பிறகு நான் பித்தனானேன். என் சொற்கள் தன்னிலை இழந்தன. சுயம் அழிந்து காற்றில் அலைபடும் சருகென்றானேன். அன்னையின் மனம் கலங்கியது. தென்திசை தெய்வத்திடம் அவள் முறையிட்டாள். என்னை மீட்டெடுக்கும் மாயக்கரத்தை அவள் வேண்டினாள். குத்திட்டு நின்ற என் பார்வை ஓயாத அலையடிப்பின் திரட்சி என அவள் உள் மனம் அறிந்திருந்தது. அடங்காத கொதிகொண்டு அவள் உன்னைத் தேடினாள். உன் இருப்பின் காலடித் தடத்தினை வேட்டைநாயின் நாசித்துவாரங்கள் போல அவளின் ஐம்புலன்களும் தேடித் தவித்தன. அவளின் நீட்சி நான். அவளை மண் மூடலாம். அவள் ஆன்மாவின் பழரசம் நான். என்னைப் பித்தனாக்கி வெள்ளந்தித்தனத்தை உறையச் செய்த பின்னர் நீ விட்டு விடுதலையாக்கினாய். என் அலைதலில் ஒரு நோக்கமும் இல்லை. காலம் வெறுமனே வழிந்தோடுவதைப்போல விதி வசமானது என் நாட்கள். காலையும் மாலையும் நிசிகளும் என்னைக் கைவிட்டன. என் போதத்தின் உரத்த மௌனம் என்னைக் குத்தி ஓரிடத்தில் நிலைக்கச் செய்தது. நான் நீ இன்றி ஒன்றும் அற்றவன் ஆனேன். என் நிழலின் பேருரு உன் சாயலில் விரிந்து கிடந்தது. என் உலகின் பிரஜைகள் உன் குரலுக்கு ஒத்திசைந்தனர். எட்டுத்திக்கும் மதயானைகள் மூண்டும் பதறாத பக்குவத்தை என் பித்தம் அளித்தது. யானையின் சீற்றம் அதன் ஆகப்பெரிய உடம்பு எதுவும் என்னை அசைக்கவில்லை. காட்டின் வழி அறிந்த நான் திக்குதிசையழிந்து சீர்குலைந்து போனேன். உன் இதழ்களின் செவ்வரிகள் என்னைப் பல கூறுகளாக்கியது. வரிகளுக்கு இடையே உள்ள வெளிகளில் என் அகாலம் பதுங்கிச் சென்றது. ஈரம் கசிந்த உதடுகளின் மினுக்கத்தால் நான் என்றும் சிறைப்பட்டேன். என்னை அடைக்கும் தாழ் உன் இருப்பு. என்னை விட்டுவிடுதலையாக்கும் ஔடதம் உன் இன்மை. யாரிடம் என்றில்லாமல் காணும் ஒவ்வொருவரிடமும் உன்னைத் தேடினாள் என் அன்னை. அவள் அறியாத ஒன்றினால் நான் வசியம் செய்யப்பட்டிருக்கிறேன். அவளும் கன்னிகாத்து ஆண்களின் கண்களை நன்கறிந்தவள்தான். அவளின் வெக்கைகளை ஒற்றிந்த இரவுகள் இன்று என்னைக் கண்காணிக்கின்றன. இரவுகளின் கண்களுக்கு மிக நுட்பமான தொடு உணர்வு. அவை நிழல்களின் வருகையையும் அவற்றின் மெலிந்த அசைவுகளையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துகொள்கின்றன. நுட்பமான ஒலித்துணுக்குகளையும் நிலத்தில் வழிந்தோடும் நீரின் போக்குவரத்தினையும் முன் உணர்ந்து கொள்கின்றன. வசமான கண்காணிப்பின் வளைத்திற்குள் வந்து விழுந்துவிட்டேன். ஆயினும் என்னிடம் எந்தவித மாற்றமும் இல்லை. வான் தனித்திருக்கிறது. அது என்னைப் பார்த்து துக்கித்து நிற்கிறது. வான் மீன்களும் ஒளிரும் கண்களால் என் துயர் கண்டு துாக்கம் தொலைத்து எனக்கு துணை நிற்கின்றன. மேகங்கள் ஒரு கணம் என்னைக் கண்டு திகைத்து பின்னர் ஆசுவாசம் அடைந்து செல்கின்றன. இரவும் பகலும் வந்து செல்கின்றது. நீ என்னை நீங்கிச் சென்று கணகாலம் ஆயிற்று. யாண்டுகள் பல ஓடிற்று. உன்னை வேண்டி நான் அலைகள் மோதி திரும்பிச் செல்லும் கடற்கரையில் ஒற்றைக்காலில் தனித்திருக்கிறேன். என் தவம் கலைந்து நான் இயல்பிற்கு வந்து வீடு திரும்பும் காலத்திற்காக அன்னை கண்கலங்கி காத்திருக்கிறாள். என் துயர்கள் அனைத்தையும் தன்னில் மாற்றிவிட்டு என்னை மீட்க அவள் மேற்கொண்டுள்ள எத்தனங்கள் ஒரு புள்ளியில் முட்டி மோதி நிற்கின்றன. அவள் கொண்ட பயணங்கள் அனைத்தும் முடிவின்றி நீள்கின்றன. திரும்பிச் செல்ல அவளுக்கு தடங்களே இல்லை. எல்லைகள் அவள் முன் உடைந்து புதிய தொடங்கங்களை அளிக்கின்றன. நீண்ட பயணம் அவளிடம் ஓரிடத்தில் நிலைத்திருப்பதின் அருமையைப் புரிந்து கொள்ளச் செய்துள்ளது. என் பொருட்டு அவள் கீழ்வானின் முடிவின்மையைத் தொட்டுவரவும் சம்மதம்தான். சமநிலைக்குலைவுதான் இங்குள்ள அனைத்திற்கும் ஆதி நிகழ்வு என்பதை அன்னை அறிவாள். ஒன்றின் இருப்பை பிறிதொன்று ரத்து செய்தது. சரிபாதிகள் இரண்டும் ஒன்றை ஒன்று விழுங்கிட எத்தனித்தன. பிம்பங்கள் நீரில் அலைந்தன. பிம்பங்களை ஓடும் நீர் உள்ளிழுக்க வில்லை. நிலைத்த பாவனைகளைக் கொண்டிருந்த ஆற்றின் பிம்பங்களில் உன் வருகையை கண்டுணர்ந்தான் ஆதி மனிதன். உன்னையும் என்னையும் தவிர ஈடன் தோட்டத்தில் அனைத்தும் இருக்கின்றன. உன் சொல் பணிந்து நான் ருசித்த கனியினை பிறகு நீயும் ருசித்தாய். கனியோ எல்லாக் கனிகளையும் போலத்தான் இருந்தது. அதற்கென்று தனித்த உன்னதங்கள் எதுவும் இல்லை. ஆயினும் நமக்கு நம் காலடி மண் மறுக்கப்பட்டது. நம்முடைய குடில்கள் கலைக்கப்பட்டன. என்னை உன்னிடம் இருந்து பிரித்தார்கள். நிம்மதியும் நிலைத்தங்கலும் ரத்து செய்யப்பட்டன. ஈடன் தோட்டம் தன் கதவுகளை நமக்காக மட்டும் திறந்தது. நாம் வெளியே தள்ளப்பட்டோம். தானாக திறந்துகொண்ட கதவுகள் முடிவற்ற அகன்ற வெளிகளைக் காட்டிக்கொடுத்தது. தளைப்பட்ட நாம் துணிந்து நடந்து வந்தோம். நம்மைத் தவிர அனைத்தும் அங்கே இருக்கின்றன. அவை நம்மைப் போல துயர் கொள்ளவில்லை. அவற்றின் இயல்புகளில் எந்தவித பாடபேதமும் ஏற்படவில்லை. காற்றிக்கு உடன்பட்டு அசைந்தாடும் கிளைகளைப்போல அவர்களின் அன்றாடங்கள் இருக்கின்றன. உன் சொல்பேச்சுக்கேட்டு நான் அக்கனியைப் புசித்தேன். என் நிலைகண்டு நீயும் புசித்தாய். பசியால் அன்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் நாம் தள்ளிவைக்கப்பட்டோம். இழந்தது ஈடன் தோட்டத்தை மட்டுமே.இன்றோ நீயும் விட்டுச் சென்றாய். உன் இன்மை என்னை கலக்கம் கொள்ளச் செய்துவிட்டது. என் கால்களில் ஓயாத நடுக்கம். உன் இன்மையால் நான் மொத்தமாக என்னையே இழந்தேன். என்னில் ஒரு பாதியை பக்கவாதம் பறித்துக்கொண்டது. செயல் இழந்த என் ஒரு பாதியை என் கண்கள் பீதியோடு வெறிக்கின்றன. ஒரு மூளையில் பாதியை மட்டுமே நம்பியிருக்கிறேன். இதயத்திலும் பாதி இறந்து விட்டது. உயிர் விரைந்து வழிந்தோடுகிறது. கரைகரைந்த ஆற்றின் நீரினைப் போல என இருப்பு எல்லை இன்றி விரிந்துகொண்டே போகிறது. விளிம்புகள் கலைத்து அடுக்கப்படுகின்றன. அவற்றினைக் கொண்டு நீ ஆடும் சூதாட்டம் முடிவற்று நீள்கிறது. மண்ணில் விழுந்த உன் சொற்கள் எல்லாம் பெரும் விருட்சங்களாக கிளைத்து நிற்கின்றன. அவற்றின் கனிகளில் உன் ருசி இருப்பதாக பட்சிகள் சொல்லிச் செல்கின்றன. அவற்றின் அசைவில் கலைந்தோடும் காற்றில் உன் வாசனையை மீட்டெடுக்கிறேன். உன்னைத் தீண்ட நான் நீட்டும் கரம் முடிவற்றதாய் உள்ளது. அன்னையின் உள்ளே உடைந்து சிதறிய உத்வேகத்தின் ஓராயிரம் துளிகளில் மிகச்சிறிய துளியாக நானிருந்தேன். ஈரம் கசியும் சதுப்பு நிலத்தில் நான் நிலைகொண்டேன். பாய்ந்து சென்று என்னை உருவாக்கும் விளைநிலத்தை கைப்பற்றினேன். நிலம் பிளந்து குருத்திலை விட்டு நான் என்னை உருவாக்கும் காலத்தில் நீ வந்து சேர்ந்திருக்கவில்லை. உகந்த உடல் தேடி அலைந்து கொண்டிருந்தாய். உன் வருகையை அறிந்திராத என் விதி அதன்பிறகுதான் மாற்றி எழுதப்பட்டது. உடலென நீ தனித்திருப்பது என்னை சஞ்சலம் கொள்ளச் செய்கிறது. உன்னோடு கலந்துவிட தவிக்கும் என் இருப்பின் கனம் கூடிக்கொண்டே இருக்கிறது. இச்சையின் நறுமணம் என்னைக் கசியச் செய்கிறது. நான் தென்றல் போல உன்னைத் தொடுகிறேன். உன் சிகையசைத்து உள் நுழையும் மென்தீண்டலில் என் தவிப்புகள் இளைப்பாறுகின்றன. உன்னைத் தொட்டபின்னர் ஆசுவாசம் கொள்ளும் என் புலன்களில் மேலும் வெறி ஏறுகிறது.உன்னை நானாக அறிந்துகொள்வது நம் விதி. பிரிந்து சென்றாலும் என் பாதியாக நீ இருக்கிறாய். அலையும் காற்றில் நிலைத்திருக்கும் சுடர் நம் எதிர்காலம். இச்சைகள் தேங்கி தேங்கி உடல் கரைந்து கொண்டிருக்கிறது. நிறைவேறாத ஏக்கங்களின் கனம் தாளாமல் தோள்கள் வலுவிழந்துவிட்டன. நெஞ்சில் ஏற்றிவைத்த மலைகளைப் போல நான் இன்மையை நோக்கி நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் ரூபங்கள் சிறுத்துப் போகின்றன. நான் அரூப இருப்பின் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். என்னை மீட்டெடுக்கும் தார்மீகம் உன்னுடையது. என் தலைவிதியை எழுதும் சொற்களை உன் விரல்கள் உள்மடக்கி வைத்திருக்கின்றன. உன் பெருங்கருணை எனக்கு மட்டும் மறுக்கப்படுவதேன்? உன் நல்லியல்பு எனக்காக மட்டுமே திரிந்து போனது எதனால்?சமநிலைக்குலைவை சாட்சியாக்க விழைகிறாயா?தத்துவங்கள் வெறும் சொற்கள். அல்லது சுவை ஏற்றபட்ட பண்டங்கள். அவற்றை பாவிக்கும் அத்தனைப்பேரும் போதம் அழிந்து ஓயாத சொற் சஞ்சரிப்பில் தளைத்துக்கிடக்கின்றனர். தத்துவங்களைப் போல நீயும் என்னைச் சதா பெரும் குழப்பத்தில் ஆழ்படுத்த விரும்புகிறாயா? மனம் அழிய வேண்டும். அது ஓயாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. மனத்தின் இருப்பே இங்குள் அனைத்தும். மனம் என்னை விரித்தெடுத்து உன்னிடம் அழைத்து வருகிறது. அதன் இருப்பு நிலையற்ற பதற்றங்களால் ஆனது. என்னை இரண்டாகப் பிரித்து ஒன்றை ஒன்று வேவு பார்க்கச் செய்கிறது. நானே மீட்பன். நானே அடிமை. இரண்டிற்கும் இடையே உள்ள நிகழ்தகவு நீ.