ஆகாச முத்து கவிதைகள்

திறக்காத திறப்பின் வாசல்

அரசமர வேர் விழுதுகள்
ஜடைபின்னிக் கொண்டிருக்கும்
பசும்பாசி போர்த்திய பாழ்மடம்.
ஏதோ.. ததா சிதா நதா சித்தரென
கதவின் கல்முகப்பில் அழிந்தும் அழியாமலும்.
திறக்கப்படாத கதவின் கிரீச் ஒலி
கீரிப் பிள்ளைகளின் ஒலி
ஒரே வீச்சம் ஒரே ஒரு திறந்த ஜன்னல்
உள்ளே நிழல்களின் அசைவுகள்
வெளவால்கள் விரித்த சிறகுப் படுக்கைகள்
இருள் குளிர் குளிர் இருள்
கதவைத் தட்டிக்கொண்டே இருந்தேன்
பாம்படத் தாழ்ப்பாள் திறக்கப்படவே இல்லை.

வெயிலடிக்கும் சாலைக்குத் திரும்பினேன்
இடையறாமல் ஒரு பூவின் மொட்டைத் திறக்க
சூரியன் வந்தது போல நிதானம்
நரம்புகள் புடைத்து சுருங்கி வற்றிய கரமொன்று
நெஞ்சக் கதவைத் தட்டியபடி இருந்தது
உட்புறம் வணங்கியபடி நின்றிருந்தேன்.

மரணத்தைச் சாணை பிடிக்கும் இரயில்

யாருடைய கையோ காலோ அல்லது உடலே நசுங்கித்
தூக்கிச் செல்கின்றார்களோ…
மேல் இருக்கையிலிருந்து பார்க்கையில்
ஜன்னல் வெளியே கால்கள் சப்பாத்துகளின் ஒலி
அய்யோ… அய்யோ… அலறலகள்
இரண்டுநிமிடம் மட்டுமே நிற்பது
விபத்தினால் மூன்று நிமிடங்கள் தாமதித்தது.
ஒருவருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டிருந்த உறைந்த கணங்கள்.
சக்கரங்களின் அடியில்
பயணிகளின் இருதயத் துடிப்பைச் சாணை பிடித்தபடி
உச்சபட்ச வேகத்தில் தடதடக்க
“ஒன்றுமில்லை யாருக்கும் ஒன்றும் நேரமில்லை. நம்புங்கள்….
ஃபிளாஷ் நியூஸ் நெருப்பிலிருந்து தப்பித்து
உங்களையும் தூக்கிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறேன்”
யாரும் பதட்டமடைய வேண்டாம்
விடியலின் வாசலில் இறக்கிவிட உத்தரவு”
என்றது ரயில் வண்டி.
அனைவரும் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டனர்.

சட்டி அடிப் பிடிக்கிறது

சட்டி அடிப்பிடித்துக் கரியும் வாசனை
அடிக்கடி நாசியில் ஏறுகிறது
எங்கே சென்றாலும்
எதையோ மறந்துவிட்டதாய் அச்சட்டி
அடிப்பிடிக்கும் வாசனை சுழன்று வரும்
அன்றாடங் கழுவிக் கவிழ்த்து வைக்கும்
திருவோட்டுக்கு அவனா வஞ்சகம் செய்தான்
கைப்பிடிக் கொள்ளுக்கு ஓடும்
பந்தயக் குதிரை அவன்
தனி அடுப்புக்குச் சொந்தக்காரன்
பசிநெருப்பில் வற்றி வதங்கிய கும்பி
நெய்யின்றி மணக்கும் அதிருசிக் குழம்பை
கைக்கெட்டுந் தூரமிருந்தும் நெருங்க முடியவில்லை
கும்பியையும் சட்டியையும்
நெருப்பிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்
ஒன்றுக்குள் ஒன்று பொருந்தி
ஒட்டி உறவாடுவது நல்லதல்ல.

பீட்டர்ஸ்பெர்க் நாயகன்

எவ்வளவு வேகமாக வழுக்கிச் செல்கிறது
திசைகள் எட்டையும் மடித்து
ஆன்ட்ராய்டுக்குள் அடகுவைத்து விட்டோம்
இப்படி லைட்டா தேய்த்தால்
பீட்டர்ஸ்பெர்க் போய் நிற்கிறோம்.

அழுக்கேறிய பழைய கோட் அணிந்து
போய்க் கொண்டிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி
வழுக்கிச் செல்லும் சாலைப் பேருந்துலிருந்து
நிறைய ரசிகர்களோடு ரஸ்கோல்நிகோவும் அவரைக்
கையசைத்து அழைக்கின்றார்கள்.
இடைநிறுத்தம் செய்யும் வழி தெரியாமல்
கண்ணில் நீர்மல்கக் கடக்கின்றனர்.

துறைமுகம் நோக்கியோ ரயில் நிலையம் நோக்கியோ
செஞ்சதுக்கம் நோக்கியோ போய்க் கொண்டிருக்கிறார்.
முகத்தைத் திருப்பாமலே
தோல் சுருங்கிய
நரம்புகளில் கருணை நெகிழும்
பிராத்தனைக் கரத்தின் சிறுஅசைவு.

கைகளைப் பின்னால் கோர்த்து விசிலடித்துக் கொண்டு
குளிர்ந்த கற்கள் பாவிய பாதையில் செல்லும்
தஸ்தாயெவ்ஸ்கியின் காலணிச் சந்தடிக்கு
வழுக்கும் வேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *