அகிலாவை முறைப்படி பெண் பார்க்க செல்வதற்கு சில நாட்கள் முன்பே அவள் முதுகலை பட்டம் படிக்கும் எஸ். என். ஜி கல்லூரியில் சென்று பார்த்து விட்டேன். கேரள எல்லைக்கு அருகே மலையடிவாரத்தில் மிக அழகான சுற்றுப்புறத்துடன் பெரும் பரப்பில் அமைந்திருந்தது கல்லூரி. ஒரு கட்டிடத்திற்கும் மற்றொரு கட்டிடத்திற்கும் குறைந்த பட்சம் அரை கிலோ மீட்டராவது இருக்கும்.
அகிலா தன் வீட்டிலிருந்து கல்லூரிக்கு காரில் புறப்பட்ட உடன் என் பல்சரில் பின்னாலேயே விரட்டிச் சென்றேன். அவள் கல்லூரி வகுப்பு இடைவேளையில் கேன்டீன் வரும் வரை அருகே இருந்த மரத்தின் மீது ஏறி காத்து அமர்ந்திருந்தேன். அந்த மரம் தோதாக இருந்தது. முதுகு சாய்த்து கால் நீட்டி மென் காற்றில் ஆடிக் கொண்டே தூக்கமும் விழிப்புமாக சுகமாக இருந்தது. ஆயிரம் இலைகள் இடையே சிறு கீற்றுகளாக சிதறிப் பாயும் கதிரொளி. நீல வானம். ”ஏதோ பிணம் இந்த மரத்தில் கிடக்கிறது. ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள்” என்று தன் தோழி தோழன்களை அழைத்தது உச்சி கிளையிலிருந்த ஒரு பறவை. நான் சொக்கிய கண்களை அகலத் திறந்து பார்க்க, ”பிணமல்ல. பிணமல்ல. வராதீர்கள். வராதீர்கள்’ என்று மறு அறிவிப்பு செய்தது.
முன்னதாக செக்யூரிட்டியை சரிகட்டி கல்லூரியின் உள்ளே செல்வது தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண், அவளைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
”அதுக்கெல்லாம் இது இடம் கிடையாது. வீட்ல போயி பார்க்க வேண்டியது தானே” என்றார். நான் வற்புறுத்தி கேட்டபோது
”இப்படித்தான்யா. பொறுக்கிப் பசங்க வந்து ஏதாவது பண்ணிட்டு போயிருவாங்க. அப்பா அம்மாக்கு யாரு பதில் சொல்றது? காலேஜுக்கு கெட்ட பேரு. இப்படித்தான் ஒருத்தன் பிகேஜி காலேஜ்ல ஒரு புள்ளயோட ஓடிப் போயிட்டான்” என்றார்.
அப்படிப்பட்டவன் அல்ல நான் என்று அவரிடம் கெஞ்சி ஒரு வழியாக அனுமதி பெற்றேன்.
கேன்டினில் அகிலாவுடன் பேசியபோது அவளது தோழிகள் இருவர் உடன் இருந்தனர். அவர்கள் அவளை ”அகில்” என்று அழைத்தனர். அகில் மிக அழகாக இருந்தாள். தோழிகளை அருகே வைத்துக் கொண்டு என்ன பேசுவது?
புரிந்து கொண்டவளாக ஒருத்தி ”நீங்க தனியா பேசுங்க” என்று ”ஏ வாடி” என்று மற்றொருத்தியை அழைத்துக் கொண்டு தொலைதூர டேபிளுக்கு சென்று விட்டாள். அகில் மகிழ்ச்சியும் அச்சமும் கலந்த முகபாவத்தை வெளிப்படுத்தினாள்.
”நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நெனக்கல. இங்க வந்து நீங்க என்னிய பாத்தீங்கன்னு அப்பாவுக்கு தெரிஞ்சா நீங்க பொண்ணு பாக்கவே வர முடியாது. இந்த பையன் வேண்டாம்ன்னு சொல்லிருவாரு” என்றாள்.
”ஏன்? இது அவ்ளோ பெரிய தப்பா?”
அவள் பதில் சொல்லாமல் தன் பெரிய கண்களால் என்னைப் பார்த்து விட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தோம்.
பின் ”நீங்க போட்டோவுல இருக்கறத விட நேர்ல அழகா இருக்கீங்க” என்றாள்.
”நீயும் தான்” என்றேன்.
மீண்டும் மௌன இடைவெளி.
”மேக்ஸ் எம் எஸ்ஸி தான படிக்கற?”
”இல்ல. எம் எஸ்ஸி மேக்ஸ் படிக்கறேன்”
பின் கேன்டினில் ஆரஞ்சு பழச்சாறு வாங்கி குடித்தோம். அது கிட்டத்தட்ட குப்பையில் போட வேண்டிய பழங்களில் போடப்பட்டது என்பதையும் கல்லூரி நடத்துபவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் கேன்டீன் உணவுகள் கேவலமாகத் தான் இருக்க வேண்டும் என்ற நம் நாட்டு நியதியையும் நினைவு கூர்ந்தேன்.
அகிலாவின் செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு அவளிடமும் தோழிகளிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.
”பார்றீ. உங்காளு உன்னிய பாக்குறத்துக்காக மரத்து மேல உட்கார்ந்து காத்துக்கிட்டு இருந்துருக்குறாரு”
”திடீர்ன்னு முன்னால குதிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்?”
”பாஞ்சி பிராண்டி இருந்தா என்ன ஆயிருக்கும்?”
”ச்சீ சும்மா இருங்கடி”
நான் மரத்தின் மீது இருந்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது? இவர்கள் கேன்டீனுக்குள் சென்ற பிறகு தானே கீழே இறங்கினேன்?
பின்னாளிள் அன்பான அகிலாவின் கோபமான தருணங்களில் அவள் தன்னை ”குரங்கு கையில் சிக்கிய பூமாலை”யாகவும் ”பேய்க்கு வாக்கப்பட்டவ”ளாகவும் சொல்லிக் கொள்ள அந்த மர அமர்வு காரணமாக அமைந்தது.
அகிலா அவள் வீட்டில் அகிலம் என்று அழைக்கப்பட்டாள். திருமணப் பத்திரிக்கை அச்சடித்த போது ஆச்சரியமாக இருந்தது. மணப் பெண்ணின் முழுப் பெயர் போடப்பட்டது. நீண்ட பெயராக இருந்தது. திருமண அழைப்பிதழ், ரிஷப்ஷன் அழைப்பிதழ் இரண்டிலும் அவள் பெயரைச் சற்று குறைத்துக் கொள்ளலாமா என்று கேட்டபோது அவளது அப்பா ஒரு எழுத்து கூட குறையக் கூடாது என்று சொல்லி விட்டார்.
ஏற்கனவே தன் ஓரே அன்பு மகளை தானே முழுப் பெயர் சொல்லி கூப்பிடாமல் பாதிப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதால் அவர் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
”அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி பொன் வண்டார் எழில் குழலி” திருமண அழைப்பிதழில் அவள் பெயர் முழுமையாக இடம் பெற்றது. மணமகனாக என் பெயர் ”சிவசாமி” என்று பவ்யமாக இடம் பெற்றது.
அகிலா தொலைப்பேசியில் பேசும்போது சொன்னாள். எல்லா ஆவணங்களிலும் அவளுடைய பெயர் முழுமையாகவே இடம் பெற்றிருக்கிறது. அவளை முதன் முதலில் பள்ளிக்கூடம் சேர்க்க அவளது அப்பா அழைத்துச் சென்றபோது இதே போல உங்கள் மகளின் பெயரை கொஞ்சம் நீளம் குறைத்து பதிந்து கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார்கள். அவர் வெகுண்டெழுந்திருக்கிறார். டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறை போல உங்கள் பள்ளியை மூழ்கடித்து விடுவேன் என்று அவர் மிரட்ட அவர்கள் பயந்து விட்டார்கள் என்று சொன்னாள்.
வீட்டில் கூட மற்றவர்கள் தான் தன்னை அகிலம் என்று அழைப்பார்கள் அப்பா மட்டும் எப்போதும் ”அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி” என்றுதான் வாய் நிறைய அழைப்பார் என்றாள்.
”லூசுப் பய”
”என்ன சொன்னீங்க?”
”ஒண்ணுமில்ல. எவ்ளோ பாசமான அப்பா?”
”ஆமாங்க. அவருக்கு நாம கோயில் கட்டி கும்புடணும்”
”கும்புடுவோம்மா..கும்புடுவோம்”
திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் ஒவ்வொரு நிகழ்விலும் – நான் அவளது வீட்டிற்கு செல்லும் போதும் அவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதும், ஒவ்வொரு முறையும் அவர் அகிலாவை சத்தமாக ” அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி” என்று அழைக்கும் போது எனக்கு திடுக்கிட்டுப் போகும். எப்போதும் சன்னதம் எழ உடுக்கை அடிக்கும் பூசாரி போல அவரது அழைப்பு. அத்துடன் அழைத்துவிட்டு என்னை ஒரு பார்வை பார்ப்பார்.
”என் மகள் தெய்வம். நீயும் அவளை மனைவி என்று அலட்சியமாக கருதாமல் தெய்வமாக கருதடா மூடனே” என்ற கட்டளை அதில் இருக்கும்.
ஆரம்பத்தில் என்னை ஏதோ தவறாக எண்ணிக் கொண்டிருந்தவர் பின்னர் என் மீது மதிப்பும் அன்பும் கொண்டார். அவரது பல கோடி மதிப்புள்ள சில சொத்துக்களை என் பெயரில் மாற்றுவதாக அவர் சொன்ன போது வேண்டாம் அகிலாவின் பெயரில் மாற்றுங்கள் என்று நான் சொன்னது தான் காரணம்.
பெரிய நாயக்கன் பாளையம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அகிலா பத்திரங்களில் கையெழுத்து போட்ட போது கையெழுத்தைக் கூட சுருக்கமாக இல்லாமல் முழுப்பெயராகத் தான் போட்டாள்.
”உன்னோட கையெழுத்துக்கே ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு தனி பேப்பர் சேர்க்கணும்” என்றேன்.
”சும்மா இருங்க. எப்ப பாத்தாலும் ரொமான்ஸ் பண்ணிகிட்டு” என்றாள்.
நான் அதிர்ச்சியடைந்து பேசாமல் இருந்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு அவர் என்னை தொலைப்பேசியில் அழைத்தார்.
”மாப்பிள்ள. மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயிலுக்குப் போறேன். நீங்களும் வர்றீங்களா?”
”போலாம் மாமா”
”நான் தனியாத்தான் போறேன். நீங்க மட்டும் வர முடியுமா?”
”சரி மாமா”
பவானி ஆற்றில் நீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. வன பத்ரகாளி புன்முறுவல் முகத்துடன் கருணையும் இனிமையுமாக இருந்தாள். வணங்கி விட்டு மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போது அவர் தன் இயல்புக்கு மாறாக இருப்பது போல தோன்றியது.
நரைத்த பெரிய மீசை, அவ்வப்போது முறுக்கி விட்டுக் கொண்டு ”கொன்னுடுவேன்” என்று சொல்லும் பார்வை இதெல்லாம் இல்லாமல் ஒரு மென்மை, சிறுவனைப் போன்ற தன்மை அவரிடம் தென்பட்டது. அல்லது இது தான் அவரது நிஜ இயல்பு மற்றது அவர் போட்டுக் கொள்ளும் வேடம் என்று தோன்றியது.
உக்கிரமான தோற்றம் உருகும் அன்பு.
”மாப்பிள்ள”
”சிவசாமின்னே கூப்பிடுங்க மாமா”
சிரித்துக் கொண்டே தலையசைத்தார். அவர் கண்கள் கலங்கி இருந்தன.
” அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி” என்று சொல்லி என்னைப் பார்த்தார்.
”ஒரே குழந்த” என்றார்.
நான் அவரது கைகளை எனது கைகளால் பற்றி மெல்ல அழுத்தினேன்.