புணர்ச்சி விதி

அந்தக் கடைசி சந்திப்பை என்னால் எளிதில் உதறிவிட முடியவில்லை. உடலின் உறுப்புக்களில் ஒன்றாய் தேங்கிவிட்ட  மச்சத்தை எளிதில் அழித்துவிட முடியுமா என்ன? எங்களின் எண்ணற்ற முத்தங்களின் வெம்மை இன்னும் என் ஜீவனுக்குள் உயிர்த்திருக்கிறது. அவளுடன் இருந்த நினைவுகள் தீண்டும்போதெல்லாம் நேசத்தீ பற்றிக்கொண்டது போலிருக்கிறது. அதிலும் ராணியை இறுதியாக சந்தித்தது நிரந்தரமாக பிரிவதற்காக என்று முடிவானபோது, பிரிவது உடல் ரீதியாகத்தான், உளரீதியாக அல்ல என்று இந்த ஒன்றரை ஆண்டுகளாக  உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவள் சொன்ன அந்தக் கடைசி வார்த்தைகள் வடுவாகக்கூட மாறாமல் குருதி ஈரம் கசியும் புண்ணாகவே நிலைத்து வலிக்கிறது இன்னும்.

என்ன செய்வது, நம் ஆசைகளை நிறைவேற்றும் வண்ணமா வாழ்க்கையின் நீரோட்டம் அமைகிறது? சில சமயம் எதிர்த்திசையை நோக்கி சீறிப்பாய்ந்து வரும் வெள்ளமாக அல்லவா மாறிவிடுகிறது!

“நான் மனதளவில் உன்னைக் கணவனாக ஏற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. எனக்கு இன்னொரு திருமணம் இல்லை. எனக்குள் கருத் தரிக்கவேண்டுமென்ற பிராப்தம் இருந்தால் அது உன்னோடுதான் என்று இந்தப் பிரியும் வேளையிலும் நான் சொல்லிக்கொள்கிறேன். அப்படி நடக்க வாய்ப்பே இல்லையென்றால் நான் நடைப்பிணமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்,” என்று சொல்லிவிட்டு அவள் திரும்பிப் பார்க்காமலே போய்விட்டாள்.

என்னிலிருந்து இன்னொரு உருவம் பிய்த்துக்கொண்டு போவதுபோல இருந்தது. குருதித்துளிகளின் பிசுபிசுப்பு என் உள்ளத்தில் எளிதில் காய்ந்துவிடப்போவதில்லை!  எத்தனையோ முறை அவள் கண்ணீர் என்னை நனைத்திருக்கிறது. ஆனால் இந்தப்பிரிதல் துளியின் வெப்பம் இப்போதும்கூட நெஞ்சின் ஆழத்தைத் தீய்க்கிறது. அவள் போன பிறகு நான் அத்துவானத்தில் விடப்பட்டு தீண்டத்தகாத ஒருவனாய் ஆகியிருந்தேன். எந்த இடரையும் எதிர்த்து அவளைக் கைப்பிடிப்பேன் என்ற என சத்திய வாக்கு தீயில் எரிந்து சாம்பலாகும் வெற்றுக் கடுதாசியாய் ஆகிப்போனது.  இந்தப் பிரிதலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. எங்கள் காதல் மணமேடையில் முடியும் என்றே நம்பிக்கொண்டிருந்த வேளையில்,

அம்மா திடீரென நோயில் விழுந்து மருத்துவர் தேதி குறிப்பிட்டு விட்டார். குடும்பத்தில் யாருமே இதனை எதிர்ப்பார்க்கவில்லை. அம்மா என்னிடம் சொல்லிச் சம்மதம் பெறவேண்டுமென்று சரியான தருணத்துக்காக  காத்திருந்திருக்கிறாள். அந்தத் தருணம் அவளின் மரணத் தருணமாக இருக்கவேண்டுமென்று விதி ரகசியமாய் எழுதி வைத்துவிட்டது போலும்.  உயிர்விடும் தருணத்தில் என்னை அழைத்து சத்தியம் வாங்கிக்கொண்டாள். நான் அணுவளவுகூட நிராகரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். என் மணவாழ்க்கை கனவு கலைந்தே போனது. தந்தையை இழந்த தாய்மாமன் மகள் மீனா எனக்கு  மனைவியானது அப்படித்தான்.  

புது மனைவி வந்தால் கொஞ்சகாலத்தில் அவளின் நினைவுகள் தானாய் மறந்துவிடும் என்று சொல்லப்பட்ட உபதேசமெல்லாம் அர்த்தமிழந்த வார்த்தைகள்.  பெற்றோல் ஊற்றிய செந்தீ மூண்டு எழுவதுபோல ராணி நினைவுகளின் குறுக்கே எழுந்துகொண்டே இருந்தாள். என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. மீனா என் முன்னால் நடமாடும்போதெல்லாம் ராணியாகவே தெரிந்தாள். அவள் பேசும்போதெல்லாம் ராணிதான் பேசுகிறாள். அது மட்டுமல்ல மீனா முழு நேரமும் ராணியின் உருவமாகத்தான் தெரிந்தாள். இரவு பொழுதுகள்கூட ராணிதான் என்னருகில் இருந்தாள். புணர்ச்சிகூட ராணியுடன்தான் நடக்கிறது என அத்தருணங்களில் வலிந்து கற்பனை செய்துகொள்வேன். அப்போதுதான் அந்த உறவில் எனக்கு ஈடுபாடு உண்டாகிறது. என்ன பைத்தியக்காரத்தனம் இது? மீனாவுக்குத் தெரிந்தால், ராணியைக் ‘கொன்றது’போல எந்தத் தவறும் செய்யாத மீனாவையும் ‘கொன்ற’தாக ஆகிவிடுமே!  

சுசிலா பாடிய எல்லாப் பிரிவுத்துயர் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் ராணி குரலெடுத்துப் பாடுவதுபோலவே இருக்கிறது. ’என்னை மறந்ததேன் தென்றலே’ பாடல் என்னைச் சிதைத்தேவிடும். 

நழுவிப்போன காதலின் அடி இதயக் காயம் மரத்துப்போகுமா என்ன?

இதோ மணமுடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. 

மீனா பேரங்காடியில் குழந்தைக்கு துணி வாங்கிக்கொண்டிருக்க, நான் மகளை வாசலுக்கருகில் ஏந்திக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். 

அத்தருணத்தில்கூட, அவளை மறக்க நான் முயற்சிக்கும் எதுவும் என்னை சமன் செய்யவில்லை. கால் பாதத்தில் குத்தி இறங்கிய சிறு முள்போல நெருடிக்கொண்டே இருந்தது. கூட்டத்தில் பார்க்க நேரும் பெரும்பாலான பெண்களுக்கு அவளை நினைவுபடுத்தும் ஏதோ ஒரு சாயல் இருப்பதாகவே பட்டது. சதா அவள் நினைவிலேயே முகிழ்ந்திருப்பதால் உண்டாகும் பிரம்மையாகவும் இருக்கலாம். அல்லது அவளைக் ஏமாற்றி கைவிட்டதால் மனசாட்சியின் தண்டனையாகக்கூட இருக்கலாம். 

அதோ ராணிபோல ஒருத்தி.. என்னைப் பார்த்துவிட்டிருக்கிறாள். 

என்னை நோக்கி வருகிறாள். 

ராணியேதான்!

கையில் இருந்த குழந்தையைப் பிரக்ஞையற்றுப்போய் ஏந்திக்கொண்டிருக்கிறேன். ஆத்மார்த்தமான காதலுக்கும் டெலிபதி உறவு சாத்தியமா என்ன?. பின்னர் எப்படி இந்த இடத்தில் இருவருமே ஒரே நேரத்தில் சந்தித்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு நிகழ முடியும்? முன்பு சிலகாலம் அந்நியோன்யாமாய் இருந்தவர்களுக்கு, தூர இருந்து பார்க்கும்போது, இயல்பாகவே ஒரு சின்ன உடல் அசைவோ நடையோ இது இன்னார்தான் என்று காட்டிக்கொடுக்கும் அடையாளமாகிவிடும் அல்லவா?. ராணிக்கு அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்! எங்கிருந்தோ அவளுக்குப் பொறி தட்டியிருக்கிறது. பார்த்துவிட்டாள்.

அவளைக் கண்ட மாத்திரைத் தருணத்தில் படபடத்த மனம் முன்னர் நடந்த எல்லாச் சந்திப்புக்களின் சித்திரங்களை வரையத் தொடங்கிவிட்ருந்தது. உடல் சுனைகளால் ஆனதுபோல  கொப்பளித்தெழுந்தும் கொந்தளித்தும் சுழற்சிகள் உண்டாக்கியும் தவித்தது.

பிரக்ஞை துண்டித்துக் கழண்டுபோய்விட்ட தருணம். அவள்தான் என்று உறுதியானதும்தான் சூப்பர் மார்க்கெட்டில் கசியும் குளிர்ச்சி போதவில்லை. உடலை வெம்மைத் தீண்டி வியர்வைத் துளிர்க்கத் தொடங்கியது.

அவள் நெருங்கிவரும் அந்தத் தருணம் என்னைப்பொருத்தவரை ஒரு பிரபஞ்ச நிகழ்வு போல இருந்தது. 

நெஞ்சுக்குள் இருட்சுருள் ஒன்று புகுந்து நிறைந்து மூச்சை அழுத்துவாதாய் உணர்ந்தேன்.

அவள் மிக அருகில் வந்துவிட்டிருந்தாள்.

“நல்லாருக்கீங்களா” என்ற அவளின் ஒற்றை வார்த்தை விசாரிப்பு “என்னை மறந்துட்டீங்களா?” என்பது போல அறைந்தது. அவள் விழிகளில் ஈரக் கசிவில் மின்னிக்கொண்டிருந்தது.

என்னுள்ளிருந்த வார்த்தைகள் உள்ளிருந்தபடியே ஸ்தம்பித்துப் போயிருந்தன.

நான் சம்பிரதாயமாகத் தலையாட்டினேன். 

அப்போது என் கையிலிருந்த என் ஐந்து மாத மகள், பிறரிடம் எளிதில் போகாதவள், ராணியை நோக்கி இரு கைகளையும் நீட்டியவாறு  “அம்மா” என்று அவளிடம் தாவினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *