1. கச்சாமி
தியானத்தில் அமர்ந்தேன்
தலையை வெட்டி
இடம் மாறச் செய்து
விகார விந்தையாக்கினீர்
கிறக்கத்தில் கிடந்தேன்
பாம்பை தலையில் சுற்றிவிட்டு
பாற்கடலில் புதைத்துவிட்டீர்
யாரோ
செய்த லீலைகளுக்கெல்லாம்
செயப்படு பொருளாக்கினீர்
சமாதியில் பூத்த எருக்களைக்கு
ஞானப்பூவென்று
பெயர் சூட்டினீர்
இப்போதாவது….?
இல்லை
எப்போதும் இல்லை
என்னால் வாழும் உங்களை
எப்படி வெறுக்க முடியும்
உங்களால் மடிந்த
என்னால்…
2. உப்புடம்பு
வியர்வையில் ஊறிக்கிடக்கும்
எதார்த்த மனிதனுக்கு
என்ன செய்ய இயலும்
என்னால்
மூக்கைப் பொத்திக்கொள்ளாமல்
உரையாடுவேன்
தேநீருடன்
உப்புடம்பில் இனிப்பேரும் வரை.
ReplyForward
|