3.நிஜத்தின் நடுவில்

அதிகாலையில் எழுந்து தேநீர் தயாரித்து அதன் மணத்தை முகர்ந்தவாறே புத்தகம் படிப்பது எனது  வழக்கம்.  படிப்பதென்பதே உற்சாகம் கொள்ள வைக்கும். அதை எப்பொழுதும் உணர்ந்தே வந்திருக்கிறேன். அப்பாவுக்கு ஒரே ஒரு பழக்கம் மட்டுமே அது புத்தகம் படிப்பது. டிவி , பேப்பர் போன்றவைகளை தவிர்த்து விடுவார், அதிலும் செய்தி சேனலை பார்க்கவே மாட்டார். அதிகம் இரவல் வாங்கி படிப்பார். சமயங்களில் எழுதியும் பார்ப்பார். அது அப்படியே என்னிடமும் தொற்றிக் கொண்டது.

அப்பாவிடம் பேசும் போது தான் தெரிந்து கொண்டேன் அசாத்திய ஞாபக சக்தி, படித்த புத்தகங்களிருந்து மேற்கோள்கள் சம்பவங்கள், அழகியல்களை சொல்வார் . சொல்லும் போதே அதில் தானும் மூழ்கி என்னையும் மூழ்க வைத்து விடுவார்.

“ஜில்லு  கொஞ்சம் பேசலாமா ? படிக்கிறத ஒரு அஞ்சு நிமிசம் ஒத்தி போட முடியுமா?”

குரல் கேட்டு தலைநிமிர்ந்தேன் அம்மா.

“சொல்லும்மா என்ன செய்யனும்.” புத்தகத்தின் பக்கத்தை பார்த்து ஞாபகத்தில் வைத்துக் கொண்டேன்.

“நேத்து ராத்திரி நாம பேசுனத பத்தி நீ என்ன நெனக்கிற”.

“என்ன சொல்றதுன்னு தெரியல கொஞ்சம் டைம் குடு யோசிச்சி சொல்றேன்”.

”என்ன யோசிக்க போற ?” என்றாள் அம்மா 

“பெரிய வீடா கட்டனும்,  அதனால பட்ஜட்டும் அதிகமாகும். பாக்கலாம் ஏதாவது வழி தெரியுதான்னு” 

“ஏதாவது செய், ஆனா முக்கியமானத செஞ்சிரு” 

“சரி  படிக்கனும் அப்புறம் சொல்றேனே,  இப்போ விடும்மா”  புத்தகத்தில் ஆழ்ந்தேன்.

எனது பெயர் திலகவதி நண்பர்களுக்கு திலகா அம்மாவுக்கு ஜில்லு. அப்பாவுக்கு குட்டிம்மா.

இருபத்தியாறு வயதாகிறது. பி.டெக் ஆர்க் முடித்து விட்டு காம்பஸ் இண்டர்வியூல  செலக்ட் ஆகி பெங்களூரில் ஒரு கம்பெனியில் ஆர்க்கிடெக்காக  வேலை கிடைத்து மூன்றாண்டு முடிந்து நான்காவது ஆண்டாகிறது .

நண்பர்களின் துணையோடு ஊரை சுற்றி பார்ப்பதும், ஊரின் நடுவே இருக்கும் பூங்காக்கள் ஆச்சர்யப்படுத்தும் அதன் பச்சை பசேல் வண்ணம் கண்களுக்கு குளிர்ச்சியும் இனம்புரியாத உலகினை காட்டும் பனிபடர்ந்த காலை வேளைகளில் நடை பழகுவது மிகவும் பிடிக்கும். பனியின் துளிகள் சூரியன் வருகையில் உருகி சொட்டுவது கண்ணாடி உருகி வழிவது போல இருக்கும். சிறு குழந்தையின் உற்சாகம் போல இருகைகளால்  கன்னத்தை தாங்கிக் கொண்டு பார்க்கில்  ஓய்வுக்காகவும் அமைதியான சூழ்நிலையை அனுபவிக்கவும்  கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் சாய்மானங்களில் அமர்ந்திருப்பதும். நண்பர்கள் யாருமற்ற நேரங்களில் புத்தகம் படிப்பதும்  பிடித்தமானது. புதிய  புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் அப்பாவின் ஞாபகம் வரும். வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் புத்தகங்கள் நிறைய வாங்கி வந்து அப்பாவுக்கு தருவேன். அவரும் படித்து விட்டு அப்புத்தகத்தினால் கிடைத்தது என்ன, அதன் கதைச்சுருக்கம் மொழி நடை பற்றி போனிலோ நேரிலோ சொல்லி என்னையும் அப்புத்தகத்தை படிக்கத் தூண்டுவார். படித்து விட்டு அவர் கருத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகச் சரியாகவே கணித்திருப்பார். சற்றே ஆழ்ந்த சிந்தனையுள்ளவர். எனக்கும் முழு சுதந்திரத்தை வழங்கினார்.

அம்மாவின் நச்சரிப்பால் கல்யாணம் இப்போது வேண்டாம் வீடு கட்டி விட்டு  கல்யாணம் பண்ணிக்கிறேன்  எனச் சொல்லி,  இப்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறேன். அப்பாவுக்கு நான் செல்லம், நீ என்ன செய்யனுன்னு  நெனக்கிரியோ அத செஞ்சிக்கோ, பின்னாடி என்ன குறை சொல்லாத , எல்லாத்துக்கும் காலம் உண்டு என்பார். அதிர்ந்து பேசியது கூட இல்லை. ஒரு புன்னகை தலை வருடல் அவரின் மொத்த உணர்வும் என்னுள்ளே சுதந்திரத்தை உணர்த்தும்.

அப்பாவின் நீண்ட கால ஆசை சொந்த வீடு கட்டுவது. அவர் வருமானத்தில் என்னை காண்வெண்டில்  படிக்க வைத்ததே பெரிய சாதனை.  வருமானத்தில் சேர்த்து வைக்க முடியாமல் அம்மாவும் அப்பாவும் மிகச்சிக்கனமாக வாழ்ந்து கடனில்லாமல்  தமிழகத்திலயே மிகப்பெரிய  காலேஜில் சேர்த்து விட்டனர். நானும் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தேன். காலேஜில் ஸ்காலர்சிப் கூட கொடுத்தனர்.

கம்பெனியில் சில வருடங்களுக்கு நல்ல சம்பளமும் பதவி உயர்வும் நிச்சயமாக உண்டு என்பதால், லோன் வாங்கிடலாம் என பேசி முடித்து வீடு கட்டுவதற்கு முடிவு எடுத்து விட்டேன்.

குருவிக்கூடாக இருந்தாலும் தனியாக வேண்டுமென்பதும், நிரந்தரமான முகவரி தேவையின் பால் எழுந்ததிந்த வீடு கட்டும் ஆசை.

மூன்று வருடத்திற்கோ ஐந்து வருடத்திற்கோ ஒரு முறை வீடுமாறுவது வழக்கம் ஒத்திக்கோ , வாடகைக்கோ இருப்பது இதுவரை நடந்தது. அதை மாற்ற வேண்டுமென முனைந்து துணிந்து வீடு கட்ட எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன்.

அப்பாவின் ஆசைக்காக, அப்பாவின் அலைச்சல், உதவியோடு  எங்களூரிலேயே நாங்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி நகர எல்லைக்குள் இருந்த புதியதாக பிளாட்டுகள் போடப்பட்ட  இடத்தில் இரண்டாயிரத்தி நானுாறு சதுர அடிகள் 40 x 60 அளவுகள் கொண்ட ஒரு பிளாட் வாங்கி விட்டோம். மாலை நேரங்களில, வார விடுமுறைகளிலும் , அரசு விடுமுறை நாட்களிலும் தீவிரமாக புதிதாக கட்டப்பட்ட வீடுகளை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டு நல்ல முறையில் பிளான் போட்டேன்.

நல்ல காலை ஒளியில் அடர்த்தியான செம்மண் நிரவிய பிளாட்கள் தலையில்  பல இடங்களில்  வகிடெடுத்தது போல செம்மண்ணால்  ஆன முப்பதடி  சாலைகளால் பிரித்து காட்டப்பட்டிருந்து. எதை நட்டாலும் முளைத்து மரமாகும், பொன்னாக நெல் விளைந்த பூமியாக இருந்தது. ஊருக்காக உழைத்தது இனி ஓய்வெடுத்தால் போதும். தை மாதத்திய பனி சற்றே எலும்புகளை ஊடுருவி சிலிர்த்தாலும், தலையிலிறங்கிய பனி தலைவலியை தந்தது. வீட்டின் முகப்பிலும் மாடியிலும் போட்டிருந்த மின்விளக்குகள் தூரத்திலிருந்து பார்த்த போது பில்டர் போட்டு எடுத்த புகைப்படம் போல இருந்தது.

அதிகாலை நான்கு மணிக்கு ஆம்பித்த புதுமனை புகுவிழா கண் கூச வைக்கும் சூரிய ஒளியில் முடிந்தது. 

மதியத்திற்கு பிறகு சித்தி,  ஓரிரு சொந்தங்கள் தவிர்த்து யாரும் இல்லை. இரு நாட்களாக விடுப்பு எடுத்துக் கொண்டு இரவும் பகலும் உதவிய நண்பர்கள் கூட வேலைக்கு போக, சொல்லிக் கொண்டு புறபட்டு போய்விட்டார்கள்

அப்பா மிகவும் சோர்வாக ஹாலில் நாற்காலியில் அமர்ந்திருந்தார் .

மெல்ல அவரின் தோளைத் தட்டி தலையில் தலைவைத்து “நீங்கள் கேட்டது கிடைத்ததா” என கேட்டேன்.

கண்கள் கலங்கியிருந்தது. “நல்லதும்மா நா கேட்ட படி தனியா புத்தகம் படிக்க   போட்ட  ரூம் நல்லா வந்திருக்கு,   அங்க தாத்தாவோட போட்டோவ ஒங் கையால வைச்சி கும்பிடனும்னு நெனச்சேன், அது நிறைவேத்திட்ட”  என்று என் தோளோடு அனைத்துக் கொண்டார்.

ஹாலின் மூலையிலிருந்த ஜமக்காளத்தை மடித்த படி பார்த்துக் கொண்டிருந்த அம்மா அதை அப்படியே போட்டு விட்டு

“உங்க தாத்தா என்ன சொன்னாரு தெரியுமா ? அதனாலதான் சொந்த வீடு கட்டியே ஆவனும்னு  உன்ன தூண்டி கட்ட வச்சேன்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவை குழப்பத்தோடு பார்த்தேன்.அப்பா ஒன்றும் சொல்லாமல் எப்பொழுதும் தவழும் இளம் புன்முறுவலுடன் என்னை பார்த்தார்.

அழுத்தம் நீலகண்டனை போன்றவர் ஆலகாலத்தை தான் குடித்து உலகை காத்தது போல என்னை உருவாக்கியவர் .

“உனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாம தவிச்சப்ப தாத்தான் பணம் கொடுத்தாரு கொடுத்துட்டு உன்னால ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல எப்படி மிச்ச காலத்த ஓட்ட போறன்னு சொன்னதோடல்லாம .சும்மா இருக்கும் போதெல்லாம புக்க படிக்கிறியே இதால ஏதாவது பிரயோசனம்  இருக்கா உன்னால ஒரு செங்கல் கூட வாங்க முடியாதுன்னாரு” என்றாள் அம்மா. அப்பாவின் கனவு என நினைத்த எனக்கு இது கனவல்ல நிஜம் என்றுரைத்தது அப்பாவின் நீண்ட கேவல்  அழுகை அப்படியே அணைத்தேன். தீவிரம் கரைந்து கொண்டிருந்தது. நிஜத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தோம்.

இன்னொரு கையை நீட்டி  அம்மாவின் கையை பற்றிக் கோர்த்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *