இரவு மேய்ச்சல்

  • மனிதர்கள் மட்டும்…

 

வானம் 

வளைந்து நெளியும்படி 

வன்மையாய் 

தன் ஆயுதத்தை 

விவேகமாய் கீழே 

வீசி எறிந்து விட்டு பின்

மேலே ஏறிச் சென்று 

ஓடி ஒளிந்தது, இடி.

 

மின்னல்கள் தங்கள்

ஜன்னல்களை விட்டு 

வேகவேகமாய் வெளியேறி 

எதையோ

வெட்டி வெட்டி சாய்த்தன; 

பின் சரிந்து மறைந்தன. .

 

கனம் பொருந்திய 

கருமேகங்கள்,

வெண்மேகங்களோடு  வேகத்துடனும்

மோகத்துடனும் 

விரைந்து கொண்டிருந்தன. 

 

அடுத்த சில கணங்களில் 

கனத்த மேகங்கள்,  கவனமாய் 

ஏரி குளம் குட்டைகளின் 

நீர்மட்டத்தை 

சீர்படுத்தும் விதமாக 

பெரு மழையை பிரசவித்து 

பெரு மகிழ்வு கண்டது

 

இடி மின்னல்களின்  

இயக்கமும் தாக்கமும் 

இரவிலும் நீடிக்க

பூமி பூரணமாய் குளிர்ந்தது.

 

அருகே இருந்த 

அரசு மற்றும் 

அனைத்து மரங்களும் 

ஆனந்தக் கூத்தாடி 

அகம் மகிழ்ந்தன. 

செடி கொடிகள் 

செழுமை பெற்றன.

 

எங்கோ பதுங்கி இருந்த 

ஏரித் தவளைகள் 

ஒரே ராகத்தையே தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தன. 

 

சிட்டுக்குருவிகள் சிங்காரமாய் வட்டமிட்டபடி… புள்ளி மான்கள்

புதர் செடிகளைச் சுற்றி

துள்ளி விளையாடியபடி… 

 

ஒட்டுமொத்த பூமியும் உன்னதத்தை 

எட்டிப் பிடித்துக் கொண்டு 

இன்முகத்துடன் இருந்தது. 

 

மனிதர்கள் மட்டும் …

நடிப்புச் சமூகத்தின் 

நளினப் பார்வையிலும்

அரசியல் சமூகத்தின் 

ஆனந்தப் போர்வையிலும்

மதயானைகளின் 

மந்தார பிடியிலும்

மதுக்கூடங்களின் 

மயக்கும் நெடியிலும்  

ஒளிந்து கொண்டு….

 

தள்ளாடி தடுமாறியபடி  

தங்கள் மனங்களை 

சாக்கடை சகதிகளில் 

தொலைத்து விட்டு  

இன்னும் தேடியபடி 

திணறிக் கொண்டிருந்தார்கள் – 

 

  1. இரவு மேய்ச்சல்

 

அரை நூற்றாண்டைக் கடந்து 

ஆனந்த  ரூபினியாய் 

ஆற்றங்கரை ஓரத்தில் 

கம்பீரமாய் காட்சி தந்த 

கவின்மிகு  வேப்பமரம் 

இரவு 11 மணி அளவில் 

பையா எனும் பயலால்,

மன்னிக்கவும் 

புயலால் சீரழிக்கப்பட்டும், சின்னாபின்னமாக்கப்பட்டும் 

மண்ணில் சாய்ந்து கிடக்க, 

ஏராளமான ஆடு மாடுகள் அதன் மேல் மேய்ந்து கொண்டிருந்தன. 

 

பகலில் மட்டுமே 

பசி தீர்த்துக் கொண்டிருந்த இவை

இப்போதெல்லாம் 

இரவு மேய்ச்சலுக்கும் 

பழகிக் கொண்டு விட்டன. 

 

எல்லாம் 

மனிதர்களைப் பார்த்துத்தான்.

 

  1. அது மட்டும் எப்படி?

 

வீட்டிலிருந்து அலுவலகம் பின் 

அலுவலகத்திலிருந்து வீடு என மாறி மாறி

பல நாட்கள.

அலுப்புகளின் அரவணைப்போடு நாம்.

எழுவதும் குளிப்பதும் சாப்பிடுவதும் பின் அலுவலுக்கு செல்வதும்  அப்படியே தொடர்கிறது; 

எந்திரமாய்  

நம் வாழ்க்கை.

 

தன்னந்தனியனாய் தகித்தபடி, 

உணவு இன்றியும், 

உடைகள் இன்றியும்,

சிக்கல் சிரமங்களின் சிராய்ப்புகள் இன்றியும்,

ஒன்று, பத்து அல்ல;

கோடானு கோடி ஆண்டுகள்; 

எழுவதும் ஒளிர்வதும் 

பின்  மறைவதுமாய்

ஒரு நாளும் அலுப்பில்லாமல் 

இந்தக் கதிரவன். 

 

அது மட்டும் எப்படி?

 

  1. இனி மனம் தேரும். 

 

வீடு புதுசு 

பாட்டுக்கள் பழசு 

மெட்டுகள் மெலிசு 

இசைத் தட்டுகள் சொகுசு 

கேட்டது ஓசை 

நெருங்கியது ஆசை 

கிடைத்தது இசை 

இனித்தது இதயம் 

துளிர்த்தது இளமை 

இசைத்தேன் 

இனித்தேன் 

இனி…

திசை தோறும் 

தினம்தோறும் 

இசை ஊரும்

மனம் தேரும்.

 

  1. பலி

 

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் 

விதவிதமாய்   எலிகள்.

அவற்றை விரட்டி அடிக்க 

கைக்கொண்டோம்  

பற்பல வழிகள்.

கிட்டிகள்,

சின்ன சின்ன 

கூண்டு பெட்டிகள்,

வண்ண வண்ண  வத்திகள், வாசம் மீது தேங்காய் பத்தைகள்.

கடைசியில் கடைபிடித்தோம் நம்மாழ்வார்  வழி.

நலமுடன் நம் வீட்டில்

வளம் வருது 

இன்னமும் எலி.  

நாம் ஆகி விட்டோம் 

அதற்குப் பலி. 

 

இனி வேறு வழி?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *