எங்கும் நிசப்தம். இரவு மழைக்குள் நனைந்து மிகவும் கனத்துக்கிடந்தது. இராப்பூச்சிகளின் ரீங்காரம் நிசப்தத்தினை ஊடறுத்துக் கொண்டிருந்தது. அவன் உறக்கம் இன்றி புரண்டு படுத்தான். அருகில் துயின்று கொண்டிருந்த இளைய மகளின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவனால் இனி உறங்க முடியாது.
வழமையாக இரவு இரண்டு மூன்று மணிக்குத்தான் அவனுக்கு உறக்கம் வரும். அதுவரையில் அவன் கண்களை மூடி வெறுமனே படுத்திருப்பான். நீரிழிவுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளால் எட்டுமணிக்கு சாப்பிட்டிருந்த உணவு விரைவாக செரித்துவிட பாதி வயிற்றில் பசி விழித்திருக்கும். ஒரு டம்ளர் நாட்டுச்சர்க்கரை டீக்காக உறங்கிக்கொண்டிருப்பவளை தட்டி எழுப்பவும் மனம் ஒத்துக்கொள்வதில்லை. அலுத்துச் சலித்து மெல்லிய சீற்றத்தோடு துயின்று கொண்டிருப்பாள். பகல் முழுக்க மகள்களோடு தீராத மல்லுக்கட்டு. ஐந்தும் மூன்றும் என இரண்டு பிள்ளைகள். ஒவ்வொன்றாக படுத்து உறங்க மணி பதினொன்று ஆகிவிடும். அதன்பிறகு சேர்ந்திருக்கும் எச்சில் பாத்திரங்களைக் கழுவ வேண்டும். அடுக்களையைத் துப்புரவாக்கி ஈர நசநசப்பை இல்லாமல் செய்துவிட்டு, மறுநாள் காலைச் சமையலுக்கான முன்ஏற்பாடுகளை செய்தபின்னர்தான் அவள் படுக்கச் செல்வது.
உலகம் முழுக்க பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை அவனும் அறிவான். அவனுக்கு சில நாட்கள் தோன்றும் அவளின் பணிச்சுமையில் தானும் ஏதேனும் பங்குகொண்டால் என்ன வென்று? காய்கறிகளை சுத்தம் செய்துகொடுக்கலாம். பாத்திரங்களை கழுவி உதவி செய்யலாம். கீரையில் கழிவு நீக்கி பக்குவம் செய்து வைக்கலாம். இப்படி எத்தனையோ சின்னச்சின்ன உதவிகளை அவனால் திறம்பட செய்துவிடக் கூடும்தான். ஆனால் அவனால் ஒருபோதும் நினைப்பதைப் போல செய்துவிட முடியாது. செய்ய வேண்டும் என்கிற உந்துதல் தோன்றிய உடனே நீண்ட காலமாக திட்டமிட்டு செய்யக் காத்திருக்கும் நீண்ட பட்டியல்களின் வரிசை அவனுக்கு நினைவுக்கு வரும். அலுவலக வேலைகள் பணி நேரத்தையும் தாண்டி அவனை விரட்டிக்கொண்டு வீடு வரை வந்து விடும். நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் செல்போன் வழியாக அவை அவனின் படுக்கை அறை வாசல் வரை வந்து எட்டிப்பார்க்கும். விரைந்து சென்று அவனுடைய வாசிப்பு அறைக்கதவைத் தாளிட்டுக் கொள்வான். அதை எதிர்பார்த்திருந்தவள் போல சின்சானில் மூழ்கியிருந்த சின்னவள் சாத்தியிருக்கும் கதவின் அந்தப்பக்கம் நின்று “அப்பா..கதவத்திற..பாப்பா..வந்திருக்கேன்” என்று தட்டுவாள். கதவென்றால் அது அவளுக்கு திறந்தே இருக்க வேண்டும். அவள் முன் அடைத்திருக்கும் கதவுகளை அவள் சும்மா இருக்க விடுவதில்லை.
மூடுண்ட அறைக்குள் அமர்ந்து அவன் வேறொரு உலகத்திற்குள் தன்னைப் புதைத்துக்கொள்வான். அவ்வுலகம் நாள்தோறும் புத்தம் புதியதாக இருக்கும். நேற்றைப் போல ஒன்றினை இன்று பார்க்க முடியாது. நேற்றுச் சென்ற வீதி வழியே சென்று வந்தால் கூட புதுக்கருக்கு மாறாத வேறொரு புதிய நிலக்காட்சிகளாக அவை இருக்கும். பால்யத்தில் அவன் பழகியிருந்த பழக்கங்களில் இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக அவன் கைவிட்டுவிடாத பழக்கம் அது ஒன்றுதான்.
அவனைச் சுற்றி சுவர்களைப் போல புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறான். அவன் வாழ்நாள் முழுக்க சேமித்த புத்தகங்கள் அவனைச் சூழ்ந்திருக்க அவற்றைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதே மகிழ்ச்சியாக இருக்கும். வாசிக்க வேண்டிய நுாற்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் இருப்பதால் அவனால் எந்த ஒரு நுாலையும் முழவதும் வாசிக்க முடியாமல் இருந்தது. மனம் போன போக்கில் கைக்கு சிக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவான். அரைமணி நேரத்திற்கு மேல் அவனால் மனம் ஊன்றி வாசித்துவிடவும் முடிவதில்லை. செல்போன் அருகில் இருந்துக்கொண்டு அவனை வசீகரிக்க தவித்துக் காத்திருக்கும். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் அவன் செல்போனை எடுத்து ரீல்ஸ்கள் பார்க்க ஆரம்பிப்பான். ஒரே நிறத்திலான விதவிதமான பெண்கள் அவன் முன் நின்று தங்கள் அங்கங்களை விதவிதமான கோணங்களில் ஆட்டியும் குலுக்கியும் காண்பிப்பார்கள். அவனின் பாலியல் வறட்சியை பயன்படுத்திக்கொள்ளும் வித்தகம் நிறைந்த காட்சித் துணுக்குகள் அவனைக்கட்டிப்போட்டு வைத்திருக்கும். அவன் வாசிக்க ஆரம்பித்த நுாலினை மறந்து அப்படியே ரீல்ஸ்களில் ஒன்றிப் போவான். ரீல்ஸ்கள் சலித்த போது முகநுாலில் கொஞ்ச நேரம் விச்ராந்தியாக வெறித்துக்கிடப்பான். முகநுால் பக்கங்கள் நகராட்சி குப்பைக்கிடங்கினைப் பார்ப்பது போன்ற அருவருப்பைத் தர ஆரம்பித்த பிறகு அதையும் தவிர்க்க ஆரம்பித்தான்.
மனம் தீர்க்க முடியாத நோய் என அவன் எண்ணிக்கொள்வான். அவனின் மனத்தில் தோன்றி மரியும் சொற்களை எழுதிப்பார்த்தால் அவனுக்கே பயமாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பைத்திய வெளி. கட்டற்ற விசையும் பயண வெறியும் கொண்ட சொற்கள் ஆழ்கடல் மீன்களைப் போல அலைந்து கொண்டிருக்கும். அவன் உடலால் ஒருவனாக இருக்கிறான் அவ்வளவுதான். அவனுக்குள் ஓராயிரம் சிதறல்கள். சுக்குநுாறாக உடைத்து எறியப்பட்ட சில்லுகள். அவனை ஓராள் என ஒட்டிக் காட்டும் பசைப்படலந்தான் அவனுடைய இருப்பு. நீரில் மிதந்து நெளிவும் நீர்வளையங்களைப் போல அவன் பாகுநிலையில் சதா இருந்து கொண்டிருக்கிறான். அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு காரியத்தை தங்கு தடை இன்றி மேற்கொள்ளச் செய்ய அவனால் முடிவதில்லை.
சின்னவள் சிணுங்கினாள். பெரியவள் சின்னவளின் இடுப்பில் வலதுகாலைப் போட்டு இறுக்கினாள். அவன் அவர்களை விலக்கிவிட்டு தனித்தனியே பிரித்து வைத்தான். மீண்டும் அவ்விதம் நிகழாத வண்ணம் அவர்கள் இருவருக்கும் இடையில் தலையணையை அண்டக் கொடுத்தான். மணி பன்னிரெண்டுதான் ஆகியிருந்தது. இரவே இன்னும் ஏன் விழித்திருக்கிறாய்?
வயதாவதே தெரியாமல் அவன் நாற்பதைத் தாண்டியிருந்தான். திடீரென்று தன்மனம் பெண்களின் உடலின் மீது பெரும் பித்துக்கொண்டு வெறிப்பதை உணர்ந்த போதுதான் அவனுக்கு அவனையே பிடிக்காமல் போனது. அந்த வயதிலும் யாரையாவது தீவிரமாக காதலிக்க வேண்டும் போல் இருந்தது. அவன் ஒரு விவாகரத்தினை வெற்றிகரமாக நடத்தி முடித்து மீண்டு வருவதற்கான பொருளாதார வசதிகளை சம்பாதித்திருந்தால் மீதி நாட்களை காதலில் உன்மத்தம் கொண்டு தொலைத்திருக்க முயன்றிருப்பான். அவன் மாதங்காய்ச்சியாகத்தான் இருந்தான். முப்பதாம் தேதியில் வந்து விழும் சம்பளத்தை பத்தாம் தேதிக்குள் பங்கிட்டு பற்றாக்குறையை எவரிடம் வாங்கி எவ்விதம் சமாளிக்க என்பதை நினைத்து நடுங்குவான். அவனின் அன்றாடத்தை கடன்களும் தேவைகளும் கருணையே இன்றி வேட்டையாடிக்கொண்டிருந்தன.
தன் முன்னால் எந்த வித மாற்றத்திற்கும் இசையாத முரட்டு உருவமாக இந்த வாழ்க்கை இருப்பதை அவன் அறிந்து கொண்டான். தன்னால் தன்னையே சரி செய்துகொள்ள முடியாத போது உலகத்தை எப்படித் திருத்த முடியும் என்பதை அறிந்து கொண்டபோதுதான் அவன் காமத்தை பெரும் திறப்பாக ஏற்றுக் கொண்டான். இனி செய்ய இருப்பது அது ஒன்றே. புணர்ந்து ஓய்ந்து அசதியில் தன்னை மறந்து உறங்குவது மட்டுமே தன்னால் ஆகும். நாற்பதைத் தாண்டியதும் அவனின் ஊடலில் ஊறிப் பிரவகித்த காம எண்ணங்களை அவன் ரசிக்க ஆரம்பித்தான். பெண்களை கண்டும் காணாமல் வாழ்ந்து கொண்டிருந்தவன் அதன்பிறகு அங்குலம் அங்குலமாக ஏக்கத்தோடு ரசிக்கக் கூடியவனாக மாறிப்போனான். சில சமயங்களில் அவன் எண்ணங்கள் அவனுக்கே அச்சத்தை அளிக்கும் விதத்தில் அத்தனை ஆபாசமாக இருந்தன. மிகவும் சிரமப்பட்டு தன் கற்பனைப் பாய்ச்சல்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வான். அவனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
மெல்லிய குறட்டையோடு அவன் மனைவி ஒருச்சாய்த்து படுத்து துயின்றுகொண்டிருந்தாள். அவள் கால் மூட்டுகள் இரவொளியில் நீலப்பாரித்து தெரிந்தன. முடிக்கற்றைகள் கலைந்து பேன் காற்றில் மிதந்தலைந்தன. காதலித்த போது இருந்த அவளை அவன் என்றோ காணாமல் ஆக்கியிருந்தான். காதல் ஆணையும் பெண்ணையும் எத்தனைப் புனிதர்களாக மாற்றிவிடுகிறது. அவன்தான் அவள் மீது எத்தனை காதலோடு இருந்தான்.
அவர்கள் முதன் முதலில் பிரிந்த போது அவன் நரகம் என்பதை உண்மையில் உணர ஆரம்பித்தான். அவள் அப்பாவிற்கு அவர்கள் காதலிப்பது தெரிய வந்த மறுநாள் அவளை மதுரைக்கு அனுப்பி வைத்துவிட்டார். அவளை வழக்கமாக சந்திக்கும் முட்டுச் சந்தில் போய் அவன் நாலைந்து நாட்கள் தொடர்ந்து காத்திருந்தான். அவள் வீட்டிற்கு முன் போய் தேவையே இன்றி பல மணிநேரங்கள் நின்று வந்தான். அவனால் அவளைக் கண்டு பிடிக்கவே முயடிவில்லை. அவளின் திடீர் மாயம் அவனுக்குள் பெரும் ரணமாக உருவெடுத்தது. விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவளின் நினைவாகவே இருந்தான். அவளுக்கு என்ன ஆகியிருக்கும்? அவள் எங்கே போய்விட்டாள்? இனி அவளைக் காண முடியுமா? இத்தோடு அவள் அவனைக் கைவிட்டு விட்டாளா? என அடுக்கடுக்காக கேள்விகள். கேள்விகள் எழுப்பிய கார்வைகளால் அவன் அகம் குலைந்து போனது. வேலைக்குச் செல்லப்பிடிக்காமல் வீட்டில் அடைந்து கிடந்தான். யாரைப் பார்த்தாலும் அவளைத் தேடித் தவிக்கும் பாடுகளைப் பற்றியே பிதற்ற ஆரம்பித்தான். அவள் அவனை முழுக்க போதம் சிதையச்செய்தாள். ஒரு கட்டத்தில் அவனின் நண்பர்கள் அவனை அச்சத்தோடு பார்த்தனர். அவன் வரும் வழியில் எங்காவது சென்று ஒளிந்து கொண்டார்கள். அவன் சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவில் அலையும் காலம் இதோ வந்து விட்டது என்று நம்பினார்கள்.
பிள்ளைகளுக்காக அவளைச் சகித்துக்கொண்டிருக்கிறான். இரண்டும் பெண் பிள்ளைகள். தன்னால் அவர்களை அக்கறையோடு வளர்க்க முடியாது. பெண் குழந்தைகளுக்கு தாய் என்பவள் தவிர்க்க முடியாதவள். மகள்கள் வளர வளர தன்னிடமிருந்து அந்நியமாகிப் போய்விடுவார்கள் என்பதை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான்.
அவன் படுக்கையில் இருந்து எழுந்து சென்று தண்ணீர் குடித்தான். குளிர்சாதனப் பெட்டி ர்ர்ர்..என்று இரைந்துவிட்டு ஒருமுறை தடால் என்று குலுங்கியது. குப்பைக்கூடையில் இருந்து எலியொன்று பதறி ஓடிக்குதித்தது. சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடினான். நீலமும் கருப்பும் கலந்த திரவக் கலப்பாக இமைகள் கெட்டித்து நின்றன.
சின்னவள் திடீரென்று சிரித்தாள். அவன் அவளின் தலையைக்கோதி நெற்றியில் முத்தமிட்டான். என்னைக் காத்தருளுங்கள் மக்களே என்று வேண்டிக்கொண்டு அவளின் விரல்களில் ஒன்றினைத் தொட்டுக்கொண்டு விரிப்பில் படுத்தான். இனி உறங்கிவிடலாம் என்று அவன் கண்களை மூடினான்.
