கடும் வெய்யிலின் தாக்கத்தால் ஊரே ஏசி போட்டுக் கொள்ள துடித்தது. காற்றில்லாமல் வறுக்கும் கோடைக்கு பதுங்காதோர் யார். சுட்டெரிக்கும் வெய்யிலை பெருப்படுத்தாது அப்பெரிய நிறுவனத்தின் அழைப்பை ஏற்று எனது டூல்ஸ் பையுடன் புறப்பட்டு விட்டேன். வெய்யிலின் காரணமாக தொடர்சியாக இயங்கிய ஏசி இயங்கவில்லை என்ற புகாரின் அழைப்பினால் கீழவாசலில் இருந்த அந்நிறுவனத்தை அடைந்தேன்.

என்ன பழுது , ஏன் பழுதடைந்தது என கண்டுபிடித்து சரி செய்தேன் . பதினைந்து ஆண்டுகளாக எனக்கு வேலைகள் கொடுத்து  வரும் அந்நிறுவனத்தாருடன்  இணைந்து  மிகப்பெரிய வேலைகளைச் செய்தும் வருகிறேன். தனிக்கவனம் என் மீதுண்டு. அங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலான நபர்களின் பரிச்சயமும், பேச்சுவார்த்தையுமுண்டு . இங்கு வேலை பார்ப்போரில் பெண்களே அதிகம் .திருமணமாகாத இளம் பெண்களே எண்ணிக்கையில் முதன்மை.

இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றன இந்நிறுவனம் ஆரம்பித்து மிகச்சிறப்பாகவும் குறுகிய காலத்திலேயே லாபம் அதிகம் ஈட்டியது குறிப்பிடத்தக்க அளவில் பெயரும் பரவி முத்திரை பதித்தது. தொழிலாளிக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு மிக அரிதானது வேலை வாங்குவதோடு அவருக்கு தேவையானதையும் செய்து விடுவார். கண்டிப்பும் கருணையும் ஒருங்கே பெற்றவர் சிறந்த நிறுவனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனத்தை ஆரம்பித்தவர்  வயது மூப்பு என்று சொல்ல முடியாது ஏனோ திடீரென்று மரணித்து விட்டார். அவருக்கு பிறகு அவர் மனைவி அவர் அளவுக்கு இல்லை என்றாலும் திறமையாக தகுந்த நபர்களை கொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார் . நிறுவனர் மரணிக்கும் போது அவரின் ஒரே மகன் வெளிமாநிலத்தில் படித்துக் கொண்டிருந்தார் . நிறுவனரின் மனைவி பல சலுகைகளை நிறுத்தினாலும் பணி செய்பவர்களின் தேவைக்கேற்ப அவர் நினைத்தது மாதிரி ஏதாவது செய்து வேலையாட்களை தக்கவைத்துக் கொண்டார் அதில் எனக்கும் குறிப்பிட்ட இடம் எப்பொழுதும் உண்டு. மகன் படித்து விட்டு வந்ததும் கொஞ்ச காலம் சும்மாவே ஊர் சுற்றினார் எப்பொழுதாவது பார்த்துக் கொண்டால் அண்ணே சௌக்கியமா என்பார்

தற்போது ஆறு மாத காலமாக அவர் மேற்பார்வையில் நிறுவனம் இயங்கிவருகிறது . அம்மா  அவரின் செயல்களில் தலையிடுவதில்லை.

அவரிடம் புகார், தேவை எதாவது கேட்டால்

தம்பியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்பார் . எனக்கும் சற்று சிரமமான விஷயம்தான் தேவையில்லாமல் அதிக நேரம் காக்க வைப்பது. கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொல்வது போன்ற சிக்கல்கள் எனக்கும் முளைத்தன.

இவ்வேகாத வெயிலில் என்னை ஏசி இயங்கவில்லை என அழைத்ததும் அவர் தான். 

வேலையை பார்த்து விட்டு “சரிண்ணே முன்னாடி கவுண்டர்ல என்ன வேல பாத்தீங்கன்னு எழுதி குடுத்துட்டு வுச்சர் எழுதிட்டு வாங்க கையெழுத்து போட்டு தாரேன் பணம் வாங்கிக்கலாம்“ என்றார்

கூடவே வந்த டிரைவரிடம்

“இன்னிக்கு மதியம் சாப்பாடு வீட்டுல இல்ல , வெளில வாங்கிடுங்க “, பெரிய ஹோட்டலின் பெயரை சொல்லி 

“இரண்டு மட்டன் பிரியாணி , இரண்டுசிக்கன் லாலிபாப், ரெண்டு நாண், ஒரு பட்டர் கீரின் பீஸ் மசாலா  , பிள்ளை களுக்கு ஒரு பேமிலி பேக் பாதாம் ஐஸ்கீரிம் வாங்கிடுங்க“ 

என்னிடம்

“வாங்கண்ணே ஆபீஸ் ரூம்க்கு போவோம்“ என்றார்.

பணம் வாங்கும் வேலை முடிந்தவுடன்  அவர்கள் கொடுத்த பழச்சாறை பருகினேன் . கோப்பையில் இருந்த பிசுபிசுப்பு கையில் ஒட்டியதால்  கழுவ வாஷ்பேசினை நோக்கி சென்று கையை கழுவினேன். பேசினுக்கு சற்று அருகில் ரசிகா அழுது கொண்டிருந்தாள் , ஐஸ்வர்யா ஆறுதலாக ஏதே  சொல்லிக் கொண்டிருந்தாள் . ரசிகா மிக இளவயதிலேய காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஒடி திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு கணவனிடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையும், வீட்டில் அம்மா  இறந்து அப்பா மட்டும் படுத்தபடுக்கையில் அவரையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் வருமானமின்றி தத்தளித்த போது நான் தான் நான்கு வருடங்களுக்கு முன்பு அங்கு வேலை வாங்கிக் கொடுத்தேன்.

தற்போது அழுவது ஏன் என்ற கேள்விக்குறியுடன் அனுகினேன்

“ஏம்மா அழுவுற என்னாச்சி“

“அண்ணா சம்பளம் சரியா வரலன்னா வீட்டுல அப்பாவுக்கும் மருந்துவாங்க பணம தேவை சம்பளம் ரெம்ப பிடிச்சிகிட்டு தர்றாங்க என்ன பண்ணுறதுன்னு தெரியல“

“ஏம்மா சம்பளம் எதுக்கு பிடிக்கிறாங்க PF. பிடிச்சா நல்லது தானே

முன்னாடி சரியாதான தந்தாங்க“

“அப்படி இல்லேண்ணே ஐந்து நிமிசம் தொடந்து மூனு நாளு லேட்டா வந்த ஒரு நாள் சம்பளம் கட்டுண்ணே “

“சரி ஏன் லேட்டா வர்ற முன்னாடியே வந்துற வேண்டியது தானே“

“எல்லா நாளும் இல்லேண்ணே உங்களுககு தெரியாததா? சில நாளு அப்பாவுக்கும் புள்ளங்களுக்கும் சமச்சி வச்சிட்டு ஸ்கூலுக்கு கிளப்பி விட்டுட்டு பஸ்ஸ புடிச்சி வர்றத்துக்குள லேட்டாயிடுது பாஞ்சி நிமிசம் லேட்டாவந்தா அரை நாள் சம்பளம் கட்டுண்ணே இப்படி பண்ணா எப்படிண்ணே குடும்பத்த பாத்துகுறது.“

“இது ஒனக்கு மட்டுமா ? எல்லாருக்கும் சேத்தா? “

“எல்லாருக்கும் இதாண்ணே , எல்லாம் செம கடுப்புல இருக்காங்கண்ணே“

“என்னாது திடீர்னு இது மாறி யாரு பண்ணது?“

“ஓனர்தாண்ணே  மூனுமாசமா இது மாரி நடக்குது என்னா பண்றதுன்னு தெரிலண்ணே“

“சரி நா வேண்னா கேட்டு பாக்கவா?“

“வேணாண்ணே எல்லாம் பாத்துட்டோம் மசிய மாட்டுறாரு  எங்கள்ட்ட ஒத்தும இல்லேண்ணே  , நீங்க ஒங்க பேர கெடுத்துக்காதீங்க  “

“ம் சரி  எனக்கு ஒரு சந்தேகம். , நேரத்துக்கு வந்தா சரியான நேரத்துக்கு போய்டலாமா?“

“அது கூடாதாண்ணே வேல இருந்தா முடிச்சிட்டுதா போவனும்மா “, 

“அது மட்டும் சரியாம்மா? கேக்க யாரும் இல்லேன்னா இதான் நடக்கும் பத்து ரூபாய்க்கு“ 

“கஷ்டப்பட்டிருந்தா தெரியும்“

என் மனதிற்குள்  எண்ணங்கள் ஓடியது ஒரு வேளை சாப்பாட்டிற்கு இரண்டாயிரத்துக்கு மேலே செலவு ,  இதெல்லாம் ஒழிக்கவே முடியாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *