1.
ஐந்தாறு பெண்கள் உள்ள வீட்டில்
யார் கண்களிலும் அது தட்டுப்படவில்லை
ஆற்றில் குளித்துத் திரும்பிய அப்பா
பார்த்து திரும்பினார்
அவர் அச்சம்
அவர் அதைப் பார்த்துவிட்டார் என்பதை
வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில்
இப்படி நேருக்குநேர் அவர் எதிர்கொண்டதில்லை
எட்டுப்பெண்கள் சூழ வாழ்ந்து வளர்ந்தவர் என்றாலும்
அவரின் பார்வையில் அப்பட்டமாக
எதுவும் நிகழ்ந்ததில்லை
யாருடைய கவனக்குறைவு இது
செங்கல் பதித்த நடு வாசலில்
வெள்ளை முத்தின் மேல் அது அமர்ந்திருந்தது
முதல் பார்வையில் அசூசையாகப் படவில்லை
சிவப்பின் ஈரமும் மினுமினுப்பும்
மறுகணம்
அவரைக் கவ்வி இழுத்தது
உற்றுப்பார்த்து உறுதி செய்துகொண்டதும்
கால் பெருவிரலால் தேய்த்து அழித்துவிட நினைத்தார்
நினைப்பதற்கும் செய்வதற்கும் இடையே
ஒரு துளி விஸ்வரூபம் கொண்டது
வாசலுக்குத் திரும்பி திண்ணையில் அமர்ந்துவிட்டார்
பாத்திரம் கழுவிய தண்ணீரை
ஓடையில் ஊற்ற வந்த அம்மா
இயல்பாகவே இடதுகாலில் தேய்த்து
இல்லாமல் ஆக்கினாள்
அவளுக்குத் தெரியும்
சின்னவளுக்கு இது இரண்டாம் நாள்
உள்ளே திரும்பியவள்
கடுகு டப்பாவில் இருந்து சில்லரைகளைச் சேகரித்து
கடைக்கு ஓடினாள்.
திருநீற்றை வாயில் போட்டு
நெற்றில் பட்டை தீற்றியவர்
மீண்டும் கொப்பரையைத் துழாவினார்
குங்குமச் சிமிழ் இடறி கீழே சரிந்ததில்
வீடே சிவப்பில் ஒளிர்ந்தது
2.நிச்சலனம்
ஓய்ந்த லயிப்பில்
நிசியின் கார்வை
இருளில் மலர்கின்றன
நினைவின் மொக்குகள்
பேருருளை தின்றுதீர்க்கும்
தீக்குச்சியைத் தேடினேன்
உரசியதும்
கண்களில் பட்டு
அனைத்தும் சுயம் ஆனது
நெற்றிப் பொட்டின் சுடர்
வெளிச்சத்தில் மறைந்தது
வெளி எல்லைகளுடையது
உள்ளோ
ஆழியின் ஆழங்களை உள்மடிப்பில்
கொண்டது
3.துயிலும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்
தொடுவானத்தை தீண்டும்
கன்னக்கதுப்புகளின் குழைவில்
சுழித்துச் செல்கின்றன
யுகங்கள்
பிஞ்சுக் கைகள்
பிஞ்சுக் கால்கள்
பிஞ்சு உதடுகள்
சதை அடுக்குகளின் குலைவு
கலைந்த கேசம்
அழும் உதடுகளுக்கு
காம்பை கொண்டுவரும் வரம்