அம்மா, மகளின் அநீதியும்.  ஆண்டவனின் நீதியும்.

அவள் செல்லமாக வளர்ந்திருந்தாள்

வீட்டின் அரியவகை பூச்செடியாக

கொண்டாட.

 

அவள் பூத்தலில் மகிழ்ந்த தாய்

பக்கத்து தெருவில் பதியமிட்டாள்

தோன்றும்பொழுதெல்லாம்

தன் வீட்டு நீராலும் 

நிரப்பிப் பராமரிக்க.

 

வாய்த்த வருமானத்தையெல்லாம்

மகளுக்காக

மாற்றியபடியே

இருந்தத் தாய்

தனக்கொரு குடும்பம் இருப்பதையே 

மறந்து போனாள்.

 

யாவையும்

கொடுத்தடங்காத

தாய் மனம்

சிறுமியான

கடைசி மகளை

இருபது ஆண்டுகள் 

அங்கே

இருக்க வைத்தாள்.

வீட்டில் வேலையாட்கள்

வேண்டிய மட்டும் இருந்தபோதும்

வினோதமாக

வேலைக்காரியென

அனுப்பி.

 

பூத்திடாத செடிக்கு

புலம்பிய

தாயும் மகளும்

அறுபதுகளில்

ஐந்தாயிரத்திற்கு

மாங்கல்ய பூஜையை

ராமேஸ்வரத்தில் 

மறு கல்யாணம் போல நடத்தி

மகனைப் பெற்றார்கள்

பேரனென பெருமிதம் கொள்ள.

 

மகளுக்குப் பின்

மகனைப் பெற்றத் தாய்

மனம் மாறவே இல்லை

மகள் மீது கொண்ட 

மாறிடாதப் பாசத்தால்.

 

மருமகனொன்றும்

மகோன்னதமானவனல்ல

கோரக் கொடுமையாக

நிறைமாதக் கர்ப்பிணியை வாசலில் நிற்க வைத்து

சாட்டைக்குச்சியால் சகட்டுமேனிக்கு அடித்த 

சர்வ முட்டாள்தான்

சகலரும் நோகுமாறு.

 

வேதனை தாழாது

வீட்டிற்கு வந்த

நிறை மாதக் கற்பினியின்

கழுத்தில் கிடந்த

தங்கச்சங்கிலியை

பக்கத்து வீட்டிற்கு

பக்கத்து வீட்டின் பக்கம் இருந்தவன்தான்

பாதி இரவில்

தூங்கும்போது

அறுத்துச் சென்று

ஆராத

துயரத்தைக் கூட்டினான்

அப்பாவித் தந்தையே

அல்லலுருமாறு.

 

ஆதுரமாக அத்தனைச் சவரட்டனைகள் செய்தாலும்

செடியைப் பிடுங்கி

வீசிக் கொண்டே இருந்தான்

மானத்தை வாங்கும்

மருமகன் 

மறுபடியும் தங்கச்சங்கிளி போட்டாலும்

மாறாமல்.

 

செய்வதறியாது 

திகைத்தத் தாய்

அவர்கள் 

குடும்பச் செலவையும்

விவசாயச் செலவுகளையும்

வேண்டிய மட்டும்

இவளே செய்து தொலைத்தாள்

தன் தவறினை நொந்தபடி.

 

கள நெல்லில்

காலம் தள்ளிய

ஜமின்தார் வீட்டு செல்லியாயிதான்

காலம் கடந்து தரும்

கணிதப் பேச்சில்

மூட்டை

ஒன்றைத் தருகிறார்

ஒத்திக்கு நிலம்

வாங்கி

ஏழு மூட்டை

விளைந்த நெல்லில்

பத்து மூட்டையாக

பட்டறையாக கிடக்கும் நெல்லிலெடுத்து

பயமற்று குதிரில் போட்டு 

புதுக்கணக்கை

தன் வீட்டிற்குள்ளே

சேமிக்கிறாள்

தாய்க் கிழவி

செறுவாடாக

தன் மகளுக்கு.

 

இரு வீடு

ஒரு விவசாயமென

வேலைகள்

யாவும்

நடந்தேறினாலும்

ஒவ்வொரு முறையும் 

வெள்ளாமையின் பலன்கள்

மகள் வீட்டு

வருமானமென

மகளுக்கேப் போனது

தகப்பனுக்குத் தெரிந்தும்

தெரியாமலும்

வித விதமான வழிகளில்.

 

மும்மாரி மழை பெய்து

முப்போகம் விளைந்ததில்

மூத்த மகளை

தனக்கிணையான

வசதிகளில்

தன் ஊரிலையே

மாற்றியதைக் கண்டு

அப்பாவி தந்தை

அச்சம் கொண்டார்

அவருக்கொரு

இளவரசன் இருப்பதை நினைத்து.

 

துணைக்குப் போன

மகளுக்கு 

துணையமைத்த

குடும்பத்தின் கதையை

இணைக்கதையாக

இன்னொரு முறைதான்

சொல்லவேண்டும் 

எஞ்சிய வருமானங்கள்

கபளீகரமானதற்கு.

 

கால ஓட்டத்தில் 

கணக்கற்ற சம்பவங்கள்

இருந்தாலும்

மூப்பெய்தி

முடியாமல் இறந்த

தந்தையின்

ஈமைக்கிரியை

நாளில்

மூத்த மகள் கேட்டாள்

‘அறுபது வயதில் ஆம்பிளைப் பிள்ளை எதுக்குடிப் பெத்த’என்று

அத்தனை பேர் முன்பும்

அவமானங்கள் சூழ.

 

தாளி அறுத்தத் துயரில்

தாய் இருக்க

‘கோடியெடுத்து உனக்குப்போடத்தான்

கோயில் கோயிலாக ஏறிப்பெத்தா’ என்றாள்

தம்பி மகளான

மருமகள்

தன் மகளுக்கு

சோறூட்டியபடியே 

கண்ணீர் சிந்த.

 

இப்படியான

வம்பில்

முதுகில் உதைத்ததை

முச்சந்தியில்

உடைப்பதுபோல்

இருபது வருட

வேலைக்கார

இளைமகள்

தான் 

உதைத்தேனென

சொல்லி இருந்தால்

இன்னொரு

பகை

மூன்றாவது மகள்

வீட்டில்

இப்பொழுது வரை

மூளாமல் போயிருக்கும்.

 

இருபக்க நியாயமாக

எல்லோருக்குள்ளும்

எரிமலைகள் கொதித்தபோது

சுள்ளிகலைப் பொறுக்கிப் போட்டு

சுகம் கண்டார்கள்

சுற்றத்தார்கள்.

 

கால ஓட்டத்தில் 

அவரவர்கள்

வழியில் 

காசு பணங்கள்

ஈட்டி

கவனம் பெரும்

வாழ்க்கையாக

யாவரும்

மாறியபொழுது

தாய்க் கிழவி

படுத்த படுக்கையானால்

இரண்டாவது மகள்

தூக்கிச் சுமந்து

அவளும் படுக்குமாறு.

 

செய்வினைகள்

செய்யவில்லையென

மூத்த மகள்

முழு பக்க செய்திகளில்

முழங்கினாலும்

மௌனமாகவே

முடங்கிக் கிடந்தாள்

அம்மாக்கிழவி

மூத்த மகள் பேரன் பார்க்கவரவில்லையென

முடமான ஏக்கத்தில்

அழுது.

 

ஏங்கி ஏங்கி

எதிர்பார்த்து

பாயோடு பயணித்த

ஆண்டுகளொன்றில்

அவன்

சேலையொன்றை

அவள் மீது போட்டான்

செயலற்று

உறுப்புகள் கிடந்தபோது

பேரனென்று

பெருமிதம் கொள்ளமுடியாதவாறு.

 

நினைவுகளைக் கூட்டி

அவள்

நிமிர்ந்து அமர்ந்தபொழுதில்

சருகளைக் கூட்டி

எரித்த நெருப்பில்

தவழ்ந்து சென்று

சேலையைப் போட்டதில்

பற்றிக் கருகியது

அவளுக்குள்

பேரன் மேல் கொண்ட 

பாச நெருப்பு.

 

எத்தனையோ பேர்

எப்படி எப்படியோக் கேட்டும்

தாயானவள்

எதுவுமே சொன்னதில்லை

மூத்த மகளுக்கு

என்னன்னவெல்லாம்

செய்தேன்

தன் வாழ் நாளில்

எப்பொழுதுமென்று.

 

சிதறிக்கிடந்த 

உறவுகளை

சீர் செய்யாமலையே

அழைப்பு நாளில்

சென்றுவிட்ட

அம்மாக் கிழவி

தன் மகனை

இவர்களிடம்

தவிக்க வைத்தாள்

தாழாத் துயரில்.

 

வசதியான வாழ்க்கை 

அவரவர்கள் பாதையில்

வாகாக

போகும்போது

கோயில் கோயிலாக 

சென்று 

கொண்டு வந்த பேரன்

நன்றி கெட்டவர்களென

நாலும் பொழுது

முழக்கமிட.

முட்டிக் கொண்டது

பகை 

மறுபடியும் 

தன் மானத்தை

உரசி

தக்க விளக்கம் கொடுக்குமாறு

தாயின் மகனுக்கு.

 

இப்படியான

நாளொன்றின்

இன்னல்களில்

படுத்த படுக்கையில் 

பாயோடு பாயான

மூத்த மருமகன்

ஒப்பதல் வாக்குமூலம்

கொடுத்தார்

தாயின் மகனிடமும் 

தாய் மாமனிடமும் 

தக்கதோர் சான்றாக

தாயின் தங்கச்சி மகனிடமும்

தெய்வம் இருக்கிறதென

தெரியுமாறு

குரல் பதிவை 

எடுக்கச் சொல்லி.

 

யாவின்

எப்பாடுகளிலும்

யாதொரு 

பங்கமாக்காது

மௌனம் காத்த

தாய்க் கிழவியின்

சாதுர்யத்தை.

சவமான

கணவன் கையில்

தாலியைக்

கழட்டிக் கட்டி.

தகாத பேச்சுக்களுக்கு ஆளானாள்

செல்லமாக வளர்த்து

செல்வச் செழிப்பாக்கிய மகள்.

 

ஊர் வாயெல்லாம்

ஓயாமல் மென்றது

காலத்திற்குள் கிடந்த

கதைகளை எல்லாம்

கச்சிதமாக தேடி எடுத்து 

காண்டா விளக்கில்

கம்பை ஊன்றி 

கால் நடையாக 

காலமெல்லாம் 

அம்மாக் கிழவி

நடந்த கதைகளை

அலுக்காமல் 

நாளும் பொழுதும்.

 

செயலொன்றால்

செய்ததையெல்லாம்

மறைத்துவிடலாமென

சினம் கொண்ட

அக்காவின் செயலால்

சிறுமை கொண்ட

தம்பி.

அத்தான் பேசியதை

கேட்டுக் கேட்டு

ஆண்டவனுக்கு

நன்றி பாராட்டுகிறான்

அக்காவின்

அறியாமை ஆங்காரத்தை

நினைத்து

அழுது அழுது

நொந்து.

 

ஊரெல்லாம் 

உமிழ் நீரில் இழுக்கு செய்ய

அறுபது வயதில் பிறந்த மகன்

தனக்கு முன்னேப் பிறந்தவளின்

தன்மானம் இழக்காமல் 

தானே நேரில்

தாளி கழட்டும் வைபவத்திற்கு

தன் வீட்டிற்கு வரச்சொல்லி

தாய் மாமனோடு அழைக்கப்போனான்

தான் பிழைசெய்திருந்தால்

மன்னிக்கப் சொல்லி 

மன்றாடி மன்றாடி

மகனையும் மருமகளையும்

சாட்சியாக வைத்து.

 

வினையறுக்கும் வேலையிலே

விடாது பிடித்தப் பேயை

விரட்டிவிட

வழிகளற்று

மன்னிப்பை புறந்தள்ளி

மகள் இருக்க

தவமாய் பெற்றப்பேரன்

தன் தகப்போனோடு

தாய்க் கிழவியை சேர்த்து

தகாத வார்த்தைச் சொன்னான்

படைத்வனே பதறுமாறு.

 

நாளெல்லாம் முயன்றாலும்

நாயன் நாடாமல்

நடக்காது எதுவுமென்று

தெரிந்தாலும்

உறவைப் பேணுவதே

உத்தமனின் தன்மையென

ஓயாது போராடி

ஒன்றும் நடக்காமல்

தாய்க் கிழவி சொல்லாமல் போன

வரலாறை நினைத்து

வருந்தித் திரும்பி வந்தான் 

மகன்

வாழ்க்கையொரு

வட்டமென நினைத்து

வேதனைகள் மேவ

வேண்டியபடி  இறைவனிடம்.

 

காலத்திடமிருக்கும்

அநேகத்தின்

மர்ம முடிச்சறிந்து

‘கோடியெடுத்தப் போடவே

கோயில் கோயிலாக சென்றது

அப்பம்மா மகனைப் பெற்றது’ என்று 

குழந்தைகளிடம் சொன்ன மகன்

குணக்கேடாகாமல்

நீங்கள் 

கொண்டு போட்டுவிடுங்கள்

கொலைவெறி தாண்டவதில்

அவர்கள் 

குதித்தாலுமென

நிலைமாறாமலிருந்தான்

நிதாதனத்தில்.

******

பிகு:

இது ஒரு  மேலதிக கற்பனையின் அதீதப் புனைவுக்கவிதை என்று சொன்னால் நீங்கள் யாவரும் நிச்சயமென நம்பித்தான் ஆகவேண்டும் .

ரவி அல்லது.

[email protected]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *