அய்ய அரக்கன் – சிவக்குமார் கவிதை

இறுக்கம் நெகிழும்
கணங்களில்
பிறப்பெடுத்துவிடுகிறான்
அவ்வரக்கன்
மாளாத அவஸ்த்தையில்
வெம்பிசாகிறேன் நான்
வெற்றுக்கற்பனை
என்றது சுற்றம்
அறிவார்ந்த ஊகம்
என்றது அகந்தை
எது எவ்வாறாயினும்
அவஸ்த்தையில்
புளுங்கிசாகிறேன் நான்
மயில் அகவும் நடுநிசியில்
அகவுகிறான்
“இது எதனால் ?”
கோழிகூவும் விடியற்காலையில்
கூவுகிறான்
“அதற்காக தானோ?”
தாளாத அவஸ்த்தையால்
வெட்டி எறிகிறேன்
அவனை
வெட்ட வெட்ட தழைக்கிறான்
அவன்
இரட்சத உருக்கொண்ட
மாமரமாகி அழுத்தகையில்
வழிவகையின்றி
கையளித்து மன்டியிடுகிறேன்
நான்
எள்ளிநகையாடுகிறான்
அவன்
எள்ளல் மிஞ்சிட
வீறுகொண்டெழுந்தேன்
“ஞானவேல் கைக்கொண்டு
மாமரம் பிளந்திடுவேன்
சம்ஹாரம் செய்து
கோழி கொடி ஏற
மயில் வாகனம் ஏறிடும்
கொக்கறுத்த
கோமானாவேன்”
சூளுரைத்து விம்முகையில்
கட்டற்ற காமத்தால்
கட்டி தழுவுகிறாள் அவள்
அளவற்ற அன்பை
அள்ளிபருகுகிறேன் நான்
ஞானவேல் எள்ளலிட
இறுக்கம் நெகிழும்
கணங்களுக்காக
காத்திருக்கிறான் அவ்வரக்கன்