1.காட்சி
அடங்க மறுத்த நினைவுகளை
செதுக்கி நிலைநிறுத்த
தேடியலைந்தேன்
காலத்தில் உறைந்து
எண்திசையிலும் விரிந்து
முற்றாக வெறுமையில் நின்று
காத்திருந்த கற்பாறையில்
முதல் கொத்தில்
புடைத்து எழுந்தது அவன் உரு
நிரந்தரமாக அழித்திட முயன்று
நாள்தோறும் தோற்ற
அவனை
குருதி வழியும் செஞ்சிற்பமாக
கல்லெழுத்தில் வடித்தேன்
நானும் அவனைப் போல
ஒருநாள் இல்லாமல் ஆவேன்
என் காலடிச்சுவடுகளும்
கொடுங்காற்றில் கரைந்து காணாமல் போகும்
அவனை காலத்தின் முன் நிறுத்துவதனால்
நானும் நினைக்கப்படுவேன்
படுகளத்தில் வஞ்சித்த கணத்தில்
எனக்கும் லபித்தது வரலாற்றில் வாழ்தல் என்னும் நீளாயுள்.
2.கால்கோள்
புலரி வேண்டாம்
அந்தியில் அவன் விசும்பல் கேட்டதுண்டு
முற்பகலில் அவனை உற்சாகம் ஊட்டும்
கதிரோன் இருப்பான்
பிற்பகலில் அவன் சோர்வடைந்து
இல்லாள் மடிநோக்கித் திரும்பிய
மீள்வருகையை நிலம்அறியும்
நிசிகளில் அவன் அவாவுடன்
நிலமெங்கும் அலைவான்
அடங்காத வெக்கையோடு அவன் நீந்திக்கிடப்பான்
தீத்துளிகளை ஒத்த விண்மீன்கள் சிலபோது
அவனுக்கு கண்கள் என்றாகும்
நீ
இரண்டாம் யாமத்தில் அவனை நடு
3.நீர்ப்படை
நிலத்தில் ஊன்றிய போதே
அவனின் கால்கள் ஓய்ந்துவிட்டன
காற்றென திரிந்த காலம்
பனிப்பாறையென்றாயிற்று
மிதக்கும் சிகர நுனி அவனின் வருகைக்கு
ஓர் அடையாளம்
மண்மீது மண் படிந்து நிலம் வீங்கும்
ஆழ ஊன்றிய தெம்பில் அவன் வான்நோக்கி நீள்வான்
நன்னீரெடுத்து அவனைக் கழுவு
தண் நீரில் அவன் சாந்தம் கொள்ளக்கூடும்
பிழை என்று பிறர் கருதினாலும்
அவனைக் குளிரச்செய்யும் கட்டளை
உனக்கு குடும்பச் சொத்து
நீரால் ஆனது இவ்வுலகம்
நீரால் ஆகட்டும் அவன் உடலும்.
4.நடுதல்
யாவும் இங்கிருந்தே எழுந்தன
யாவும் இங்கிருந்தே வீழ்ந்தன
யாவும் இங்கிருந்தே மறைந்தன
எழுந்தவை வீழ்ந்தவை எல்லாம் மறைந்தன
அவனை நீ நடு
காலமும் கல்லும் வேறன்று
காலத்தின் கெட்டித்த உருவே கல்
5.விழா
குடிப்பகை உன் ஞானம்
பகை அழித்தல் உன் ஆண்மை
சிரங்களை சேகரித்து கோட்டைச்சுவரில் அலங்கரி
முலைகளைக்கொய்து கொத்தளங்களை வலுப்படுத்து
பச்சிளங் சிசுக்களில் தெய்வங்கள் வாழலாம்
தயங்காதே
தெய்வமே பகையையும் படைத்தது
அழித்தல் தெய்வாதீனமானது
வணங்குதல் தெய்வமாக்குவது
கொண்டாடு வணங்கு புகழ்பாடு
சாமக்கொடைகளில் எழட்டும்
ஆதியில் விழுந்த முதல்பலியின் விசும்பல்
நரபலி இடு
மதுக்குடுவைகளை அடுக்கு
நீறு பூசி சுடலையில் ஆடு
நிலமதிர நீ ஆடும்போதே
தெய்வம் இருப்பது புலனாகும்.
6.வாழ்த்துதல்
தியாகங்களில் முகட்டில்
கைவசமாகும் மாயச் சொல்
வஞ்சித்த கணத்திலும்
மடியில் வீழும் துயரச் சொல்
வீழ்ந்து நெற்றி நிலத்தில் அறைய
அப்போதே உருப்பெறும் துயரச் சொல்
சொற்கள் அனைத்தும் உன்னை நிலைக்கச் செய்யும்.
என் வாழ்த்தொலியில் நீங்கட்டும்
உன் வம்சம் எனக்களித்த சாபம்