ஆவுடை கவிதைகள்

1.
கிளம்பும்போதே திரும்புவதற்கான
கணம்
நிர்ணயிக்கப்படுகிறது
வழிகளில் என்னை ஏந்திச் செல்லும்
காலம்
திரும்பும் வழியில் என்னை மீண்டும்
தொகுத்துக்கொள்கிறது
தினந்தோறும்
ஒரு கோப்பை நிறைய
தானியங்களைத்தேடியே
நான் பயணிக்கிறேன்
ஒரு பயணத்திற்கும்
மற்றொரு பயணத்திற்குமிடையே
இருப்பது
இந்த பிரபஞ்சமும்
அதில் சதா அலையடிக்கும் தீராப்பசியும்
எதிர்ப்படும் முகங்களில் தெரியும்
அந்நியத்தன்மையே
பயணக்களைப்பை உண்டு பண்ணுகிறது
நானும் உங்களில் ஒருவன் என்றோ
எனக்கும் இந்த பூமி மொத்தமும் உரிமை என்றோ
யாரிடமும் சொல்வதில்லை
அவர்கள் அச்சம் கொண்டே
பார்க்கிறார்கள்.
எரிச்சல் படியும் கண்கள் கொண்டே வரவேற்கிறார்கள்
என் சிறிய பசியையும்
அதைத்தணிக்கும் சிறிய கோப்பையையும்
காட்டும் முன்பே
தங்களின் தரித்திரியத்தை கடை விரிக்கிறார்கள்
அவர்களின் பொய்கள்
புராதனத் தன்மை கொண்டு தேய்ந்திருக்கின்றன
ஒருமுறை பயன்பாட்டிற்கு வந்த பின்னர்
பொய்களுக்கு மரணம் இல்லை
அவை வயோதிகத்தின் நொய்மை தாளாமல்
தள்ளாடித் தவிக்கின்றன
இல்லை என்பதற்கு சரியான மாற்றுச்சொல்
பொய்யில் இல்லை
சரி என்பதற்கும் கூட அவ்வாறே

2.
ஞானமென்பது வெறும் காத்திருப்பு
தனிமையில் காத்திருப்பதே தியானம்
காத்திருப்பில் கனி உருவாகும்
காத்திருப்பின் வெக்கை
அகத்தில் புதைந்திருக்கும் விதையை உயிர்ப்பிக்கும்
இருளை உரசிச்செல்லும் பிரக்ஞை மீன்
ஒருநாள் கண்டு கொள்ளும்
கடலும் நீர்
கிணறும் நீர்
குளம்குட்டைகளும் நீர்
ஓடும் ஆறுகளும் நீர்
நகராமல் நகரும் பாவனை அறிந்த பின்னர்
மீன் குருவாக பிறக்கிறது.
குரு கடலை நன்கறிந்தவர்.

3.
பாதி திறந்த இமைகளோடு
ஆழ்ந்த துயில்
கண்கள் உள்ளே உருளுகின்றன
இடதும் வலதும் வலதும் இடதும்
உதடுகள் கூட உறக்கத்தில் துடிக்கின்றன
மெல்லச் சிரிக்கிறாள்
புரண்டு படுக்கிறாள்
துயிலும் முகம் வேறு ஒருவருடையதைப் போல
மறுகணமே கன்னத்தசைகள் இறுக்கம் கொள்கின்றன
தலையணையைத் தேடி சரிசெய்துகொள்கிறாள்
மேலும் கீழும் செல்லும் சுவாசம்
இரவின் தனிமையில் ஒரு சீறலாக
அலையடித்து நீள்கிறது
யாமத்தின் கைகள் தட்டி எழுப்ப
என்ன செய்வதென்று தெரியாமல்
உன் அருகில் அமர்ந்திருக்கிறேன்
உன் உடலுக்குள்
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்

4.
இன்னும் சில ஆண்டுகள்
மனம் என்னவோ சிறுவனை எண்ணிக்கொள்கிறது
திரை திறக்கவே இல்லை என்றுதான் நம்ப விரும்புகிறது
கண்ணீரும் கையறுநிலையும்
கண்டு கண்டு
சிரிப்பது ஒவ்வாமையாகிப் போனது
நடுவயதிற்கு பிறகு இந்தப் பூமியில்
உற்சாகம் கொள்ளும் தருணங்களே
அருகிப் போய்விடுகின்றன
லௌகீகத்தின் கவலைகளால்
முற்றாக மூடி
அற்பத்தனங்களும் வெறுமைகளும்
கூடிவிடுகின்றன
எவற்றை நெடு நாள் சுமந்து அலைந்தேனே
அவை
வழியெல்லாம் நாறிக் கிடக்க காண்கிறேன்
லட்சிய வாதம் சாணிடரி நாப்கின்களைப் போல
அருவருப்பை அளிக்கின்றது
எப்படியும் பிழைத்து விட வேண்டும் என்ற வெறியில்
எப்போதும் குற்றங்களையே கைக்கொள்ள நேரிடுகிறது
கீழ்மைகளிலும் நறுமணம் உணரும் மனது
நாற்பதுகளில் வாய்த்திடுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *