1.
எனது சின்ன அறையில்
பிரபஞ்சம்
மாயக் கம்பளம்
பிறை நிலா
உடு மண்டலம்
குழந்தையின் புன்னகை
வானவில்
ஆழி சூழ் உலகு
ஓலமிடும் புலம்
எறிந்து தீராத அக்னி
மயிரடர்ந்த உறுப்பு
இருக்கிறது.
அலுவலகம் சென்று
மாலை வீடு திரும்பியதும்
அத்தனையும் பத்திரமாக இருக்கிறதா
என சோதித்துப் பார்க்கிறேன்
என்னைத் தவிர வேறு யாரும்
அறைக்குள் நுழையும் வாய்ப்பே இல்லை
ஆயினும்
பிரபஞ்சத்தில் ஒரு உபரிச் சூரியனும்
மாயக்கம்பளத்தில் யாரோ அமர்ந்து சென்ற வெப்பமும்
பிறை நிலாவில் ஈசனின் கேச வாசனையும்
குழந்தையின் புன்னகையில் அமிழ்தின் கவிச்சியும்
வானவில்லில் கூடுதல் வர்ணமும்
ஆழி சூழ் உலகில் ஒரு பேரலையும்
ஓலமிடும் புலத்தில் சில பாதச்சுவடுகளும்
எறிந்து தீராத அக்னியில் மேலுமதிக உக்கிரமும்
மயிரடர்ந்த உறுப்பில் விந்துத்துளியும்
இருக்கிறது.
2.
நீட் தேர்விற்கு
என்.சி.ஆர்.டி.புத்தகங்கள் வேண்டும் என்றாய்
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்
உன் குரலைக் கேட்கிறேன்
உன்னை மறந்தே போய்விட்டேன்
நீ இன்றி இவ்வுலகில் எதற்குமே பொருள் இல்லை
என்றிருந்த காலம் வெகு அருகில்தான்
காதல் மட்டுமே உனக்குப் போதவில்லை
எனக்கே நான் உத்தரவாதமில்லை
உன் தேவைகளில்
நான் எடுத்துக்கொண்டவை
என் தேவைகளாக இருந்தவற்றைத்தான்
ஒரு பிரிவு
அது நிகழ்ந்தபோது
அமிலம் பட்ட மென்தசை போல்தான்
வடுக்களை எண்ணி
நாள் முழுக்க அழ முடியுமா என்ன
ஒரு கணம் நீ இதை எண்ணியிருக்கலாம்
அழைக்காமல் இருந்திருக்கலாம்
உன் குரலில்
நான் இழந்த பொன்னுலகம்
மீண்டும் துலங்கி வரக்கண்டேன்
நீட் தேவைதானா என்று நான்
இனியும் யோசிக்கப் போவதில்லை
3.
மகள் சூடிய மல்லிகையை
எவ்விதம் எதிர்கொள்வது
யு.கே.ஜி. அட்மிசனுக்கு
பாஸ்போர்ட் சைஸ் போட்டா எதற்கு
எடுக்கச் சொன்னார்கள்
ஸ்டுடியோ பக்கம் சென்று
ஆண்டுகள் பல ஆயிற்று
தேடிக் கண்டு பிடித்து
செல்ல மகளை அமரச்செய்தேன்
மறக்காமல் அணிவிக்கச் சொல்லித் தந்த
மல்லிகைச் சரத்தை சூட்டினேன்
மகள் சூடிய மல்லிகை
மணக்காமல் இருக்கக் கூடாதா
ஒரு கணம்
ஒரே கணம்…
4.
நீ எவ்வளவு வளர்ந்திருக்கிறாய்
லெக்கீன்சில் உன் தொடைகள்தான்
எவ்வளவு பெருத்துத் தெரிந்தன
உன் மார்பகங்களை
நான் இதற்கு முன்னர் இவ்விதம் பார்த்ததில்லை
எனக்கு மாமி போலிருந்தாய்
என்னோடு நீ
சிரித்துப் பேசினாய்
இப்படி பேச வேண்டும் என்று
எண்ணி ஏங்கிய காலமும் உண்டு
இருபதாண்டுகள் தாமதித்து
நீ வழங்கும் சலுகைகள்
தொந்தரவாகத்தான் இருக்கின்றன
உன் கணவனை பழி தீர்க்க எண்ணிணாயோ
உன் கன்னிமையை உயிர்ப்பிக்க விழைந்தாயோ
மறுத்திருந்த என் மீதான காதலை மீட்டிப்பார்த்தாயோ
எதுவென்றாலும் முடியாது
நான் பார்த்தவை எனக்குள் பத்திரமாக இருக்கின்றன
அவ்வளவு போதும்
அவ்வளவும் போதும்.
5.
நான் தனிமையில் இருக்கிறேன்
என்னைச் சுற்றி நான்கு சுவர்கள்
இடதுபுறம் நான்கு அடுக்குகளில் புத்தகங்கள்
எதிர்புறச் சுவரில் அலியா பட்டின் அழியாத புன்னகை
அருகில் தீபிகா படுகோனின் மஞ்சள் மயிர் தெரியும் தொப்புள்
வலது பக்கச் சன்னலிற்கு அப்பால் பெருநகரம்
அதன் ஊடாக சதா அதன் இரைச்சல்
சாயந்திரமானால் மஞ்சள் ஒளி உள்ளே பாயும்
அதிகாலையில் பக்கத்து வீட்டின் சுப்ரபாதம் ஒலிக்கும்
இரவில் கனவுகள் வரும்
ஒரு நாள் ஒரு பேய்க்கனவு
ஒரு நாள் ஓரு நடிகையைப் புணர்ந்த ஸ்கலித நிகழ்வு
ஒரு நாள் ஒரு கொலையை க் கண்டு பதறிய இடைவெட்டு
ஒரு முன்னாள் காதலியை அருகில் கண்ட பரவசம்
இதற்கு மத்தியில்தான்
நான் தனிமையில் இருக்கிறேன்.