”வயசான ஆள்ன்னு பாக்கறேன். இல்லன்னா வேற மாதிரி கேட்டுருவேன்” என்று அந்த இளைஞன் ஆத்திரமாக சொல்லி விட்டுச் சென்ற போது அவரைப் பார்க்க சற்று பாவமாக இருந்தது. எதற்காக அவரைத் திட்டினான் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பார்த்த பெரியவர் நட்புடன் புன்னகைத்தார்.
”காலம் மாறிப் போச்சு” என்றார். அது அவர் தனக்குத் தானேவும் எனக்குமாகவும் சொன்னது. பொதுவாக கடந்த காலம் நன்றாக இருந்தது இந்த காலம் நாசமாகப் போய்விட்டது என்ற கருத்தை தேவைக்கு மேலாக இந்த நாட்டில் திகட்ட திகட்ட அனுபவித்து விட்டேன். என்னை இந்த நாட்டை விட்டு ஓடிப் போகச் செய்த பல காரணங்களுள் அதுவும் ஒன்று. எனவே சற்று எச்சரிக்கை அடைந்தேன்.
”மல்லனூருக்கு இங்க தான பஸ் நிக்கும்? என்று கேட்டேன்.
”ஆமா. மல்லனூர் போறீங்களா? மாநாட்டுக்கா?” என்று வியப்புடன் கேட்டார்.
”மாநாடா?”
”ஆமா. மார்க்ஸிட் கவுண்டரிஸ்ட் கட்சிக் காரங்க மாநாடு நடக்குது”
”மார்க்ஸிஸ்ட் கவுண்டரிஸ்டா?”
தம்பி தமிழ் நாட்டுக்காரர் தான?
”ஆமா. ஆனா ரொம்ப காலம் வெளிநாட்டுல இருந்துட்டு வரேன். இங்க நடந்த எதையும் கவனிக்கல.
”அதான பார்த்தேன். இப்ப இங்க மார்க்ஸிய கவுண்டரிஸ்ட்ன்னு ஒரு கட்சி இருக்கு. அது மட்டுமில்ல மார்க்ஸிய வன்னியரிஸ்ட், மார்கஸ்சிய தேவரிஸ்ட், மார்க்ஸிய பிராமினிஸ்ட்டுன்னு ஏகப்பட்ட கட்சிகள் இருக்கு. பின் பெருமூச்சுடன்”அப்பல்லாம் மார்க்சிய தமிழ் தேசியம்ன்னு ஒன்னு மட்டும் தான் இருந்தது. மகிழ்ச்சியா ஒற்றுமையா மார்க்ஸிசிய சிந்தனைகளோட போயி இந்தி கூலிக்காரன அடிச்சி விரட்டிருக்கோம். நானே ஒரு பானிபூரிக்காரன் பல்ல உடைச்சிருக்கேன். இப்ப இவனுங்ககுள்ள அடிச்சிட்டு சாவரானுங்க. மார்க்சிய சிந்தனைகள சரியாக உள் வாங்கிக்க இவனுகளால முடியல” என்றார்.
எனக்கு குழப்பமாக இருந்தது. அதற்குள் நாங்கள் நின்றிருந்த அந்த மரத்தடிக்கு வந்த வேறு ஒரு இளைஞன் குறுக்கிட்டான்.
”என்ன உள் வாங்கிக்கல்ல? …உங்களாலதான் மார்க்சிய சிந்தனைகளோட அடுத்தகட்ட பாய்ச்சல்கள புரிஞ்சிக்க முடியல” என்றான்.
”என்ன? எனக்கு புரியலையா? தம்பி நீல்லாம் அப்ப பொறந்திருக்கக் கூட மாட்ட அப்பவே நாங்கல்லாம் தாஸ் கேப்பிடல கரைச்சி குடிச்சவங்க” பெரியவர் படபடத்தார். ”உனக்கு தாஸ் கேப்பிடல் என்னன்னு தெரியுமா?” என்று அவனிடம் கேட்டார்.
”அதெல்லாம் என்னமோ பழைய கத. அதெல்லாம் இப்ப வேலைக்கே ஆவாது”
”அடப்பாவி. அது என்னன்னே உனக்குத் தெரியல. நீ பேசற. என்றார். ”தம்பி உங்களுக்கு தெரியுமில்ல..? என்னிடம் கேட்டார். நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். தாஸ் கேப்பிடலா? ஒருவேளை கேரளக் காரர் யாராவது நடத்தும் அல்லது முன்பு நடத்திய நகை அடகு நிதி நிறுவனமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. ஏசுதாஸ், ஆன்றெனி தாஸ் அது மாதிரி ஏதாவது இருக்கலாம்”
நான் எதுவும் சொல்வதற்குள் அந்த இளைஞன் பேசத் துவங்கினான் ”சரி பெரியவரே. நீங்க சொல்லுங்க…இப்ப ஏன் மார்க்சிய கவுண்டரிஸ்ட்ன்னு இருக்கு..அதோட தேவை என்னன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம்”
பெரியவர் வாய் திறப்பதற்குள் அவனே தொடர்ந்தான். ”இப்ப நம்ம கவுண்டருங்ககுள்ள பெரிய பணக்கார முதலாளிங்க சில பேர் இருக்காங்க. மற்ற கவுண்டமாரெல்லாம் கஷ்ட்டபட்டு உழைக்கிறவங்க. மார்க்சிய கவுண்டரிசத்தோட நோக்கமே அந்த உழைக்கும் மக்களுக்கு அதே சாதியில் இருக்கிற பணங்காரங்க கிட்ட இருந்து நியாயம் வாங்கித் தறது தான். சாதி வர்க்க சமத்துவம் தான் நோக்கம்”
”சாதி சமத்துவமா? சாதிக்குள்ள பிரிவ உண்டாக்கி ஒத்துமய கெடுக்கறீங்க. ஏழை பணக்காரன்னு சண்டை மூட்டி விடறீங்க” என்று கூறிய பெரியவர் சட்டென்று தான் ஒரு பெரிய தர்க்க பிழை செய்து விட்டதாக உணர்ந்து பதறினார். அவர் உடல் நடுங்கியது.
இளைஞன் சத்தம் போட்டு சிரித்தான். ”ஹஹஹஹ..மார்சியம்ன்னாலே ஏழை பணக்காரன் வர்க்க போராட்டம்தான். இந்த அடிப்படையே உங்களுக்குத் தெரியல்ல….போங்க..போங்க…எதுக்கு வெட்டியா பேசிகிட்டு”
பெரியவர் எதுவும் சொல்லவில்லை. அவர் உடனே அங்கிருந்து போய் விட்டார். என்னைப் பார்த்து தலையசைத்துவிட்டு சென்றார்.
”சாருங்க…? அந்த இளைஞன் என்னிடம் கேட்டான்.
”வெளிநாட்ல இருந்து வர்றேன். அதாவது சுவீடன்ல இருந்து வர்றேன்”
”ஓ….மல்லனூர் சொந்த ஊருங்களா?”
”ஆமா” அவனிடம் பேச தயக்கமாக இருந்தது. இருந்தாலும் கேட்டு வைத்ததேன். ”நீ அரசியல்ல இருக்கீங்களா?”
”ஆமா. இப்ப பேசனமில்ல மார்க்சிய கவுண்டரிஸ்ட்ன்னு அந்த கட்சி தான் இங்க பேமஸ். ஆனா நான் அந்த கட்சி இல்ல. நான் மார்க்சிய நாயுடுவிஸ்ட் கட்சி”
”ஓ…இங்க எல்லா சாதிக்குமே அப்படி கட்சிகள் இருக்கா?”
”இல்ல…எந்த எந்த சாதிகள்ள பெரிய முதலாளிகள் இருக்காங்களோ அந்த சாதிகள்ள மார்க்சிஸிஸ்ட் சிந்தனையுள்ள கட்சிகள் தோன்றி இருக்கு. இன்னும் சில பாவப்பட்ட மக்கள்ள இருந்து பெரிய முதலாளிகள் யாருமே வரல. அங்கயும் பெரிய முதலாளிகள் தோன்றின பிறகு தான் அங்க இந்த சிந்தனையுள்ள கட்சிகள் தோன்ற முடியும். மரம் வளர்ந்தா தானே பழம் பறிக்க முடியும்?”
என்னமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த இளைஞனின் கைப்பேசி ஒலித்தது. அவன் பேசினான் ”என்ன சொல்லார் ரங்கநாதர்? ஒரு ரூபா குறையக் கூடாது. தலுபு தெறிச்சிந்துகு முடீது. செப்புறா”
அதற்குள் பேருந்து வந்து விட்டது. அவசரமாக ஏறிக் கொண்டேன். கூட்டமாக இருந்தது. பெரும்பாலும் கட்சிக் காரர்கள்
ஒருவன் என்னிடம் கேட்டான், ”அண்ணா நீங்க நம்ம கட்சிக்காரரா?”
”இல்லை” என்றேன்.
”அப்ப?”
”மார்க்சிஸ்ட் டூரிஸ்ட்” என்றேன்.
அவன் குழப்பமடைந்தான். நான் சொன்னதன் அர்த்தம் எனக்கும் தெரியவில்லை.

மெல்லியப் புன்னகையோடே வாசித்தேன். அர்த்தமுள்ள கதை!