”குழப்பாதீங்க கார்த்திக்….ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை இருக்கு. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விலை இருக்கு. உங்களோட சொற்களுக்கும் விலை இருக்கு”
”என்னோட சொற்களுக்கு விலையா? அப்படி எதுவும் கிடையாது”
”நான் சொல்றது உங்களுக்கு புரியல. சொற்களுக்கு விலை உண்டு. உங்க சொற்களுக்கு விலை இல்லைன்னு சொன்னீங்கன்னா நாம நேரத்த வீணடிச்சிட்டு இருக்கோம்ன்னு அர்த்தம். விலை சொல்ல முடியாத எதுவும் எனக்கு நேர வீணடிப்பு தான். கொஞ்சம் அவசர வேலை இருக்கு நாம அப்புறம் பேசுவோம். பை”
அவன் சென்று விட்டான். கார்த்திக்குக்கு குழப்பமாக இருந்தது.
அவன் பைத்தியக்காரனா அல்லது நானா? அவன் தன்னளவில் தெளிவாக இருக்கிறான்.
”எல்லாவற்றுக்கும் விலை” ”ஒவ்வொரு செயலுக்கும் விலை”
அதெப்படி? இப்போது நான் வீட்டிற்கு நடந்து செல்கிறேன். மூன்று கிலோ மீட்டர்கள். இந்த நடைக்கு விலை என்ன? …….உண்டு ….இந்த வெயிலில் நடந்து சென்ற பிறகு நான் களைப்படைவேன். பசி ஏற்படலாம். தாகம் ஏற்படலாம். எலுமிச்சை சாறு அருந்தலாம். கூடுதலாக சாப்பிடலாம். உணவுக்கு விலை உண்டு. பின் மின் விசிறி போட்டுக் கொள்வேன் அதை பயன்படுத்தும் நேரம் கூடலாம். மின் கட்டணம் உண்டு. அப்படி எதையும், எந்த ஒரு செயலையும் வேறு பலவற்றின் விலைகளை இணைத்து விலை நிர்ணயம் செய்துவிட முடியும். இதெல்லாம் பொருளாதார பாடத்தின் அடிப்படையிலேயே இருப்பது தான்.
அப்படியெனில் விலை சொல்ல முடியாத எதுவுமே இல்லையா?
ஆனால் அவன் சொல்வது என்ன? நேர வீணடிப்பு என்கிறான். அதாவது அவனது நேரத்தின் விலையாக அவனது லாபக் கணக்கில் வராத எதுவும் அவனுக்கு வீண்.
இது மட்டமான சிந்தனை இல்லையா?
இல்லையே அவன் வெறும் சுயநலவாதியும் அல்லவே? நிறைய பேருக்கு பொருளாதார ரீதியாக உதவியும் செய்கிறானே?
அது முதலீடு.
அப்படி ஒரேடியாக சொல்லிவிட முடியாது. எதுவும் திருப்பித் தர முடியாத…. பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத பலருக்கும் கொடுத்திருக்கிறானே?
ஆமாம். அது புண்ணியம். மாற்றுலகில் பயன் தரக் கூடிய முதலீடு. எனில் அந்த உலகம் அந்நிய முதலீடுகளை ஈர்க்க விரும்புகிறது.
கார்த்திக்குக்கு சிரிப்பு வந்தது. நான் எல்லாவற்றையும் சிறுமை செய்கிறேனா?
மதியம் உண்ட பிறகு உறக்கம் வந்தது. உறங்கி எழுந்து விட்டு சர்வீசுக்கு கொடுத்திருந்த பைக்கை எடுத்து வரச் செல்ல வேண்டும். நாளை வேலை நாள்.
”இழவெடுக்க போக வேண்டும்”
மீண்டும் சிரிப்பு வந்தது. முப்பத்தைந்து ஆண்டுகளாக அரசு அலுவலகத்தில் அன்றாட அழுத்தங்களுடன் குமாஸ்தா வேலை பார்த்தவர் அப்பா. அவர் கார்த்திக்குக்கு கையளித்துச் சென்ற மந்திரச் சொற்கள் இவை.
மாலை மாணிக்கம் ஆட்டோமொபைல்ஸ் சென்றபோது மெக்கானிக் மாணிக்கம் ”பத்து பன்னண்டு ஸ்பேனர எட்றா என் ஊவே….” என்று தன் உதவியாளனான இளைஞன் தாமஸிடம் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.
”வாங்க சார். ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க. டேய் சாருக்கு சேர் எடுத்துப் போடு”
”இன்னும் முடியல்லியா?”
”முடிஞ்சாச்சி சார். பத்தே நிமிஷம். சாருக்கு டீ வாங்கிட்டு வாடா”
”வேண்டாம்.”
”சும்மா குடிங்க சார்”
கார்த்திக் அமைதியாக அமர்ந்திருந்தான். தாமஸ் டீ கொண்டு வந்து தந்தான்.
”அண்ணா. நம்ம விநாயகம் இருக்கான்ல்ல அவன் என்ன பண்ணான் தெரியுமா? என்று மாணிக்கத்திடம் கேட்டான் தாமஸ்.
”என்ன பண்ணான்?”
”டெய்லி இந்த வழியா போவுமே ..அந்த அய்யிரு பொண்ணு …அத இழுத்துக்கிட்டு ஓடிட்டான்”
கார்த்திக் வெறுமனே பார்த்தான். மாணிக்கம் கார்த்திக்கை பார்த்து ”ஒண்ணுமில்ல சார். நாலு வீடு தள்ளி ஒரு அய்யரு வீடு இருக்கு. அந்த வீட்டுப் பொண்ணப் பத்தி தான் சொல்றான்”
”அவன் அத இழுத்துகிட்டு போனானோ அது அவன இழுத்துகிட்டு போச்சோ” என்று சொன்ன மாணிக்கம் பிறகு ”வேலையப் பார்றா.. சார் வெயிட் பண்றார்ல்ல” என்றார்.
தாமஸ் தன் வேலையை தொடர்ந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு வண்டியைத் துடைத்துக் கொண்டே மாணிக்கத்திடம் கேட்டான்,
”ஏன்ணா ஜாதிக்கு எவ்ளோ மைலேஜ் கிடைக்கும்?”
மாணிக்கம் சிரித்தார். பின் ”ஒரு அஞ்சு கிலோ மீட்டர் கிடைக்கும்” என்றார்.
”கௌரவத்துக்கு ?”
”ஒரு மூணு கிலோ மீட்டர் கிடைக்கும்”
”வறட்டு கௌரவத்துக்கு?”
”அதுக்குல்லாம் ரெண்டு கிலோ மீட்டர் கூட கிடைக்காதுடா என் ஊவே….”
”அப்ப லவ்வுக்கு?”
”நிஜமான லவ்வுன்னா முப்பது கிலோ மீட்டர் கிடைக்கும். டுபாகூர்ன்னா ஒரு கிலோ மீட்டர் கூட கிடைக்காது”
”அப்ப எதுக்குண்ணா அதிக மைலேஜ் கிடைக்கும்?”
”அன்புடா…ஏழ பணக்காரன் மதம் ஜாதி பாக்காத நட்பு ……அம்பது கிலோ மீட்டர் வர மைலேஜ் கிடைக்கும்”
”அப்ப அருள்? பெருங்கருணை?”
”என்னடா கேக்கற?….இலக்கியம் ஆன்மிகம்ன்னு படிக்கிறவன்ல்..?……அதெல்லாம் வானத்துல பறக்கிறவன் போட்ற பெட்ரோலு …மண்ணுல போயிட்டிருக்கிறவன் கிட்ட அதப்பத்தி கேக்கக் கூடாதுடா என் ஊவே….”
கார்த்திக்கிடம் மாணிக்கம் சொன்னார், ”நாங்க அப்பப்ப இப்படித்தான் பேசிக்குவோம் சார். வாழ்க்கைய ஓட்றத்துக்கு ஒவ்வொண்ணும் எவ்ளோ மைலேஜ் தரும்ன்னு கேக்கிறான்”
கார்த்திக்கிடம் மாணிக்கம் வண்டியை ஒப்படைத்தார். அதை செய்தேன் இதை மாற்றினேன் என்று பட்டியலை விவரித்தார். கார்த்திக் நாட்டம் இல்லாவிட்டாலும் தலையாட்டினான்.
புறப்பட்டபோது ”சார் நீங்க எழுத்தாளர் தானே?” தாமஸ் கேட்டான். கார்த்திக்குக்கு மெல்லிய வியப்பு.
”உங்க கதை படிச்சிருக்கேன் சார். நல்லா இருக்கு”
”ரொம்ப நன்றி” கார்த்திக்குக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”உங்களமாறி இருக்கறவங்க கிட்ட படிச்சது எல்லாம் என்கிட்ட வந்து சொல்லிகிட்டு இருப்பான் சார்” என்றார் மாணிக்கம். பின் ”இவனும் எழுதுவான் சார்” என்றார்.
”அப்படியா?”
தாமஸ் புன்னகைத்தான்.
”ஆமா சார். மெக்கானிக் எழுத்தாளனா இருக்கலாம். எழுத்தாளன் மெக்கானிக்கா இருக்கலாம். எதா இருந்தாலும் அததுக்குன்னு ஒரு இஞ்சின் ஆயில் இருக்கு. அத அப்பப்ப ஊத்தி வழ வழப்பா வெச்சிகிட்டா வாழ்க்கை அது பாட்டுக்க ஓடிக்கிட்டு இருக்கும். என்னங்கறீங்க? என்றார் மாணிக்கம்.
”ஆமா”
இரவு கார்த்திக் எழுத அமர்ந்தான். நான் என்ன செய்ய வேண்டும்? எழுத வேண்டும். ஒவ்வொன்றையும் புனைய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. ஒரு மைலேஜ் இருக்கிறது. ஒரு புனைவு மதிப்பு இருக்கிறது.