அப்போது சென்னை போருர் லட்சுமி நகரின் 8 வது 9 வது படிக்கும் நண்பர்களான நாங்கள் ஏழு பேர் ஒரு முடிவு செய்திருந்தோம். நாளை முதல் காலை மூன்று மணிக்கு எழுவது. மூன்றரை மணிக்கு தெருமுனையில் ஒன்று கூடுவது. அங்கிருந்து மெயின் ரோடு வரை ஜாகிங், பின்னர் மெயின் ரோட்டிலிருந்து ராமாவரம் பள்ளிக் கூடம் (முந்தைய எம்ஜிஆர் வீடு) வரை 4 கிலோமீட்டர்கள் ரன்னிங் ஓடி விட்டுத் திரும்பி ஓடி வருவது. விளையாட்டு வீரர்களுக்கான உறுதியான உடலைக் கட்டமைக்க எல்லோரும் வைராக்கியம் கொண்டிருந்தோம். ஆளாளுக்கு ரன்னிங் ஷூ ஜாகிங் ஷூ என்று வாங்கி இருந்தார்கள். நான் என் இத்துப்போன ஷூ போதுமென்றிருந்தேன்.
மறுநாள் அதிகாலை திட்டமிட்டபடி ஒன்று கூடினோம். மிகவும் உற்சாகத்துடன் ஓடத் துவங்கினோம். மெயின் ரோட்டை அடைவதற்கு முன்னால் நான்கு நீண்ட தெருக்களைக் கடக்க வேண்டும். இரண்டாவது தெருவைக் கடந்தபோது ஏழெட்டு நாய்கள் வெறிகொண்டு குரைத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தன. பயந்து கொண்டு விரைந்து ஓடினோம். பருத்த உடல் கொண்ட சேட்டு பையனான சஞ்சு மட்டும் பின் தங்கி விட்டான். துரத்திய நாய்கள் நெருங்கிக் கொண்டிருக்க அவன் ஓட்டத்தை நிறுத்தாமல் கத்தினான் ”ஆபத்துல விட்டுட்டு ஓடறீங்களேடா. காப்பாத்துங்கடா” அத்துடன் கோபத்தில் ”எங்க வீட்ல எத்தன சப்பாத்தி சாப்ட்ருப்பீங்க. நீங்கல்லாம் பிரண்டஸாடா நன்றிகெட்ட நாய்களா” என்றான்.
நாங்கள் உடனே திரும்பி ஓடிவந்து கைகளில் கற்களை பொறுக்கி எடுத்துக் கொண்டு நாய்களை விரட்டி சஞ்சுவை மீட்டோம். பின்னர் எதுவும் பேசாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்தோம். ரமேஷ் மெதுவாக பிரகாஷிடம் ”என்னடா சொல்லிக் காட்டிட்டான்” என்றான்.
”அதனால என்ன உண்மையத்தான சொன்னான். நீ அவங்க வீட்ல சப்பாத்தி சாப்டதில்லையா? என்று கேட்டான் பரமு.
”சாப்பிட்ருக்கேன்.”
“நீ எவ்வளவு சப்பாத்தி சாப்டிருக்கே?” பிரகாஷ் கேட்க
”ஒரு தடவ ஏழு சப்பாத்தி சாப்ட்ருக்கேன்” என்றான் கார்த்திக்.
”எவ்வளவு வேணா சாப்டுங்க. யாரு வேணான்னு சொன்னது” என்றான் சஞ்சு. நாங்கள் மீண்டும் மௌனமானோம்.
மறுநாள் முதல் ஓட்டப் பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது. அதிகாலை வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து வந்த கார்த்திக்கை காலை நான்கு மணிக்கு கண்விழித்த அவனது அம்மா காணாமல் தேடி பதற்றமடைந்து அவனது அப்பாவை எழுப்ப அவரும் அவனைத் தெருத்தெருவாக தேடிச் சென்றிருக்கிறார். பின்னர் அவன் சாவகாசமாக வந்த போது மிகவும் கடுப்பாகி பெல்டால் அவனை வெளுத்து எடுத்துவிட்டார்.
சஞ்சுவின் குடும்பம் பெரியது. இரண்டு அக்காக்கள் இரண்டு அண்ணன்கள். சித்தப்பாவின் குடும்பம் என்று. சஞ்சுவின் அம்மா எப்போதும் சப்பாத்தி செய்து கொண்டிருப்பார் அல்லது வேறு ஏதாவது சமைத்துக் கொண்டிருப்பார். சஞ்சுவின் நண்பர்கள் ஒருவராகவோ பலராகவோ எப்போது சென்றாலும் சாப்பிட கொடுத்துக் கொண்டே இருப்பார். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அவர் விதவிதமாக செய்யும் சப்ஜிக்களும் நன்றாக இருக்கும். அந்த வீட்டு சப்பாத்தியின் தரம் வேறு எங்கும் வராது. நெய்யும் அங்கு தாராளமாக புழங்கியது.
சஞ்சுவின் அப்பா போரூர் ராமநாத ஈஸ்வரரின் பக்தர். அவர் முதன்முதலில் ராஜஸ்தானிலிருந்து வந்தபோது இங்கு அவருக்கு தெரிந்தவர்கள் உறவினர் யாருமில்லை. அவர் ராமநாத ஈஸ்வரனான சிவபெருமானிடம்தான் சென்று நின்றார். ஒப்பிலி வள்ளலான சிவபெருமான் அவருக்கு அருள் புரிந்தார். அவருக்கு நல்ல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். மற்ற சேட்டுக்களைப் போல வட்டிக் கடை வைக்காமல் விதை உர வியாபாரம் செய்தார் (அப்போதெல்லாம் போருரைச் சுற்றியும் விளை நிலங்கள் இருந்தன). வீடு வாசல் என்று எல்லாம் அவருக்கு அருளப்பட்டது.
சேட்இரக்க சுபாவமுடையவர். தாராளமாக தான தருமங்கள் செய்யக் கூடியவர். விதை உரம் கடனில் வாங்கிவிட்டு பணம் தராமல் இருக்கும் சிலரை அவர்களாக தராத வரை அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதுபற்றி கேட்காமல் அப்படியே விட்டுவிடக் கூடியவர். அவர்கள் விதைகளோ உரமோ மீண்டும் கேட்கும் போது அவர் தர மறுத்ததும் கிடையாது. ஊர் விவசாயிகளுக்கு அவர் மீது மரியாதையும் நல்லெண்ணமும் இருந்தது. விவசாயிகளின் சிக்கல்கள் பற்றிய புரிதல் அவருக்கு இருந்தது.
சிவ பக்தரான அவரை பலமுறை ராமநாத ஈஸ்வரர் கோவில் சிவராத்திரிகளில் பார்த்தது நினைவில் இருக்கிறது. பெரிய உடல் கொண்ட அவர் இரவு முழுவதும் அங்கே சுற்றிக் கொண்டிருப்பார். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பொங்கலோ புளியோதரையோ சுண்டலோ ஏதாவது ஒன்றை இலையில் வைத்து பக்தர்களுக்கு கொண்டுவந்து கொடுத்து கொண்டே இருப்பார். அக்கோயிலுக்காக தேவைப்படும் போதெல்லாம் செலவுகள் செய்து வந்தார் என்றும் கேள்விப்பட்டேன்.
நான் கோவைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பின் சமீபத்தில் போருர் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. பலவற்றையும் பேசியபோது அவர் இப்போதும் சிவன் கோயிலுக்கு வருகிறாரா என்று கேட்டேன். அவர் இறந்துவிட்டதாக சொன்னார். ”ஆனால் அவளுடைய மருமகள் தினமும் கோயிலுக்கு வருகிறாள். அதிகாலையிலேயே கோவில் திறந்த கொஞ்ச நேரத்திலேயே வந்துவிடுவாள். முதலில் வணங்கிட்டு பின் தமிழிலும் இந்தியிலுமாக சிவபெருமானைத் திட்டி விட்டும் செல்வாள். இது அவளது தினசரி நடவடிக்கை.”
சிவனிடம் ”பாபா (தந்தையே) நான் உன் மீது எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறேன். என் குடும்பம் உன் மீது எவ்வளவு பற்று கொண்டது. என் மாமனார் உன்மேல் எவ்வளவு பிரியம் வைத்திருந்தார். ஆனாலும் உனக்கு இரக்கமில்லையே” என்று பேசுவாள். சில சமயம் மிகவும் சத்தம்போட்டு ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள். அர்ச்சகரும் மற்ற பக்தர்களும் தலையிடும் போது ”இது அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள்” என்று கேட்பாள்.
ஏன் அப்படி என்று நண்பரிடம் கேட்டேன். ”அவளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை” என்றார்.
ஒருவேளை அவள் சஞ்சுவின் மனைவியாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. ஆனால் அதுபற்றி நான் நண்பரிடம் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை.