”சமீபத்தில் நீங்கள் பார்த்த மலர் எது என்று சொல்ல முடியுமா?”
”ம்……ம்….சரக்கொன்றை மஞ்சள் நிறம்…கொத்தாக…….வேறொரு மரத்தில் செந்நிற பூக்கள்…. பெயர்…..?… தெரியவில்லை.”
”உண்மை. சமீபத்தில் நீங்கள் வாசனை நுகர்ந்த மலர்?”
”மல்லிகை….அதன் வாசம் எப்படி இருக்கும் என்றால்……..?”
”இல்லை. இது பொய் நீங்கள் சமீபத்தில் எந்த மலரின் மணத்தையும் நுகரவில்லை. சரி சமீபத்தில் நீங்கள் பட்டாம்பூச்சி எதுவும் பார்த்தீர்களா?”
”இல்லை.”
”கொசு? அல்லது ஈ?”
”ஒரு குண்டு பூச்சி”
”சரி காலை சூரிய உதயத்தைப் பார்த்தீர்களா சமீபத்தில்? அல்லது சூரிய அஸ்தமனக் காட்சியை?”
”ஆம்…மாலை ….நடக்கும்போது அழகான அஸ்தமனம்…கருமுகில் பொன் ….வெயில்”
”ஆம். முழுநிலவு பார்த்தீர்களா. சமீபத்தில்?
”ஆம். இங்கு…. எங்கோ …நடக்கும்போது …முழு நிலா….அது எவ்வளவு பெரியது !”
”ஆம். நிலவு அப்படி மிகப் பெரியதாகத் தான் இருக்கும்.”
”இப்போது என்ன செய்கிறீர்கள்?”
”இது ஒரு திமிரான இல்லையென்றால் குதர்க்கமான …. என்ன வேண்டுமானாலும்….எனக்கென்ன?”
”சரி. இப்போது எங்கே செல்கிறீர்கள்? எங்கு வேண்டுமானாலும் போவேன் என்று சொல்லாதீர்கள். உங்களைச் சுற்றிலும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
”ஆமாம். நான் அந்த தெருவிலிருந்து…. இந்த தெருவிற்கு வந்தேன்”
”ஏன் தெருவிலேயே நின்று கொண்டிருக்கிறீர்கள்? அருகிலிருப்பது உங்கள் வீடுதானே?”
”ஆமாம் என் வீடு போல…..ஆமாம் என் வீடுதான்”
”உங்கள் வீட்டு வாசலில் தான் இருக்கிறீர்கள். உள்ளே போக வேண்டியதுதானே. வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லை? அதற்காகத் தானே வந்தீர்கள்”
”ஆமாம். அதற்காக…..எனக்கு வீட்டிற்குப் போக விருப்பம். எனக்கு வீட்டிற்குப் போக விருப்பம் ஆனால்…. எனக்கு எங்கேயோ போக விருப்பம். எனக்கு எங்கே போக விருப்பம்? எனக்கு அழுகை வருகிறது எனக்கு உதவி செய்ய முடியுமா? எனக்கு எங்கே போக விருப்பம்? இல்லாவிட்டால் அவர்கள் கவலைப்படுவார்கள். எனக்கு அழுகை வருகிறது”
”உங்களுக்கு உதவி செய்கிறேன். அதற்காகத் தான் பேசுகிறேன். அவர்கள் கவலைப்படுவார்கள் என்று சொன்னீர்கள். யார் அவர்கள் என்று சொல்ல முடியுமா?”
”நான் எங்கே போக வேண்டும் ? அங்கே கவலைப் படுவார்கள். …. எங்கே கவலைப்படுகிறார்களோ அவர்களிடம் அங்கே போக வேண்டும். நான் அழுகிறேன்”
”சரி இந்த பக்கம் பாருங்கள். மேலே வேப்ப மரத்திற்கு மேலாக …நட்சத்திரங்கள் தெரிகின்றனவா?
”மரம்…! நட்சத்திரங்கள்….ஆம் தெரிவதுபோல….ஒளிப்புள்ளிகள் பெரியது சிறியது போல.”
”சரி. நீங்கள் என்னைப் பார்க்க முடிகிறாதா?”
”உங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஏன் முடியாமல் போகிறது? நீங்கள்… யார்.?”
”நீங்கள்தான் நான்”
”நீங்கள் நானா? நீங்கள் நான்…நான்? நீங்கள்…..? நீங்கள் ஏன் அங்கே?
”ஆமாம். நான் இங்குதான் நிற்கமுடியும். உங்களிடம் வர முடியாது. நீங்கள் வாசற்படியைக் கடந்து சென்றுவிட்டீர்கள்.”
”நான் அழுகிறேன்…..தவிப்பு …பத பதைப்பு…செல்ல வேண்டும்”
”அதனால்தான் உங்களிடம் கூறச் சொன்னது அது”
”எது?”
”கருணை”
”கருணையா? ஆம் நீங்கள் இறந்து 17 நாட்கள் ஆகிவிட்டன.”
”நான் இறந்து விட்டேனா ?”
”ஆமாம்”
”ஆனால் இருக்கிறேன் ??”
”உங்களிடம் நான் இல்லை”
”இப்போது என்ன….? என்ன செய்ய ? என்ன செய்ய ? என்ன செய்ய ?”
”அது பார்த்துக்கொள்ளும்”
”எது?… எது?… எது?”
”பெருங்கருணை”
”பெருங்கருணை பெருங்கருணை பெருங்கருணை”