1.
பிள்ளைகள் இருவரும் துாங்கிவிட்டார்கள். பதினோரு மணி ஆகியிருந்தது. கோமதி புரண்டு புரண்டு படுத்தாள். அவளும் நீண்ட நேரம் செல்போனை நோண்டிக்கொண்டிருந்தாள். ரீல்ஸ்கள் பார்த்து கண்கள் சோர்ந்த பிறகு அவளிடம் இருந்து மெல்லிய சீற்றமாக உறக்கம் எழுந்து வரத் தொடங்கியது.
இரவு கடும் நிசப்தமாக இருந்தது. சில்வண்டுகள் ங்க்ரீங்ங் என்று நீண்ட கார்வையாக ஒலித்தன. மார்கழி மாதக்குளிர் தரையைத் தாண்டி பாயை போர்வையைக் கடந்து உடலைத் தீண்டியது. வயிற்றில் இடது காலைத் துாக்கிப் போட்டிருந்தாள் செல்வி. அவள் கால்த்தசைகளை அழுத்திவிட்டபடி காட்டிற்கு ராஜா சிங்கமா? யானையா? என்கிற கதையைச் சொல்லித்தான் அவளைத் துாங்க வைத்தேன். தினமும் சொல்லும் ஒரே கதைதான். ஒரு நாள் சிங்கம் காட்டுக்கு ராஜாவாகும். மற்றொருநாள் யானை அரசவைக்கட்டிலில் அமர்ந்து கர்ஜிக்கும். ஒரே கதையைச் சொன்னாலும் அது ஒரே கதையாக இருப்பதில்லை. மனதின் வாசல்கள் திறந்துகொள்வதைப் பொறுத்து கதைத் தருணங்கள் அமையும். கதைசொல்ல ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் எனக்கு கொட்டாவிகள் வரத் தொடங்கும். பிள்ளைகள் துாங்கிவிட்டார்கள் என்றதும் என் பிரக்ஞை வலுத்துவிடும்.
சாந்தி உதடுகள் விரிய சாந்தம் ததும்பும் முகத்தில் உறைந்திருந்தாள். இடது கை விரல்கள் மட்டும் நடுங்குவதைப் போல அசைந்து கொண்டிருந்தன. கால்களுக்கு நடுவில் தலையணை. இமைகளுக்குள் உருண்டு அலைபாயும் விழிகள். எனக்குத்தான் துாக்கம் வரவில்லை. மல்லாந்து படுத்தேன். ஒருச்சாய்ந்து செல்வியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். நுாறுவரை மனதிற்குள் எண்ணிப் பார்த்தேன். போர்வையை தலைவரை இழுத்து மூடி இருளை உற்றுக்கிடந்தேன். கண்களுக்குள் கருப்புக்குளத்தை உருவாக்கி அதன் அலையடிப்பில் எம்பிக் குதித்து உறக்கத்தைத் தேடியலைந்தேன். கொஞ்ச நேரம் இயர்போனில் சினிமா பாடல்கள் கேட்டேன். சினிமா பாடல்கள் சிறுவயது நாட்களை ஊடுருவி சம்பந்தா சம்பந்தமில்லாத நினைவுகளையும் முகங்களையும் ஆழத்தில் இருந்து கொத்தி வெளியே கொண்டுவந்தன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான மனோலயத்தை கிளர்த்தி பரவசத்தை அளித்தன. வெடியை மிக அருகே கண்ட தெருநாயைப் போல துயில் மிக நீண்ட தொலைவுக்கு அப்பால் தயங்கி நின்றது. நாளை அலுவலகத்தில் கணிணி முன் அமர்ந்தபடியே துாங்கி ஆடி விழவேண்டியிருக்கும்.
நாற்பத்தைந்து வயதிற்குள் என் வாழ்வே தீர்ந்துவிட்டது போல. அப்படித்தான் அமைந்துவிடுகிறது. எதன் மீதும் துளியும் ஆர்வமில்லை. மிகவும் அலுப்புத் தட்டிவிட்டது. பிள்ளைகளை கரையேற்ற வேண்டுமே என்பதொன்றே வாழத் தகுந்த காரணம். அவர்களின் முகங்களே அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ கற்றுத் தந்திருக்கிறது. பிள்ளைகள் பசியோடு இருப்பார்கள் என்ற நினைவு எப்போதும் நினைவில் இருக்கிறது. அன்றாடங்களில் புதுமை என்று எதுவும் இல்லை. செக்குமாட்டு வாழ்வு. வேலை நாட்களில் பகல்களை அலுவலகங்களில் தொலைத்து விட்டு, உடலும் மனமும் சோர்ந்து, வீடு திரும்பி குடும்பக் கடமைகளைச் செய்து விடுமுறை நாட்களை எதிர்பார்த்து ஏங்கிக் கழியும் முறைப்பாடுகள். ஞாயிறு எப்படித்தான் ஓடிப்போகுமோ? காலையில் ஒன்பது மணிக்கு எழுந்து, சாவகாசமாக காலைக்கடன்களை முடித்து, மகிழ்ச்சியே தராத டீயைக்குடித்து மீன் வாங்கவோ, ஆட்டிறைச்சி எடுத்து வரவோ சென்று திரும்பினால் மதியம் ஆகிவிடும், அடுத்த ஒருவாரத்திற்கான ஆடைகளை தேய்த்தல் என்பதில் மீதியும் கழியும். பகல் நொடிப்பொழுதில் ஓடிவிடும். சாயந்திரம் ஒரு சினிமா குடும்பத்துடன். குழந்தைகள் பேய்ப்படங்களை ஆர்வம் கொண்டு பார்ப்பார்கள். காதல் படங்கள் என்றால் மடிகளில் இருந்தபடியே சண்டை போட ஆரம்பிப்பார்கள்.
வேலை நாட்களில் காலையில் எட்டுமணிப்போல எழுந்திருப்பேன். மூத்திரம் முட்டி சிறுநீர்ப் பாதையெங்கும் அமில எரிச்சல். மார்கழி பிறந்த பிறகு இது மேலும் கூடியது. அவஸ்தை நீண்ட நேரம் நெளிய வைக்கும். இடையில் சில நாட்களில் கழிவறைக்காக எழுந்தால் அன்றைய துாக்கம் அத்தோடு முடிந்தது. முந்தின இரவில் துாக்கம் வர எப்படியும் ஒருமணிக்கு மேல் ஆகியிருக்கும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைப்பது அன்றாடப் போராட்டம். குழந்தைகளோடு கோமதி மல்லுக்கட்டிக் கொண்டிருப்பாள். ஒருத்தியை ஒன்பது மணி வேனுக்கும், மற்றொருத்தியை ஒன்பதரை மணி பஸ்க்கும் தயார் படுத்த வேண்டும். இருவருக்கும் தனித்தனியான உணவுவகைகள். பழங்கள் மட்டுமே கொண்ட நொறுக்குத் தீனிகள். கூடவே எனக்கு நீரிழிவுக்கு உகந்த காலைச் சிற்றுண்டி. கேப்பை ரொட்டியோ, கோதுமைச் சப்பாத்தியோ, கம்பு சோமியோவோ, வரகரிசி பொங்கலோ எதோ ஒன்று. அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்னி. சர்க்கரை இல்லாத டீ. உரிய நேரத்தில் அனைத்தும் சரியாக நடந்துவிடுவதில்லை. எப்படியும் யாராவது ஒருவர் சொதப்பிவிடுவார்கள். பள்ளி வேன் வரும் நேரத்தில் செல்வி கழிவறைக்கு ஓடுவாள். தெருமுழுக்க வேன் ஹார்ன் இடைவிடாமல் ஒலிக்கும். ”செல்வி அம்மா..வேன் வந்திருச்சி…”என்று யாராவது கத்திவிட்டுச் செல்வார்கள். அலறும் ஹார்ன் சத்தத்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும். வீட்டிற்குள் பூதங்கள் ஓடித்திரிய ஆரம்பிக்கும். கோமதி காட்டுக்கத்து கத்துவாள். பேய் பிடித்தவளைப் போல ஆகிவிடுவாள். ஆனால் பிள்ளைகள் அதைக் கண்டுகொள்வதில்லை. நான் முறைத்தால் அழுதுவிடும் மென்னுணர்வு கொண்டவர்கள்தான். அம்மா என்றால் அசரமாட்டார்கள். நிதான கதியில் சோட்டா பீம்மிலோ, சின்சானிலோ இமைக்காமல் ஒன்றியிருப்பார்கள். ஆத்திரம் அடங்காமல் திம் திம் என்று பிள்ளைகளின் முதுகில் அடிகள் விழும். என்னால் அவளைத் தடுத்து நிறுத்த இயலாது. பிள்ளைகளின் மீது அவள் காட்டும் வன்முறையின் பொருட்டு எங்களுக்குள் எத்தனையோமுறை சண்டைகள் ஏற்பட்டுள்ளன. “நீதானே..நல்ல அப்பா..நீயே கிளப்பிவிடு?” என்று அவள் உம்மென்று அமர்ந்துவிட்டாள் என்றால் தர்மசங்கடமாக ஆகிவிடும். நடுவகிடு எடுத்து தலையைச் சீவிவிடத் தெரியாது. அடர்ந்த சுருள் ரோமங்களை தேங்காய் எண்ணெய்த் தேய்த்து ஒழுங்கு படுத்த தெரியாது. ஹேர் பின்களைக் குத்திவிடத் தெரியாது. சாக்ஸ்களை சரியாகப் போட்டு, ஸ்நாக்ஸ் பெட்டிகளில் சரியான விகிதத்தில் பழத்துண்டுகளை நிரப்பத் தெரியாது. இப்படி நிறைய தெரியாதுகளால் திகைத்து நிற்பேன். சின்னவள் படிப்பது ப்ரிகேஜியா, யூ.கே.ஜியா என்பதில் கூட தடுமாற்றந்தான். ஒருமுறை என் நண்பர் ஒருவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் பெயரைக் கேட்டார். காற்றை வெறித்து பள்ளியின் பெயரைத் தேடினேன். நண்பர் அதிர்ச்சியோடு என்னைக் கடந்து சென்றார்.
கோபம் வந்தால் நான்தான் அதிக பட்ச எரிச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவளுக்கு அது சாதாரணம். குடும்பம் என்றால் சண்டையும் சச்சரவும் இருக்கும்தான். எனக்கு பகல் முழுக்க தலையை வலிக்கும். வாயெல்லாம் கெட்ட வார்த்தைகள் பொங்கும். வயது கூடக்கூட கோபப்படுவதும், தயங்காமல் கெட்ட வார்த்தைகளால் யாரையும் எடுத்தெறிந்து பேசுவதும் அதிகரித்துள்ளது. இயல்பான என் பாவனைகள் தொலைந்து கடும் விரக்தியை முகத்தசைகள் வெளிக்காட்டும். அன்றெல்லாம் யாருடனும் என்னால் சிரித்துப் பேச முடிவதில்லை. சட்டென்று எதையும் கடந்து போக இயலாது. அலுவலகத்தில் சண்டை போடாமல் இருக்க முடியாது. இடைவிடாமல் சீற்றம் கொண்டு பீறிட்டுவரும். “ஹெட் கிளார்க் இன்னைக்கு புத்தன் இல்லடோய்….பித்தன்” என்று உதவியாளர்கள் கிசுகிசுப்பின் மூலம் செய்தியை அலுவலகத்தில் பரப்பிவிடுவார்கள்.
ஒரு நாள் காலையில் நிகழும் சண்டையால் உருவாகும் வெறுப்பும் கோபமும் தணிய இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதுவரை ஒருவரை ஒருவர் கடும் விரோதிகளைப் போல நடந்துகொள்வோம். கண்களைப் பார்த்துக்கொள்ளக் கூட மாட்டோம். நான் சுவரைப் பார்த்தோ தரையைப் பார்த்தோ அவசியமான சில வார்த்தைகள் பேசுவேன். அவளும் அடங்காத கோபத்தில் எரிந்து விழுவாள். கோமதியின் வீம்பு அசாத்தியமானது. பிள்ளைகள் வீட்டில் இல்லாத போதும் உம்மென்று முகத்தை துாக்கி வைத்துக் கொண்டிருப்போம். என்ன செய்தாலும் அவளை மாற்றிவிட முடிவதில்லை. பிள்ளைகளோடு நானும் கதறி அழுதிருக்கிறேன். பிள்ளைகள் அழும்போது எனக்கும் குமுறிக்குமுறி அழுகை வரும். அவளால் என்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவளறிந்த ஆண்களில் மிகவும் மோசமான சுயநலமி, சோம்பேறி நான்தான் என்பாள்.
செல்வி பிறந்த பிறகுதான் சொத்து சேர்த்துவைக்க வேண்டும் என்ற அக்கறையே எழுந்தது. சொந்த வீடு இல்லை. வங்கியில் சேமிப்பு இல்லை. ஒருமாதம் விடுப்பு எடுத்தால் அடுத்த மாதச் செலவுக்கு கடன் வாங்க வேண்டும். நிரந்தர வருமானம் உள்ள நிலையிலும் விநோதமான அன்றாடங் காய்ச்சி வாழ்க்கைதான். சம்பளப் பணம் அத்தனையையும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் செலவு செய்து பழகிவிட்டோம். பிள்ளைப்பேறு வாய்க்க வேண்டும் என்பதற்காக எடுத்துக்கொண்ட தொடர் மருத்துவச் சிகிச்சைகள். லேப்ரோஸ்கோப்பி, டெஸ்ட் ட்யூப் பேபி, கருப்பை நீர்க்கட்டிகளை இல்லாமல் ஆக்கும் மாத்திரைகள். எதிர்கால நலன் கருதி சேமித்து வைக்க வேண்டும் என்றே தோன்றவில்லை. சாந்தியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பன்னிரெண்டு ஆண்டுகள் போராடிய பின்னர்தான் செல்வியே பிறந்தாள் என்பதால் முன்னேற்பாடுகள் குறித்த போதம் இன்றி இருந்துவிட்டோம். அவள் உண்டான பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. இரண்டாவது ஆண்குழந்தையாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற அபிலாஷை வேறு. மூத்தவளுக்கு வாழ்க்தைத் துணையாக ஒருவர் உடன்வரக் கூடுமே என்கிற ஆசையும். இரண்டு பெண்பிள்ளைகள் என்கிற நினைவே என்னை ஓயாமல் சஞ்சலப்படுத்துகிறது. பிள்ளைகள் பிறந்த பிறகு நான் ஆளே மாறிவிட்டேன். எனக்குள் இருந்த பொறுக்கி இல்லாமல் ஆகிவிட்டான். ஊதாரித்தனத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதாயிற்று.
திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே மூத்தவள் செல்வி பிறந்தாள். பிள்ளையில்லா அந்த பன்னிரெண்டு ஆண்டுகளும் வேறொரு வகையான சித்திரவதைகளை அளித்தன. உறவுகளை எதிர்கொள்வது பெரிய சங்கடமாக இருந்தது. குழந்தையின்மை என்பதை ஒவ்வொருவரும் எங்களைத் தாக்குவதற்கு வாகான ஒரு ஆயுதமாக பாவித்தார்கள். யாரும் விட்டுவைக்கவில்லை. அன்பின் பெயரால், அக்கறையின் காரணமாக, ஆலோசனை என்ற பெருங்கருணையின் அடிப்படையில். கூனிக்குறுகி அவர்கள் முன் நிற்க வேண்டியிருக்கும். ஒரு பிள்ளை பெற்றுவிட்டால் உலகத்தில் வாழத் தகுதி வந்தடைந்தது போலவும், குழந்தைப்பேறு அற்றவர்களுக்கு எந்த விதத்திலும் இங்கே வாழத் தகுதி இல்லை என்பது போலவும் நடந்து கொள்வார்கள். ஒருவனை மட்டந்தட்டுவதால் உண்டாகும் மகிழ்ச்சியை அவர்கள் தவறவிடுவதில்லை. என்னைப் பார்த்ததும் முதலில் அவர்களுக்கு அதுதான் நினைவிற்கு வரும் போலும். ”என்னடே..ஏதும்.. விசேசம் உண்டா”? என்றுதான் எடுத்த உடன் கேட்பார்கள். பிறரைப் பார்ப்பதே நடுக்கம் ஏற்படுத்தும் காரியங்களாக இருந்தன. யாரோடும் நெருங்கிப் பழக முடியாத கையறுநிலை. இயல்பாகப் பேசியிருக்க முடிவதில்லை. எங்கே குழந்தைகளைப் பற்றி பேசிவிடுவார்களோ என்கிற உளப் பதற்றம். அந்தரங்கமான உறுப்பினை திறந்து வைத்திருப்பது போன்ற அவமானம். கோமதியைப் உறவுக்காரப்பெண்கள் பிடுங்கி எடுத்தார்கள். ஊசி நுனிகளால் நகக் கண்களில் குத்தி இடைவிடாது வேதனையை ஏற்றிக்கொண்டே இருந்தார்கள். கல்யாண வீடுகளில் அவள் முகம் இறுகிப்போய் இருக்கும். ஏக்கப் பெருமூச்சுக்கள் இன்றி அவளால் இரவுகளை கடந்துவர முடியாது. குழந்தைகள் பிறந்து பொறுப்புகள் கூடிய பிறகுதான் அவள் பிசாசைப் போல ஆகிவிட்டாள்.
