வளர்பிறை சிவந்து உச்சி நோக்கிச் செல்லும் இந்த இரவில், ஓய்ந்து விட தவிக்கிறது பெருநகரத்தின் துரிதச்சாலை. நடைமேடையில் – பக்கவாட்டு தலைமயிர் வியர்வையில் மின்ன ஓட்டமும் நடையுமாக உணவுக்கடை தேடி செல்லும் முருகவேல், வழக்கமாக நேரம் தவறும்போது உணவு உண்ணும் அரசு உணவகத்தில் உணவு இல்லையென்பதால், வேறுகடை தேடி வேகமெடுக்கிறான். தர்மபுரியைச் சேர்ந்த பெ.முருகவேல் அவர் அப்பா பெரியசாமிக்கு ஐந்தாவது பிள்ளை என்பதும், அவன் ஆணாக பிறந்ததால் மட்டுமே பெரியசாமி வளர்க்க ஒப்புக் கொண்டார் என்பதும் அவனைப் பற்றிய உபரித் தகவல். தான் பெண்ணாக பிறந்திருந்தால் மகப்பேறு மருத்துவர் தத்துக்கேட்ட போதே தந்திருப்பார் தன் அப்பா என்றும், அவன் இலகுவானச் சூழலில் இருந்திருப்பான் என்றும் தன் நண்பர்களிடம் முருகவேல் சொல்லிச் சிரிப்பான். பெரியசாமி இறந்து அரை மாமாங்கம் கடந்ததும், மூத்த அண்ணன் பழனியின் தயவில் படித்துக் கிழித்தக் கதையைப் பெரும்பாலும் மறைத்தும் சொல்வான். இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக நேரம் வகுப்பு எடுக்கும்படி ஆகிவிட்டதில் அவனுக்கு ஒன்றும் சங்கடமில்லை. இந்திய பொருளாதாரம்-தமிழக பொருளாதாரத்திற்கு இடையே உள்ள வேற்றுமை, அந்த வேற்றுமைகளை உறுதியாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும் தரவுகளை விரல் நுனியில் தேக்கிக்கொள்ளும் உத்திகளை மாணாக்கர்களுக்கு சொல்லித்தந்தும், வறுமையின் குறிக்காட்டிகள் காலம் தோறும் மாறி வந்திருப்பதை விளக்கியும், தி.ஜானகிராமனின் சிலிர்ப்பு கதை எவ்வாறு இப்போது திரிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியும் அவன் பேசியதால் நேரம் இவ்வளவு தப்பிவிட்டது. குறைந்த முக்கியதுவம் உள்ள இந்தப் பாடத்தைக் கண்ணில் ஆர்வமின்றி ஐம்பதிற்கும் மேற்பட்டத் தேர்வர்கள் கேட்கவேண்டியதாகிவிட்டதைப் பற்றி உள்ளபடியே அவனுக்கும் வருத்தமே. கால் சதவீத கேள்விகள் என்றால் குறைவு தானே. சில வருடங்களுக்கு முன் அவன் அங்கு உறக்கமும் மயக்கமுமாக குந்தி இருந்தவன் தானே. ஆனால் மாதமானால் தன் தேவையைப் பூர்த்திச் செய்ய உதவும் வகுப்பு எடுக்கும் பணிக்கு ஒரு நியாயம் செய்யவும், தன் ‘அறிவு’ எதிரே இருப்பவர்களைவிட மேம்பட்டது – என்பதை நிறுவவும் இதைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இடையிடையே ‘நாளை வசந்தம்’ வகையானச் சொல்லுறுதியை விதைத்தபடியே இருப்பதும் அவன் சுபாவமானபடியால் இவ்வளவு தாமதமாகிவிட்டது. ஆர்வமாகப் பேசும் மும்முரத்தில் வயிறு மந்தமாகி தளர்வு ஏற்படாதிருந்தால் இதை நான் சொல்லும்படியே ஆகியிருக்காது. நாளை வசந்தத்தை நம்பும் பல இளைஞர் கூட்டத்தில் இருப்பதால் மட்டுமே வறண்ட நிலத்தை விட்டு இந்த பெருநகரத்தில் வசிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தான் போல. இருப்பினும் அண்ணன் பழணியிடம் நாளை வசந்தம் வகை காரணங்களை எத்தனை வருடங்களுக்குச் சொல்ல முடியும். பழணியே பேரன் எடுக்கப்போகிறாரே. ஆனாலும் அடுத்த வருடம்…இந்நேரம்..தன் வாழ்வு…என்ற ரீதியில் நம்பிக்கைச் சொற்களை அவர் காதில் சேர்க்க வேறு முறைகளும் முருகவேலுக்கு இருந்தன.
கால் பின்னி நடை இடற உண்டு அன்றி வேறென்ன காரணம். நடைமேடை கடைக்குப் பஞ்சம் இருப்பதாக அவன் நடந்து வந்த பதிமூன்று நிமிடங்களில் தெரியவில்லை. ஆகவே பணமில்லை என்பதைப் போல்தான் தெரிகிறது. இப்படி அலைந்து பணம் எடுக்கும் இயந்திரத்தைத் தேடி செல்லும் படலம் முடிந்த பின்னர். குளிரூட்டி செயல்படாதப் படமெடுக்கும் இயந்திரமிருக்கும் அறைக்குச் சென்று, எண்களைத் தட்டி காத்துக்கொண்டிருந்தான். உள்ளே இயந்திரத்திற்கும் சுவருக்கும் இடையேச் செந்நிறநாய் ஒன்று கண் அயர்ந்து கிடந்தது. சுவரின் மேல் சிரித்தபடி பல்லி. உஷ்ணத்தை மேனி உணர்கிறது. தடதடக்கும் இயந்திரம் அவன் அஞ்சியக் கேள்வியைக்கேட்டது.
ஐநூறும் ஆயிரமுமாகத்தான் எடுக்க முடியும் என்று அது தெரிவித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதினைந்து நிமிட நடையில் முடிவேதும் எடுக்கவில்லை. அச்சமும், யூகமும் நிலையின்றி இருப்பதால் அதற்கு தீர்வு யோசிக்கவில்லை. மேலும் சில தூரம் நடக்க, விருப்பமும் திராணியும் இருந்தாலும் ஐநூறைக் கைத்தட்டியதை நியாயம் செய்துக்கொள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை. இந்த மாதம் முடிய சில தினங்களே மிச்சமிருக்கிறது. இத்தனை யோசிப்பு தேவைதானா என்பதிலும் தெளிவில்லை. மேலும் தா என்று கேட்டால் இல்லை என்று சொல்லும் நண்பர்கள் அறவே அவனுக்கில்லை.
வெளிவந்து நடைமேடையில் கால் வைத்ததும் கெண்டைச்சதை சுருண்டது. வைத்த அடியை எடுக்க நேரம் வேண்டும். முழு பலத்தையும் காட்டி நான்கு தப்படி எடுத்து வைத்து நிழற்குடை ஒன்றை அடைய வெகுநேரம் எடுத்தது போல் தோன்றுகிறது. இடைப்பட்ட இடத்தின் நடைமேடைக்கு பக்கவாட்டில் கட்டுமானப் பணி இரவிலும் நடந்தது.
குந்தி அண்ணாந்தப்போது தலைக்கு மேல் க்ரையின் அசைந்ததுத் தெரிந்தது. அமர்ந்ததன் தெண்டம் பின்புறம் வெண்ணிற உலோக உருளைகள் அழுத்தியது. இரத்த ஓட்டம் தடைபெறத் தொடங்கியது. சாய வாகில்லை. பயணியர் கூட்டம் – ஓர்மை இல்லாத இடைவெளியில் வாய்ப்பேசுகிறது, விரல் திரை தளுவுகிறது, கண் அலைகிறது. இது எதுவும் முருகவேலின் புலன்கள் உணரவில்லை. அடர்த்தி குறைந்த மக்கள் திரளோ, தலைக்கு மேலே அசையும் இயந்திரமோ வெறும் காட்சியாக ஓடியது. அணிந்திருக்கும் வெண்ணிற சட்டையில் அழுக்கு குந்தும் என்ற நினைப்பு எங்கு போனது? இளநீல கால் சாராயுள் வலி தந்தச் சதை இன்னும் அவ்வாறே நீடிக்கிறதா? தலைமயிரின் வேரிலிருந்து சுரக்கும் வியர்வையை யார் துடைப்பார்? இங்கிருந்து எழும்ப எத்தனை ஆள் உதவி அவனுக்குத் தேவை? என்பதில், எனக்குமே தெளிவில்லை.
நெரிசலில்லாமல் வந்து நிற்கும் பேருந்தைப் பயண்படுத்தியோர் குறைவு. எஞ்சியோர் அலட்டலின்றி காத்திருப்பதைக் கண்டபோது எதுவும் தோன்றவில்லை. அதிலிருந்து இறங்கிவரும் இந்த நேபாளக்குழந்தை தம்பதிகளை அவனுக்கு தெரியும். இந்த ஞாயிறின் ஓய்வு அவர்களுக்குக் கொண்டாட்ட மனநிலையைத் தந்திருப்பதாக அவர்களைப் பார்ப்போர் அனைவருக்கும் தெரிகிறது. அந்த சிறுமி தூயவெண்ணிற மேனியில் எடுப்பான உதட்டுச்சாயத்துடனும், நெற்றி வகுட்டில் செந்தூரமும் அடர்ந்துத் தெரிய, தன் கணவனுடன் முருகவேல் முன்பு வசித்து வந்த ஆண்கள் தங்குமிடத்தில் துப்புரவு பணி செய்துவந்தார்கள். ட்ரௌசர் அணிந்தச் சிறுவன் நீர் தொட்டு தளத்தை சுத்தம் செய்ய, அவள் பெருக்குவாள். சோடியாக குப்பை அள்வதும் உண்டு.மொழி தெரியாதோரிடம் பாதுகாப்புடன் பேசும் ஆர்வம் யாரைப் போலவும் அவனுக்கும் இருந்தது. ஆங்கிலத்தில், அவர்கள் எந்த மாநிலம்? என்று கேட்டதையும், இந்தி தெரியுமா? என்று அவர்கள் இந்தியில் பதில் சொன்னதும், தன் அறையின் சுவரில் ஒட்டியிருந்த இந்திய வரைப்படத்தைச் சுட்டி அதே கேள்வியைக்கேட்டதும், அவர்கள் நேபாளத்தைச் சுட்டியதும் நன்றாக நினைவிலிருக்கிறது. ஊரிலிருந்து வரும் பண்ட பலகாரங்கள் மீந்தால் அவர்களுக்கு வழங்குவான். வாங்கிக் கொண்டு சிரிக்கும் அவர்களை அவனுக்கு பிடித்திருந்தது. அது வாடிக்கையாக மாறுவது போல் தோன்றியதும், அவர்கள் மறுத்ததால் மூக்கறுப்பட்டான். திருத்துறைப்
இப்படிச் செல்லும் அவர்களை அணுகி ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறதா? என்று கேட்கலாமே என்று தோன்றுகிறது.அப்படித் தோன்றியதும் அருகே குந்தியிருக்கும் சில பெண்டீரிடமோ நிற்கும் இந்த ஆணிடமோ, சில்லறைக் கேட்காமல் இவ்வளவு நேரம் இருந்தோமே? என்று இயலாமை உணர்வு. அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் இரண்டு கடலை வண்டி கடந்து சென்றதைப் பயன்படுத்தி இருக்கலாமே என்று தோன்றுவதற்கு வெகுநேரம் ஆகவில்லை. அவன் பெயர் என்ன? பெயர் நினைவில் எழும் முன்னரே. அவர்கள் தூரம் கடந்துவிட்டனர். உடல் காட்சியைக் கண்டுக்கொண்டே இருந்தது. அருகே இருக்கும் பெரியவரைத் தான் அனுகியதும் அவர் நூறு ரூபாய் தாள்களைத் தந்ததும் கணப்பொழுதில் நடந்தது. ஐநூறு ரூபாய் சேமிக்கப்பட்ட திருப்தியை முருகவேல் அடைந்ததன் தர்க்கம் எனக்கு புரியவில்லை. எதிரே இருக்கும் பண இயந்திர அறையிலிருந்து நாய் வெளிவந்து இரை தேட ஓடியது.
எழுந்து நடைபோட்ட முருகவேல், வலப்பக்கம் திரும்பி கிழக்கு-மேற்காக விரையும் ஊர்திகளைக் குறுக்கே கடந்து, பாலத்து அடிக்குப் பக்கவாட்டிற்கு அப்பால் சென்றதும் வரிசைகட்டி நின்றக் கடைகளைக் கண்டான். மரங்கள் வேர் ஊன்றிய நடைமேடை. அதன் அடியில் சாவகாசமாகச் சென்றுவரும் பெருச்சாளிகள். அவை உயிர் வாழ ஆதார சஞ்ஜீவியாக மேடைமீதே உள்ள கடைகளும், பக்கவாட்டில் உள்ள நிரந்தர கடைகளும் என உயிர்ச் சங்கிலி பிணைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. துரித உணவு கடாயில் அலையடிப்பதைக் கடந்தும், ஊன் மனம் அதிக வெம்மையுடன் வெளிவருவதை உணர்ந்தும் சென்று கொண்டிருக்கிறான்.
இறைச்சி புகையின் நெடி நாசியை அடைந்தது. களியும் கறியும் அவன் சுவைத்து பல நாட்கள் ஆகிவிட்டது.முழு கோழிகளின் வரிசைகள் அங்கம் சிவந்து வெப்ப பெட்டிக்குள் சுழல்வதை கடந்துச் சென்றபின்,அவனுக்கு தேவையானது என்னவென்று தெரிகிறது.ரொட்டி? மைதா பரோட்டா? வித வித தோசைகள் ? – இட்லி.அதே தான். பழைய தபால் பெட்டி வெளியே தலைசாய்த்த வண்ணம் இருப்பதைப் போல,வெண்ணிற எவர்சில்வர் பெட்டியை மொத்த அவிக்கும் கருவி,எந்தக் கடையின் வாசலில் நிற்கிறது என்பதைத் தேடியபோது நடைபோட வேண்டும் என்று தெரிந்தது.விருப்பப்பட்டது தெரிந்த பின் உடல் வேகம் கண்டது போல் நடக்கிறான்.நடை தள்ளாடும் இந்த கடப்பாடு உடல்மேல் நிகழாதது போல இந்த விருப்பத்தின் மயக்கம் நினைக்க வைக்கிறது என்று எனக்கு தோன்றும்.தலை நிமிராது எதிர்வரும் கடைகளைக் கண்ணில் நிறுத்தாமல் நடைவைத்தால், பாத அடிகள் அலுந்தி துரிதமாக நடப்பதுபோல்பட்டது எனக்கு.
ஐந்து,பத்து கடைகள் தள்ளி வந்த போதும் அன்னாருக்கு இட்லி வாய்க்கப் போவதில்லை என்பதை புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.
’அனா டி அர்மாஸை அவித்து வைத்தது போல இட்லி’
அவனுள்ளே ஓடும் சொற்களை என்னாலேயே கேட்க முடிகிறது.இது யார்? எப்போது சொன்னது?சொல்லில் அறைப்படுகிறது நினைவு.மந்தமும் இப்போது மறத்துபோய்,நினைவு எழுந்து கண்ணை மறைக்கிறது.ஆகாயத்தில் மேக ஓட்டம் தடையின்றி நடக்கிறது.பேருந்துகள் இரண்டு வழியிலும் போகிறது வருகிறது.கடைகளில் வண்ண ஒளி மின்னி கண்ணை பறிக்கிறது.மஞ்சள் சிவப்பு ஒலிகள் வா என்று அழைக்கப்படுகிறது.அனைத்தும் பொருள்பட்ட பின்னர் இந்த வரி குணா சொன்னது என்பது நினைவில் வருகிறது.ராயபேட்டையில், பின்னிரவில் மாலில் சினிமா கண்டுவிட்டு நேரம் தாழ்த்தி வந்த நண்பர்கள் கூட்டம் அந்தக் கோடை மாதத்தின் வெம்மை ஏறிய நாளில் உண்ண உணவு தேடியபோது கிட்டிய ஒரு தள்ளுவண்டி கடையில் இட்லியை உண்டபோது குணா சொன்னது.அரைதலை லெனினும் இருந்தான்.அது குணா வேலையில் குந்தியபோது தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்ட இறுதி உணவு.
‘அனா டி அர்மாஸை அவித்து வைத்தார் போன்ற இட்லி’
குணா சொன்னபோது, சுஜி சங்கத்துடன் சிரித்தாள்தானே.ப்ரியாவும் சிவாவும் அதை ஒட்டி ஏதோ சொன்னார்கள் தானே.சுஜி வெகுவாக வேறேதோ பேச யத்தினித்ததையும் சிவா அதையும் அம்பலப்படுத்தியதையும் வெகு நேரம் நினைத்துக்கொண்டிருந்தான்.
இப்போது அங்கு சென்று இட்லி தேடமுடியாது.இப்போது அந்த இட்லிக்கு எங்கு போவது,முருகவேலின் மூளையில் உள்ள இட்லி அவ்வளவு பிரமாண்டமாக தெரிந்ததற்கு காரணம் அவனின் சமகால சூழல்தான் என்பதை யார் அவனுக்கு சொல்லி புரியவைக்க போகிறார்கள்.
சட்டென்று இடபுறம் திரும்பிய அவன் கண்ணில் பட்டது கேரள பாணி தரவாட்டு உணவகம்.மகிழுந்துகளின் சாரை வாயிலை மறைக்க, ஒதுங்கிச் சென்ற முருகவேலின் நடையில் இதுவரை இல்லாத அலட்சியத்தை உணரமுடிகிறது.அரைவிழி பார்வை திடீரென வந்து ஒட்டிக்கொண்டுள்ளதும் ஒரு விந்தைதான்.இழுத்துப்பிடித்திரு
குளிர்ந்த அறையில் நடுநாயகமாக இட்ட மேசையில் குந்திய முருகவேல், ரூபாய் ஐநூறுக்கும் உணவு வேண்டியதைக் கேட்டபோது நான் அங்கிருந்து மெல்ல மறைய தொடங்கினேன்.
பொதுவாக நான் கதை சொல்வதில்லை.என்னால் ஓரே கதையைதான் சொல்லமுடியும்.எல்லாக் காலத்திலும் அதை அன்றி எனக்கு வேறெதும் சொல்ல தெரியாது.உயிர்கள் இடத்தில் ஆற்றலாக எப்போதும் விழித்துக் கொள்ளும் எனக்கு பேசும் வாய்ப்பு குறைவுதான்.அவ்வாறு பேச, காரணம் காலம்தோறும் ஒன்றாக இருந்ததில்லை.கிட்டும் வாய்ப்பிலும் கதையைச் சொன்னதும் அபூர்வமே.இப்போது சொன்னது முருகவேலின் கதை மட்டும் தானா? இல்லை அல்லவா?இதற்கு சாட்சி,என்னை போலவே கல்லூரி காலமாக இங்கு இப்போது ஆகாச உச்சியில் நிலைகுத்தியிருக்கும் செவ்விளம்பிறை மட்டும்தான்.