1.
தேநீர், மலையை புரட்டுவதற்கான உற்சாகம்
சிந்தனைக் குதிரையின் தொடையில் பாயும் குதிமுள்
இருள்பெருக்கும் மனநிலையின்
உச்சியில் எழும் ஆதவன்
மழைக்காலத்து நீரோடையென அலைபுரளும் ஊக்கம்
வலசைப் பறவையின் சிறகுகளில் பெருகும் ஆற்றல்
தேநீர் தேநீர்தான் என்ற ஜென் குரு
அமுதத்தை அருந்தும் தோரணையில்
தேநீரைப் பருகுகிறார்!
தேநீர் அகழ்ந்தெடுக்கிறது
என் துரதிர்ஷ்டங்களை, சலிப்புகளை
கவிதை வார்ப்பதற்கான சொற்களின் மீது
படிந்திருக்கும் மணல்வெளியை
உறைபிரிக்கப்படாத சிறகுகளை
என்னில் படியும் எருமையின் நிதானங்களை
துடைத்தகற்றி கன்றின் துள்ளல்களை அளிக்கிறது
ஒவ்வொரு மிடறு தேநீரும் ஒரு ஜென் சூத்திரம்…
தேநீர்க் கோப்பை விளிம்பெங்கும்
எண்ணற்ற ஜென் குருக்கள்….
சூடான தேநீருக்குப் பின்
எனைப் பிணைத்திருக்கும் சிடுக்குகள் கொஞ்சம் நெகிழ்கின்றன
புழுவெனச் சுருண்டிருந்த உத்வேகம்
சீறி விரிக்கிறது படத்தை!
தேங்கி நின்ற என் குட்டைகளனைத்தும்
சலசலத்தோடத் துவங்குகின்றன…
ரத்தத்தில் விரைகிறதொரு மின்னற்கீற்று!
தேநீர்ப் பாத்திரத்தின் கீழே
தணலின் நடனக் கொந்தளிப்பு
மேலே நீரின் தளதளப்பு
ஜென் குரு நுகர்ந்து மகிழ்கிறார் பிரபஞ்ச நறுமணத்தை!
ஜென் குரு வாய்க்காவிட்டாலென்ன?
தேநீர்க் குவளையைக் கையிலேந்து!
தேநீர் தீர்ந்துபோனாலென்ன?
ஜென் ஞானத்தை அள்ளிப் பருகு!
2.
நினைவின் அடித்தட்டில் படிந்து கிடக்கிறார் அப்பா
கோபமான தருணங்களில் அவர் உதிர்க்கும் வசைகளை
கிட்டத்தட்ட மறந்தே விட்டேன்…
அப்பாவின் நினைவாய் மிச்சமிருப்பது
வெள்ளுடுப்பு, குடை சகிதம் நடையிடும்
அவர் தோற்றம்…
அம்மாவுடனிருக்கும் ஒரு பழைய புகைப்படம்…
பனியனுடன் ஜன்னலின்முன்
சவரம் செய்வதற்கு அமரும் காட்சி…
அவர் பையில் எடுத்த சில்லறைகளில்
பார்த்த சினிமா…
அவர் ஊர் சென்று திரும்பிய மறுநாள்
தின்று தீர்த்த இனிப்புகள்…
ஒவ்வொன்றாய் விழிகளுக்குள் ஊர்வலம் போகின்றன
பெறுவதற்கு மட்டும் நீண்ட என் கைகள்
கொடுப்பதற்கு நீளவே இல்லை
தீர்க்க முடியாத கடனுடன்
அணுக முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்ட
அப்பாவின் மீது பெருகும் பிரியங்கள்
நுரைத்துப் பெருகும் குற்ற உணர்வுகளை
என்ன செய்ய…
வளைத்துப் பிடித்திழுத்து மறுக்க மறுக்க
முகமெல்லாம் முத்தும் என்னை
திகைப்பகலா விழிகளுடன் நோக்குகிறான்
விளையாட்டில் மும்முரமாயிருந்த மகன்