும் பசித்தால் பால் குடுப்பதும். அது செய்யும் சேட்டைகளும். , புன்னகையும் எனது துன்பத்தை ஓரளவு மறக்க வைத்தன.
செல்போன் வாங்கிக் கொடுத்த பிறகு வாட்சாப்பில் மெசேஜ் போடுவதும் அடிக்கடி பேசுவதும் தொடர்ந்தது. சில மாதங்கள் அவரே ரீசார்ஜ் செய்தார். நேரில் பார்க போக முடியவில்லை குழந்தையை பார்த்துக் கொள்வதால் நேரமில்லை
அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஓலை குடிசையின் ஓட்டை வழியே வழியும் சூரிய வெளிச்சமே ஞாபகம் வரும். ஏனோ அதை பார்க்கும் போதெல்லாம் பரவசமுண்டாகும். அன்பு காட்டுவது அதிர்ந்து பேசுவதில்லை, கோபப்படுவதில்லை, எப்பொழுதும் கனிவான சொல்லே வரும். கோபப்பட்டாலும் என்பொருட்டே கோபப்படுவார்.
நானும் அவரும் ஒன்றாக இருந்த பல நிலைகள் மனதிலோடி உடலையும் மனதையும் முறுக்கி அவரை நினைத்து ஏங்க வைத்தது.
ஒரு வழியாக அம்மாவிடம் வேலைக்கு போக ஒப்புக் கொள்ள வைத்து. அவரிடம் பேசி இம்மருத்துவமனையில் வேலை வாங்கித்தர சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டு மருத்துவமனையில் செவிலியாக வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கும் இப்போது வந்துவிட்டது ஒரு ஆபத்து.
பேருந்து என் ஊருக்கு போகும் வழியில் சென்று கொண்டிருந்தது. இன்னும் குமரனிடமிருந்து அழைப்புவரவில்லை.
பேருந்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது. மழை பெய்வது போலிருந்தது காரணமா? தெரியவில்லை . மேலும் மனம் அதிக ஊளைச்சலில் இருந்தது.
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறைமே எனது போனின் அழைப்பொலி . இதுவும் குமரனுக்கு மிகவும் பிடித்த பாட்டு யாரென்று பார்த்தேன் அழைத்தது குமரன் தான்.
“சொல்லுங்க”
“நா என்னா சொல்றது, நீ தானானே அங்க பேச வேணாம், பஸ் ஏறி கால்மணி நேரம் கழிச்சி பேசச் சொன்னே”
எனக்கு அழுகை முட்டியது. அழுதுவிட்டால் என்ன ஏது எனக் கேட்டு நாம் உண்மையை சொல்லிவிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன என என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
பேருந்திலுள்ளவர்களும் உற்றுப் பார்ப்பது போல தோற்றமளித்து. ஒருவழியாக சமாளித்து
“அந்த டாக்டரம்மா என்னைய கூப்பிட்டு பேசுனாங்கஇ அத சொல்லத்தான் பேசச் சொன்னேன்”
“அதுக்கென்னடி, நா தான் சொல்னே அதனலாதாண்டி வேலை குடுத்தாங்க அதுக்கென்ன இப்போ”
”அது இல்லங்க அவங்க சொன்னது வேற”
எனக்கு கட்டுப்படுத்த முடியாத அழுகை வருவது போலிருந்தது. பேருந்தும் மெதுவாக ஊர்ந்தபடியே சென்று கொண்டிருந்தது.
இதை எப்படி குமரனிடம் செல்வதுஇ தெரியவில்லை.. ஒரு வழியாக மனதை சமாதானப்படுத்தி பெண் மருத்துவர் சொன்னதை சொல்ல தொடங்கினேன்.
வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட தயாரானேன். எனது டிபன்பாக்சை மதியமே சாப்பிட்டு முடித்ததும் கழுவியதால் அதை பையில் வைத்து விட்டு முகம் கழுவி பொட்டு வைத்துக் கொண்டு வெளியே வந்து வரவேற்பறையில் வெளியே செல்லும் நேரத்தை பதிவு செய்து விட்டு திரும்பும்பும் போது பங்குதாரரான பெண் மருத்துவர் அழைப்பதாக வரவேற்பறையை கவனித்துக் கொள்ளும் பெண் சொன்னார் .
“சரிங்க . எந்த பக்கம் இருக்கு நா இங்க வேலைக்கு இன்னிக்கு தான் சேந்தேன் ”
இடது புறம் நோயாளிகள் அமர நிறைய நாற்காலிகள் போடப்பட்டு சுமார் இருபது நாற்காலிகள் வீதம் தனித்தனியாக பிரிக்கபட்ட ஆறு புறநோயளிகளை பார்க்கும் பல மருத்துவ நிபுணர் பகுதிகளை கடந்ததும் பெண் மருத்துவரின் அறை வந்தது. வெளியே பார்த்துக்கொள்ளும் பெண்ணிடம் கேட்டே போது உள்ளே அவர் இருப்பதாகவும் நோயளிகள் யாரும் இல்லை நீங்கள் உள்ளே போகலாம் என்றார்.
அலுமினியத்தால் செய்த தானே மூடிக் கொள்ளும் கதவை தள்ளித் திறந்ததும் குளிரூட்பட்ட அறை என்பது தெரிந்தது. அறையின் நடுவில் மிகப்பெரிய மரமேஜையின் மேல் அழகாக மெல்லிய சந்தன நிற விரிப்பின் மேல் பேனா தாங்கிகளும் உடலில்லா தலைமட்டும் கொண்ட பெரிய புத்தர் சிலை இடபுறமும் வைக்கப்பட்டு ஏராளமான மருத்து சீட்டுகள் கொண்ட நோட்டுகளும் சீராக அடுக்கப்பட்டு எடுக்க ஏதுவாக இருந்தன. அதன் பிண்ணனியில் ,பெண் மருத்துவர் கஞ்சி போட்டு துவைத்து நன்றாக சலவை செய்த மடிப்பு கலையாத புடவையில் தன் உடலின் பொன்நிறம் நன்றாக துலங்குபடி அமர்ந்திருந்தார் .
நாற்பது வயது சொல்லலாம். இன்னும் கண்ணாடி அணியவில்லை. அனுபவத்தின் சுவடுகள் முகத்தில் தெரிந்தன . கண்களின் நோக்குதலில் நிச்சயம் ஊடுருவி பார்க்கும் தன்மை அவரிமிருந்தது. ஏதோ சொல்லவியலாத ஒருவித குரூரம் இருப்பதாக உணர்ந்தேன்.
“ம். உங்கிட்ட ஒன்னு அவசியம் சொல்லனும்” என பீடிகை போட்டபடி “இங்க இந்த ஆஸ்பிட்டல் மூன்று டாக்டர் பார்ட்னரா பாத்துக்குறங்க அதனால மூனு பேருக்கும் நல்லபடியா நடந்துக்கனும் . இங்க அரசியல் பண்ணக்கூடாது உனக்கு தனியா சொல்றேன்” என்றார்
“சரிங்க மேடம் இன்னிக்கு தான் வேலைக்கு சேர்ந்தேன் . நீங்க சொல்றபடியே நடந்துகிறேன்” என்றபடி அவரை பார்த்தேன்,
முகத்தில் சற்று கடுமை கலந்த புன்சிரிப்புடன் விடை கொடுத்தார்
வெளியே போவதற்கு திரும்பும் போது
ஏதாவது உதவி தேவைன்னா என்ன பாரு என்றார் நானும் சரிங்க மேடம் என்று சொல்லி வெளியேறினேன்.
அத பத்தி யோசிகிட்டே நடந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்புக்கு போற சந்துகுள்ள நுழையும் போது உங்கள பார்த்தேன்
இதுதான் நடந்தது என போனில் குமரனிடம் சொன்னேன்.
“சரி அவங்க சொன்னாப்பல நடந்துக்க அங்க யார்ட்டடையும் அனாவசியமா பேச்சி வச்சிக்காத கண்டதையும் பேசினதையும் ஒனக்குள்ள வச்சிக்க, வேல கெடக்கிறதே கஷ்டம் . நா ரெம்ப மெனக்கெட்டு இந்த வேலைய வாங்கிதத்துருக்கேன் அத சரியா பயன்படுத்திக்க” என்றார்.
“சரிங்க பாத்து நடந்துகிறேன் , உங்களுக்கு கெட்ட பேர வாங்கிதர மாட்டேன்” என்றேன் மன சஞ்லத்தை அடக்கியபடி.
போனை வைத்ததும் அடக்க முடியாத அழுகை மேலிட்டது. நடந்ததை முழுமையாக சொல்ல முடியாத நிலமை ஏற்பட்டதை நினைத்து கதறினேன்.
“ எனக்கும் அவரு வேணும் நீ விலகிக்கோ” என்ற குரல் காதில் ரீங்கரித்தது.