நான் தினமும் ஏதாவது ஒரு வேலை வைத்துக் கொண்டு மாலையில் வெளியே செல்வது வழக்கம். சில சமயம் டேவிட்டைப் பார்ப்பேன். வியாழக்கிழமையும் ஞாயிற்று கிழமையும் தவறாது என்னை அழைத்து பேசுவான். முடிந்தால் நேரில் சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த விசயங்களை பற்றி பேசுவோம். முக்கியமாக படித்த புத்தகங்கள் பார்த்த திரைப்படங்கள் கேட்ட பாடல்கள் பற்றி விவாதிப்போம். பேச்சு அரசியலுக்கும் செல்லும்.
டேவிட் அரசு பள்ளி ஆசிரியர். அதிக வேலைப் பளு இருந்தாலும் அவ்வபோது இடையிடையே பல சேவைகளை சேவை செய்யும் குழுக்களில் இருந்து செய்வான். சில சமயங்களில் நானும் பணம் கொடுப்பதோடு சரி. எதையும் நேரிடையாக செய்வது இல்லை. இருந்தாலும் டேவிட் என்னை அழைப்பதற்கு தவறுவது இல்லை.
நான் தனியார் பள்ளியில் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறேன். என்னுடைய பொறுப்புகள் எவை என்று தெளிவாக வகுத்துக் கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேன். நகரத்திலேயே மிகவும் புகழ் வாய்ந்த பள்ளி. எங்கள் பள்ளியில் வரலாறு பிரிவில் ஒரு காலி பணியிடம் இருந்தது. அந்த இடத்திற்கு ஆள் கிடைக்க வில்லை. அதனால் வேறு பாடப் பிரிவு ஆசிரியர்களை கொண்டு சமாளித்துக் கொண்டு இருந்தோம்.
டேவிட்டை பார்த்த போது உங்கள் பள்ளியில் வரலாறு பாடத்திற்கு ஏதாவது ஆள் தேவையா என்றான். எங்கள் பள்ளிக்கு டேவிட் சில ஆசிரியர்களை அவ்வப்போது பரிந்துரை செய்வான். பெரும் பாலும் நல்ல கேன்டிடேட்டாக தான் இருப்பார்கள். பள்ளி ஆண்டு தொடக்கத்தில் தான் ஆசிரியர்களை வேலைக்கு எடுப்பது. இடையே பெரும்பாலும் எடுப்பது இல்லை. அதனால் டேவிட்டிடம் சொல்லவில்லை. டேவிட்டாக எப்போதும் கேட்க மாட்டான். நானாக கேட்டால் மட்டுமே பரிந்துரை செய்வான்.
“ஏன் கேட்குற”?.
“எங்கள் பள்ளியில் ஒரு இடம் இருக்கிறது. அதற்கான ஆள் சரியாக கிடைக்க வில்லை. உனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?” என்றேன்.
”அது பெரிய கதை” என்று டேவிட் ஒரு கதையைக் கூறினான்.
“போன வாரம் நாம் பேசி முடித்து விட்டு எப்போதும் செல்லும் வழி தான். சர்ச் ரோட்டில் நேராக சென்று டீச்சர் காலனி ரோட்டில் திரும்பி சென்று கொண்டு இருந்தேன். சாலையில் இரு பக்கமும் அடர்ந்த மரங்கள் இருக்கும். சொர்ப்ப தெருவிளக்குகள் தான் இருக்கும். எப்போதும் பெண்கள் வேலை முடிந்து இரு புறமும் நடந்தே வீடு திரும்புவார்கள். அன்று ஒரு பெண் எனக்கு முன்னால் சென்றவரிடம் “சார் டீச்சர் காலனிக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டாள். அவர் இல்லை என்று சொல்லி நகர்ந்தார். எல்லோரும் அதனை தாண்டி தான் செல்ல வேண்டும். அவரைப் பார்த்துக் கொண்டே வேகத்தை கொஞ்சம் குறைத்தேன். இருளில் ஒரு பெண். “சார் சார்” என்று கத்தினாள். என்னமோ ஏதோ என்று கொஞ்சம் பதட்டம் கொண்டேன். வண்டியை நிறுத்தி விட்டேன். என்ன வென்று விசாரித்தேன். ”டீச்சர் காலனி போறீங்களா?” என்று கேட்டுக் கொண்டே “போகிற வழியில் என்னை இறக்கி விடுங்கள்” என்றாள். யாருக்கும் இதுவரை மறுப்பு சொன்னது இல்லை.
”ஏறிக்கொள்” என்றேன்.
இரண்டு கால்களைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேன் என்று உட்கார்ந்தாள்.
போகும் வரை பேசு துணைக்கு ஆள் கிடைத்த சந்தோசத்தில் நகர்ந்தேன். “தினமும் எவ்வாறு செல்கிறாய்?” என்று கேட்டேன். “என்னுடன் வேலை பார்க்கும் பெண் என்னை இறக்கி விடுவாள். அவளுக்கு இன்று அவசர வேலை, அதான் பாதியில் இறக்கி விட்டு சென்றாள். நடந்து செல்வதற்கு பயம். லிப்ட் கேட்பதற்கும் பயம். நடக்க முடியவில்லை அதனால் கேட்டேன்”.
“சரி. என்ன படிச்சு இருக்க?”.
“அரசு கல்லூரியில் பி.ஏ. படித்து இருக்கிறேன்”.
“எங்கு வேலை?“.
“புதிய பேருந்துக்கு பக்கத்துல லட்சுமி டைல்ஸ் கடையில். வேறு வேலைக்கு போக வேண்டும்”.
“குரூப் தேர்வு எழுதவில்லையா?”.
“எழுதி இருக்கிறேன். அடுத்த தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன்”.
“எந்த ஊரு?”
“இங்க பக்கத்து கிராமம்”.
“மாமா வீட்டுல தங்கி வேலை பார்க்கிறேன்”.
“ஆசிரியர் வேலைக்கு தான் போக ஆசை ஆனால் படிக்க வில்லை”.
“அப்பா என்ன வேலை?”
“விவசாயம் தான்”
“கூடப் பிறந்தவர்கள்?”
“இரண்டு தம்பிகள்” சரியாக படிக்க வில்லை. கிடைத்த எல்லா வேலைகளுக்கும் செல்கிறார்கள்”.
“எங்க இறக்கி விடணும்?”
“கொஞ்ச தூரம் தான்”.
“அந்த சர்ச்சு கிட்ட இறக்கி விடுங்க”
“பாத்துப் போமா”
“ரொம்ப நன்றி சார்”
“பரவாயில்லை”.
“உன் பெயர் என்ன?“
சுகன்யா என்றாள் என்று டேவிட் கதையை முடித்தான்.
“என்ன டேவிட் நீ சொன்னா போதும்.அந்த பெண்ண பள்ளிக்கு வர சொல்லு” என்றேன்.
அதன் பிறகு வேறு வேலை காரணமாக டேவிட்டை சந்திக்க வில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு டேவிட்டை பார்த்தேன்.
“அந்த பொண்ணு வேலைக்கு வருதா” என்றான்.
“நல்ல கேன்டிடேட். நன்றாக பாடம் நடத்துகிறாள். உன்னால எங்களுக்கு ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் கிடைத்து இருக்கிறார்”.
Thanks David.