கடையில் வாங்கிய பேனா நன்றாக எழுதுகிறதா என்று பார்க்க துண்டுக் காகிதம் வாங்கி ”கடவுள்” என்று எழுதினேன். பின்னர் பேனாவை சட்டைப் பையில் போட்டுக் கோண்டு அந்த துண்டு காகிதத்தை அருகே இருந்து குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு நடந்தேன். பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த போது தோன்றியது. சமீபகாலமாக அலுவலக நண்பர்களும் சரி வெளி நண்பர்களும் சரி எதற்கெடுத்தாலும் ”பிரபஞ்சம்” ”பிரபஞ்சம்” என்கிறார்கள் என்பது நினைவுக்கு வந்தது, நானும்தான்.
”பிரபஞ்சத்திற்கு நன்றி”
அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல் உடனே பேருந்து வந்தது. ஏறி உள்ளே சென்றபோது நான் விரும்புவது போலவே ஜன்னல் ஒரத்தில் இடம் கிடைத்தது. என் முகத்தின் புன்முறுவலை உணர்ந்தேன். நான்கு நிறுத்தங்கள் கடந்த பிறகு கைப்பேசி ஒலித்தது. தங்கை தான் கூப்பிட்டாள். அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் சற்று அச்சமாக இருந்தது. தயக்கத்துடன் அழைப்பை ஏற்றுப் பேசினேன். அவள் மகிழ்வுடன் பேசினாள். அம்மாவின் உடல்நிலை வியக்கத்தக்க வகையில் முன்னேறிவிட்டது. அவள் சின்னப் பெண்போல் ஆகிவிட்டாள். சுறுசுறுப்புடன் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கிறாள் என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள். பேசி செல்போனை பாக்கெட்டில் வைத்தபின் என் மனம் மகிழ்சியில் நிறைந்தது.
”பிரபஞ்சத்திற்கு நன்றி”
நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கியபின் பசித்தது. அருகே இருந்த உணவகத்தில் சாப்பிட்டேன். என்றுமில்லாத வகையில் அன்று உணவு அவ்வளவு ருசியாக இருந்தது. பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது கடை முதலாளியிடம் சொன்னேன் ”சாப்பாடு பிரமாதம்.”
”நன்றிங்க” என்றார்.
பணத்தை வாங்கிக்கொண்டார். பில்லை ஊசியில் குத்த மறந்து என் கையிலேயே தந்துவிட்டார். வெளியே வந்தபோது ஏனோ மீண்டும் பேனாவை எழுதிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பேனாவை எடுத்து கையில் இருந்த பில்லின் பின்புறம் எழுதினேன் ”இறைவன்.” பின்னர் அதை உணவகத்தின் வாசலிலிருந்த குப்பைக் கூடையில் போட்டுவிட்டு நடந்தேன்.
எப்படியாது கோவிந்தராஜிடம் பத்தாயிரம் ரூபாயாவது வாங்கிவிட வேண்டும். இருபதாயிரம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று சொன்னால்தான் பத்தாயிரமாவது தருவான். அப்போதுதான் சமாளிக்க முடியும். முன்புபோல் இப்போதெல்லாம் அவன் கடன் தருவதேயில்லை. மிகவும் தயங்குகிறான். இத்தனைக்கும் எப்போதும் வட்டியுடன் கடனை ஒழுங்காக திருப்பித் தருபவன் நான்.
கோவிந்தராஜின் வீட்டை நெருங்கியபோதே, நான்கு வீடுகள் முன்பே அவன் வீட்டிலிருந்து அவன் குரல் சத்தமாக கேட்டது. தன் மகளை அதட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வீட்டை நெருக்கும் போதே ”டிடிங்” கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் பார்த்தபோது என் வங்கிக் கணக்கில் அய்ம்பதாயிரம் கிரிடிட் ஆகியிருந்த செய்தி. நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். எப்போதோ போட்ட ஏதோ ஒரு இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ந்து பணம் வந்திருக்கிறது. G-Pay வில் வங்கி இருப்பைப் பார்த்து பணம் வந்திருப்பதை உறுதிசெய்து கொண்டேன். ஆனந்த அதிர்ச்சி.
”பிரபஞ்சத்திற்கு நன்றி”
வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்றபோது வாசலில் நின்று கொண்டிருந்த கோவிந்தராஜ் என்னைப் பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டான். ”வாடா” அழைப்பில் சுரத்தே இல்லை. கடன் வாங்கத்தான் வந்திருப்பான் என்று எண்ணுகிறான்.
நான் மகிழ்ச்சியுடன் ”ஒண்ணுமில்லடா சும்மாத்தான் வந்தேன். பார்க்கணும் போல தோணிச்சி” அவன் சந்தேக அகலாத கண்களுடன் பார்த்துவிட்ட ”உள்ள வா”
”என்ன விஷயம்?”
”ஒண்ணுமில்ல. அதான் சொன்னேனே சும்மாதான் வந்தேன். பாப்பா என்ன படிக்கிறா இப்ப? விச் ஸ்டாண்டர்ட் யு வார் ஸ்டடியிங் பாப்பா?”
”சிக்ஸ்த் அங்கிள்” என்றது குழந்தை.
”வெரிகுட் பாப்பா.” சரிடா நீ கத்தறது தெருமுனை வரைக்கும் கேக்குது. பாப்பாவ திட்டுனியா? ஏன் திட்டற வெரி பேட்” என்றேன்
குழந்தை நிமிர்ந்து என்னை நட்புடன் பார்த்தது. கோவிந்தராஜ் மெலிதாக புன்னகைத்தான்.
”இவளுக்கு பாடம் சொல்லிக்குடுத்துகிட்டு இருந்தேன். ஒழுங்கா படிக்க மாட்டீங்கறா” என்றான்.
”குடு நான் பாக்கறேன்” வந்ததற்காக கொஞ்ச நேரம் குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். பின்னர் விடை பெற்றேன். இருந்து சாப்பிட்டுப் போகச் சொன்னான். இன்னொரு நாள் வருவதாகச் சொன்னேன். புறப்படும் போது குழந்தை அழைத்தது
”அங்கிள்”
”என்ன பாப்பா?”
தவறாக எழுதியதால் கோவிந்தராஜ் கிழித்திருந்த அவளது நோட்டு புத்தகத்தின் தாளை நீட்டி ”இத டஸ்ட் பின்ல போடமுடியுமா? டஸ்ட் பின் வெளிய இருக்கு இப் யு டோன்ட் மைண்ட்…சாரி”
”அதுக்கென்ன பாப்பா. குடு. பை”
வெளியே வந்தபோது அந்த தாளை நான்காக மடித்து உள்ளங்கையில் வைத்து பேனா எடுத்து எழுதினேன். ”தேவன்” பிறகு அதை குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு நகர்ந்தேன்.
வீட்டிற்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இருட்டிவிட்டிருந்தது. பாதி நிலா கட்டிடங்களின் பின்னால் ஒளிந்திருந்தது. வானில் நட்சத்திரங்கள் ஒளியுடன் மின்னிக் கொண்டிருந்தன.
ஒரு காட்சி மனதில் தோன்றியது.
”கடவுள்”, ”இறைவன்”, ”தேவன்” என்று எழுதப்பட்ட காகிதங்கள் முன்னால் எழுந்து பறந்து மிதந்தன. பின்னர் தீப்பற்றி எரியத் தொடங்கின. அவை இருந்த குப்பைக் கூடைகளும் முன்னால் எழுந்தன – பறந்து தீப்பற்றிக் கொண்டன. காகிதங்களும் கூடைகளும் எரிந்து புகையாகி ஒளிப் புள்ளிகளாகி மறைந்தன.
விண்மீன்களுடன் பிரபஞ்சம் மட்டுமே இருந்தது.
”பிரபஞ்சத்திற்கு நன்றி”