கிரி ராம் பாரதியின் 110 கவிதைகள்

1.ஊழிக்கு ஒரு நொடி

 

பூமி

வான்

ஒன்று தாய்

ஒன்று தந்தை

குழந்தைகள் நாம்

அவர்கள் கூடல் நீடிக்கும்வரை

ஊடல் கொண்டனர்

ஊழி

 

2.உறுபசி அறுத்தல்

 

கைகள் பெறுவது இயற்கை

கைகள் கனிவது ஊழ்

அக்கனிவு

நம்மிடமும் கசியப்பெற்றால்

நாம் பெறுவது வரம்

அந்த அன்னை யாராயினும்

அன்னையரைப் போல

கைகள் கனிந்தவர்

வேரெவர்

 

3.ஆதியும் அந்தமும்

 

கோவங்கள்

பதபதைப்புகள்

சில அழுகைகள் கண்டு

அம்மா

இதற்கெல்லாம் என்னிடம்

ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்

என்றிருந்தேன்

இன்று

என் செல்ல மகள்

‘போப்பா உனக்கு ஒன்னுமே தெரியல’

என்கிறாள்

 

கடந்த காலத்தை

எதிர்காலம் கொண்டு

நிகழ்த்திக் காட்டுகிறது

நிகழ்காலம்

முகை முறுவல் பூக்க

 

4.ஒரு கணம்

 

மழை நின்றாகிவிட்டது

தூறல்

ம்….. லேசாக இருக்கும்

கிளையமர்ந்த புழுதிக்குருவி

பொங்கு சிலிர்த்தது

ஒரு கணம்

வெடித்த பஞ்சுப் பொதி

கூடுதலாக சிறகுகளும்

 

5.நந்தி

 

படுத்துக் களைத்து

எழுவதற்காக

முன்னங்காலில் ஒன்றை

முன்னால் வளைத்தும்

நாசி துழாவும் நாவுடன்

வால்

சுழன்று படிந்தும்

தலையில் வைத்த

ஒற்றை இலை துணைகொண்ட

செம்பருத்தியை

விழாது தாங்க வேண்டும்

என்று

ஒரு தொடுகையில்

சொல்லிவிட்டுப் போன

பாப்பாவுக்காக

உறைந்து நிற்கிறார்

நந்தி

 

6.கனி

 

மரத்தின் கரு

விதை

எனில்

கருக்குடம் கனி

 

அன்னையர்

இனிப்புகளை மட்டுமே

அறிந்தவர்களா

 

அல்லது

 

தன் வழியில்

உயிர்த்து வரும்

ஆயிரம் ஆயிரம்

குழந்தைகளும்

இனிமையில் மட்டுமே

திளைப்பவை

என்று அறிந்தவளா

அந்த மூதன்னை

 

7.சொல்

 

சொல்

எப்படிச் சொல்வேன்

அறிதல் வெளிப்படும் சொல்லை

தவிப்புதான்

நாள் கணக்கில்

தவம் போல

வந்து விழும் சொல்லுக்காக

காத்துக் கிடக்கிறேன்

 

தவித்தலைந்து

கையறு நிலையில்

வந்தமர்ந்திருக்கையில்

வான் பொழியும் விரிமலர் போல

வந்து விழுகிறது சொல்

சொல் அகமொலிக்கையில்

தூக்கம் தொலைந்துவிடுகிறது

உடல் களைப்பு மாய்ந்துவிடுகிறது

பித்து போல

திரும்பத் திரும்பச் சொல்லி

கிளியாகிறேன்

சொல்

சொல்லாக

சொல்லிச் சொல்லி

கூத்தாடுகிறேன்

 

அனைவர் முன்பும் யாருமறியாமல்

சொல் தரும் வானே

எப்போதும் உம் குழந்தைமேல்

உமது பெருங்கருணை

பெருமழையெனப் பொழியட்டுமே

 

8.கூதல்

 

தொட்டெழுப்பி

அணைத்துக்கொண்டது

அந்த அன்பை மறுத்து

கண்ணுறக்கம் கொள்ளும்

கொடிமனம் எனக்கில்லை

இருந்தும்

அணைப்பில்

இவ்வளவு இறுக்கம்

வேண்டாமே என்று கூறி

போர்வையையும் தலைக்கட்டையும்

கொடுத்தேன்

விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டது

காலை நடைக்கும்

அழைத்தது

தழுவலில் விலகலின்றி

புறங்கைக்கட்டோடு போனோம்

வெளியையும்

மறுகணமில்லாதபடிக்கு

அணைத்திருந்தது

இவ்வணைப்புக்கு

அப்பால்

வேலிகளை இணைத்திருந்தது

அணைப்புக்கு ஏங்கி விழுந்த

சிறுவான் துண்டு

 

9.ஒளிர்கண்

 

ஒளிர்கண்

விண்ணக விரிவை

நீர் பொங்க நோக்கியேயிருக்கிறது

விண்ணின் காதலெல்லாம்

அங்கம்

குழைய வைக்கும்

பல்தொடுகை தீண்டல்கள்

காதலில் கனிதலென்றால்

பேரன்பைப் பொழிவதோ

பொழிவதென்றால்

உயிர் வதையைத் தணிப்பதோ

நலுங்கும் கண்ணின்

பேரெழில் பகரின்

நான் கூட பெருங்கனிவின்

ஒரு துளியல்லவா

 

10.பெருந்தவப்பேரு

 

குழுமிய இதழ் தொகை

மொட்டின் சிறு விரிவில்

தேன் தழும்பும் கணங்கள்

 

பேரியற்கையின்

பெருரகசியப் பொருளை

நாம்பிய படியும்

அவ்வப்போது அதை

காற்றில் தவழவிட்டு

என் அறியமுடியாமையை

ரசித்துச் சிரித்து

மெல்ல விரல் மூடி

உள்ளங்கை குழிவின்

ஆழத்து அறையில்

அடைத்துக்கொள்கிறாய்

 

ஓங்காரம் பிறந்த கணத்தின்

பொழுதை

ஒளிர்கண் குளிரில்

மெத்தெனத் தோளணைத்து

உளம் நிறைக்கும் உணர்வை

எனக்களித்துவிட்டாயே

இதுதான் இவ்வாழ்வின்

பெருந்தவப்பேரோ

 

11.எங்ஙனம்

 

எங்ஙனம்

உதித்தது இந்த

பசுந் துளி

 

உரக்குழியின் வெம்மையில்

வெந்து மண்ணாகும்

சக உயிர்பெருக்கின் இடையில்

வெளி நிறைந்து விரிந்த

எந்தக் கதிரின் கை

வந்து தொட்டெழுப்பி

மேலேற்றிக்கொண்டு வந்தது

 

யார் வார்த்த

நீரின் குளுமையில்

உறக்கம் கலைந்தது

யார் இயக்கியது

உள்ளுறைந்த உயிர்விசையை

 

நிமிர்ந்துவிட்ட பிறகு

உயிரின் நடையை

தடுப்பதற்கு நாம் யார்

 

12.ஓர் உயிர்

 

உடலென்னவோ சிறியதுதான்

அதில் விரிந்த வண்ணங்கள்

விசிறி விசிறி

விரித்து காட்டுகின்றன

விரிந்த புடவியழகின்

அருந்துளியை

சுவைகளால் நிறைந்த உலகில்

இனிமையை மட்டுமே

தொட்டெடுக்க படைக்கப்பட்ட

ஓர் உயிர்

 

13.ஈரம்

 

முதலில் அது உணர்ந்தது

அதிர்ச்சியின் சலனம்

பிறகது கேட்டது

கொஞ்சமும் நேசமற்ற இயந்திர ஒலி

காலின் நரம்புப் புடைப்பை

வெட்டி முழங்குகிறது அது

 

இப்புவியின் இனிமைகளை அள்ளி

தன்னைப் படைத்துக்கொண்டு

கைகள் விரித்து

சிறகை

விரிக்கத் தெரிந்த மனங்களையெல்லாம்

அணைத்துக்கொள்ளும்

 

வான் நோக்கியெழுந்து தவம் கொண்டு

நீர் அறியவியலா

பேருண்மைகளையெல்லாம் அறிந்து

உன்னதங்களின் உயரத்தை அடைந்ததாலோ

என்னவோ உங்களுக்கெல்லாம்

பேரன்பு பேயுருவாகத் தெரிய

சாய்த்துவிட்டீர் உமது பாதங்களுக்குச் சமமாக

உமது பாதத்தடங்கள் ஏறி நிற்க

அலறிவிழுந்த அதன் உயிர் வதையை

அறியுமோ உமது சிறுமதி

 

உங்கள் கூரரம்பட்டதில்

அதன் அலறல் இலைகளில் ஒலியாக

தெறித்தது

அன்னை நிலமெங்கும்

அதன் உதிரமே மலர்த்தேனாக

கசிந்தது

 

மடியேந்திய பிள்ளைக்கனிகளை

மண்ணோட விட்டீரே

தாய்க்கொலை புரிந்துவிட்டீரே

உள்ளத்தில் ஈரமில்லாது செய்துவிட்டீரே

புவியின் மேல் ஆராவடுவை

 

14.சித்திரக்காரர்

 

மேலேறி அமர்ந்துகொண்டார்

என்றுதான் நினைத்தேன்

கவனிப்பாரா என்று தெரியவில்லை

நாங்கள் மட்டுமல்ல

சுற்றியிருந்த அனைவருமே

அவரவருக்கான

வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்

 

ஓரத்துக் குழாயில்

பால்கேனை கழுவவந்த பால்காரரிடம்

நீரடித்த பெண்களின் சலசலப்பு

 

சைக்கிளில் கரும்புக்கட்டோடு சென்றவர்

கோந்தாளையை தவரவிட

இவ்வீட்டுக்காரர் அவ்வீடொட்டித் தள்ளியதில்

அங்கே நான்கு புருவங்கள் இடித்துக்கொண்டன

 

இருவர் சேர்ந்து

மணிநேர லயிப்பில் உருவாக்கிய

கோலத்தில் விழுந்த பொடுசுக்கு

‘பொச்சடங்காதா’

என்று பொரிந்த தாய்

 

கட்டிட வேலை முடித்து

கைகால் கழுவையில்

நீரடித்துக் கூச்சலிட்ட இளசுகள்

 

நகராட்சி குப்பைத்தொட்டியில்

அகழ்ந்த சேலையை

அவரது தேவைக்குக் கிழித்துக்கொண்டிருந்தார்

‘ஆந்திரா பைத்தியம்’ என்று எங்களால்

பெயரிடப்பட்டவர்

 

அதே நகராட்சி குப்பைத்தொட்டியை ஆய்ந்து

தன் ஆணைக்குறியிட்டு

எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி

ஓடியது நாய்

 

மாடியில் விளையாடிய பொடுசுகளின்

கைநழுவி ‘அப்பாடா’ என்று

சாக்கடையில் வந்தமர்ந்தது பந்து

 

இவற்றுக்கிடையில்

நான் அவரை கவனிக்கிறேன்

என்பதையும் சேர்த்து கவனித்தார்

 

எங்களின் அத்தனை தனித்த

பேச்சொலிகளும் மூச்சொலிகளும்

ஒன்றாகி முழக்கமென இரைய

அத்தனைக்கும் மேலமர்ந்து

தன்னினிய குரலில் பாடியபடியே

எதிர்காற்றில் தன் மென்சிறகுகளால்

அந்தர வெளியின் பொன்மார்பில்

நமக்கெல்லாம்

புலப்படா ஓவத்தைத் தீட்டினார்

 

15.உயிர்ப்பு

 

தளிர் எதன்பொருட்டு உயிர்த்ததோ

 

மலர் எதன்பொருட்டு மணத்ததோ

 

தேன் எதன்பொருட்டு சுவைத்ததோ

 

கனி எதன்பொருட்டு கனிந்ததோ

 

இதயம் எதன்பொருட்டு திளைத்ததோ

 

அதன்பொருட்டு அங்கேயே

 

உறங்கவும் சென்றன

 

புடவியின் அருநிகழ்வுகள்

 

16.வரம்

 

மெத்தென மெல்லுடல்

மலரோடுதான் உவமிக்கப்படுமோ

எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது

அருநிகழ்வு தான்

எந்தன் கைகளின் மேல்

நிகழ நிகழ நெகிழ்ச்சி

இந்த நெகிழ்ச்சிக்காகவே

என்னையும்

நெகிழ்ந்தேந்தினரோ

நெகிழ்ச்சியை கையேந்தி அளிக்கவே

நிகழ்ந்தேனோ

நம்மைப் புவியும்

புவியை மண்டலமும்

அதனை வெளியும்

புடவியை

யார் ஏந்தி நெகிழ்ந்தார்

பிள்ளைகள் தன் பிள்ளைகளை

நோக்கியே தவமிருக்கின்றன

இதுவே அளிக்கப்பட்ட வரமோ

இந்த வரமன்றி

எஞ்சுவது வேறென்ன

 

17.தேன்

 

வண்ணத்துப் பூச்சி

ஏனது மலரை நோக்கியே வருகிறது

மலர் மணம் கொண்டிருப்பதா

மலர் தேன் கொண்டிருப்பதா

பட்டுப் பூச்சிக்கு தேன் சுவைப்பதா

மலருக்கு அழகு போதவில்லையா

மணத்தால் மயக்குகிறது

தேன்சுவையால் இழுக்கிறது

இரண்டும் எதைத் தேடுகின்றன

 

புற்றெழத் தவமியற்றியவர்களின் கதைகள்

இம்மண்ணுக்குப் புதிதல்ல என்றாலும்

யார் பார்த்ததுண்டு

யாருக்கேனும் பார்க்க வேண்டுமெனில்

இதோ

தவத்தில் புற்றெழ ஓருயிர்

பெருங்கருணையோ

ஊழின் நெறியோ

தவ வலியோ

புற்றவிழ மலர்ந்தது மலர்

மலரிடம்

வண்ணத்துப் பூச்சியும்

தவம் கொண்டு

அருகமர்ந்து

உணர்ந்தொழிந்து பெறுவது எதை

இருவரும் எதைத் தேடினரோ அதை

 

தேன்

பெற்ற பிறகு

மலரிலிருந்து மணம் எழுந்ததும்

இது சென்றமர்ந்து

மலரிலிருந்து மலர் எழுந்தது

 

18.அகவல்

 

மெல்ல மெல்ல

தனது கணக்கிடவியலா கால்களின்

அடி வைப்புகளில்

நகர்ந்து வந்து தாண்டிச் செல்கிறது

கதிர்க்கூட்டம்

இறுதி நடை வைப்புகள்

மறையும் தருணம்

கூதலில் ஆழ

எங்கோ ஒலிக்கிறது அகவல்

செல்திசை நோக்கி

அனல் கொண்டு

மீண்டு வரும்படி

 

19.விதை

 

விதை

அது தன்னை மறைத்துக்கொள்வதில்

இருந்தே

புத்துருக்கொள்கிறது

 

உருக்கொள்ளாது மறைந்த விதைகள்

என்றென்றைக்குமான

மாறாத உருவை அடைந்துவிடுகின்றன

 

நமக்காக

மாறாப் புன்னகையோடு

நமக்காகவே உருக்கொள்ளும்

சிறுவிதை

ஏனித்தனை எடை கொண்டதாக ஆகிறது

எடை கொள்ளும்போதே

வலுக்கொள்கிறது

ஆழ்ந்து அமைகிறது

தவிர்க்கவியலா இடத்தையும்

அடைகிறது

அத்தகையதொரு விதை

என்னுள்ளத்துள்ளும் மறைந்தமையட்டும்

எடைகொள்ளட்டும்

வலுக்கொள்ளட்டும்

ஆழ்ந்தமையட்டும்

துளிர்த்து கிளைபரப்பி

மலர்ந்து மணம் வீசட்டும்

 

20.நல்லாள்

 

ஒருபோதும்

கண்களுக்கு அகப்படாத

அகன்று விரிந்த உரு

மெல்ல வாய் திறக்கிறது

தவித்த வாய்கள்

தணிந்து செல்கின்றன

காலத்துக்கும்

 

பேணுவதன்றி

பெற்றவள் செய்வதற்கு

ஒன்றுமில்லையே

 

ஒன்றுமில்லாதவள்

ஏன் பெற்றாள் ?

 

இது என்ன கேள்வி

பெறுவதே நியதி

பெறுவதே உவகை

பெறுவதே வரம்

 

21.ஆடல்

 

கதிர் குத்தியிறங்கும்

பின் மதியம்

முதிரிலைகள் மெல்லச் சரிகின்றன

ஆட்டம் முடிந்த களைப்பில்

தடித்து வெடித்த பட்டைகளை

மண் பூசிக் காக்கின்றன கரையான்கள்

தொடுப்பை விட்ட

பூக்களும் பிஞ்சுகளும்

தாய் மடியில் பொதிகின்றன

விளையாட்டில் தோற்ற

கண்ணீரை மறைக்க

பற்றிய

குறுமலர் விரிவெல்லாம்

செவிகளாய் மாற

தேனீக்கள் வந்தமர்ந்து

சொல்லிச் செல்கின்றன

வித்தாகவும்

விருட்சமாகவும்

ஆகி ஆடும் ரகசியத்தை

 

22.ஒருவனின் மரணம்

 

இங்கே

ஒருவனின் மரணம்

யாதும் ஊரே

யாவரும் கேளிர்

யாதும் அதுவே

அதுவே யாதுமாய்

உணர்ந்தொழிந்து கிடக்கிறான்

 

அவன் மொழி வழி ஒளிர்பவன்

அவ்வொளிவெளியில்

உற்றோர் ஒரு பக்கத்தையும்

நண்பர்கள் ஒரு பக்கத்தையும்

எதிர்த்தோர் ஒரு பக்கத்தையும்

மீண்டுமோர் முறை

புரட்டிக்கொண்டிருக்கின்றனர்

ஆரத்தழுவியும்

அழுதுபுலம்பியும்

ஓரக்கண் பார்வையில் கடந்தும்

 

பெருவெளியின் ஒளியை

பேரிருளின் பரப்பில்

பிரம்மம்

தன்னைத்தானே தொட்டு

தன்னில்

எழுதிக்கொள்கிறது

கவியை

 

23.கசந்து

 

அந்த உள்ளம்

எத்தகைய

வேதனைகளைக் கண்டிருந்தால்

இப்படி

உள்மாற்றம் நிகழ்ந்திருக்கும்

 

கசந்து

கசப்பில் ஊறி

கசப்பையே அளிக்க

எத்தனை அழுகையோ

 

கசப்பில் இருந்து

கசப்பைக் கழித்தால்

எஞ்சுவது

கரிக்கும் உப்பு

 

இத்தனை உப்பை

நீர்க்கச் செய்ய

அதன் உள்ளில்

ஒரு துளி

இனிமை ஊற

எத்தனை பொழிய வேண்டும்

ஊழி மழை

 

24.ஒரே காற்றில்

 

அன்னை

ஏதோ பாடியபடி

திண்ணையிலமர்ந்து பூக்கட்ட

மல்லாக்கப் படுத்து

குறுவிரல் மடக்கி நீட்டிய

குட்டி

குப்புறத் திரும்ப

தலை வைத்தது

அன்னையின் பாதத்தில்

கண்ணில் பட்ட

கொளுசு மணிக்கொத்து

விரலுக்குச் சிக்க நழுவியடங்க

ஒவ்வொரு தொடுகையும்

தாளமிட்டது

தாளமொவ்வொன்றுக்கும்

சிறுஞ்சிரிப்பு

ஒரே காற்றில்

மரமும் கன்றுமென

 

25.முப்புள்ளி

 

மெய்மையும்

தூய்மையும்

மென்மையும்

வரமாக

அளிக்கப்பட்டு

அனுப்பப்பட்டவர்கள்

 

கயமையும்

கசடும்

கடுமையும்

சாபம்

பெற்று

தவிக்கின்றனர்

 

வரம் பெறுவதும்

தலை கணம் பெறுவதும்

துயர் சாபம் அடைவதும்

என

அலைகின்றனர்

 

ஒன்றோடொன்று

தொட்டிருந்தும்

தொடர்பறிய முடியாத

முப்புள்ளியில்

 

26.பெருமழை

 

இனிய முகங்கள்

இனிமை ததும்பும்போது

அவை கொள்ளும் ஒளி

என்னுள்ளாழத்தின்

பேரூற்றை

கொப்பளிக்கச் செய்கின்றன

 

குழந்தைகளின்

எல்லையொன்றில்லா

தங்களுலகத்தின்

கபாடமில்லா வாயில்களில்

புன்னகையை விளக்குகளில் ஏந்தி

காவல் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்

காவல் தெய்வங்கள்

 

உள்ளத்தின் இணைவு

காமத்தின் பாற்பட்டன்று

மேலதிகமாக

உள்ள ஆழங்கள்

அறியும்

பாதாள சோதியொன்றுண்டு

 

சோதிக்குப் பெயர்களிட்டாலும்

அவற்றின் எல்லாவற்றுக்கும்

அப்பாலுள்ளது

அது

 

அதன் ஒளியில்

என்னுள்ளாழங்களெல்லாம்

நனைகின்றன

இன்று பெற்ற

பெருமழையில்

 

27.அர்த்தம்

 

அர்த்தப்படுத்தி

அர்த்தப்படுத்திய

அர்த்தங்கள் அனைத்தும்

அர்த்தத்தின் சொல்

அர்த்தப்படுத்தியின் உள்ளத்தில்

சொட்டிய துளி

 

28.நடை

 

உள்ளே தகிக்கும் அனலை

அணைத்துக் கொஞ்சும் கூதலில்

புலரியின் நடை

தொடக்கமோ

வளர்த்தலோ

முடித்தலோ இல்லாத

வீழும் துளிகளென உரையாடல்

‘சரக்’ ‘சரக்’ எனும் தாளத்தில்

கதுவேலியும் சேர்ந்துகொள்ளும்

ஆற்றுக்குச் செல்லும் வளைவில்

‘மலை’ ‘மலை’

பல்லாயிரம் ஆண்டுக் குளிரில்

வெளுத்துக் குறுகி இருக்க

புறங்கைக்கட்டு இதத்தில் சொன்னார்

தரைக்கு மேலுள்ள மலைதான்

தரைக்கு கீழும்

தரையே தான் அதுவும்.

 

29.என்றோ ஒருநாள்

 

என்றோ ஒருநாள்

விழித்துக்கொண்டபோது

என் மேலெல்லாம் நிறங்கள்

சுற்றமெல்லாம் மணம்

ஆடியாடிக் களிக்கலாம்

மென்மை பின்னர் ஆனது

கடினமாக

மணமெல்லாம் மாயம்

வண்ணமெல்லாம் இறுகி

நானா வலிமையற்றுக் கிடந்தேன்

எண்ணம்தான் எப்போதும்

இறுகிய வண்ணமும்

அருகிய மணமும்

புத்துருக்கொண்டது பிறகு

கடினம் கனிந்ததும்

துவர்ப்பு இனிப்பதும்

என்னவோ மாயம்

கனிந்தாலே கடியுண்டு

ஆனால் வலியில்லை உவகை

உறக்கம் தெளிகையில்

என் மேலெல்லாம்

பொன்னொளிர் வெளியின்

வருடல்

வருடிக்கொண்டே இருக்கவும்

அணைந்து குழையவும்

அன்னையும்

அன்னைக்கொரு மகவும்

என்றுமுண்டு

 

30.ஒரு வரம்

 

ஒரு மாலையில்

என் வாசலில்

பக்கத்து வாதானியில்

என எங்கிருந்தோ வந்தன

சிறு புழுதிக்குருவிக் கூட்டம்

மஞ்சள் கால்கள்

வண்ணம் என்பது அதுவல்லவா

ஒன்றோடொன்று

ஒத்திசைந்தே

ஒரு அடி

முன்னோ பின்னோ மாறியோ

ஒருபோதும் தவறாத கால்கள்

திரும்பியமர சிறகடித்துக் குதித்தோ

தரையில் குதித்து கிளையேகவோ

கிளைகளில் குதித்து வானேகவோ

தன் எண்ணத்துக்கெல்லாம்

தான் அறியாது

தன்னுடனே வரும்

ஒரு வரம்

வரம் பெறப்படுவதா

அல்லது

அருளப்படுவதா

இல்லை

நிகழ்வது

 

31.புல்

 

கருவில் கண்ணாக

கல்லில் சுனையாக

நீரில் இளமழையாக

ஒளியில் புலரியாக

உலகியலில் கனவாக

சொல்லில் கனிவாக

அசைவின்மையில் அசைவாக

முளைத்தெழுகிறது புல்

 

32.எல்லைகளில்லா வான்

 

எல்லைகளில்லா வான்

கண்டும்

மலர்களும் முள்ளும் கொண்ட

வேலிக்குள் நின்று

எல்லையிட்ட வானை

நோக்குகிறேன்

எல்லையின்மைக்கும்

எல்லைக்கும் இடையே

உள்ள தொலைவு

தர்க்கத்துக்கும் கனவுக்கும்

பற்றுக்கும் அன்புக்கும்

மலருக்கும் மணத்துக்கும்

உள்ள தொலைவு மட்டுமே

இங்கிருந்து அங்கும்

அங்கிருந்து இங்கும்

காற்று போலாடும் ஊஞ்சல்

ஒன்றுண்டு

அதை இங்குமங்கும்

கனிவுகொண்டு

ஆட்டுவிப்பது எதுவோ…..

அதன் மகத்துவம்தான்

என்னை வெட்கி வேலியிட வைத்ததோ

 

33.மேகம்

 

‘அர்ர்ர்ரென’

பரபரத்துப் பாய்ந்து நெருங்கும்

நாயென வண்டிகள்

உள்தொட்டுக் கடக்கின்றன

 

வியர்த்துச் சூடேறி

வெளியேறத் துடித்த

ஏதோவொன்றில்

மெல்லென வீசியது காற்று

 

கருத்திரண்ட வானம்

 

வாள் செய்யவும்

வாள் வேண்டியும்

வாள் கொள்ளவும்

வாள் வீசவும்

வாள் ஏற்கவும்

நிற்க வேண்டியிருக்கிறது

 

இங்கிருந்து தொடங்கி

அங்குவரை

 

இங்குமல்லாது அங்குமல்லாது

கண்டால் தெரிவதோ

 

சிகரம்

சற்றெழுந்த தரை

தரை

சற்றுத் தாழ்ந்த சிகரம்

 

அக்கணம் விலகியது மேகம்

 

34.பூண்

 

இருளுக்குள் இதந்தரும்

இளங்கனவில்

 

நறுமணம் முகர்ந்தலைக்கும்

எழில்முகையில்

 

நீரார்வெளிசூழ்

இருங்கூதல் அணைப்பில்

 

துழாவி

துழாவி

தவிப்பும்

 

அலாவி

அலாவி

தவிப்பின் தகர்ப்பும்

 

உலவியும்

உற்றும்

உய்த்தும்

ஊடியும்

தாவியும்

வீழ்ந்தும்

பிரண்டும்

பிராண்டியும்

கசக்கியும்

கசங்கியும்

 

அடைத்துப் பூணிட்ட

தேம்பொற்கதவம்

 

இம்மியும் இளகாது

 

துளியும் தளராது

 

கருமணியுள் மணிநோக்கி

நின்றுகொல்கிறது

நிணத்தின் தினவை

 

தினவு கனியுங்காலை

திண்மை தணிந்து

தேனூறித் தளிர்க்கிறது

புதுத்தினவொன்று

 

35.கல் முட்டிச் சாகும்

 

கல் முட்டிச் சாகும்

அலைகள்

அவைகளுக்கு முடிவேயில்லை

 

காரண காரியங்கள்

காண்போருக்கு

நகைப்பை ஏற்படுத்தலாம்

பொருளற்றுப் போகலாம்

சினம் மீற வைக்கலாம்

பெருமூச்சை எழுப்பலாம்

கண்ணின் நீர் சிந்தச் செய்யலாம்

 

கரையிருப்போர்

ஒருபோதும்

ஓர் அலையின் தலைச் சிதறலையும்

தாங்கிப் பிடித்துவிடவோ

அணைத்து ஆறவைக்கவோ

முடியப்போவதேயில்லை

 

உடையும் அலைகள்

உயிர் பிரிந்து

வானில் கொண்டலென ஆகின்றன

கொண்டவற்றை ஏந்தி அலைகின்றன

 

உள்ளில் தாழாதுடைகையில்

பாய்ந்து வந்து விழுகின்றன

உழன்று

உழன்று

உழன்று

உருவில் தாழாத கணமோ

உள்ளில் தாழாத கணமோ

 

தன் கனவில்

தன் மூதாதை கண்ட கனவில்

விரிந்து நிற்கும்

அதே

அந்த ஒற்றைப் பாறை

அங்கேயே காத்து நிற்கும்

 

இனி வரும் தலைகளுக்கும்

தன் பாதத்திடமுண்டு

என்று

ஆழ்ந்து

அமைதியில்

தன்னுள் தண்கொண்டு

வரும் அலைகளையும்

தலை வைத்து விழும் அலைகளையும்

நோக்கி

மென்நன்புன்னகையில்

 

36.பாழ்

 

‘பாழாப்போவ’

‘நீ பாழாப்போவ’

 

பேருந்துச் சன்னலில்

அரைத்துயில் இடையில்

உள்ளேறி வந்தது இவ்வொலி

என் அம்மா சொல்லும் பல சொல்லும்

பொருளென்ன என்றால்

 

‘தெரியாது’

 

இதுதான் பெரும்பாலும் பதில்

அன்று

அச்சொல் தலையேறியமர்ந்தது

புனலேறும் கிணறாக

 

அந்த அன்னையின்

சொல்லில் தழல் எழுந்தது

தழலே தாண்டவம்

தழலே விரிதல்

அது வாரியெறிந்தது மண்ணை

அதில் பறந்தெழுந்தது

முதுமூதாதை முதல்

தன்வரையில்

எழுந்த நீர்

 

இனித்தவை

கரித்தவை

கசந்தவை

துளி உப்பாகவே உருவெழுபவை

 

அந்தப் பிடித் துகள்களில்

கொண்டிருந்தன

பாழ் நிறைக்கும் எடையை

 

பாழ்

பாழாதல்

பாழாகி நிற்றல்

பாழில் கரைதல்

பாழ்

 

அறிந்து கொண்டு பின்

சொல்லும் சொல்லில்

ஒன்றுமில்லை

தானறியாது

தன் குலமும் மண்ணும்

தானாக வந்து

அதன் கனவும் நினைவும்

நாவாக எழுந்து

அவை உதிர்க்கும்

ஒரு துளி நீர்

உளம் நிறைந்தோ காய்ந்தோ

அது சொல் அல்ல

அது பொருள் அல்ல

அதைத் தந்தது மொழி அல்ல

அது தெய்வம்

 

சொல்லாகியெழுந்து வந்த தெய்வம்

அது அளிப்பதே அருள்

அது

வரமோ சாபமோ

 

அன்று

என் நினைவிலெழுந்தது

என் அன்னையின் சொல்

‘அவனவன் பாடு சொல்லுல அளந்து வெச்சிருக்குது’

 

37.மௌனம்

 

சுருக்கி

அழுத்தி

இறுக்கி

மூடப்பட்ட சாரத்திலிருந்தே

விரித்து

நெகிழ்ந்து

விலக்கி

எழுந்து நின்றது

 

மலர் பூத்தது

மணம் பரப்பியது

அந்த ஒற்றையிருப்பின் கனத்தை

விலக்கியதும்

 

வண்ணத்துப் பூச்சியானது

புதுப்புது வண்ணமும்

உளமிழக்கும் மணமும் கொண்டது

அந்த அலைவின் கனத்தை

விலக்கியதும்

 

காற்றாக மாறியது

பாரா நிலங்களும்

கேளா ஒலிகளும்

நுகரா மணங்களும் கொண்டது

அந்த வீச்சின் கனத்தை

விலக்கியதும்

 

பரவெளி மௌனம்

 

38.அமுது

 

வெளியின் எல்லையறியாத

எல்லையை

அறிந்து விரிந்ததோ

அறிய வேண்டி

விரிந்துகொண்டிருப்பதோ

இமையா எழில் விழித் தாம்பு

சுற்றியிறுக்காது

தளர்ந்தவிழாது

இமையவர் ஒருபுரம் தோள்திரள

அசுரர் ஒருபுரம் புயம்திமிர

நஞ்சூறிக் கனிந்து

நாச்சொட்டவென

எழுந்து வந்ததோ

ஒரு பொற்கலசம்

அமுதெனும்

பேர் படைத்த

ஒற்றைக் கலசம்

அதைக்கொள்ள உள்ளதோ

ஒரு மத்து

ஒரே அச்சு

ஒற்றைத் தவம்

தவத்துள் ஆழும்

‘மந்த்ரம்’

 

39.ஒளியணைந்த இரவில்

 

ஒளியணைந்த இரவில்

ஒளியவிந்த வானை

நோக்கியிருக்கையில்

தொலைவிருந்து வந்து

தொலைவு நோக்கி நீங்கின

வண்டிகள்

அவ்வொளியில்

இக்கட்டிடங்கள்

பேசத் தொடங்கின

தன்னோடும்

தன் சுற்றத்தோடும்

அவற்றின் முகங்களில்

சினமெழுந்தது

நகைத்தன

முகந்திரும்பின

மேலும் கீழும் உருட்டி விழித்தன

ஒருபுரம் நீர்முகமணிந்து

தருக்கி நிற்கின்றன

சின்னஞ்சிறியவை அதில் தங்கள்

முகம் தெரிய முண்டியடிக்க

அவை தன்னில் யாரையும்

காணாததுபோல் இருந்து

கண்தொலைவு செல்லும்வரை

பார்த்துக்கொண்டே இருக்கின்றன

கடைக்கண்ணால்

 

அவை ஆர்ப்பரித்து முரைகின்றன

கல் பொறித் தழலில்

மண் சுழிக்கும் காற்றில்

அறைந்து இறங்கும் சாரலில்

ஒளியில் நிழலுள்ளும்

இருளில் தழலுள்ளும்

ஓடியோடி

ஒற்றைப் பாறை நின்றாலும்

தாங்க மாட்டாது

உருட்டியும் உடைத்தும்

அளவு கல்லாக ஆக்கும் முயற்சியில்

 

அனைத்துக்கும் அப்பாலோ

அனைத்துக்கும் நடுவிலோ

விரிந்து கிடக்கிறது

மலை

அங்கு

பொலிந்து இறங்குகின்றன அருவிகள்

இரவின் மினுங்கும் சடைக்கண்களில்

பற்றி எறிகின்றது பெருந்தீ

பகலின் குவிந்த தழல்விழியில்

மாறாப் பெருந்தவம்

தீராப் பெருநடம்

அங்கு இணைகின்றன

விண்ணும் மண்ணும்

 

40.வைரம்

 

துளிர்த்து

நிறம் மாறி

துள்ளியும் துய்த்தும்

ஆடியும் பாடியும்

ஆர்ப்பரிக்கின்றன

இலைகள்

 

அத்தனை துள்ளலிலும்

ஆட்டத்திலும் பாட்டத்திலும்

பற்றி நிறுத்துகின்றன

கிளைகள்

 

அவைகள் எழுந்து

கிளைத்து விரிந்து

விளைந்து நிற்க

விரிந்து ஏறுகிறது

தண்டு

 

தண்டெழுந்து வர

தூண் எனவாக

பரந்து கிடக்கிறது

வேர்

 

அத்தனை வேர் கொத்துகள்

சேர்ந்தால் மட்டுமே

அத்தனை காலம் துளிகள்

பொலிந்தால் மட்டுமே

தண்டு கொள்ளுகிறது

வைரம்

 

41.இவ்வழி

 

விழித்திருக்கும் நேரம்

இமைத்துடிப்பென மறைகிறது

இருப்பின் எடை

தாள இயலாத தனிப்பெரும்பாறை

நடையோரம் மிதிபட்டு

நசுங்கித் தேயும் எறும்பு

செவ்வெந் தழலில்

வெந்துருகும் சதைக்குழம்பு

பிச்சுவாக்கத்தியில் கிழிந்திழியும்

கொத்து இதயம்

துடைத்தழித்துத் துடைத்தழித்தும்

தடம் எஞ்சும் பாதை

எங்கு செல்கிறது

குறுமுட்கள் ஓராயிரம்

பூத்துப் பெருகும்

இவ்வழி

 

42.துளி

 

சொல்லாயிரம் சூழ இருள்

குளிர் கருமைக்குள் ஒலிக்கும்

பொருளுருவாக்கம்

இன்மை இனித்து இனித்து

செய்து வீசும் செப்புக் காசுகள்

கனம் கொண்டு

கணம் இருந்து

சொல் நின்று

மண் மறையும்

ஊமை ஒளிர்வுகள்

கரைத்தழிக்க வேண்டும் கணங்களில்

காடெனப் பெருகி வதைக்கும்

பச்சைப் பசும்பரப்பு

மணத்து மணத்து மண் நிறைக்கும்

மாறாத் தீராப் பேரனல் துளி

 

43.முதற்பெருந்தோள்

 

தோளில் துணிகள் கிடத்தப்பட்டபடி

அங்குமிங்கும் நடந்தும்

நிகழா

வேலைகளை நிகழ்த்திக்கொண்டும்

மெல்லிய முணுமுணுப்போடும்

நெற்றி சரியும்

முடிகோதி காதில் ஏந்தியும்

முகத்தில் சலிப்பும்

அமர்கையில்

அக்கறையும் அன்புமாய்

இருந்தாள்

 

‘பாப்பா, தோள்ல எதுக்கு சாமி துணி’

 

‘பாப்பா தூங்குது’

 

கொஞ்ச நேரங்கழிந்து

தோளில் துணிகள்

கூடியிருந்தன

கேட்டபோதுதான் தெரிந்தது

பாப்பாவின் பாப்பா

வளர்ந்துகொண்டுமிருக்கிறது

 

44.கொம்பு குலுக்கம்

 

ஆங்கோர் காட்டிலே

வன்மரச் சுவட்டிலே

நீள்வரியாற்றின் கரையிலே

முகையவிழ்ந்தது

 

அடி சேர்ந்த நடை

ஓர் இடம் இடறவே

ஆங்கோர் மண்மகள்

வேரென இதழ் குவித்துச் சிரித்தாள்

 

இணையடிகள்

எதிரடிகளானதும்

அவையறியாது ஆடத் தொடங்கின

ஆட ஆடத் தீரா

ஆடலொன்றை

 

தீம் தீம் தீம்

தம் தம்

விழியுள்ளுறையும் நோக்கில்

அங்கில்லையென

இரு விழிகள்

 

முதலடி

தொடுப்பு

இரண்டாமடி

தள்ளல்

மூன்றாமடி

வீழ்த்தல்

 

முதலடி

தொடுப்பு

இரண்டாமடி

தளர்தல்

மூன்றாமடி

வீழ்தல்

 

சரியும் மரத்தின் மொழி

அதுவரை சொல்லிவிடாத சொல்லை

அக்கணம்

விரித்துரைக்கும் முயற்சி

 

மொழி ஒலியாகவே

இருந்துவிடட்டுமென

மருள்

எண்ணிய குரூரம்

 

எரியும் ரணத்தின் ஊறல்

அதுவரை சொல்லிவிடாத சொல்லை

அக்கணம்

உணர்ந்து நிறையுந்தினவு

 

ஒலி மொழியாகவும்

இருக்கட்டுமென

அருள்

எண்ணிய சொல்

 

‘கொம்பு குலுக்கம்’

 

45.தடம்

 

இங்கு

ஒரு கண்

அளிக்கும் நீரை

 

அங்கு

ஒரு நா

அள்ளி அருந்துகிறது

 

உப்பு

உள்ளும்

புறமுமென

ஓடியாட

ஒரு தடம் உருவாகிறது

 

46.கரியெழும் மண்மேடு

 

கரியெழும் மண்மேடு

காய்ந்திறுகிய தரை

குளிர் துளிகள் பாறைவழிவென

கரியிறங்கிய புனல்

நெரியும் வெளிமண்துளி

பொறி தெறிக்க எக்காளம்

கொலை நடுங்கும்

என்பெரியும் கூதல்

கூடணையும் கூகை

விழியொளிர வெறிக்கும் இருள்

நாசியறுக்கும் செண்பகம்

நாத்துவர்க்கும் கடுந்தேறல்

புடைத்தெழும் தினவு

பாறைப் பரப்பென

மத்தக மோதல்

கடுவெளிக் காட்சி

உகிருதிர் சோறையென

அதிர்துடி ஆடல்

படுகள வீழ்ச்சி

ஆங்கோர் காட்டிடை

காட்டாற்றுப் பெருக்கிடை

கரியெழும் மண்மேடு

காய்ந்திறுகிய தரை

 

47.ஏந்திக்கொளே…..

 

இருள் ஓய்ந்த அறையுள்

திசை தெறியாது திகைத்தடிக்கும்

சிறகுகள்

 

விரிவட்டக் கூட்டுள் வருமொலிக்கெல்லாம்

கூவியார்த்துச் சிவந்த ஒற்றை

அலகு

 

பேயது காற்றாகி ஊளையொரு

கூற்றாகி ஆட்டும் கிளையிடை

பட்டுவலை

 

சாண்தகிப்புத் தழல் வளர்த்த

ஊன் தலைக்கொண்டும் வழிமறந்த

எறும்பு

 

புல் சிலம்பல்கள் இடையே

கூருகிர் தரைநெறிதல் ஓர்க்கும்

பாய்ங்குழம்புகள்

 

தகிப்பினைத் தான் உண்டு

உட்செறிப்பின் உருமலெனக் கூதல்

நடுக்கம்

 

அம்மாசைப் பாழ் இருட்டில்

கூரையோலை கிசுகிசுக்க அம்மியில்

உருளுங்குழவி

 

கழுக் கரும்பனையில் காய்ந்த

கருக்கு மலர்ந்த ஓலைச்சடச்சி

கூலழுகை

 

‘நான் உண்டு’ உன்னுயிர் குரல்

மாரெழுந்தென் செவி உரைக்க

வேண்டும்

அம்ம! ஒக்கல்

 

‘கண்ணே’ எனப்புறந்தட்டி அணைக்க

உறுத்த பூதலங்காட்டி நகைக்க

வேண்டும்

அம்ம ! கொழுங்கைகள்

 

தோள் சாய்ந்து கண் வளர

உன்னை இன்கனாக் காண

வேண்டும்

அம்ம ! செண்பகப் பூங்குழல்

 

அம்ம…..

 

ஏந்திக்கொளே…..

 

அம்மே…..

 

ஏந்திக்கொளே…..

 

48.அசைவின்மையின் புன்னகை

 

அணியொளி மண் சூழ்ந்த

புலரியின் கனிவில்

இளமழை நனைத்தது ஓர் கரு

 

அணைமண் விளக்கி

எழுந்தது பேரார்வம்

 

மண்ணுண்டு திளைத்து

எழுந்தது அசைவு

 

சூழ்வெளியின் களிப்பில்

ஆழ்ந்தது திளைப்பு

 

பின்

 

புத்தின்மையில் சலித்து

அடைந்தது உலைவு

 

மீள்கையை பிழைத்து

பற்றியது பிழையாழ்சுழல்

 

திமிறி திமிறி எழுவதாக

தவறி தவறி ஆழ்ந்தது

 

பெற்றிருந்ததோர் பேறு

புன்னகையை

அறியாதிழந்திருந்தது

 

அசைவில் அடையலாம்

அசைவில் அடையலாம்

எண்ணியிருந்தது

அப்புன்னகையை

 

ஒரு நாள் ஒரு பொழுது ஒரு கணம்

 

மென்னிறகின் இறக்கமோ

பெருமரக் கடைபுழைவோ

உன்னியிராது

உருவழிந்தது

 

அன்றோர் பொழுதும்

காடெழப் பொழிந்தது கனிவு

அங்கு அசைவாக

எழுந்திருந்தது

அசைவின்மையின் புன்னகை

தழலாக

 

49.நஞ்சுண்டன்

 

சித்திரை முழுமை நோக்கி

ஒளிர்கிறது இரவு

 

கனி காண அழைக்கிறது

ஓர் குரல்

 

இருளின் பதம் சொல்கிறது

வந்தென் அருகிரு

 

அப்பால் அப்பால் என

ஒலிக்கிறது ஓர் குரல்

முடை நாற்ற விலகலும்

விலகவியலா ஆட்கொள்ளலும்

என அதிரும் உளமுழவில்

 

மோதி மோதி உயிர்வெம்பும்

பீத்திழைக்கும் ஈ

 

சாக ஆசைப்படுகையில்

வாழவும்

வாழ ஆசைப்படுகையில்

சாகவும்

உலைந்தாடும் கேனையாட்டம்

 

நஞ்சு கண்டு மயங்கி

நீலத்திரட்டில் விரற்சுட்டால்

ஓர் இருள்துளி

 

அனைத்தும் அதில்

முழுத்து நிறைகிறது

 

பாழ்வெளியை நிறைத்திருக்கும்

குளிர்ச்சூட்டுப் படுக்கை

 

நாவில் இறங்கையில்

ஆகா…..

 

குளிர்ந்த எரிவு…..

 

தீச்சடசடப்பு…..

 

அக்கணம் கூடுவிட்டுப் பறக்கும்

உயிருலைவில் நான்

நஞ்சுண்டன்

 

கண்டத்தில் நிற்கும்

சாவொளிர் உகிர்மினுங்கும்

காட்டாறு

 

மண்டையில் அறையும்

குறைகுடச் சொற்கூட்டலறும்

அமலை

 

மீள மீள

நில்லாப்பிழை

 

ஆழ ஆழ

கொல்லாக்கொலை

 

50.நான்

 

சொல்

 

ஒலி

தாளம்

இசை

 

மொழிதல்

 

கொளுசுத்துள்ளல்

கொழுங்கன்னம்

முத்தம்

 

மொழி

 

உள்ளக்கடல்

உயிர்ப்பெருவெளி

இருப்பு

 

கவி

 

வரம்

அருள்

தெய்வம்

 

51.முழுமை

 

வரம்

பேணப்படுகையில் அருள்

பொருட்டில்லாதாகையில் சாபம்

 

பெறப்படுவதை எண்ணி

மகிழ்வதும்

இழந்ததை எண்ணி

துயருறுவதும்

மானுடம்

 

தலைமுன் கண்கொண்டு காணுவதோ

பிறந்திழிந்தழிதல்

 

அவ்வப்போது

அதையுணர்கையில்

கரங்கூப்புகையில்

பிறைசூடன்

தாள்

 

சுற்றமறுத்தால்

தலைமேல் கண்கொண்டால்

முழுமதியணியன்

விழிமணி

 

ஓம்

ஓம்

ஓம்

 

52.பெருநிலவு எழுகை

 

ஐப்பசி பெருநிலவு எழுகை

காவற்கம்பை இறுக்கிய கரம்

விதைப்பிட்ட காடு நோக்கி

ஊர்க்குடும்பன்

 

இருள் மினுக்கும் ஒளியில்

பிரியும்

இரு வழிகள்

 

இடது

ஹுய் ஹுய்யா ஹுய்

எக்காளக் களிப்பு

 

வலது

முற்றமைதியின்

புன்னகை மலர்வு

 

இடதில்

பித்தின் நிலைகொள்ளல்

 

வலதில்

முழுமையின் நிறைநிலை

 

நடுவில்

மும்மலமும் இட்டு

ஆணவச் சட்டுவம் கிண்டும்

மென்னோட்டுக் குரைப்பென

ஊர்க்குடும்பன்

ஊசலூர்

 

விட்டுவிலகலோ

முழுதறிதலோ

பேரச்சம்

 

அன்றொருநாள்

காற்று இலை திரும்பலென

படைக்கால் நோக்கி விதைக்கையில்

காத்து அறுக்கையில்

கலம் அள்ளி அளிக்கையில்

அவன் கண்டுணர்ந்தான்

ஒன்றை

 

இன்றும்

விதைப்பிட்ட காடு நோக்கி

ஊர்க்குடும்பன்

வெற்றிலை விரல்நீவும் சுண்ணத்தில்

ஐப்பசி பெருநிலவு எழுகை

 

53.பொய்

 

நம் ஆர்வங்கள்

நம்மை ஆளுகையில்

பிறன் அங்கு

பொய்

 

அவ்வாறுதான் அன்று

மாப்பிள்ளை அழைக்கையில்

என்னுலகில் அவர்

பொய்

 

அப்பிஞ்சுக்கை இழுப்பை

அகமுணர்கையில்

உயிருள்ளூறும் அது

அள்ளியிழுத்து

அருகணையச்செய்யும்

நயமொழியில் அவ்வுறவு

முதலெனத்தொடங்கும்

 

நயமொழி என்றுணர்வது என்ன

ஈருள்ளத்திணைவுணர்வே

அவ்வாறு அவரிடம்

அப்போது சுட்டினேன்

மாப்பிள்ளையே

அதோ அங்கொரு புறா

அங்கல்ல

அதோ அங்கே

அவ்வளைசுவர் ஓரம்

அவர் விரிகுட்டிக்கண்கள் விரிந்து

நோக்கியதோ வேறிடம்

 

“இங்க வாங்க மாப்ள”

வந்து மடியேறியமர்ந்தார்

குறுங்கைகள் என் காலில்

அங்கிருந்து எழுந்தது ஓர் கை

என் மெய்யுரைக்கும்

முயற்சியை ஆற்றுப்படுத்துமுகமாக

கண்ணொளிர

குரல் வியப்பெழ

சுட்டியது ஓர்

பொய்

 

இருவரும்

பொய்யுள் எட்டி நோக்கினோம்

அங்கு எழுந்திருந்தது

ஒரு புறா

இங்கிருந்து நாங்கள் அதையும்

அங்கிருந்து அது எங்களையும்

பார்த்திருந்தோம்

 

அக்கணமுணர்ந்தேன்

பொய்

துயருறுவதற்கல்ல

அப்படித்தான் விலகுகிறது

திரை

அங்கேதான் உறைகிறது

மகிழ்வு

அங்கிருந்தே தொடங்குகிறது

மெய்

 

54.பேராண்

 

என் எண்ணம்

இப்பெருக்கு

 

கொடிவழிகொண்டு

தந்தையென்றாவோர்

என் தனயர்

 

நினைவுகொள்ளா

தந்தையர்நிரையின்

தொடக்கம்

என்னிலிருந்தே

 

எண்ணமென

உங்கள் உள்ளத்தில்

விதையென

உங்கள் உடலில்

முளைத்தெழுபவன்

 

பெருந்தந்தை

 

உள்ளத்தெழுகையில்

ஒருமை

உடல்கொண்டெழுகையில்

பிரம்மன்

 

நான்

பேராண்

இங்கெழும்

தழல்

 

55.பேராண்

 

என் எண்ணம்

இப்பெருக்கு

 

மொழிவழிகொண்டு

கவியென்றாவோர்

என் தனயர்

 

நினைவுகொள்ளா

காவியநிரையின்

தொடக்கம்

என்னிலிருந்தே

 

எண்ணமென

உங்கள் உள்ளத்தில்

விதையென

உங்கள் கவியில்

முளைத்தெழுபவன்

 

பெரும் காவிய ஆசிரியன்

 

உள்ளத்தெழுகையில்

ஒருமை

உடல்கொண்டெழுகையில்

பிரம்மன்

 

நான்

பேராண்

இங்கெழும்

தழல்

 

56.கைகொண்டிருக்கையில்

 

கவி எழாத ஆற்றாமையொரு

குகையூரும் குளிர்

 

கவி எனச் சுட்டுதல் அன்றி

ஒருவழியுமில்லை

 

பதற்றம் நனவில் இருந்து

கனவுக்கு நழுவிச் செல்லும்

 

கண்டேன் அங்கொரு கவி

 

நடைமுறையில் தொடக்கம்

மானுடப்பொதுவென நீட்சி

அருளென எழல்

 

விழியாக்கவியது

விழிக்கையில்

விரிசிறகு கடந்த வான்

என எஞ்சுகிறது

 

கனவொரு மெய்

என்றாலும்

கையள்ளிக் கொஞ்சுதலில்

உள்ளதல்லவா உவகை

கைகொண்டிருக்கையில்

 

 

57.தெய்வம்

 

குவளைக்குள் குவளையாக

வாழ்வுக்குள் துயர்

 

உள்ளிருக்கும் குவளை

அறியும் மிகப்பொருந்திக்கொள்ள

 

தொட்டெடுத்தோ

கொட்டிக்கவிழ்த்தோ

குவளை

காலியாக வேண்டும்

என்பதொரு வேண்டல்

 

அவ்விழைவு

தொட்டதே

குவளை

உள்ளும்வெளியும்

திகழ்பெருவெளி

 

அதன் அள்ளுவிழைவே

சிறுகுவளையுமானது

வெளி

வெறுமையுதறிய

எழுந்தாடல்

 

அள்ளவள்ளப்பெருகும் வெளி

அதையறியவறியப் பெருகும்

குவளை

பெருகப்பெருக கைவிடும்

கெட்டிப்பரப்பை

காற்றென உடலள்ளிப் பறக்கும்

அதையும் விட்டபின்

வெளி

என எஞ்சுவது ஆவதே

தெய்வம்

 

58.தழல்

 

இனிலன்

எனை அழைத்தான்

மந்தணம் உரைக்கும் தொனியில்

“கோணங்களால் சிதறிக் கிடக்கிறது”

என்றான்

இருவர் கண்களிலும்

“ஆம்” ஒளிர்கிறது

 

“கோணங்களை

மேலும் உண்டாக்குவோர்

இணைப்போர்

என்ற இருவரே மெய்யாக இருப்போர்”

என்றேன்

இருவர் இதழ்களிலும்

“அதுவே” ஒளிர்கிறது

 

“முன்னது துயர்

பின்னது இனிமை”

ஒரே குரலாக நாங்கள்

இருவரும் ஒருவராகையில்

“அவ்வளவுதான்” என ஒளிர்கிறது

தழல்

 

59.தித்திப்பு

 

தாழப் பறக்கும் சூரியனால்

கனிந்த மாலை

 

மென்சூட்டுத் தேயிலைநீர்

இனிமையென

வந்தாள் அன்னை

 

உணர்கையில் எல்லாம்

துள்ளும் நாவாக

அவள் என்றுமிருக்கிறாள்

 

இனிப்பவை போல்

அழகு கொள்பவை

வேறில்லை

 

இனிமையால் உண்டாக்கப்பட வேண்டும்

உறவுகள்

என்று எண்ணியவனின்

நா

என்றென்றும் தித்திக்கட்டும்

 

60.களியுலகு

 

மண்

உயிர்களை

சமைக்கிறது

 

உயிர்கள்

வடிவங்களை

வனைகின்றன

 

வடிவங்கள்

காற்றை

உண்கின்றன

 

காற்று

ஒலிகளை

பெற்றெடுக்கிறது

 

ஒலி

மொழிகளை

தீட்டிக்கொள்கிறது

 

மொழி

கவிதைகளை

படைக்கிறது

 

கவிதை

களியுள்ளத்தை

தோற்றுவிக்கிறது

 

அங்கிருந்து

எழுந்து வருகிறது

மூவாமுதலாப்பேருலகு

 

61.நுண்மையின் பேரழகு

 

பின்மதிய மென்தூறல்

அலைவுற்றுக் கொந்தளித்தூரும் காற்று

அப்பால் குடைமரமொன்றின்

கிளைபொதிந்த குயில்

பல்லாயிரந்தலைமுறைகளின்

ஒரு சொல்லை

ஓராயிரமுறையென ஒலிக்கிறது

மந்திரம் உருவாகிறது

சொல் பொருளாவதும்

ஒலி மந்திரமாவதும்

நுண்மையின் பேரழகு

அதை

இக்கணம் இங்கெழும் காற்று

இனித்திறந்தெழும் காதுகளுக்காக

கொண்டுசென்றபடியே இருக்கிறது

 

62.ஒழிகலன்

 

இதோ இதோ என

தெய்வங்கள் அளிப்பவை

இவ்வுலகு சமைத்து

அமர்ந்திருக்கின்றன

மானுடன்

அவற்றிலிருந்து

தன் கலனள்ளி

நிறைத்துக்கொள்கிறான்

விழைவால்

மீதூறி வழிந்தகழ்கின்றன

விழைவுகள்

எஞ்சுவதோ

வித்தென வளர்பவை

வாழ்வென பெயர்கொள்பவை

அரையுண்மைகளால் அலைவுறுபவை

அதையறிபவன் கவிஞன்

புன்னகைப்பவன் ஞானி

அப்பால் அப்பால் எனக்காட்டி

அத்தனையிலும் அமர்ந்திருக்கிறது

முழுமை

 

63.இணைவு

 

வீசுகாலினூடே

ஒளிகளால் நிறைந்த

தந்திகளின் மேலே

ஓர் இணை

உறவென்ன இடையே

என்னும் வினாவைப்போல்

பொருட்டில்லாத ஒன்றுண்டா

இவ்வுதயத்தில்

 

இணைவுகளால் ஆனதே

உறவும்

இணைவுகளால் ஆனதே

இசையும்

இணைவுகளால் ஆனதே

பேருருவும்

இணைவுகளால் ஆனதே

முழுமையும்

 

அனைத்துக்கும் மேல்

மானுடத்துக்குத் தேவை

ஒன்றே

இங்கு இக்கணம் என்பதே

ஒரு மாபெரும் இணைவு

 

64.புன்னகை

 

மண்ணூறும் புழு

வலமும் இடமும்

துழாவுதல்போல்

மானுடம்

முன்னும்பின்னும்

அலைப்புறுகிறது

காலம் உருவாகிறது

அதில்

மகிழ்வென்றால் என்ன

என்று ஆழ்கையில்

ஒரு குரல்

குழந்தை என்றதும்

புன்னகைத்துக்கொண்டனர்

எல்லோரும்

மாபெரும் அது

தன் மானுடக் குழவிகளை

மேலும் சற்று

புன்னகைக்க வைக்கவே

பெறுதலெனும் பேறை

அருளியிருக்கிறது

அறிக

இங்கெழும்

ஒவ்வொரு புன்னகையும்

ஒரு குழந்தையுடையதே

 

65.பெருங்குணம்

 

இருளா

ஒளியா

பெரியது எது

 

இருளே

 

முன்னதே

விடை என்றானதனால்

பின்னது

கேள்வி என்றெழுகிறது

 

ஆழ்பவை எல்லாம்

விரிவில் கரைபவை

ஆகையால்

எழுபவை எல்லாம்

எல்லை கொண்டவை

 

விண்ணின் சிறகென

பறவை மண்ணுக்கு வருவதும்

கூவியார்த்து சொல்லிச் செல்வதும்

அதன் பெருங்குணம்

 

அவ்வழியில்

இருளை அறிபவர்

அதை அறிபவர்

 

66.அழகு

 

தன்னில் தான் நிறைவுறாத

கலைத்துக்கொள்ளலே

அலைகள்

அங்கு பிரிபடும் அதில்

தொடங்குகிறது

காலம்

ஊழ்

செயல்

சொல்

உணர்வு

அங்கிருந்தே புரவிப்பிடரியேறி

பாய்கிறது புடவி

 

தன்னில் தான் நிறைவுறாத

கூர்கொள்ளலே

ஆழம்

அங்கு இணைவுபடும் அதில்

தொடங்குகிறது

உணர்வு

சொல்

செயல்

ஊழ்

காலம்

அங்கிருந்தே புரவிப்பிடரியேறி

பாய்கிறது புடவி

 

ஒருபுறமும்

மறுபுறமும்

என ஊசலின் இணைவே

ஒத்திசைவு

 

ஒத்திசைவுகளின் தருணம்

ஒருபோதும் தன்னை

நீட்டித்துக்கொள்வதில்லை

நீட்டித்துக்கொள்ளும்

ஆவலே

அழகு

என்றானதும்

அங்கிருந்து தொடங்கியதே

எல்லாமும்

 

67.கவி

 

அசும்பு

என்பது என்ன

அசைவின்மையைக் காட்டி

அசைவைச் சுட்டுவது

 

விசும்பு

என்பது என்ன

அசைவைக் காட்டி

அசைவின்மையைச் சுட்டுவது

 

கவி

என்பது என்ன

இவ்விரண்டையும் காட்டி

இசைவைச் சுட்டுவது

 

68.சுவை

 

“தொட்டெனத் தொட்டெனக்

கவியும் தூறல்

கொடுத்துத் தீராத முத்தம்”

சொல்லிக் கடந்தாய் நீ

கடந்தறியும் கால்களால்

நிறைந்துருகும் மாலை

இன்றெனவே நின்றிருக்க

‘ஆம்’மென்னும்

இசைவால் அமைந்த

வாழ்வை நோக்கி

புன்னகைக்கிறது உலகு

சூழும் மகிழ்வால்

சுவையறிந்து வாழவே

இக்கணம்

அப்பால் ஒன்றுமில்லை

பொருளுமில்லை

ஆவதொன்றுமில்லை

கைக்குழிவில் இறுக்கிக்கொள்

தோள்சேர்வில் தாங்கிக்கொள்

ஒருமையுருவில்

முழுத்திருக்கவே இணைகின்றன

புடவிப் பிரிவுகள்

 

69.துலாநிகர்

 

சொல்லிச் சொல்லி

சொல்லுக்குள்

ஆழ்த்தி அழுத்தி

அகப்பட்டது புன்னகை

என்போர் அறியார்

 

பொருளுக்குப் பொருள்

பொருளுக்குள்

நிறைந்து நிரம்பி

வெளிப்பட்டது புன்னகை

என்போர் அறிவர்

 

கண்டுகொள்ளப்படாமையும்

கண்டுகொள்ளலும்

அருகருகே இருக்க

துலா

நிகரென்னும் கனிவுடனே இருக்கிறது

 

70.பொருத்தம்

 

நிறையணை நீரில்

ஒற்றைப் படகு

 

சூழும் தழும்பலிடை

வானோக்கிய விரிகை

 

உடையும் கொந்தளிப்பில்

அகந்திறந்த உள்ளம்

 

பெருகும் வாழ்நிறையில்

வெளிநிறை வெறுமை

 

பாழும் இன்மையில்

குவிகரத்து வேண்டல்

 

பொழிகிறது மழை

 

அன்னோர்பொருட்டோ

எவர்பொருட்டோ

என்றில்லாது

பொழியும் மழை

அதன்பொருட்டு

 

பொருத்தம்

என்ற ஒன்றால் மட்டுமே

வாழ்கிறது உலகு

 

71.பூரணத்துவம்

 

நான்

கண் திறந்தபோது

முதல் மழை பெய்தது

ஒளிகொள் உரு

தழல்கொள் குளிர்

விடாய்கொள் கனவு

அக்கணத் துள்ளல்

அனுபவப் புதுமை

 

அப்பால் அப்பால் என

இருப்பதோ

நீர்வெளி

பெருங்கடல்

அலைப்பெருக்கு

அதைக் கண்டதும்

மூடிக்கொண்டன கண்கள்

அதற்குள்

ஆழ்கடலின்

அமைதி

பூரணத்துவம்

 

72.பிரிபட்ட பூ

 

இரண்டு காகிதங்கள்

இரண்டு பூக்கள்

ஒன்றில் ஒருபாதி

பிறிதில் மறுபாதி

இவ்வுலகில்

மானுட உளத்தில் அன்றி

எழா வண்ணங்கள்

 

அருகருகே நின்றும்

ஒன்று

இரண்டாவதும்

அதில்

பாதி மறைவதும்

ஏன்

 

அது பிறரிடம் மறைப்பதா

தன்னிடம் தான் மறைப்பதா

 

வெளிக்காட்டும்

வண்ணங்கள் போல

மறைந்திருப்பதும்

வண்ணங்களா

 

எதை மறைத்து இதை

காட்டும் முடிவு எடுக்கப்பட்டது

 

ஒருபாதியை

அறியத்தந்து

மறுபாதியை

அறி

என எங்கு இழுத்துச்செல்லப்

பார்க்கிறது

 

இன்மையின் வழியை

இதோவெனக் காட்டி

வந்துவிடு எனும் அன்பு

 

அதன்முன் குழவியாகி

விரல்பற்றி நடப்பதன்றி

பெரியது ஏது

 

அங்கு அது

ஒளித்து வைத்திருக்கும்

இனிப்பு

அதற்காக தொடங்க வேண்டியதே

இப்பயணம்

 

73.தொடுதல்

 

சட்டியும் கரண்டியும்

தொட்டுக்கொள்கின்றன

 

கொளுசும் காதும்

தொட்டுக்கொள்கின்றன

 

ஒளியும் திரையும்

கூடத்தான்

 

இருப்பென்பதே

தொட்டுக்கொள்ளுதல் தானே

 

அன்னை

இவ்வறைக்கு வருவாள்

தொட்டுச் செல்வாள்

எனும் எண்ணம்போல்

பொருளுடையது

பிறிதில்லை

 

ஆகவே

தொட்டுக்கொள்ளுங்கள்

ஆடை

உடலையென

 

சொற்கள்

அள்ள இயலாதவை

அள்ளத் தவறியவை

என எந்தக் குழப்பங்களும்

அகஞ்சுழிப்பதற்கு முன்

தொட்டுவிடுங்கள்

 

அதைப்போல மெய்

வேறொன்றில்லை

அதில் அடங்கா முரண்

ஒன்றில்லை

 

74.அன்னை

 

விதைகளால்

நிறைந்தவன் நான்

 

அச்சத்தால் திகைக்கிறீர்களா

வருக

அணைப்புக்கு

 

ஐயத்தால் அலைப்புறுகிறீர்களா

வருக

தெளிவுக்கு

 

கேள்விகளால் தவிக்கிறீர்களா

வருக

விதைகளால்

நிறைந்திருக்கிறேன்

ஆகையால் அன்னையுமாகிறேன்

 

ஆற்றுப்படுத்தலன்றி

அன்னைக்கு

வேறொன்றில்லை

 

குழவிகள் சூழ்ந்திருத்தலன்றி

அன்னைக்கு

மகிழ்ச்சியொன்றில்லை

 

உங்களுக்கென

நான் அளிப்பது கனிகள்

 

இனிமையில்

உமது முகமும் இனிப்பதை

மேலும் என்று கொஞ்சுவதை

விரும்பியிருப்பவள்

 

இக்கத்தேறியமர்க

கண்டம் சேர்த்துத் தழுவுக

 

நமக்குக் காண கோடிகளுண்டு

 

மிழற்ற எண்ணிறந்தவை உண்டு

 

உங்களுள்ளூறும் பசியை மட்டும்

எனக்குத் தருக

 

கனிகளால் நிறைக

விதைகளைப் பெற்றுப் பொலிவு

 

75.தழல் வாழ்த்து

 

அமைதி

பேரமைதி

அங்குறைவது அது

என்பதொரு உள்ளப்பூட்டு

அஃதொரு அழுத்தம்

அஃதொரு அவலம்

அதொரு சேறு

 

எழுந்தாக வேண்டும்

தழல்

 

பற்றி நிற்பது

நெளிந்தேற்வது

துள்ளிப் பாய்வது

விம்மிப் பறப்பது

பெருகி விரிவது

ஆடிக் களிப்பது

 

போர்

தன்னுள் தான் மூழ்குவதற்கு

ஓர் எதிர் போர்

 

அணைக தழல்

ஏற்க எரி

கொள்க விடாய்

கூறுக போற்றி

வணங்குக வழுத்தி

 

அமிழ்க

எழுவதற்கே

 

வீழ்க

பாய்வதற்கே

 

அமைக

ஆடுவதற்கே

 

விண்ணே

விரியே

விழியே

 

மண்ணே

மணியே

மாவே

 

பொன்னே

பொலியே

பூவே

 

அருள்க என் இறையே

 

76.பெறல்

 

குழந்தைகள்

பெரியவர்களாய்

 

பெரியவர்கள்

குழந்தைகளாய்

 

உருமாறுகையில்

புலர்கிறது சிரிப்பு

 

ஒருவர்

மற்றவரைக் கண்டு

அவர்களாய் தாமாக

தொடங்குகிறது

ஆடல்

 

உருமாற்றம்

உருண்டோடுகையில்

உருக்கொள்கிறது

மகிழ்வு

 

குழந்தைகள் மட்டுமெனும்

அக்கணம்

ஒரு வாழ்த்தாக இறங்குகிறது

இப்புவியில்

பொருள்

 

77.பிள்ளாருக்கோர் கதை

 

ஓங்குயர்ந்த மரம்

முடைந்தேறிய பச்சை

குளிர்க்கும் அடிநிழல்

கல் நிற்கும் உள்ளம்

 

உள்ளந்தொட்டு

உள்ளந்தொட்டு

உயிர்க்கும் அக்கல்

 

ஓராயிரம் வடிவெடுத்து

இன்னும்

ஓராயிரம் சொல்லடுக்கி

திண்ணித்துத் திண்ணித்து

தண்ணென எழும்

 

பாழ் துளி சொட்டி

நிறை தேட அழைக்கும்

 

கருமணியுள் கருமணி நோக்கி

உள்ளத்துள் உள்ளொளி அறிய

சென்னி பதியும்

ஒரு கனிவு

 

இன்னுமெழும் கோடிகள்

வந்தறைந்து அழும்

 

அத்தனைக்குமென

ஒற்றைக்கை

காத்து நிற்கும்

 

கல்லெனச் சமைதலென்பதுவோ

உள்ளொளி பருத்துதற்கே

 

உள்ளொளியில்

ஒளிருகல் ஒரு

தழல்

 

திணிவுகாண் பிள்ளாரே

கனிதல்

அங்கிருந்தே

 

78.வெளியேந்தும் இரு கைகள்

 

ஒரு விழைவு

ஓராயிரம் உயிர்க்கொலை

வெறுமை

 

வெறுமையென்பதுவோ

நீங்கள் எண்ணுவதைப்போல

இன்மையல்ல

 

அது ஒரு விதை

 

அதில் இரு கைகள் விரிந்து

வெளியை ஏந்தி நிற்கையில்

கண்டதுண்டா

 

நான் கண்டேன்

 

அது சொல்லியது

“நேர்கோடென்று

இப்புடவியில்

ஒன்றுமேயில்லை.

புள்ளிகளால்

ஆனதே இப்புடவி

அவற்றைக் கொட்டினால்

அத்தனைக்கும் அதனதன் இடம்”

 

“ஒன்று

ஒரு திசை நோக்கினால்

துயர்,

 

ஒன்று

உள் தழல் அறிகையில்

இன்பம்,

 

தேர்வோ உள்ளங்கை வெள்ளையே

நோக்கு மட்டுமே நிகழவேண்டியது”

 

பொறிகள் தெறிக்கும் வெளியில்

நானொரு தழல்

நானே அமைதி

நான் முழுமை

 

79.அருளே சொல்கிறது

 

இருளோய்ந்த இரவின்

நெருக்கத்தில்

அகந்திறந்துகொண்டன

இரு உள்ளங்கள்

 

வருதுயரென அகங்காட்டுவதையும்

வருமின்பமென அதுகாட்டுவதையும்

 

திறப்பில் ஒன்றாவது வெளியே

என

அணைப்பும்

முத்தமும்

கண்ணீர் துளிகளும்

 

அதுவரை அணிந்த வாழ்வெடை

அகல

கண்டம் மினுங்கும் இனிமையாக

ஓய்ந்திருளுக்குள் சென்று

உறக்கம் கொள்கின்றன

 

அகத்தெடை என்பதே

அன்னையாகவும்

மகவாகவும்

ஆகியாடும் ஆடலுக்கான வாய்ப்பா…..

 

ஆமென்று உரைத்தும்

அகிலமெலாம் அணைத்தும்

அருளே சொல்கிறது

இனி ஏன் துயர்…..

 

80.அவ்வளவே

 

“ஒவ்வொரு நாளும்

ஓராயிரம் அழுத்தங்கள்”

என

ஏற்றிக்கொள்ளும் அத்தனையும்

ஒருவர் அளிக்கும்

ஒரு மலர் கொண்டு

நிகரிலாதாக்கப்படுவதே

அதற்குத் தேவை

உண்மையில்

ஒரு கணம்

ஒரு பார்வை

ஒரு புன்னகை

உண்மையில் வாழ்வென்பது

அவ்வளவே

 

81.எப்படித்தான் எதிர்பார்ப்பது

 

அன்று

அவ்வாறு

நிறைவுகொள்ளும்

என்று எப்படித்தான் எதிர்பார்ப்பது

 

ஆத்தா

ஒரு மலரை

அத்தைக்கு அளித்தார்

 

அத்தையுடன் அதுவும்

அருகமர்ந்து பயணித்தது

அவருள்ளிருக்கும்

அழகுணர்வுடனும்

ஓர் உரையாடலைக் கொண்டிருந்தது

 

அத்தை

ஒரு மலரை

என்னிடம் அளித்தார்

 

என்னுடன் அதுவும்

கைகளிலமர்ந்து பயணித்தது

என்னுள்ளிருக்கும்

ஆழத்துடனும்

ஓர் உரையாடலைக் கொண்டிருந்தது

 

நான்

ஒரு மலரை

அம்மாவுக்கு அளித்தேன்

 

அம்மாவுடன் அதுவும்

குழலமர்ந்து பயணித்தது

சூழ்வெளியின்

பெருவிரிவுடன்

ஓர் உரையாடலைக் கொண்டிருந்தது

 

பொருண்மைகளில் இருந்து பொருண்மைகளுக்கல்ல

இன்மையில் இருந்து இன்மைக்கல்லவா

அது சென்றது

 

அன்புக்கு ஓர் உருவென்பது

அதுவல்லவா

 

அன்று

அவ்வாறுதான்

நிறைவுகொள்ளும்

என்று எப்படித்தான் எதிர்பார்ப்பது

 

82.மானுடப்பேறாதல்

 

சொற்களால்

நாம் அன்பை பெரிதும்

வெளிப்படுத்துவதில்லை

 

செய்கையால்

நாம் பகிர்ந்து கொள்வதே

பேரளவும்

 

சொல்லுதலிலும்

எளியது செயல்

அன்பில் மட்டுமே

 

எல்லைகொண்ட செயலால்

எல்லையிலா உணர்வை

அளிப்பதே

இங்கு பெறுவதுமாவது

ஒரு பேருணர்வு

 

அலைகொள் உள்ளங் கடைகையில்

அமுதை அள்ளி தேவராவதே

மானுடப்பேறு

 

83.வில் எழும்

 

அவன் வந்து கைதொடவே

ஒரு வில் காத்து நின்றிருக்கிறது

அவன் பிடி

சற்று முன்னோ

சற்றே பின்னோ

என்றாலும் கூட

கிடந்த கோலமே

எத்தனை கைகள்

எத்தனை அகங்கள்

எத்தனை கனவுகள்

அவ்வில் தொட்டிருக்கும்

ஒருநாள் வருவான்

அவன்

கவி பற்றவே நிமிர்க்கும்

உயிர்தொட விம்மும்

உணர்விலேயே பாயும்

மானுடம் வெல்லும்

 

84.உலகியலில் துறவி

 

உலகியலில் துறவி கவிஞன்

 

துறவில் தவம் கவிதை

 

பெருங்கவிஞன்

 

கொள்ளும் அடையாளம்

 

எடையின்மை

 

அதுவே இவ்வெளி கடக்கும்

 

பெரும்பாதை

 

85.அருநிலம்

 

வானத்தை

வெறுமை என்பவர்கள்

வாழ்வை அறியாதவர்கள்

 

புவியை

வெறுமை என்பவர்கள்

கவியை அறியாதவர்கள்

 

சொல்விதை

ஊனுதலும் ஒரு வேளாண்மை

கவிவிளைவு

பேணுதலும் ஒரு ஊராண்மை

 

அருகிருந்து

அருஞ்சொல்லளித்து

அகமாட்டி

அருங்கனாவளித்து

அருளுவதும்

ஓர் அரசாள்கை

அதிகாரமிலா அருநிலமங்கே

நாளுமோர் முழுநிலவு

நாவுக்கோர் தேன்துளி

நற்தோளுக்கோர் அன்னைமடி

 

86.ஆம் அவ்வாறுதான்

 

நேர்

மட்டுமே

விருப்புக்குரியது

 

பிழை

அவ்வப்போது

இடைபுகுந்து

அத்தனையையும் கலைக்கும்

 

முன்னதை

வேண்டியே

ஓட்டம்

 

பின்னதை

காலிடறலென

இடைப்புகுத்துவது எது

 

ஒன்றை வேண்ட

இரண்டை அருளும்

வரம்

எப்படிப் புரிந்துகொள்ளப்படும்

 

ஆம் அவ்வாறுதான்

 

அது தெளிகையில்

துறவு

அதுவல்லாதாகிவிடும்

ஒன்றென்றானபின்

ஒன்றே

 

ஆம் அவ்வாறுதான்

 

87.திரை

 

மெய்

என்பதோ திண்மை

 

அறம்

என்பதோ கல்

 

செதுக்கியும்

உடைத்தும்

உண்டாக்கிக்கொள்வதோ

கீறும் பிசிறுகள்

 

முழுமையை

பிசிறாக்கிக்கொள்ளச் சொல்வது

எது

 

அஃதொரு விழியின்மை

 

அதைச் சூடி அடைபவை

செயல்முழுமையல்ல

திரைமறைத்தல்

 

அப்பால்

அங்ஙனம்

அதுவாகவே

அது

 

அறம்

என்பதொரு கல்

 

மெய்

என்பதே திண்மை

 

88.தானறவே அறம்

 

அகம்

தான்

 

புறம்

வீடு

 

பிற விலக்கையில்

அங்கெழுகிறது

கூடு

 

அங்கு எஞ்சுவதோ

முள்ளும்

சருகும்

இன்மையும்

 

அங்கு அழிவதோ

அன்பும்

அறமும்

மெய்மையும்

 

அகம்

முழுமை

 

புறம்

வெளி

 

பிற விலக்கையில்

அங்கெழுகிறது

வீடு

 

அங்கு எஞ்சுவதே

மலரும்

தளிரும்

இனிமையும்

 

அங்கு அருள்வதே

அன்பும்

அறமும்

மெய்மையும்

 

89.தீட்டுக

 

அறமின்மைகள்

அறிந்தே

அறம்

 

மெய்யின்மைகள்

அறிந்தே

மெய்

 

இத்தனை கடின வழி

இத்தனை துயர வீழ்ச்சி

எதன்பொருட்டு

 

மானுடம்

கொள்ளும் மழுங்கல்

எதனால்

 

கூர்

எதுவென அறிந்தும்

தீட்டத் தயங்குவது எதனால்

 

அத்தனையும்

உள்ளன

கண் முன் என

 

காணுதல் ஒன்றே

தவமாகுக

 

கூர் ஒன்றே

மெய் ஒளிரும் முழுமை

 

அங்கு சுடரும்

தழல்

ஞானம்

 

90.பறத்தலே

 

தொலையிருந்து

வீசியெறியப்பட

சீத்தமுற்கிளை ஆடலில்

வந்தமர்ந்தது

புழுதிக்குருவி

 

சூழ நோக்கி

வீசியெறியப்பட

ஏகித் தொலைந்தது

தொலையில்

 

உயர எழுபவை

கொள்கின்றன

கூரலகுகள்

கூருகிர்கள்

கூர்விழிகள்

 

பறந்து அறிவதே

வானமும்

பின்

வந்தமர்ந்து அறிவதே

பூமியும்

 

ஆக பறத்தலே

ஆதல்

 

91.ஆடலருள்

 

மானுடர் எறும்புகள்

பிரிந்து பிரிந்து

அலைகொண்ட தவிப்பு

அன்பால்

பகையால்

வஞ்சத்தால்

 

நீரில் இறங்கையில்

அத்தனையும் அழிந்து

மானுடம்

உருக்கொண்டு உருள்கிறது

 

சரித்துக் கலைப்பதும்

கூட்டிச் சேர்ப்பதுமாய்

மானுடத் துகள்களை

வைத்து ஆடும் கை

ஒன்றுண்டு

 

அதற்கொரு கொடுமுகம்

அதற்கொரு அளிமுகம்

இருவிழிகடந்தொரு அறிவிழி

தீரா ஆடல்

தெவிட்டா இன்பம்

கொள்வனவும் கொடுப்பனவும்

இலாதொரு அருள்

அதன்முன்

அமர்ந்து இயற்றுக தவம்

வேண்டிப் பெருக வரம்

ஆற்றி அமைக அருவாழ்வு

 

92.இருளி அவள்

 

வெள்ளியும் பொன்னும்

மினுமினுங்க

திருநீறும் சந்தனமும்

மணமணக்க

மூடல் திறந்து

உள்ளறையெங்கும் ஒளிர

அவள்

அடியெடுத்து வைத்தாள்

அழல்மேல் தளிர்க்கை

அவிந்தன

அவியாகவென அவள்

கையில் விளக்காகவே

வந்தவை

இருளி அவள்

அணியாகவே உருவெழுந்தன

வெள்ளியும் பொன்னும்

மினுமினுங்க

சந்திரனும் சூரியனும்

மணமணக்க

திருநீறும் சந்தனமும்

 

93.சொற்துளி

 

அழகு என்பதே அமைதி

 

எத்துணை அழகிய பொருத்தம்

 

இச்சிறு சொற்துளி

 

இவ்வாறாகவேதான்

 

மானுட வாழ்வு பொருளாகிறது

 

அக்கணம்

 

அமைதி என்பதே அழகு

 

 

94.பேராண்மை

 

இதழ் பதித்தொரு வில்லல்

தழல் வளர்த்தொரு அமைதி

இனிமையில் இனித்தொரு களி

அங்கிருந்து

அதன்பொருட்டென

அவ்வளவும்

அது அறியுமோ இலையோ

அறிந்தாலும் தவிர்க்கலாம்

ஏற்றி வைக்க

ஒரு தோள்

போதும் மானுடர்க்கு

உளம் ஆற அனைத்தையும்

ஆற்றி முடிக்கலாம்

அதில் நிகழ் கோணல்

எங்கோ

எவரையோ

நேராக்கவும் செய்கிறது

அங்கிருந்தே தொடங்குகிறது

மானுடம்

அதையும் விடுத்து

விண் எனவாகவே

ஏங்குமொன்றும்

இருக்கத்தான் செய்கிறது

அதுவாகையில்

அதுவுமிலாதாகிறது

முழுதினிமை

 

95.எது நீயோ அதுவே நீ

 

சிறியதென்றும்

பெரியதென்றும்

உளதா

துயரில்

அவ்வாறு எண்ணியே

அத்தனை சொற்களால்

அலையெழுந்து அறைகிறது

அவள்

அப்போது சொன்னாள்

துயரிலும்

மகிழ்விலும்

ஏன் எவ்வுணர்விலும்

அக்கணம் அது மட்டுமே

விடுபடுவதன் தடமே

சிறியதும்

ஆழப்பதிவதன் தடமே

பெரியதும்

விடவிடப் பறத்தல்

படப்படத் தடுக்கல்

எது நீயோ

அதுவே நீ

 

96.சுழலே

 

மண்

அன்னை என்றாவது

அது பெருக்கும் விதைகளால்

 

விதை

அன்னம் என்றாவது

அது பெருக்கும் கனிவால்

 

கனிவு

அன்பு என்றாவது

அது பெருக்கும் அறத்தால்

 

அறம்

அருள் என்றாவது

அது பெருக்கும் அளியால்

 

அளி

அருவருப்பு என்றாவது

அது பெருக்கும் பொறாமையால்

 

பொறாமை

பொச்சாப்பு என்றாவது

அது பெருக்கும் தன்னுணர்வால்

 

தன்னுணர்வு

பொருட்டின்மை என்றாவது

அது பெருக்கும் விழியின்மையால்

 

விழியின்மை

நீடிக்காமை என்றாவது

அது பெருக்கும் நெறியின்மையால்

 

நெறியின்மை

அழிவு என்றாவது

அது பெருக்கும் கட்டின்மையால்

 

கட்டின்மை

மண் என்றாவது

அது பெருக்கும் எல்லையால்

 

இங்கெழும்

ஒவ்வொன்றும் ஒரு

சூழ்ந்து இயங்கும் சுழல்

 

சுழல்

மையம் நோக்கி

ஊழ்கித்துப் பாய்கையில் இன்மை

 

இன்மை

வெளி நோக்கி

ஆர்த்துப் பாய்கையில் சுழல்

 

97.விடுபடல்

 

எளியவை

எளிதில் ஆட்கொள்பவை

ஆகவே

அலைக்கழிவுக்கு உள்ளாக்குபவை

அங்கு

ஆணவம்

வென்றமர்ந்து சிரிக்கிறது

 

அரியவை

அரிதில் அணுகவிடாதவை

ஆகவே

அலைக்கழிவுக்கு உள்ளாக்குபவை

அங்கு

ஆணவம்

பணிந்தடங்கி புன்னகைக்கிறது

 

முன்னதன் முடிவில்

இன்மையும்

பின்னதன் முடிவில்

பொருளும்

திரள்கையில் உண்டாகிறது

அறிவு

 

அது அடங்கையில்

எஞ்சுவதே அது

அதுவே

ஆதலும் முடிவும் முழுமையும்

இலாதாகையில்

மீளாச் சுழல்

 

98.‘ஆம்’

 

மொழி

என்பதொரு கடல்

என்கிறாய்

அதில் மிக முக்கியமென

உள்ளதொன்று என்ன

 

‘ஆம்’

இது ஒன்றே

எம்மொழி கடந்தும்

மிக முக்கியங்கொண்டது

 

எதன் முன்பு

‘ஆம்’

என்ற ஒன்றால் ஏற்கிறாயோ

அதுவே நீ தேடியது

 

அங்கிருந்து

பிழைத்துப் பிழைத்து நகர்ந்த

நடிப்புகளின் பல்லிளிப்புகளை

என்று

பொருட்டிலாது ஒதுக்குகிறாயோ

அன்று

‘ஆம்’

உன் முன்பு எழத்துவங்கும்

பிறிதொரு தெய்வம்

ஏதுமில்லை

அதில் ஒன்றுகையில்

பிறவெனவும் ஏதுமில்லை

 

99.ஒவ்வொன்றும் மண் ஆகிக்கொண்டிருக்கின்றன

 

ஒவ்வொரு மாலையும்

ஒரு விளக்கமுடியாத விழைவு

தழல் பருத்திக்கொள்கிறது

வெறுமைக்குள்ளிருந்து

கலம் ஏற்றி

விண் கொண்டு

நீர் வார்த்து

துள்ளலால்

இனிமை கலந்து

தேத்தூள் சேர்க்க

இன்மையெழுந்து வரும்

அதில்

அக்கணம்

அமுது

கலக்கப்படுகிறது

மண் பிறந்து வருகிறது

இங்கு

இறுதியில்

இனிமையாக

ஒவ்வொன்றும் மண் ஆகிக்கொண்டிருக்கின்றன

 

100.கேட்கப்பட வேண்டியவை

 

கேட்கப்பட வேண்டியவை

எழுந்து வருகையில்

விடை விட்டகன்றுவிட்டிருப்பதும்

ஓர் இயல்பே

அங்கு

கேள்வி திகைத்து நிற்க

ஒருபோதும் அறிய இயலாதவை

சற்றே அப்பால்

மறைந்துகொண்டிருக்கின்றன

அது என்ன இடைவெளி

என்று திகைக்கையில்

காலம்

ஒரு கரும்பெருஞ்சுவர்

அதில்

கேள்வியும்

விடையும்

வைத்தாடும் கருக்கள்

மானுடம்

 

101.கைவிடுதலொன்றில்லை

 

புலரி

ஒளியையும்

அந்தி

இருளையும்

அழைத்து நிறுத்தும் வாயில்

என்பதொரு மாயை

 

ஒளி

துளியிருளையும்

இருள்

துளியொளியையும்

எப்போதும் வைவிடுவதில்லை

 

அவ்வாறே அது

உரைக்கிறது நம்மிடம்

கண்ணே!

இங்கு முற்றாக

கைவிடுதலொன்றில்லை

எவ்வுயிருக்கும்

 

102.நகை

 

சாவுக்கு முன்பு

பொருளிழப்பவையை

பொதியெனச் சுமப்பதும்

அதை

அவ்வப்போது

சற்றே

மாந்தி மடுப்பவர்

மானுடர்

எனப் பெயர் சூட்டியவன்

நகைக்கிறான்

 

நகைப்புக்குரியதே

இங்கு

வாழ்வு

எனப் பெயர் சூட்டினான்

மானுடன்

 

தான்

தானல்லாது.

ஆகையில்

நகைக்கலாம்

எனக் கண்டுகொண்டதே

இங்கு மாபெரும் கண்டுபிடிப்பு

 

அணிகொள்கையிலேயே

அழகு

அதன் முழுமையை அடைகிறது

அதுவே பேறு

என்றாகையில்

நகைப்பு நிலைக்க

அணியாகிறது

மௌனித்தபுன்னகை

 

103.துயரக்குடம்

 

எண்ணத் துளியா

கவிதைக் கணமா

ஒன்றிலிருப்பது

மெய்யறிதல்

பிறிதிலிருப்பது

மெய்யழகு

இப்பாலும்

அப்பாலும்

தாவித் தாவி விழுகையில்

அகம்

இதையோ

அதையோ

தாவித் தாவிப் பற்றுகையில்

கைகள்

இங்கோ

அங்கோ

தாவித் தாவி நடக்கையில்

கால்கள்

இவ்வாறு

அறிதலில் தொடங்குவதும்

பிழைத்து

பொருளின்மையில் உழல்வதும்

மானுடம்

ஆற்றுதல் அறிந்தும் தவிர்க்கும்

துயரக்குடம்

 

104.சாவோரக் கேள்வி

 

மழையால்

அறையப்பட்ட நாளது

துயர் மிகு சாலையில் நடை

ஈர மண் மணமாக

துயரை அறிவதும் முதல்முறை

என்பதை பின்னோர் நாளே

உணர்ந்துகொண்டிருந்தான்

 

சாவொளிர

ஊர்க்கிணறு

தாவுதலுக்கான உந்தலை

நிமிண்டிக்கொண்டதும்

ஓர் அடி வைக்கவே

பின்னிருந்து குரோதத்துடன்

கடந்தது மிதிவண்டி

 

சாலைப்பள்ளத்து மண் நீரை

காறி உமிழும் பொருட்டின்மை

அப்போதுகூட துளி வன்மம்

அதை நோக்கியிருக்கவே

சுத்துச் சுவரிலாத

அகலக்கிணற்றில்

மடித்த வெள்ளைவேட்டி சட்டை

மிதிவண்டியோடு பாய்ந்தது

 

அசைவின்மையின் தழும்பலில்

வானம் ஓர் அடியிலி

சூழ்ந்திருந்தவர்களின் தழும்பலில்

அது பெருகியபடியே

 

பின்னிருந்து கண்ட

ஆத்தா ஒருத்தி

“பாஞ்சு காப்பாத்து” என

அவன் தழும்பலை நீவினாள்

எண்ணமற்று

“எனக்கு நீந்தத் தெரியாது” என

திரும்பிக்கொண்டான்

 

யாரிடமென்றில்லாது

“எனக்கு நீந்தச் சொல்லிக்குடுங்க” என

அரற்றியதை தானேயுணர்ந்து

மௌனிக்கையில்

ஊர்கூடிவிட்டிருந்தது

 

பின்னிருந்து ஓடி வந்த

ஒருவர் பாய்ந்தார்

அப்பால் ஒருவர்

அப்பால் காய்ந்த

சேலைத்துணியை கயிறாக இறக்கினார்

தழும்பலின் எதிர்பார்ப்பில் ஏறி

அவர்கள் கரைகண்டனர்

 

பின்னர்

நடக்க வேண்டியவை நடக்க

ஒவ்வொன்றும் அதனதன்

பாதைக்குத் திரும்பின

 

காத்தவர் கிணரருகே

நோக்கியிருக்கும்

பொன்னையனாரை

வணங்கி

புன்னகையுடன் மீண்டார்

அவனைக் கடக்கையில்

“நான் பொன்வேலை செய்பவன்”

என்றார்

 

எல்லோரும் அன்றைய நாளுக்கான

பேச்சுடனும் நினைவுடனும் போக

கிணற்றுக்குள் பாய்ந்த

மிதிவண்டியை எண்ணி

அவன் மட்டும் தவித்திருந்தான்

ஒருவருள்ளும் இறங்காது

அது

கிணற்றுள் மட்டும் இறங்கிவிட்டதை

 

எங்கோ எதுவோ

காக்கப்படுகையில்

எங்கோ எதுவோ

தனிமையில் தவிக்கிறது

பிழை என்பதால் மட்டுமே

இங்கு இயக்கம் தொடங்குகிறதா

கேள்வியோடு அவன்

தேடத்தொடங்கினான்

பாதாளசோதி

 

105.மாயைவழி

 

எத்துணை சிறியதும்

எத்துணை பெரியதும்

வெறும்

விலக்கத்தாலும்

அணுக்கத்தாலும்

அறியத்தக்கவையே

அவைகொள்

ஆழமும் அழுத்தமும்

பொருளாவதொரு மாயை

மாயைவழி

கால்கொண்டு இழிகிறது

அறிதல்

அடிகளால் அளக்கப்படுவது

வாழ்வாகையில்

விட்டகல்கின்றன

வகுத்தல்கள்

 

106.ஆயிரம் காதமும் இங்குதான்

 

ஆயிரம் காதம் கடந்து

இதோ வருகிறது

காற்று

இங்குதான் எனவும்

இதுதான் எனவும்

அகச்சுட்டு அறிவிக்க

அது வருகிறது

ஒவ்வொரு அடியும்

ஒரு காலப்பெருவழி

ஊடுபுகுவது கரும்பெருஞ்சுழி

அதோ அதோ

அங்குதான்

பதுங்கி நழுவுகிறது

பாழ்ப்பெருக்கு

அதன் எல்லையே

அதற்கு அப்பாலே

அங்குதான் என

பல்லாயிரம் காதம்

காத்துக்கிடக்கிறது

இதோ கடந்துசெல்கிறது

காற்று

 

107.வெற்றுவெளியின் ஒளி

 

வெற்றுவெளியைப் போல்

வெறுமையுதறும் உணர்வு

வேறெப்போதும் எழுவதில்லை

அதைக்காணும்

கணமொவ்வொன்றும்

நிரம்பி வழிகிறது

அதில் வழுக்கையில்

உள்ளெழுகிறது அமைதி

எழுபவை தளர

வெளியெங்கும் வெறுமை

கண்டுவிட்டதாலேயே

கைவிடாதாகிவிட்ட ஒன்று

இங்கு நிகழ்வது

எழுகையும் மீள்கையும்

ஆனதொரு சுழல்

மாறாமையானதொரு துயர்

இன்மையை

இருப்பாக்க

தொடுதலும்

கூடலும்

ஊடலும்

பிரிதலும்

இருப்பை

இன்மையாக்க

விடுதலும்

சேர்தலும்

ஆதலும்

அமைதலும்

வேறெப்போதும் எழுவதில்லை

இருப்பையுதரும் உணர்வுபோல்

வெற்றுவெளியின் ஒளியில்

 

108.அருள்பெருவழி

 

எங்கோ வந்தபிறகு

எதுவும் அவ்வளவு

அழுத்தமோ ஆழமோ

கொள்வதில்லை

தொலைவு என்பதே

விடுபெறல் என்றாகையில்

மட்டுமே இயல்படைகிறது

இங்குறையும் வாழ்வு

இங்குறையவே

தொலைவுறைதல்

எனும் தவமே

அருள்பெருவழி

 

109.கனம்

 

விழித்திறப்பே

அங்கு என்கிறது

 

உடலிருப்பே

இங்கு என்கிறது

 

இருமைக்குமிடையில்

உலையுமொன்றே

ஆகிறது இருப்பாக

 

கனம்

எனவாவதே எப்போதும்

உதறிக்கொள்ளவும் துடிக்கிறது

 

அக்கணத்திற்கு

அப்பாலும் இப்பாலும்

உள்ளது ஒன்று மட்டுமே

என்பது அறிதல்

பிறிது பிறிது மட்டுமே

என்பதும் அறிதலே

 

110.மௌனசாட்சி

 

அகம் அமைய

ஆறுதல் அமையாதோர்

புறம் இருந்து

பொருள்வயத்தைப் பற்றுகின்றனர்

அது

ஒருபோதும்

இடித்துரைப்பதில்லை

வழிகாட்டுவதுமில்லை

மௌனசாட்சியாய்

உடன் வருகிறது

இடுகளத்திற்கு

பொருள்களுக்கு உணர்வில்லை

என்போர் அறிவிலர்

இத்துணை அணைப்பாக

கொலைக்களம் சேர்க்கும்

பாங்கறிந்தோர் யாருமில்லை

மானுடரில்

பொருள்களால்

செலுத்தப்படும் வேறோருயிர்

இல்லை என்றானதும்

பொருள்களும் கண்டுகொண்டன

அகத்தை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *