ஒரு மனநல மருத்துவர் என்னைப் பரிசோதனை செய்து “நான் ஒரு மனநோயாளி” என்கிற முடிவிற்கு வருவதற்கான அத்தனைக் கோணல்களும் என்னிடம் இருக்கிறது.
நானே என்னை அவ்விதந்தான் எண்ணிக்கொள்கிறேன். எனக்கு நாற்பத்தெட்டு வயதாகிறது. மனைவியும் மக்களும் இருக்கிறார்கள். அவர்களும் என்னைக்கண்டால் பயந்து நடுங்கத் தான் செய்கிறார்கள்.
நான் வேலை பார்க்கும் அரசு அலுவலகத்தில் எனக்கு “கிராக்” என்று நாமகரணம். யாரும் என்னிடம் சிரித்துப் பேசுவதில்லை. யாருடனும் நானும் தோழமை கொள்வதில்லை. எனக்கு அலுவலக நண்பர்களைப் பிடிக்காமல் போக பல காரணங்கள். அவற்றில் பிரதானமான ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். போட்டித்தேர்வெழுதி பணிக்கு வந்த உடன் அவர்களின் குணங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன. லஞ்சத்திற்கு ஆலாப்பறக்க ஆரம்பிக்கிறார்கள். அதிகாரத்தோரனையை அவர்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை. உடன் வேலை பார்க்கும் பணியாளர்களின் மீது எப்போதும் போட்டியும் பொறாமையுந்தான். நான் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் எட்டு மணி நேரம் வேலை என்பதில் உறுதியாக இருப்பவன். அன்றாடம் நான் ஆறுமணிக்கு கிளம்பிச் செல்வதை என் உயர் அதிகாரிக்கு ஒரு மாற்றுத்திறனாளி கண்காணிப்பாளர் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார். அந்த அம்மையார் காலையில் பணிக்கு வருவதே பதினொரு மணிக்குத்தான். அதை அலுவலகத் தலைவரும் கண்டுகொள்ளமாட்டார். ஏனெனில் அந்த அம்மையார்தான் அலுவலகத் தலைவருக்கு ஊழியர்களைப் பற்றிய ஒவ்வொரு தகவலையும் சுடச்சுட பரிமாறக் கூடியவர் ஆயிற்றே. அதுமட்டுமின்றி அந்த அம்மையாருக்கு வீட்டு வேலைகள் எதுவும் இருக்காது போல. சமைக்கவும், துணி துவைப்பதற்கும் தனியாக வேலையாட்கள் உண்டு அவர் வீட்டில். எனவே அலுவலகத்தில் இருந்து அவர்தான் கடைசியாக கிளம்பிச் செல்வார். அதிகார மையங்களை துதிபாடி தங்களை சமர்த்தர்களாக காட்டிக்கொள்பவர்களும் எப்போதும் இருக்கிறார்கள். இதையெல்லாம் அறிந்த பிறகு எனக்கு என் அலுவலக நண்பர்கள் எவரையும் பிடிக்காமல் போய்விட்டது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறவர்களின் நட்பினை நான் வெறுக்க ஆரம்பித்தேன்.
பணிக்குச் சேர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் ஒரு நாள் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தேன்.
“தோழர்களே…நீங்கள் யாரும் இனி என்னைத் தோழர் என்று அழைக்க வேண்டாம். உங்களின் மீதும் உங்களை உறுப்பினர்களாகக்கொண்ட இந்தச் சங்கத்தின் மீதும் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இங்கே பொது நலன் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடியவர்கள் என்று ஒன்றிரண்டு தோழர்கள் மட்டுந்தான் இருக்கிறீர்கள். பிற அனைவரும் சாதி பார்த்து செயல்படக்கூடியவர்கள். அலுவலர் சங்கத்தை சாதிச்சங்கமாக கருதிச் சேர்ந்தவர்கள். தங்களின் சுயநலம் சார்ந்து சங்கத்தை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்த காத்திருப்பவர்கள். உங்களில் பெரும்பாலானவர்களுக்கு பொதுநலன் என்பதோ, தோழர்களின் நலன் என்பதோ துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு அதிகாரிகளை மிரட்டவும், உங்களின் தவறுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், தப்பித்துக்கொள்ளவும், சங்கப்பதவிகளை ஆயுதமாகப் பாவிக்கிறீர்கள். சக தோழர்களிடம் இடைத்தரகக் காரியங்கள் சாதித்து சுய லாபம் அடையவும் நீங்கள் இங்கே செயல்புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களின் மத்தியில் நின்று கொண்டு மனித குலத்திற்கு தொண்டு செய்யும் ஒரு நல்வாய்ப்பே அரசு ஊழியம். அரசு ஊழியர்களைப் பாதுகாப்பது ஒரு விதத்தில் மனித குலத்திற்கு சேவை செய்வது என்று பேசிக்கொண்டுருக்கும் நான் அந்நியன். பைத்தியக்காரன். இனி வரும் காலங்களில் உங்களோடு இணைந்து பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் பொறுப்பேற்றுள்ள இந்த மாவட்ட செயலாளர் என்கிற பதவியை இக்குழுவின் முன்னே ராஜினாமா செய்கிறேன். என்மீது மதிப்பு வைத்து என்னை இப்பதவிக்கு தேர்வு செய்த இருநுாற்றியெட்டு தோழர்களுக்கு என் நன்றியையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் என்னைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்“ என்று எச்சில் தெறிக்க பேசிவிட்டு அமர்ந்து கொண்டேன். உள்ளே தீராத நடுக்கம். நாவறட்சி வேறு. தோழர்கள் ஒரு கணம் மூச்சுவிட மறந்து அப்படியே திகைத்து அமர்ந்திருந்தனர். தோழர்களில் சாதிப்பெரும்பான்மை கொண்ட தோழர் ஒருவர் எழுந்து நின்று ”ஊழியர் நலனுக்கு எதிராக செயல்படும் கருங்காலியை நாம் மாவட்ட செயலாளர் என்று தேர்வு செய்துவிட்டோம். இவர் எதிர் சங்கத்தைச் சேர்ந்த விசுவாசி. நம் சங்கத்தினை பிளவு படுத்த அவர்களால் ஏவிவிடப்பட்ட அயோக்கியன். ஆகவே தோழர்களே இவரை இங்கேயே நையப் புடைப்போம், வாருங்கள்” என்று கத்தினார். சென்ற தேர்தலில் அவர் எனக்கு எதிராக போட்டியிட்டு பதினெட்டு வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருந்தார்.
நான் எவ்வளவு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வரமுடியுமோ அவ்வளவு விரைவாக பாய்ந்தோடி வெளியேறினேன். அந்நிகழ்விற்கு பிறகு அவர்கள் வெறி கொண்டு இடைவிடாமல் என்னைத் தாக்கத் தொடங்கினர். நலம்விரும்பி, சமூக ஆர்வலர், ஐந்து ரூபா இயக்கம், லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்கிற பெயர்களில் மாவட்ட அதிகாரிக்கு என்னைப் பற்றி எழுதிய மொட்டைக் கடிதங்களுக்கு (அவை முழுக்க அவதுாறுகள். ஒரு கடிதத்தில் நான் பத்துப் பெண்களோடு ஒரே நேரத்தில் உறவில் திளைப்பவன் என்று கண்டிருந்தது) ஆண்டு முழுக்க பதில்கள் அளிக்க வேண்டியவன் ஆனேன். ஒரு கண்டனமும், ஒரு ஊதிய உயர்வு நிறுத்தமும், எட்டு பணியிட மாறுதல்களும் பெற்றேன். நீரிழிவிற்கு நான் ஆட்பட இந்த முடிவுறாத சஞ்சலங்களும் ஒரு காரணம்.
என் பிரச்சினை என்ன வென்று எனக்கு விளங்கவில்லை. என்னை மட்டுமே மையமாகக் கொண்டு சிந்திக்கிறேன். இந்த உலகத்தைச் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறேன் என்று என்னை அந்தரங்கமாக அறிந்த நண்பர் ஒருவர் என்னிடம் வருத்தப்பட்டுக்கொண்டார். உண்மையில் நான் அப்படித்தான் இருக்கிறேனா?
என் கனவுகள் மிக எளியவை. நான் பிறந்து வளர்ந்து வாழ்வது என் விருப்பங்களை நிறைவேற்றவும்தான் இல்லையா?. என் தேர்வுகளை மறுக்கும் அதிகாரம் இங்கே யாருக்கும் அளிக்கப்பட வில்லை. இங்கிருக்கும் செல்வங்கள் அத்தனையிலும் மிக முக்கியமானது தனிமனித சுதந்திரம். அதைத்தான் நான் தக்க வைத்துக்கொள்ள பாடுபடுகிறேன். குடும்பம், உறவுகள், அலுவலகச் சூழல் என அனைத்தும் அதை தட்டிப்பரிப்பதில் குறியாக இருக்கின்றன. அப்புறம் மனிதர்கள் சக மனிதர்கள் மீது கொள்ளும் வன்னமும் வெறுப்பும். ஏன் இவர்களால் சக மனிதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சக மனித உறவு என்பதே சதா ஏமாற்றுதலும் வழிப்பறியும் மோசடியுமாக இருப்பது ஏன்? என் ஆதாரக் கேள்விகள் இவைதான் என்று நினைக்கிறேன்.
காலை நடை செல்வது என்னுடைய விருப்பமான செயல்களின் ஒன்று. மார்கழி மாதத்தின் ஒருநாள். சில்லென்ற குளிர் சூழ அதிகாலையில் எழுந்து சுப்ரபாதம் ஒலிக்கும் வீதியில் தெருவை நிறைத்து கிடக்கும் கோலங்களைப் பார்த்துக்கொண்டு நடந்து செல்வதில் தனியான மகிழ்ச்சி. அன்றும் அப்படித்தான் சென்று கொண்டிருந்தேன். என் வீடு இருப்பது புறநகர்ப் பகுதியில். வீட்டில் இருந்து நகரின் புதுப் பேருந்து நிலையம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு. என் இலக்கும் அதுதான். போகவும் திரும்பவும் என மொத்தம் நான்கு கிலோ மீட்டர்கள் தினமும் நடக்க முடியும்.
என் மனைவி அன்றொரு நாள் போன் செய்து “ஆப்பிள் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னாள். காலையில் கடைகள் திறந்திருக்க வாய்ப்பில்லை. புதுப்பேருந்து நிலையத்தின் உள்ளே பழக்கடைகள் உண்டு. ஆனால் பேருந்து நிலையத்தில் உள்ளேயும் அருகேயும் உள்ள எந்தக் கடையிலும் எந்த உணவுப்பொருளும் நன்றாக இருப்பதில்லை என்பதை பலநுாறு முறைகள் அனுபவப்பட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி எல்லா ஊர்களிலும் பயணிகளைத் திட்டமிட்டு ஏமாற்றுவதற்கென்று பெரும்கும்பல் பேருந்து நிலையங்களில்தான் இருக்கிறது.
பேருந்து நிலையத்தின் வாசலில் ஒரு பழக்கடை இருந்தது. ஆப்பிள், ஆரெஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை என வரிசையாக பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆப்பிள் மூன்று வரிசைகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நான் கடைக்காரரிடம் விலைகேட்டேன்.
“நுாறு, நுாற்றி எழுபது, முன்னுாறு” என்றார்.
முந்நுாறு மட்டுமே புதுப்பொலிவுடன் ஆசையைத் துாண்டும் வண்ணத்தில் இருந்தன. மற்ற இரண்டு ரகங்களிலும் கருப்பு புள்ளிகளும் அடிபட்டு கருத்த தடங்களும் காணப்பட்டன. எனவே முந்நுாறு ரூபாயில் ஒரு கிலோ வாங்கிக்கொண்டு வீடு தி ரும்பினேன்.
பாப்பாவிற்கு பள்ளிக்கு கொடுத்துவிடுவதற்காக என் மனைவி பழங்களைக் கழுவி நறுக்கினாள். உள்ளே பழங்கள் அடிபட்டு அடர் பிரவுன் கலருக்கு கனிந்திருந்தது. இரண்டாவது பழத்தை வெட்டிப்பார்த்த உடன்தான் அவள் என்னை திட்ட ஆரம்பித்தாள்.
“ஒரு பழத்தை கூரா வாங்கிட்டு வரத் துப்பிருக்கா…கண்ணை பொடதியிலயா வைச்சுருப்பீங்க…இதை எப்படி குழந்தைக்கு கொடுத்துவிட”
எனக்குச் சுரீர் என்று கோபம் ஏறியது. மறுபடியும் கடைக்குச் சென்று திரும்ப நேரம் இல்லை. பள்ளி வேன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும். என் மனைவிக்கு அன்று முழுக்க திட்டுக்கொண்டே இருக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது. வாழைப்பழக்காரன், காற்கறி விற்பவர், பலாப்பழங்களை சுளை எடுத்து நிறுத்துக்கொடுப்பவர் என்று ஒவ்வொருவர் மீதும் எனக்கு ஆவலாதிகள் ஏற்பட்டுருக்கின்றன. எத்தனைப் பேரிடந்தான் மனம் வருத்தம் கொண்டு விலக்கிக்கொண்டே போவது. பெரும்பாலானவர்களுக்கு வியாபாரம் என்பது ஒரு விதத்தில் வழிப்பறி போலாகிவிட்டது. அப்பாவியாக உள்ள என் முகத்தைப் பார்த்தவுடன் எப்படியோ கண்டு பிடித்துவிடுகிறார்கள். உடைந்தது, அழுகியது, புழு வைத்தது, விலை போகாமல் தேங்கிக்கிடந்தது என திட்டமிட்டு என்னிடம் தள்ளிவிடுகிறார்கள். என் உழைப்பில் பாதிப்பணம் இவர்கள் என்னிடம் இருந்து திட்டமிட்டு பறித்துவிடுகிறார்கள். சக மனிதனின் மீது நம்பிக்கை கொள்ள எனக்கு எந்த ஒரு காரணமும் இருக்கவில்லை. மனம் முழுக்க கசப்புடன்தான் நான் ஒவ்வொருவரையும் எதிர்கொள்கிறேன்.
அதனால்தான் நான் மனித முகங்களைக் காண விரும்புவதில்லை. எதிர்ப்படும் எவரின் முகத்தையும் நுட்பமாக தவிர்க்கும் பாவனைகளை கற்றுக்கொண்டுவிட்டேன். இந்த முகங்கள் ஒரு விதத்தில் எனக்கு அலுப்பானவை.
பெரும்பாலான முகங்கள் தந்திரமானவை. கண்கள் துருதுருவென்று சந்தேகம் ஒளிர அலைபாய்ந்து கொண்டிருக்கும். அவற்றில் பொறாமையும் எரிச்சலும் வெறுப்பும் விட்டு விட்டு வெளிப்பட்டு பார்ப்பவனை பதற்றத்திற்கு உள்ளாக்கும். கர்வம் கொப்பளிக்கும் முகங்களைக் காணும்போது தோன்றும் எரிச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. என்ன சாதித்து விட்டார்கள் என்று இத்தனை கர்வம் என்று கேட்கத் தோன்றும். சாதிப்பெருமையும், சொத்து சேர்த்துவிட்டேன் என்கிற ஆணவமும், மனிதர்களை குருடாக்கிவிடுகின்றன.
மிருகங்களைக் காணும்போது எனக்கு பயம் தோன்றுவதில்லை. நான் கண்டு களிக்க விரும்பும் முகங்கள் மிருகங்களுடையதாக இருக்கின்றன. கடந்து செல்லும்போது எதிரே நாயோ, பூனையோ வந்தால் அவற்றின் கண்களைக் காணாமல் நான் செல்வதில்லை. அவற்றில் உள்ள களங்கமின்மை என்னை எப்போதும் ஈர்க்கக்கூடியது.
பெண்களைப் பார்த்தால் என் உதடுகள் “முலைகளும் யோனிகளும் கொலைக் கருவிகள்” என்று உடனே முணுமுணுக்கும்.
நான் மனநோயாளி என்பதில் உங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.
