காலையில் புத்தகம் படிப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றதில், புத்தகத்தின் ஈர்ப்பில் நேரம் போனதே தெரியவில்லை. காலம் மெல்ல மெல்ல உறைந்து பரவி மொழுகினாற் போல வெட்ட வெளியில் நின்றதும், திடுக்கிட்டு எழுந்தான். மொட்டை மாடியிலிருந்து வீட்டுக்கு திரும்புவதில் ரகுபதிக்கு சற்று நேரமாகி விட்டது. காலையில் படிக்கும் போது பக்கத்தில் கைப்பேசியை வைத்துக் கொள்வதில்லை. விரைந்து வந்து குளித்து, சாப்பிட்டு வேலைக்கு போவதில் தாமதமாகிவிடும் என்பதால், வேகத்தை அதிகப்படுத்தி கீழே வந்தார். வீட்டு வாசலில் அவரது ஒன்றுவிட்ட தாய்மாமன் ரிட்டையர்டு ஏட்டு ரெத்தினம் நின்று கொண்டிருந்தார். முகத்திலும், உதட்டிலும் விஷப்புன்னகை பரவி நிரந்தரமாக உறைந்து இறுகியிருப்பது தெரிந்தது. வீட்டிற்குள் செல்லாமல் வெளியிலேயே நிற்பது, ரகுபதிக்கு ஏதோ தவறாகப் பட்டது. திடுக்கிட்ட மனதின் அதிர்வு உடல் முழுவதும் பரவி மூளையை வெகு தூரிதமாக வேலை செய்ய வைத்தது.
“வாங்க மாமா, உள்ளர போவாம வெளிய நிக்கிறீங்களே, வந்து ரெம்ப நேரம் ஆவுதா?”
“பத்து நிமிசத்துக்கு மேல ஆவது. கதவ தட்டினேன் காலிங் பெல்லும் அடிச்சேன் தொறக்கல அதான்”
“உங்க மவ குளிச்சிட்டிருந்திருக்கும்”
ரகுபதி கதவை திறக்க காலிங் பெல் சுவிட்சை அழுத்தினான். கதவு திறந்தது, எட்டிப்பார்த்தவள் ரகுபதியின் மனைவி சோணையம்மாள். இருவரையும் பார்த்தவள் புருவத்தை வியப்பால் உயர்த்தியவள் “வாங்கப்பா நீங்கதான் கதவ தட்டுனதா?” குளிச்சிட்டிருந்தேன் , உள்ளர வாங்க” என்றாள்.
“என்ன மாமா திடீர்னு?”
“சொல்ல வர்றது புரியது , கெடு முடிய நாள் இருக்கே அதுக்குள்ள வந்துட்டான்னு கேள்வி வருதே அதான”
அசட்டு புன்னகையுடன் தலையை சொறிந்தான் ரகுபதி.
“எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது , உன்னோட பங்காளில்லாம் தர்றேன்னுட்டு , ஏமாத்திட்டதா கேள்விப்பட்டேன். முடிவா கேட்டுட்டு போலான்னு நேரா வந்துட்டேன்.”
“இன்னும் ரெண்டு நாள் இருக்கு மாமா. அவங்க தர்லேன்னாலும் நா எப்படியாவது புரட்டி குடுத்துருவேன் , நம்பிக்கையிருக்குல்ல .”
“ஓம் மேல நம்பிக்கை இல்லாமையா ஒம்பேருக்கு இடத்த எழுதித்தர்றேன்னு சொன்னேன். ஊர்ல நம்புறது ஒன்ன மட்டும்தான். மறு பேச்சு பேசாம ஒத்துக்கிட்டேன்.”
“தெரியும் மாமா, கோயில் எடத்த வாங்க முண்டா தட்டுறவன் நல்லவனையிருந்தா விட்டு கொடுத்துருவேன் , ஊர்ல நடக்குற அத்தனை பிரச்சனைக்கும் காணமாவும், சபையில மொத மரியாதை வாங்க துடிக்கிறதும். ஐயோ அவன் வாங்கிட்டான்னா கோயில் பக்கம் நீங்களே போவ முடியாது. பாத்துக்கங்க , ஊர்ல தல நிமிந்து நடக்க முடியாது.”
“மாப்ள நீ நினைக்குறதும் சரி, அழகன் பணம் அதிகமா தர்றேன்னு சொன்னாலும் நா கேக்காம உனக்கு தான் மொதல்ல தருவேன்னு ஏன் சொன்னேன். அவனும் அவனோட அப்பனும் ஊரை விட்டு போயி இருபது வருவும் ஆச்சி. இப்ப அழகன் மட்டும் வந்திருக்கான் அதுக்காவ அவனுக்கு தர முடியுமா?” என்றார்
“அதுவும் தெரியும் மாமா , இப்ப பணம் இல்ல , அட்வான்சா குடுத்ததுக்கே நகைய வித்து தான் குடுத்தேன், உங்க மவ கூட எங்கிட்ட கோவிச்சிகிட்டா , ஊர்கத வேணாம்னு டவுன் பக்கம் வந்தும் ஏன் இப்படி பண்றீங்கன்னு ஒரு வாரம் பேசாம இருந்தா நீங்களே கேளுங்க. கோயில கட்டும் போதே சொன்னேன் யாரும் கேக்கல , அஞ்சி குடும்பமும் செலவு பண்ணி கட்டுன கோயில், ஊர்காரவுங்க கொடுத்த பணத்துல முன்னாடி பெரிய ஷெட்டும் போட்டோம் இப்ப இப்படி ஆவுது. நீங்க முன்னாடி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா ?”
“இருக்கு மாப்ள, நேரம் படுத்தியெடுக்குது பணம் தேவை வேற வழி இல்ல, வயல விக்கிறதுக்கு இந்த நாலு செண்ட வித்துட்டா தொல்லை இல்ல.”
“எனக்கும் எல்லா விஷயமும் தெரியும். நீங்க நடிக்கிறது, உங்கள தூண்டிவிடுறது யாருன்னும், இப்ப நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னும் சொல்ல முடியும் மாமா எங்கிட்ட உங்க பொய்வேசம் நடக்காது.”
“நீ எப்பவும் இப்படித்தான் ஊருக்குன்னு செஞ்சி வீணாப்போனவன். இந்த முறை அப்படி நடக்காது , பணம் தர முடியலன்னு சொன்னீன்னா , ஊர்பஞ்சாயத்த கூட்டி பேசி அவன்கிட்ட குத்துட்டு எல்லாம் ஒத்துமையா இருப்ப போம்”
“அது மட்டும் நடக்காது ஒத்துமைய கலைக்க அவன் என்ன வேணுமானாலும் செய்வான். உங்களையும் நம்ப முடியாது. அப்பவே , அந்த இடத்த ஊருக்குன்னு எழுதித்தரன்னு சொன்னீங்க , செஞ்சீங்களா ?”
“பழச கிளறாதீங்க மாப்ள, முடிவா ரெண்டு நாள்ல பணத்த தரப்பாருங்க இல்லேன்னா , ஊர் பஞ்சாயத்துக்கு போய்டும் , அப்றம் என்ன கொற சொல்லாதீங்க, நா கெளம்புறேன் இதுக்கு மேல பேச ஒன்னுமில்லே ” என்றார். வீட்டிலிருந்து ஏதோ ஒன்று விலகியது போல சட்டென்று அமைதியும் வெளிச்சமும் பரவியது.
இரண்டு நாட்கள் எப்படி போனது தெரியவில்லை ரகுபதிக்கு, பங்காளிகள் எழுவரும் சொல்லி வைத்தற் போல பணம் கொடுக்காமல் அலைய வைத்ததோடு, நம்பள மீறி என்ன நடந்துடும் பாத்துக்கலாம் என்றனர். நான்கு சித்தப்பாக்களில் ,மூன்றாமவர் அழகனோடு , ஒன்றாக சுற்றுவதாகவும் கேள்விப்பட்டான். மூன்றாவது நாள் வருகிற ஞாயிற்றுகிழமை முனியாண்டவர் கோயிலில் ஊர்பஞ்சாயத்து கூடும் என்ற அறிவிப்பு வந்து சேர்ந்தது . விரக்தியும் சோர்வும் ரகுபதியை அலைக்கழித்தது.
முனியாண்டவர் கோயிலை சுற்றி புதர்காடாக இருந்தது. எருக்கமும், கொடி வகைகளும் அதிகம் வளர்ந்து சுற்றி உள்ள எல்லா மரங்களிலும் படர்ந்து பச்சை குடைகள் போன்று காட்சியளித்தது. வேப்பமரமும் பனை மரமும் இணைந்து நெடுநெடுவென வளர்ந்து பிரம்மாண்டமாக பெரிதாக வளர்ந்திருந்தது. முனியாண்டவரின் மீது அடித்திருந்த வண்ணக்கலவைகள் உதிர்ந்து வெண்மை வண்ணம் பிரகாசமாக நான் உள்ளேன் என்றது. அருவாளிலும் , கண்களில் கொண்டு வந்திருந்த தீட்சண்யமும் அப்படியே மங்காமல் கூசியது. கண்களை நேராக பார்பதை தவிர்த்தான் ரகுபதி. நாமாவது இந்த இடத்தை சுத்தம் செய்திருக்கலாமே என்ற எண்ணத்தை தவிர்க்க நினைத்தான். தன்னிரக்கம் முனியாண்டவரின் கண்ணாக மாறியது. சற்று தள்ளி இன்னும் பெரிதாக வளர்ந்திருந்த அரசமரத்தடியில் கூட்டம் கூடியிருந்தது. ஊரில் முக்கிய தலக்கட்டுகள் தங்களுக்குள் விவாதித்து ஒரு முடிவுக்கு போவதற்கான குறிகள் தென்பட்டன. மொனனமாக கோயிலின் வெளி அலங்கார வளைவின் கீழே உட்கார்ந்தான். ஆஙகாங்கே ஊரில் உள்ளோரெல்லாம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தங்களை மறைத்து உற்சாகமாக காட்டிக் கொண்டனர்.
பஞ்சாயத்து தலைவர் (தற்போதைய பெரும் தலைவர்) எல்லோரையும் அழைத்து முடிவை அறிவித்தார்.
“எல்லோருக்கும் சொல்லிக்கிறது. என்னான்னா நாலு செண்ட் இடமும் அதுல கட்டியிருக்குற கோயிலையும், ரெத்தினம் அழகனுக்கு விக்கிறத முடிவு பண்ணி, அந்த இடத்துக் இனி சொந்தக்காரன் அழகன் மட்டுமே.”
“கோயில்ல முதல் தேங்கா ஒடக்கிறது நம்ம முனியன் குடும்பதாரும், பெறவு ரகுபதியும் பெறவுதான் அழகன் மொறையா செய்யனும் இதில் எதிர்ப்பு ஏதும் இருக்கா என்றார் , யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றதும். ரகுபதியை அழைத்து அவன் கொடுத்த முன்தொகையை கொடுத்தும், நாலு செண்ட் இடத்திற்கான தொகையை அழகனிடம் வாங்கி ரெத்தினத்திடம் கொடுத்தும்.”
“வர்ற திங்ககிழமை ரிஜிஸ்டர் ஆபிசுக்கு முக்கியமான ஆளுங்க வந்துருங்க சாட்சி கையெழுத்து போடனும்” என்றார்
குறுக்கிட்ட ரகுபதி “ஒரு சந்தேகம் கேக்கலாமா?”
“இப்ப சொன்னத பாதிரத்துல எழுதுவீங்களா ?” என்றான்.
“அதெப்படி இடத்ததான் வித்ததா எழுத முடியும் கோயில்னு காமிச்சா ரிஜிஸ்டர் பண்ண முடியாது. ”
“அப்படியா அப்ப என்னா செய்யுறது. ”
“பஞ்சாயத்துலதான் முடிவு பண்ணியாச்சே அழகன் பேச்சு மாற மாட்டான் நாங்க பாத்துக்குறோம்” என்றார். ஊர்காரர்களும், பெரிய சித்தப்பா முனியனும், பங்காளிகளும் ஒன்றும் பேசாமல் ரகுபதியை பார்த்தும் பார்க்காதது போல இருந்தனர். அழகன் மட்டும் தவித்தான் கூட்டம் சீக்கிரம் முடிந்து கலைத்தால் தான் நல்லது , ரகுபதியை போல கேள்வி கேட்க ஆரம்பித்தால் தொல்லை , யார் வாயையும் அடைக்க முடியாது.
ஒரு வழியாக கட்டம் கலைந்து திங்கட்கிழமை காலையில் முக்கியமானவர்களும் வந்திருந்து ரிஜிஸ்டர் செய்து கொடுத்தனர் அழகனுக்கு. ரகுபதி கையெழுத்திட வரவில்லை என்றதும் அழகனுக்கு சற்று கோபம் என்றாலும் பார்த்துக்கலாம் என்ற எண்ணம் வளர்ந்து தைரியத்தை குடுத்தது. ஆடி மாதம் நெருங்குவதால் பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் தடல்புடலாகவும் பெரிய அளவிலும் நடந்தன. முதல் நாள் வரை அமளிப்பட்டது . மதியத்திற்கு மேல் கேயிலை சுற்றி நான்கு செண்ட் இடத்திற்கும் வேலியமைக்க லாரிகளில் மூங்கில் படல்களும் , குத்து மரங்களும் ஆட்களும் இறங்கி வேலை பார்த்தனர் . ஊரில் ஒருவரை ஒரு முகம் பார்த்ததோடு சரி பேசிக் கொள்ளவில்லை . முனியன் மட்டும் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் சொன்னார் ,
“முனியா சும்மா இப்போதைக்காக போடுவாங்க நாளைக்கு தேங்கா ஒடைக்க வருவான்ல அப்ப கேட்டுக்குவோம்”
முனியனும் வேண்டா வெறுப்பாக தலையாட்டி வைத்தார்.
தேங்காய் ஒடைக்கவும் பூஜை செய்யவும் முனியன் குடும்பத்தாருடனும், ரகுபதி மனைவி, மகளுடன் பங்காளிகள் புடை சூழ கோவிலுக்கு வந்தனர். வேலியை சுற்றி கம்புடன் ஆட்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் நின்று. கோயிலுக்கு வெளியே தடுத்து நிறுத்தி திருப்பியனுப்ப முனைந்தனர் . காவல் துறையிலிருந்தும் நான்கு பேர் காவலாக நின்று அவர்களை வரவிடாமல் திரும்ப போகச் சொன்னார்கள். எதிர்க நினைத்து குரலை உயர்த்திய முனியனையும், பிள்ளைகளையும் , ரகுபதியையும் , கோயிலுக்கு உள்ளிருந்து வந்த அழகன் ,
“இனி இந்த இடத்துக்கும், கோயிலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்ல, உங்களால என்ன பண்ண முடியுமோ அத பண்ணுங்க” என்றான்
“ஊர்பஞ்சாயத்துல நீ என்னப்பா சொன்ன” என்றார் முனியன்.
“இடத்த வாங்கி உங்களுக்கு பக்கத்துல வந்து தொல்ல குடுக்கத்தான் அப்படி செஞ்சேன். கோர்ட்டுக்கு போங்க இனி பஞ்சாயத்தல்லாம் செல்லுபடியாவாது ,இனி கோயிலுக்குள்ள உங்க குடும்பத்துல யாரும் வரக்கூடாது. அழகனுக்கு பின்னால் ரெத்தினம் நின்றிருந்தார் கல்லாக முகத்தை வைத்துக் கொண்டு.”