உன் நினைவுகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அவையும் உன்மத்தம் பீடித்து நான் அலைந்த நாட்களில் என்னுள் வந்து படிந்தவை. நீயும் துாயோளாக அன்றிருந்தாய். உன் இருப்பே என்னை வான்மீதேற்றும் விசையாக இருந்தது. உதடுகளில் ஒளிந்திருக்கும் எனக்கான வார்த்தைகளை பல்வேறு விதமாக கற்பனை செய்து கொண்டிருப்பேன். உன் கடைக்கண் பார்வை என்னைத் தொட்டு தீண்ட தவம் கிடப்பேன். சற்றேறக் குறைய நான் பித்தனானேன். என் போதம் குழந்தையின் கையில் சிக்குண்டு பிய்த்துப்போடப்பட்ட பஞ்சு மிட்டாயைப் போல ஆனது. சிதறுண்டு பலநுாறு பயணத்தி்சைகளில் அலைந்து கொண்டிருப்பேன். என்னை ஈர்த்து ஒன்றிணைக்கும் காந்தப்புலமாக நீ இருந்தாய். என் அலைவுகளின் நிலைத்தலாக உன் வாசம் இருக்கும். காலம் பேதலித்து கணங்களில் சிக்குண்டு பிதற்றுவதை நான் உன் முன் ஒவ்வொரு முறையும் உணர்ந்தேன். உன் கைகளின் மென் மயிர்கள் பொன்னொளி கொண்டு சுடர்ந்தது. உன் முகத் தசைகளின் ஒளிர்வில் என் உள்ளொளி பற்றிக்கொண்டு பரவியது. நீ ஏற்றிய தீத்துளிகள் உண்டு பரவி திரண்டெழுந்து பேராழியென்றாகி அடிமுடி காணமுடியாத பெரும் புதைகுழி என்றாயின. அத்து அலைந்து உள் மடிப்புகளில் நழுவிச்சென்று யாருடைய மடியோ என்று எண்ணி மயங்கி உன் மடியில் விழுந்தேன். நானறிந்த சுகந்தங்களில் அதி உச்சமாக நீ இருந்தாய். நீ அலாதியானவள். காலாதீதங்களின் பெருந்தொகை. அதி அற்புதங்களின் ஒன்றிணைவு.ஆரவாரத்தின் ஆழ் மௌனம். பேரெழில்களின் குவிமையம். உன் அருகில் இருப்பதை ஏங்கிய என் எண்ணங்கள் சதா பித்தேறி உன் வீடிருந்த வீதியில் சிலைத்து நின்றன. சத்தங்கள் ஏதும் எழுப்பும் உத்தேசம் கொண்டிருக்கவில்லை அவை. உன் வருகை ஒரு வசந்தம் என்றும் உன் பார்வை ஒரு புலரி என்றும் உன் தீண்டல் ஒரு மீட்பு என்றும் அவை எண்ணின. கட்டுப்பாட்டை மீறி நான் உன்னை ஏங்கும் ஓராயிரம் நாவுகள் ஆனேன். நுனி சிவந்து எச்சில் நளினம் கொண்டு ஒளிரும் நாவுகள். நா நுனிகள் சிலபோது நாகங்களின் படவிரிவாயின. நச்சின் தீண்டலை விழுங்கி வைரங்களைத் துப்பினேன். இரவில் ஒளிரும் வைரங்கள் என் விடங்கள். அலகிலா விளையாட்டு உன் வருகை. முடிவிலா கொண்டாட்டம் உன் இருப்பு. எண்ணிலா பேரின்பங்கள் உன் தீண்டல். மின்னல்களின் ஒளிச்சேர்க்கை உன் அணைப்பு. இரத்த நாளங்கள் சிவந்தன. குருதியோட்டத்தின் அதிவிரைவு தளர்ந்து தொங்கிய தசைத்திசுக்களை உயிர்ப்பித்தன. உயிரோட்டம் மிகுந்து நாளும் பொழுதும் முடுக்கிவிப்பட்டது. காலத்துகள் சேர்ந்து உருப்பெற்று காலப்பிரமாண்டம் ஆனது. உன் முலையிடுக்குகளில் கிளைத்துப்பரவிய பேராறுகள் என் வயலை ஊடறுத்துப் பாய்ந்தன. வெள்ளத்தின் முன் வேடிக்கை பார்ப்பவனாகவும் வெள்ளத்தால் அடித்து பிடுங்கி வீசியெறிப்பட்ட மரங்களில் ஒருவனாகவும் நானிருந்தேன். உயிர்வாதை என்றாலும் உன் அணைப்பும் தீண்டலும் என்னை மகிழ்வித்தன. உயரேச் செல்ல செல்ல முடிவிலியின் தரிசனம். உன் மீது ஏறிப் பறந்து வெட்டவெளியை மறந்து உடல்சோர்ந்து நிலம் திரும்பும் இடைவிடாத பயணம். சிறகுகளை நீ உண்டாக்கினாய். திரைகளை நீ விலக்கி வைத்தாய். அறிதல்களை நீயே எளிமையாக்கினாய். அறத்தின் கதவுகளை நீயே கீல் நீக்கினாய். உன் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் மறைபொருள் என் வேதம். ஒற்றைச் சொல்லில் தோன்றி உலகெங்கும் பரவும் உன் தரிசனம் என் போதம். கற்சிலையென உன்னை வடித்து காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும் மாயத்தை நான் உண்டாக்குவேன். உன்னைக் குறித்த கற்பனைகள் பல்கிப்பெருகி இப்புவியெங்கும் பரவி உன் குன்றாக் கீர்த்தி நிலைக்க என்னை அர்ப்பணிப்பேன். பேரழகின் சிறிய ஒளிர்வுகள் என்னைக் கிளர்த்தின. இடையின் நெளிவுகள் என் அகத்தை வெளியேற்றின. கட்டுடல் கண்டு நான் எழுந்த உயரம் நான் அதற்கு முன் அறிந்திராதது. எனக்குள் பேருருவம் கொண்டவள் நீ. குன்றிய மணியென சிறுத்து காண்பவர்களுக்கு எளிய எண்ணங்களை உற்பத்தி செய்யும் என் பிறவிக் குறுகலை நீக்கிய வரம் நீ. உன் அடியில் உயிர்ப்பிக்கும் வெக்கை உள்ளது. உன் அருகாமையில் பசுமை கொள்ளும் வாய்ப்பு இருந்தது. நீ இயற்கையின் ஓர் அங்கம் ஆனாய். குளிரின் இதம் ஆனாய். பூவின் முடிவிலா நிறங்கள் ஆனாய். உன்னைக் காண நான் வான் நோக்கினேன். வானின் கீழே உன்னை நினைக்கச்செய்யும் அனைத்தும் வானின் மேலேயும் பிரதிபலித்து தெரிந்தன.வெறும் உடலென நீ என் முன் தோன்றினாய். உன் கைகளில் என் வாழ்நாட்களின் பெரும்பகுதி சென்று மறைந்தது. உன் உதடுகளின் வரிகளுக்கு இடையில் என் அறிதல்கள் கரைந்தன. உன் புருவ மயிர்க்காடுகளின் உள்ளே நான் அலைந்து திரிந்த ஓராயிரம் மைல்கள் இன்னும் பதிவு செய்யப்படாத பயணக்குறிப்புகள். உன் தனங்களின் செழுமையில் சுவைத்துக்கிடந்த பிறவிகள் வரையறுக்க முடியாதவை. உன்னைப் பற்றிய கதையாடல்கள் என்னை துயருறச் செய்கின்றன. உன் மீதான அவதுாறுகள் பெரும் துக்கத்தைத் துாக்கி சுமக்கச் செய்கின்றன. ஆயுள் கைதியைப் போல உன் நினைவுச்சுவர்களுக்கு மத்தியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன். ஆழப்பாய்ந்த வேர்களைப் போல வான் நோக்கி கிளைகளை விரிக்க முயல்கிறேன். என் போதத்தை சிதறடிக்கும் நோக்கம் உனக்கில்லைதான். உன் வருகையும் உன் இருப்பும் என்னை நிறைத்தன. நீ இயல்பாக நடந்து சென்று அறைகளுக்குள் மறைந்து விடுகிறாய். உன் வருகையும் மறைவும் பறந்து விரிந்த வானில் மேகங்களைப் போல நிகழ்ந்து விடுகிறது. துாயோளே நீ அறியாவண்ணம் இங்கே பலநுாறு கொந்தளிப்புகள் நிகழ்கின்றன. போர்க்கள வீரர்களைப் போல ஓருடலின் பொறிகள் மோதிக்கொள்கின்றன.எண்ணங்கள் பொருதி எண்ணங்களில் இருந்து குருதிகள் வழிகின்றன. மேகங்களிடையே மோதி ஒளிரும் மின்னல்களைப்போல உன் பிரிவின் வாதைகள் வந்து போகின்றன. உன் இருப்பைப் போலவே உன் மறைவும் இப்பிரபஞ்சத்தின் தீண்டல் என்றாகிறது. நீ என்றோ என் அருகில் இருந்தாய். அதனால் தானே நான் இன்றும் இருந்துகொண்டிருக்கிறேன். என்றும் இருக்கப்போகிறேன்.