அருவருப்பு

சுந்தர் டாக்டரின் வீட்டிற்குள் சென்ற போது அவர் சோபாவில் தான் அமர்ந்திருந்தார்.  அவன் வந்ததை அவர் கவனிக்கவில்லை.  தன் கையில் வைத்திருந்த டைரியின் வரிகளைப் பார்த்து சிரித்துவிட்டு அதை அருகே வைத்தார்.  அவரது முகத்தில் புன்முறுவல் மறையாமல் இருந்தது.  சட்டென்று அவனைக் கவனித்தவராக, ”வா சுந்தர்” என்றார்.

”என்ன சார் சிரிப்பு? என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? அவன் கேட்டதற்கு அருகே இருந்த டைரியை சுட்டிக் காண்பித்தார்.  பிறகு அவரே அதைக் கையில் எடுத்து பிரித்து அவனிடம் தந்தார்.  அவன் தயங்க ”படிக்கலாம்.  என்னோடது தான்” என்றார்.

”மிஸ்டர் மகான், உங்கள் நிலைமையை புரிந்து கொள்கிறேன்.  உங்களிடம் இருப்பது இரண்டே வாய்ப்பு.  ஒன்று இப்போதே மகானான நீங்கள் எதிர்காலத்தில் தர்மத்தின் காவலர்களால் கொல்லப்பட்டு மாபெரும் மகானாக அதன் பிறகு தெய்வமாக நிலைபெறுவது.  இரண்டு ஒரு அதிசயம் போல நீங்கள் என் போன்றவர்களுடன் நின்று அதே தர்மத்தின் காவலர்களால் கொல்லப்பட்டு துரோகி என்றும் அந்நிய கைக்கூலி என்றும் நிலைபெறுவது.  உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை.  வாழ்த்துக்கள்”

”இந்த கடிதம் கடிதமாக டைரியில் எழுதப்பட்டது.  அவருக்கு அனுப்பப்பட்டது இல்லை”

சுந்தருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

டாக்டர் தன்னுள் ஆழந்தவராக சொன்னார் ”இது மகான்களின் தேசம்.  மகான்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.  ஆனால் மகான்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்கள் மகான்களுக்கு புரியவும் வைத்திருப்பார்கள்.  அதன்படி தான் அவர்கள் சொல்ல வேண்டும்.  ரொம்பவும் மாற்றிச் சொன்னால் கஷ்டம் தான்” சற்று இடைவெளி விட்டு, ”ஆனால் எங்களுக்கு ஒரு கூடுதல் சிறப்பு சலுகை உண்டு.”

சுந்தர் அவரை புரியாமல் பார்த்தான்.

”எங்களுக்கு மட்டுமே மனிதனாக இருந்து நேரடியாக அடுத்த படிநிலையாக தெய்வமாகும் சலுகை உண்டு.  மற்றவர்கள் மகானாகி நிலைபெற்று அடுத்தபடியாகத் தான் தெய்வமாக வேண்டும்.  நாங்கள் மகானாக வேண்டியதில்லை.  வெறும் மனிதனாக கொல்லப்பட்டு செத்தால் கூட தெய்வமாகி விட வாய்ப்பு இருக்கிறது….அல்லது பிசாசாக..”  அவர் சிரித்தார்.

”நம் விருப்பங்கள் ஒருவேளை வேறு உலகில் நிறைவேற்றப்பட்டிருக்கும்” மீண்டும் சிரித்தார்.

——

சுந்தர் அன்று இரவு முழுவதும் குழப்பத்தில் இருந்தான்.  டாக்டரிடம் பெற்று வந்த இரண்டு புத்தகங்களை படிக்க முயன்று தோற்றான்.  மனம் எதிலும் நிலைகொள்ள மறுத்தது.

பின்னிரவில் ஒரு கனவு.  பொன்மயமான மாலை வானின் முன் ஒளிமிக்க முகத்துடன், கண்ணில் பெரும் கருணையுடன், மாறா இளைமையையும் நட்பையும் தெரிவிக்கும் புன்னகையுடன் இயேசு பெருமான் தோன்றினார்.  அது ஒரு மலைப்பிரதேசம் அல்லது ஒரு பாறைகள் மிகுந்த மேட்டுநிலம்.  ஒரு பாறையில் அவர் அமர்ந்திருந்தார்.  அவரைச் சூழ்ந்திருந்த நிலத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

சுந்தரின் கண்களில் நீர் பெருகியது.  ”பெருமானே.  உத்தம மேய்ப்பரே.  என்னையும் உங்கள் ஆடாக சேர்த்துக் கொள்ளுங்கள்” அவன் உருக்கத்துடன் அவர் முன் நின்றபோது அருகே சற்று தொலைவில் இருந்த பாறையின் இடுக்கில் இருளில் யாரோ அசைவது போல தோன்றியது.

அங்கிருந்து ஒருவன் மெதுவாகப் பேசியது தன் உள்ளேயே இருந்து ஒலிப்பது போல சத்தமாக கேட்டது ”உத்தம மேய்ப்பரா? எங்கே அவர் மேய்க்கும் ஆடுகள் எதுவும் அறுத்துத் உண்ணப்படுவதில்லை என்று அவரை சொல்லச் சொல் பார்க்கலாம்”

யாரது? சாத்தானா? என்று அவன் பார்த்தபோது ஒரு மின்னல் வெட்டியது.  பின் முற்றாக இருண்டு விட்டது.

”சாத்தானே அப்பாலே போ” என்று அவர் சொல்வார் என்று ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு.  அப்படி எதுவும் நடக்கவில்லை.  பொன்மயமான வானுமில்லை.  பெருமானும் எங்கோ மறைந்து விட்டார்.  இருள்.  எதையும் பார்க்க முடியாத முற்றிருள்.  சாத்தானின் சிரிப்பு மட்டும் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அக்கனவில் இருந்து விழித்தபின் அதிகாலையிலேயே குளித்துவிட்டு கடவுளை வணங்கி விட்டு தன் காந்திய உடைகளுடன் வெளியே கிளம்பி விட்டான்.  தொண்டில் தான் குழப்பங்கள் அகலும்.  தெளிவு வரும்”

மதியம் திரும்பிய போது அப்பா கூடத்தில் தன் நண்பர் சோமநாதருடன் பேசிக் கொண்டிருந்தார்.

”மகாத்மாவோட சேவைக்கு போயிட்டு வர்றான்” என்றார் அப்பா.

”எவ்வளவு பெரிய புண்யம்? மத்த பசங்கள்ளாம் கெட்டு குட்டிச்சுவரா போயிண்டுருக்கா…மகாத்மா சேவையிலே புத்தி போறதுன்னா எவ்வளவு பெரிய பாக்யம்?” என்றார் சோமநாதர்.  அப்பாவில் முகத்தில் பெருமித புன்னகை.

”வாங்கோ சாப்பிடலாம்” என்றவாறே நாற்காலியில் இருந்து எழுந்தார்   சோமநாதரும் எழுந்து கொண்டார்.

கூடத்திற்கு வந்து சோமநாதரைப் பார்த்து புன்னகைத்தவாறே தன் அறைக்கு செல்வதற்காக கடந்த அவனிடம் அப்பா கேட்டார் ”குளிச்சியோன்னோ?”

”கைகால் அலம்பிண்டேன்.  காலைலயே குளிச்சிட்டேன்” என்றான்.

”இப்ப குளிச்சியா?”

”இப்ப எதுக்கு குளிக்கணும்?” என்று கேட்டுவிட்டு அவரைப் பார்த்தபோது சட்டென மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பை அவனுக்குள் ஏற்படுத்தியது அவரது முகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *