அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தேமாவிற்கு சூசை டீச்சர் தன் மீது எப்போதும் வெறுப்பாக நடந்து கொள்வது வருத்தமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் தப்பு சொல்லி தேமாவை அடித்துக் கொண்டிருக்கிறார் சூசை டீச்சர்.
சரியாகத் தானே சொன்னேன்? நான் சொன்னதில் என்ன தப்பு?
பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது தன் நண்பன் இளவரசனிடம் விளக்கினான்.
‘ஒண்ணு அ அம்மா, ஆ ஆம்மா, இ இம்மா, உ உம்மா, ஊ ஊம்மான்னு சொல்லித் தரணும் இல்லன்னா அ அம்மா, ஆ ஆம்மா, இ இலை, ஈ ஈலை, உ உரல். ஊ ஊரல்ன்னு சொல்லித் தரணும் …புக்குல தப்பா போட்டுருக்கறத அப்படியே சொல்லிக் குடுத்தா சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க ?”
”புக்குல தப்பா போட்ருக்கா?” இளவரசன் வியந்தான்.
”பின்னே? மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருந்தா தப்பு தானே? மனுசனுக்கு ஒரு சொல்லுன்னு எங்கம்மா சொல்லுவாங்க” என்று தேமா சொன்னது நியாயமாகவே பட்டது இளவரசனுக்கு.
இளவரசனினன் வீட்டிற்கு அருகே இருவரும் வந்தபோது ”டேய் நீ எங்க வீட்டுக்கு வர்றியா?” என்று கேட்டான் தேமா.
”இப்பவா?” என்றான் இளவரசன்.
”சனிக்கிழம”
”சரிடா வர்றேன்”
இளவரசன் கையசைத்து விட்டு தன் வீடு நோக்கி திரும்பினான்.
சனிக்கிழமை பள்ளி விடுமுறை. தேமா இளவரசனை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல இளவரசனின் வீட்டிற்கே வந்தான். இளவரசனின் அம்மா கொடுத்த நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டு அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டபோது ”எங்கடா ஊர் சுத்தப் போறீங்க ? என்று இளவரசனைக் கேட்டார் அவன் அப்பா.
”விளையாடப் போறோம்பா” என்றான் இளவரசன்.
”சரி சீக்கிரமா வந்துடணும். கண்ட இடத்துல திரியக் கூடாது”
”செரிப்பா”
கால்வாயின் ஓரம் நீண்ட தூரம் நடந்தார்கள். பின் கால்வாயிலிருந்து விலகிச் சென்ற மண்பாதையில் நடந்தார்கள். வயலில் தவழ்ந்து வந்து உடலைத் தொட்ட குளிர் காற்று இருவரது இனிய உணர்வையும் அதிகரித்தது.
தேமா சிரித்துக் கொண்டே ”அதோ” என்று தன் வீட்டைக் காண்பித்தான்.
அது இளவரசனுடைய வீட்டைப் போன்ற வீடல்ல. புற்களால் கூரை அமைத்த மிகச் சிறிய மண் குடிசை.
”உள்ள வா” என்று இளவரசனைத் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் தேமா.
இளவரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
”இவ்ளோ சின்ன வீட்ட நான் பாத்ததே இல்ல” என்றான்.
தேமா ”இரு” என்று சொல்லி வீட்டின் சுவரோரம் அடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு டப்பாவாக திறந்து பார்த்தான். சிறிய அலுமினிய டப்பாவைத் திறந்து அதிலிருந்த சர்க்கரையை கொஞ்சம் கையில் எடுத்து இளவரசனுக்கு தந்தான். தனக்கும் கொஞ்சம் எடுத்துக் கொண்டான்.
பின்னர் இருவரும் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு வெளியே வந்தனர்.
”உன் அம்மா அப்பா எங்க?” என்று கேட்டான் இளவரசன்.
”ரெண்டு பேரும் வேலைக்கு போயிருக்காங்க” என்று பதில் சொன்னான் தேமா.
”நீ மத்தியானம் பசிச்சா எங்க சாப்பிடுவ?” என்று கேட்டான் இளவரசன்.
”நான் உங்க வீட்லயே நாலு இட்லி சாப்பிட்டுட்டேன் இல்ல..?”
”மத்தியானம் பசிச்சா?”
தேமாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சற்று யோசித்து விட்டு ”சக்கரை இருக்கே” என்றான்.
”சக்கரையா?”
”சக்கரை உடம்புக்கு நல்லது” என்றான் தேமா.
இருவரும் மீண்டும் நடந்தார்கள். சற்று தொலைவில் பெரிய கால்வாயிலிருந்து பிரிந்து வயலுக்கு சென்று கொண்டிருந்த வாய்க்கால் அருகே உடைகளைக் களைந்து ஒரு செடியின் கீழ் வைத்தார்கள். அதன் மீது ஒரு கருங்கல்லை எடுத்து வைத்தான் தேமா. இருவரும் நீரில் இறங்கி நீண்ட நேரம் குளித்தார்கள். பின் வெயிலில் நின்று உடம்பை காய வைத்துக் கொண்டார்கள்.
சட்டை டவுசரை மீண்டும் அணிந்து கொண்ட போது இளவரனுக்கு பசித்தது.
”தேமா எனக்கு பசிக்குது” என்றான் அவன்.
”சக்கர சாப்பிடலாமா?” என்று கேட்டான் தேமா.
”வேண்டாம். எங்க வீட்டுக்குப் போவோம். நீயும் வா” என்றான் இளவரசன்.
”எனக்கு பசிக்கல” என்றான் தேமா. ஆனால் உண்மையில் அவனுக்கு பசித்தது.
”இல்ல நீ வா” இளவரசன் தேமாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.
இளவரசனின் அம்மா நிறைய சோறு போட்டாள். மீன் குழம்பு மிகவும் ருசியாக இருந்தது.
——
இளவரசனின் அப்பாவிற்கு சென்னைக்கு வேலை மாற்றலாகி அவன் குடும்பத்துடன் சென்னை சென்று விட்டான்.
சில ஆண்டுகள் கழித்து அம்மா அப்பாவுடன் ஊரைப் பார்க்க வந்தபோது அம்மாவுடன் வெளியே சென்றான். வழியில் சூசை டீச்சரை எதிர்கொண்டார்கள்.
”யாரு இளவரசு தானே? இளவரசு அம்மா தானே?”
தன்னை சூசை டீச்சர் நினைவு வைத்திருந்தது இளவரசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”இப்ப என்ன வகுப்பு படிக்கறே?”
”பத்தாவது”
அம்மாவும் சூசை டீச்சரும் அன்புடன் பேசிக் கொண்டார்கள். சூசை டீச்சர் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதை சொன்னார்.
”இவன் கூடவே சுத்திட்டு திரிவானே தேமா…….”
சூசை டீச்சர் கூறியபோது இளவரசன் ஆர்வமடைந்தான்.
”அவன் பாம்பு கடிச்சி செத்துப் போயிட்டான். அட்டைக் கம்பெனில வேல பாத்த அவன் அப்பா நைட் ஷிப்ட் வேல பாக்கும் போது தவறுதலா கட்டிங் மிஷின்ல கை விட்டு அவரு கை துண்டாயிருச்சி. அவனோட அம்மா எங்கியோ போயிட்டா என்ன ஆச்சின்னு தெரியல”
சூசை டீச்சர் அடுத்தடுத்து மூன்று முறை பிரம்பால் தன்னை ஓங்கி அடித்தது போல இருந்தது இளவரசனுக்கு.
சூசை டீச்சரைப் பிரிந்து நடந்து கொண்டிருந்த போது இளவரசன் அடக்கமுடியாமல் அழுதான்.
அம்மா அவனை அணைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டு கண்ணீரை கையால் துடைத்தாள்.