க. சுப்பிரமணியன் கவிதைகள்

பொறு!

வாலாட்டுகிறவர்களிடம் 

கடவுள் பிரியமானவராயிருப்பாரென யார் சொன்னது!

அது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

மனிதனின் இடத்தில் நாய்கள்தான் இருக்கவேண்டும்

 

ல்லா விலங்குகளுக்கும் வால்

இருக்கத்தான் செய்கின்றன…

எல்லா விலங்குகளும் 

வாலை அசைக்கத்தான் செய்கின்றன…

மற்றவையெல்லாம் 

வாலால் சீரின்றிக் கொட்டி முழக்கும்போது…

நாய்களுக்கு மட்டும்தான் வாலால்

சிம்பொனி இசைக்கத் தெரிந்திருக்கிறது!

 

ப்படியோ ஒரு நாய்க்கு

தன் வாலின் மகத்துவம் புரிந்துபோனது!

தலையைத் திருப்பி அத்தனை மரியாதையுடன்

ஏறிட்டுப் பார்த்தது!

பக்தியை அதன்மேல் சொரிந்தது!

ஒரு முட்டுச் சந்தில் முரட்டு நாயொன்று

துரத்தியபோது,

பிடிவாதமாக வாலை மடக்கமறுத்து

தப்பிவந்தது!

சிலநாட்களுக்குப் பின் 

தெருவெல்லாம் கடிபட்டு இறப்பின் தருணத்தில் 

நாய் முனங்கியபோது வால் உபதேசித்தது

நீ எனக்கல்ல… 

வாழ்வின் விதிகளுக்கு விசுவாசமாக இருந்திருக்கவேண்டும் 

 

னந்தகோடி வால்கள்!

அனந்தகோடி அசைவுகள்!

ஒவ்வொரு வாலும் தன்னசைவு

தனித்துவமானதென்றே நம்புகிறது

வால்களிலும் இருக்கின்றன வரிசைகள்

வால்களிலும் நிகழ்ந்தது பரிணாமம் 

கடைசியில் பாருங்கள் 

வாலைத் தொலைத்த குரங்கொன்றைப்போய்

முதன்மையாக நிறுத்தியிருக்கிறது காலம்!

 

னது இதிகாசம் எளியது!

வாலுள்ள அனுமனின் தயவில்தான் 

வாலில்லாத லட்சுமணன் உயிர்மீண்டான்

வானரங்களின் படைத்துணையில்தானே

ராவணனை ராமன் வென்றான்!

சீதையின் மீட்புக்கும் வால்தானே ஆதாரம்!

வால் புகழ் போற்றுவோம்!

வால் புகழ் போற்றுவோம்!

 

ஹாரன் ஒலிக்க பிற வண்டிகளை 

முந்தத் துடிக்கும் பேருந்து

குரைப்பொலியுடன்

வாகனங்களைத் துரத்தும் நாயைப் போலத் தெரிகிறது!

என்னவொன்று…

விரட்டும் நாயின் கம்பீர வாலும்

தப்பியோடும் நாய்களின் 

காலிடுக்கில் பதுங்கிய வால்களும் 

வாகனங்களில்

துலக்கமாகத் தட்டுப்பட மறுக்கிறது!

 

ரை வைத்த பொறியில்

விழுந்த எலி…

எலிகளைப் பிடிப்பதற்காக

அவ்வப்போது வீட்டுக்குள் தலைகாட்டும் பூனை…

நள்ளிரவில் காதல்செய்யும்

பூனையின் ஏக்கக் குரல்கேட்டு

குரைத்துக் களேபரம் செய்யும் நாய்…

எத்தனை குரைத்தாலும்

ஊரைத் தன் போக்கில் 

வலம் வரும் கோவில் மாடு….

எல்லாம்தான் வாலாட்டுகின்றன!

ஒரேயொரு முறை

சொல்பேச்சு கேட்கவில்லை என்பதற்காக

என்னிடம் வாலாட்டாதேயென

நாளெல்லாம்

பொருமிக்கொண்டிருக்கிறார் அப்பா!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *