மண் திட்டு

                                  

ஞ்சூர் – கோவை சாலையில் மண் திட்டுகள் அதிகரிப்பால் வாகனங்கள் சென்று வர இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மஞ்சூரிலிருந்து கெத்தை, முள்ளி, காரமடை வழியாக கோவைக்கு அரசு, தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன.

சமீபத்தில் பெய்த மழையால் கெத்தையிலிருந்து முள்ளி வரை சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலையில் விழுந்துள்ள மண்ணை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக அகற்றாததால் மண் திட்டுகள் அதிகரித்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தியில் செய்தியை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்த சசி பேப்பரிலிருந்து தலையை எட்டிப் பார்த்துக் கேட்டது.

“அம்மா மண் திட்டுன்னா என்ன?” யோசித்தேன். எட்டு வயது குழந்தைக்கு எப்படி சொன்னால் புரியும்.

“பாறையாம்மா?”

“இல்ல சசிக்குட்டி. மண் ஒரு இடத்துல குவியலா சேந்து இருந்தா மண் திட்டுன்னு பேரு”.

“காலைலேயே உங்க அக்கப் போரை ஆரம்பிச்சாச்சா?” கையில் காஃபி கோப்பையுடன் வந்த மகிழ் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“அக்கப்போரா?”

“ஹை பாப்பா.. அம்மாவப் பாத்தியா மூக்கு மேல கோவம்” .

“நீங்க மூக்கு மேல கண்ணாடி போட்டுருக்கீங்க அப்பா. அம்மா கோவத்தப் போட்டுருக்காங்க.”

சசி சிரித்துக் கொண்டே சொன்னது.

“அடியே இவளே. தமிழ் பண்டிட்டோட பேத்தி தமிழ்ல பேசவும், எழுதவும் தடுமாறக்கூடாதுன்னு டெய்லி பத்து நிமிஷம் தமிழ் பேப்பர்லேர்ந்து ந்யூஸ் படிக்கச் சொன்னா அப்பனுக்கும், பொண்ணுக்கும் நக்கலா இருக்குதா?” செல்லமாய் கை ஓங்கினேன். 

சசி அப்பாவின் முதுகு பின்னால் ஒளிந்து கொண்டது.

“இங்க பாரு மகிழ் உன் பொண்டாட்டிய கண்டிச்சு வை.”

குழந்தை குதித்துக் கொண்டே சொன்னது.

“ஏய்”….. குழந்தை ஓட மகிழ் துரத்த ஆரம்பித்தான்.

I have no wit, no words, no tears:

My heart within me like a stone 

Is numbed too much for hopes or fears;

Look right, look left, I dwell alone;

A lift mine eyes, but dimmed with grief 

No everlasting hills I see;

My life is like the falling leaf;

O Jesus, quicken me.

கவிதையை சொல்லும் போது உணர்வு மிகுதியில் என் குரல் விம்மியது.

விழிகள் தளும்ப மாணவிகள் உறைந்து போயிருந்தனர்.

சாந்தா அக்கா வந்து சொன்னார்கள்.

“பிரின்ஸ்பால் மேடம் கூப்பிடறாங்க”.

“என்ன விஷயம்?”

“தெரில.. கையோட அழச்சிட்டு வரச் சொன்னாங்க.”

“கிளாஸ் போய்ட்டு இருக்கே”.

“ஏதோ அர்ஜெண்டாம்”.

“கேர்ல்ஸ் கண்டின்யூ பண்ணுங்க வந்துடறேன்“.

பிரின்ஸ்பால் ரூம் கதவைத் திறந்ததும் மகிழின் முதுகு தான் தெரிந்தது.

மகிழ் அருகில் வந்து கை தொட்டார்.

“என்ன மகிழ்?”

“வா.. வீட்டுக்குப் போய் பேசலாம்”. அவன் முகத்தின் தீவிரம் என்னை குலைத்தது.

 “மகிழ். சொல்.. என்னாச்சு. பாப்பா?”

“இல்ல. பாப்பாக்கு ஒண்ணுமில்லே. ஊர்லேர்ந்து ஒரு செய்தி”.

“என்ன? என்ன?”

பிரின்ஸிபால் மேடம் அருகில் வந்து தோளில் கை வைத்து சொன்னார்.

“ரிலாக்ஸ் அஞ்சு. உடனே சாரோட கிளம்பு”. போகும் வழியில் சொன்னான்.

“உன் அம்மாக்கு உடம்பு சரில்ல..”

என் அம்மா. ஓ மை காட். “என்ன இப்ப திடீர்னு.”

“உடனே ஊருக்கு போகணும் அஞ்சு”.

“என்னாச்சு சொல்லுப்பா”.

“உன் அத்தை எனக்கு ஃபோன் பண்ணாங்க. அம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க.உடனே வாங்கண்ணு. வேற எதுவும் சொல்லலை”.

“தேவகி அத்தையா?”

தலையசைத்தான்.

தேவகி அத்தைதான் அப்பாவிடம் எனக்காக சண்டை போட்டாள்.

“அண்ணா.. என் வாழ்க்கையைத் தான் அழிச்சே.. இவளாவது மனசுக்குப் புடிச்சவனோட வாழட்டுமே“.

அப்பா ஒத்துக் கொள்ளவில்லை.

மகிழ் என்கிற மகிழ்திருமேனியின் ஜாதி சர்டிஃபிகேட்டும், என் ஜாதி சர்ட்டிஃபிகேட்டும் ஒத்துப் போகவில்லையாம்.

அப்பாவுக்கென்று ஊரில் ஒரு அந்தஸ்து இருக்கிறதாம். அப்பா எங்கள் மாவட்ட ஜாதிச்சங்கத் தலைவர்.

“தலைவர் பொண்ணே இப்டி பண்ணினா தொண்டர்கள் பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?” 

ஜாதித் திமிர் சாட்டை சொடுக்கியது.

ஆயிற்று . பத்து வருஷங்கள்.

மகிழும் நானும் பதிவு திருமணம் செய்து கொண்டு.

இந்த ஊரே எங்கள் சொந்த ஊர் ஆகியது. அதன் பின் எவரையும் பார்க்கவில்லை.

மகிழ் அடிக்கடி சொல்வான்.

“எனக்கும் உங்க அப்ப மேலக் கோவமாத்தான் வந்தது. ஆனா இப்ப ஒரு பெண் குழந்தைக்கு அப்பா ஆனதும் அவர் ஃபீல் புரியுது.”

“என்ன? நீயும் பொண்னொடோட அப்பனா பேச ஆரம்பிச்சுட்டியா?”

“இல்ல அஞ்சு.”

“அப்பாவ விடு. இந்த அம்மாக்கு என்னாச்சு. எவ்ளோ ரோஷம்? பேத்தி பொறந்தும் பாக்க வரல.”

“நாம போயிருக்கலாம்ல”.

என் அப்பாக்கு இருக்கற திமிர் எனக்கும் இருக்கும் தானே?

அதன் பின் மகிழ் எதுவும் பேசமாட்டான். 

கார் ஆற்றங்கரையில் போய்க்கொண்டிருந்தது.

நாவல் மரங்கள் சாலையில் உதிர்ந்து கிடந்தன.

நாவல் பழம் என்றால் அம்மாவுக்கு உயிர்.

கண்ணாடி முன் நாக்கை நீட்டி நீட்டி பார்த்துக் கொள்வார்.

“நல்ல ஊதா கலரா இருக்குல்லேடி”.

எனக்கு சிரிப்பாக வரும். சின்னப் புள்ளையாம்மா நீ?

“எவ்ளோ வயதானாலும் நமக்குள்ற இருக்குற குழந்தையை இழந்துடக் கூடாதடி.”

சின்னஞ் சிறுகிளியே, கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்.

அம்மா எம்.எல்.வசந்தகுமாரி போல் பாடுவாள்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்- என் நெஞ்சில் 

உதிரம் கொட்டுதடீ

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ?

அம்மா என்னை இறுக்கி கொள்வாள்.

தெரு முனையில் திரும்பும்போதே தெரிந்து விட்டது.

வீட்டு வாசலில் போட்ட ஷாமியானா காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

இறங்கும் போதே கால்கள் தடுமாறின.

மகிழின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.

கொட்டு சப்தம் நின்றது.

கண்ணாடிப்பெட்டிக்குள் அம்மா மெளனித்திருந்தாள்.

என்னுயிர் நின்னதன்றோ.. என்னுயிர் நின்னதன்றோ

கண்ணாடிப்பெட்டி மேல் சரிந்தேன்.

என் தோளை யாரோத் தொட்டார்கள். அப்பா.

யார் இது? யார் இது?

குட்டி.

இந்தக் குரல் கேட்டு பத்து வருஷம்.

கையைப் பற்றிக் கொண்டார். அம்மா போய்ட்டா.

கையை உதறினேன்.

உன்ன பாக்கமல அம்மா போய்ட்டா.

ஏன் குட்டி இத்தன வருஷமா எங்கள பாக்க வரவேயில்ல. அவ்ளோ ரோஷமாடா?

நிமிர்ந்தேன்.

என்ன கற்பாறைன்னு நெனச்சுட்டில்ல. நான் வெறும் மண் திட்டும்மா.

மண் திட்டு.

சசியின் குரல் காதில் கேட்டது. மண் திட்டுன்னா என்னமா?

நான் ரோஷக்காரன் தான். ரெண்டு பேரும் வந்து என் கையப் பிடிச்சு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டுருந்தா இந்த மண் திட்டு கரஞ்சுருக்குமே குட்டி.

அதிர்ந்தேன்.

கை நீட்டி அப்பாவின் கை பற்றினேன்.

என் விரலிடுக்கிலிருந்து வழிந்து பொல பொலவென அப்பா மண் திட்டு போல் சரிந்தார்.

                                                          *********

எழுத்தாளர் அறிமுகம்

நான் சந்தானகிருஷ்ணன். என் மகள்,மகன் பெயர்களை இணைத்து தேஜூ சிவன் என்ற புனைபெயரில் இச்சிறுகதையை                                       ( மண் திட்டு)எழுதியுள்ளேன்.

ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்று தஞ்சையில் வசிக்கிறேன். சொல்வனம், வாசகசாலை, பதாகை, மயிர், சிறுகதைகள்.காம் போன்ற மின்னிதழ்களில் சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

முகவரி:

  1. சந்தானகிருஷ்ணன்,

மானஸரோவர்,

17,அமிர்தம் நகர்,

காந்திபுரம்,

ரெட்டிபாளையம் ரோடு,

மருத்துவக்கல்லூரி

தஞ்சாவூர்.613 004.

Cell  : 9791404460

Mail  : [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *