இருண்ட திரையரங்கின் பேரொளி
நம் கண்களைக் கூசச்செய்யும்
தன் கோடானகோடி கரங்களால்
நம் மூளைக்குள் வேரோடி
அதை தன்வசப்படுத்துகிறது
அதன் பின் எதுவும்
நம் கையிலில்லை
நாம் உண்பது உடுப்பது
நினைப்பது மறப்பது
சிரிப்பது எரிப்பது
புண்படுவது
புணர்வது
எல்லாம் அப்பேரொளியின் அருளே
அப்பேரொளி நமக்கு
ஓர் கடவுளை அருள்கிறது
மொத்தவெளிச்சமும் அவர்மீதுபாய
மேடைமீது தோன்றுகிறார்
கையசைக்கிறார்
அவர் கருணை தாய்ப்பாலென
சுரந்து நம்மை மயக்குகிறது
அவர் அறிவிக்கிறார்
“நானே கடவுள்”
தாய்ப்பாலின் போதையில்
பதவசத்துடன் ஆமோதிக்கிறோம்
“நீரே மீட்பர்”
அப்பொழுது
நாம் நமக்காய் அழுபவரின்
கண்ணீரைச் சந்தேகிக்கிறோம்
நம் பிள்ளையின் மரணத்தை
நம் கணவனின் மரணத்தை
நம் மனைவியின் மரணத்தை
நம் பெற்றோரின் மரணத்தை
நம் ஓளியிழந்த வாழ்வை
அன்றாடத்தின் அலுப்பை
மறுதலிக்கிறோம்
அவர் தன் மெல்லிய குரலில் பாடுகிறார்
நாம் உன்மத்தம் கொள்கிறோம்
அவரின் பார்வை
மீச்சிறு ஸ்பரிசம்
நம்மை உய்விக்கும்
அதற்கீடாய் நம்மிடம் இருப்பதென்ன
உயிரையும் ஆன்மாவும் தவிர
அவற்றையும் தந்துவிட
முன்னகரும் பொழுது
அவர் விளக்கணைத்து விளையாடுகிறார்
கடவுளை நாமும்
நம்மைக் கடவுளும்
கூட்டுக்கலவி செய்துகொள்கிறோம்
விளையாட்டின் இறுதியில்
கடவுள் உச்சமடைகிறார்
வெட்கமின்றி
மதனநீரை
ஒருவர்மேல் ஒருவர்
தெளித்து விளையாடுகிறோம்
இவ்விளயாட்டில் இறப்பதும்
முக்திதான்
விளையாட்டு முடிந்தவுடன்
கறைபடிந்த ஆடைகளை
முகர்ந்துகொண்டே
வீடு திரும்புகிறோம்
அடுத்த தரிசனத்துக்கு ஆயத்தமாக
அருமை நண்பா!
நல்லா கருத்தா அண்ணா
Thanks
Thanks