1. காலம்
ஒரு நாளுக்கும்
மற்றொரு நாளுக்குமான
இடைவெளியில்
ஒரு மலையும் ஒரு கடலும்
வந்துவிடுகிறது.
ஒரு வாரத்திற்கும்
மற்றொரு வாரத்திற்கும்
இடைவெளியில்
ஓயாத காட்டருவி கொட்டுகிறது.
ஒரு மாதத்திற்கும்
இன்னொரு மாதத்திற்கும்
இடைவெளியில்
ஒரு புகைவண்டி போகிறது.
நொடியில் தோன்றி
வினாடியில் மறைந்துவிடும்
வால் நட்சத்திரங்களை
கண்களால் பறிக்கிறேன்
இடைவெளியில்
ஒரு வானம் இருந்தது.
நாடென்பது
மீன்தொட்டியின் கண்ணாடியால்
ஒட்டப்பட்டது
கடலென்பது
மீன்களால் அசைவது
வீடென்பது
மலையின் துகள்களால் ஆனது
மலையோ நகராத விருட்சம்
நான் கடலால்
அசைகிறேன்
பாறையால்
அசையாதிருக்கிறேன்.
தற்காலிகமான மரணங்களை
தவிர்க்கவே முடிவதில்லை
இறுதியான பயணத்தில்
சிறிதுதூரம் நடந்துபோகவும்
தைரியமில்லை.
பதினாறாம் நாளில்
ஒரு செங்கல்லாக நிறுத்தி
கரைத்திடும் நதியில்
குளித்துக் கரையேற
ஒரு புனிதமும் இல்லை.
சிலுவையின்
நான்கு நுகத்தடியிலும்
கொட்டுது குருதியல்ல அன்பே…
அது தேவதேவனின்
அன்பின் பெரு ஊற்று
நமக்கு நேர்ந்த
துன்பத்தின் கைமாறே.