பாபு பிரித்விராஜ் கவிதைகள்

1.எனை

பிறையென

நினைக்கும்

ஒரு குட்டி ஆகாயம்

என்னிலும்

ஆழமாய்

தளும்பிக் கொண்டிருந்தது

 

 

 

முழு மதியாக

எனை மாற்றியதும்

வட்டமாக விசும்பை

கத்தரித்ததுமான

இப்பாழுங்கிணற்றினை

தாண்டயியலுமோ?

 

 

2.குடைவரைக் கோவில்

 

ஒரு பெருநிழல் மேல்

சரிந்திறங்கி வாசலில்

வந்து நிற்கிறது வெயில்

 

மழை பொழிகையில்

முழுவதும் விரிக்கயியலா

குடை போலிருக்கிறது

 

புறத்தில்

காண்கையில்

ஆவுடையாக தேங்கிய நீரில்

லிங்கமாக நிற்கிறது

 

துளிக்கு அணையாது

துலங்கும் ஒளியனைத்தும்

இருளைக் குடைந்து குடைந்து

அடங்குகிறது..

 

 

3.உயரம்

 

ஒட்டி பின் உதிர்கின்றன

அத்தனை சொற்களும்

 

வந்து தழுவி திரும்புகையில்

வளர்ந்தவை தான்

இச்சரியும் கரைகூட

 

இச்சந்திப்பின்

நிரந்தரம் அறிந்து

ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது

ஒரு சொல்

 

வானம் என்பது

இப்படித்தான்

தனித்து தெரிகிறது.

 

4.மேகம்

 

சிம்மம் ஒன்று கலைந்தது

பதிலுறாத கேள்விக்கான

விடையொத்திருந்தது

அது

பிடிபடும் வரை

கடினம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *