யாரோ உலுக்கினார்கள்.

தடக்கென எழுந்து உட்கார்ந்தான்.

கண்களைக் கசக்கினான்.

“ஃபோன்.”

“யார்?”

“நந்தினி”

சிந்து மொபைலை நீட்டினாள்.

“என்ன நந்தினி?”

ஃபோனிலேயே  நந்தினி பெருங்குரலெடுத்து அழுதாள்.

பதட்டமானான்.

“சொல்லு நந்தினி என்னாச்சு?”

“மிருது..மிருது..”

“மிருதுக்கு என்ன?”

“தூக்க மாத்திரைச் சாப்பிட்டுட்டா.”

“கடவுளே… எப்டி இருக்கா?”

“தெரியல கண்ணா…டாக்டர் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்க.”

“இப்ப எங்கேயிருக்கே?”

“ஜேகே ஹாஸ்பிட்டல். பயமாயிருக்கு கண்ணா.”

“தோ….உடனே வர்றேன்.”

“என்னாச்சு?” சிந்து கேட்டாள்.

“மிருது தூக்க மாத்திரை சாப்பிட்டாளாம்.”

“ஏன்?”

“தெரியல. உடனே போகணும்.”

“நானும் வர்றேன்.”

“சீக்கிரம்.. கிளம்பு.பெரியவனை எழுப்பி கதவச் சாத்திக்கச் சொல்லு.. கையில எவ்ளோ பணம் இருக்கு.”

கார்டு எடுத்துக்கோங்களேன்.”

“அவசரத்துக்குத்தான் ஏடிஎம்ல அலைய விடறாங்களே.”

ஜேகே ஹாஸ்பிட்டல்.

இரவிலும் பரபரப்பாய் இருந்தது.

ஐ.சி.யு வாசலில் நின்றிருந்த நந்தினி ஓடிவந்தாள்.

தலை கலைந்து கண்களில் நீர். சிந்துவைக் கட்டிக் கொண்டாள்.

“எப்டி  இருக்கா?”

“ஒண்ணும் சொல்லமாட்டேங்கிறாங்க.”

“போய் பாத்தியா”

“பாத்தேன். டிரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. சீஃப் டாக்டர்  வந்தாதான் சொல்லுவாங்களாம்.”

“இரு. ராமச்சந்திரன்கிட்ட பேசறேன்.”

ராமச்சந்திரன் குரல் தூக்க கலக்கமாயிருந்தது.

“ஸாரி.. சந்திரா.”

“பரவால்ல சொல்லு.”

“என் ஃப்ரெண்டோட பொண்ணு உங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆயிருக்கா.”

“என்னாச்சு..?”

“பாய்ஸன்.”

“ஓ.. என்ன சொல்றாங்க?”

“சீஃப் வரணும்னு சொல்றாங்க.”

“நான் வரவா?”

“வேண்டாம்..?”

“ஓ.கே. பக்கத்துல இருக்கற டியூட்டி டாக்டர்கிட்ட ஃபோனைக் கொடு.”

ராமச்சந்திரன் பேர் சொன்னதும் டியூட்டி டாக்டர் பதறினான்.

 

மிகச் சரியாக பத்து நிமிஷத்தில் ராமச்சந்திரன் வந்தான்.

“நாந்தான் வேண்டாம்னு சொன்னேனே சந்திரா..”

“பரவால்ல… வெய்ட் பண்ணு. பாத்துட்டு வர்றேன்”

திரும்பி வரும் போது சின்னப் புன்னகையுடன் வந்தான்.

” கவலப் படற மாதிரி ஒண்ணும் இல்ல கண்ணா. க்ளீன் பண்ணிட்டாங்க. எல்லாம் வெளில வந்துடுச்சு. பத்து நிமிஷத்தில கண்ணு முழிச்சிடுவா.. பாத்துக்கச் சொல்லு.”

“தேங்க்ஸ்டா.”

நந்தினி வெளியே வந்து சிந்துவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“தேங்க்ஸ் சிந்து. தேங்க்ஸ் கண்ணா.”

மெலிதாக விசும்பினாள்.

“அழாதே.. என்னாச்சு?”

“நீட் மார்க் ரொம்ப குறைச்சலா வாங்கிருக்கா…”

“ஸோ…  நீ திட்டினியா?”

“நான் திட்டுவேனா கண்ணா?…  அவளுக்கே தாழ்வுணர்ச்சி. டாக்டராயிடலாம்னு நம்பிக்கையா இருந்தா.. அதான்..”

“அதுக்காக.. இப்படியா?”

“தனியா படுக்க வேணம்னு என் கூடத்தான் படுக்க சொல்லிருந்தேன்.  நான் அசந்துட்டேன்… என் மாத்திரையை அள்ளிப் போடுட்டா.. நல்லவேளை நடுவுல முழிச்சதால பாத்தேன். இல்லன்னா .. நான் என்ன பண்ணிருப்பேன் கண்ணா?”

சிந்து அவள் கண்ணீர் துடைத்தாள்.

“நந்தினி கொஞ்ச நேரத்துல் மிருது முழிச்சிடுவா..  அழாத.. அவகிட்ட கோபப் படாத.. சிந்து பக்கத்துல இருப்பா..”

” இல்ல கண்ணா.. அவ கண் முழிக்கற வரைக்கும் இருங்க போதும்.”

“லூஸா நீ.. சிந்து இருக்கட்டும்.”

சிந்து நந்தினியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“நான் இருக்கேன்.   கண்ணா போகட்டும்.”

நந்தினி தலையசைத்தாள்.

மொபைலின் சப்தத்தில் தூக்கம் கலைந்தது.

சிந்து. “இன்னுமா தூங்கறே..”

சட்டென்று எழுந்தான்.

“என்ன.. சிந்து..  மிருது எப்படி இருக்கா?”

“ஓ.கே.. நார்மலாய்ட்டா.. ”

“டாக்டர் வந்தாரா?”

“பாத்துட்டார்.. டிஸ்சார்ஜுக்கு சொல்லிட்டார்… வர்றியா?”

மிருதுளா தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்.

“போலாமா?”

தலையசைத்தாள்.

“ஸாரி அங்கிள்.”

அவள் கன்னம் தட்டினான்.

“பில் கட்டிடவா?”

“கட்டிட்டேன் கண்ணா.”

“நம்ப கார்ல போய்டலாம்.”

“நீ ஆபிஸ் போகணும்ல..”

“கொஞ்சம் லேட்டா போய்க்கலாம்.”

“பசங்க.”

“அனுப்பிட்டுத்தான்  வந்தேன்.”

சிந்து மிருதுவின் கன்னம் தடவினாள். கூந்தல் நீவினாள்.

மிருது தாவி சிந்துவைக் கட்டிக் கொண்டு விசும்பினாள்.

முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தாள்.

நந்தினி உதடுகள் நடுங்க நின்று கொண்டிருந்தாள்.

மிருது நகர்ந்து முகம் துடைத்து அம்மாவைப் பார்த்தாள்.

மெலிதாகச் சிரித்தாள்.

“ஸாரிம்மா.”

“போடீ.. இவளே.”

நந்தினி முகம் பொத்திக் கொண்டாள்.

“சரி..சரி… மிருது உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே..”

“என்ன அங்கிள்? மிருது தயங்கிக் கேட்டாள்.

“டாக்டராவதற்கு முதல் தகுதி எது மிருது?”

“நீட் மார்க்.”

“இல்ல…”

“ஆம்பிஷன்”.

” இல்ல…ஒரு உயிரின் மதிப்பு அறிந்திருத்தல்.”

மிருது கண்களைத் தாழ்த்தினாள்.

“பிறர் உயிரின் மதிப்பு மட்டுமல்ல.  தன் உயிரின் மதிப்பும் அறிந்திருப்பது டாக்டருக்கான முதல் தகுதி…  புரிகிறதா  மிருது?”

தலையசைத்தாள். சிறிது யோசனையிலிருந்தாள்.

“ம்.. நாங்க கிளம்பலாமா மிருது?”

“தேங்க்ஸ் அங்கிள்.. திருச்சூர்ல போய் படிக்கிறேன். அடுத்த முறை நிச்சயம் மார்க் எடுத்துடுவேன்.”

மிருதுவின் கண்களில் ஒளி தெரிந்தது.

ஒளியே இருளை விரட்ட வல்லது.

 

********************

 

 

 

2 Comments

  1. மிகச் சுருக்கமான உரையாடலில் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையின் வினோத விளையாட்டை சொன்னவிதம். அருமை

  2. ஒளி மிகுந்தது
    இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை
    கதை அருமை
    சிறப்பாக உரையாடல்
    நடை அருவி போல் உள்ளது
    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *