1.
உலகம் அழகானது
உலகம் அருவருப்பானது
அழகானதின் அருகில் அருவருப்பானதும்
அருவருப்பானதில் அழகும் இருக்கிறது
விளக்கின் கீழே இருள் என்பதைப்போலவே
மொத்த உலகமும் உள்ளது
ஒரு நீர்த்துளி
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் பிரதிநிதி
ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும்
ஒரு நீர்த்துளியை பொறுப்பாக்க முடியும்
ஒன்றில் இருந்தே எல்லாம் ஆரம்பிக்கின்றன
பின்னோக்கிச் சென்றாலும் ஒன்றை தவிர்க்க முடியாது
துல்லியமாக இங்கே எதைச் சொன்னாலும்
அது அத்தனை துல்லியாக அமைவதில்லை
ஏறக்குறைய என்கிற வாதமே மிகச் சரியானது
சற்றேறக்குறைய என்று ஆரம்பிப்பது உசிதம்
ஒரு புல்லிற்கும்
ஒரு ஆலிற்கும் சமானமான மதிப்பினை அளிக்கிறேன்
ஒரு பாக்டிரியாவிற்கும்
ஒரு அனகோண்டாவிற்கும்
என்னிடம் பாரபட்சம் இல்லை
வாழ்க்கை துன்பமயமானது என்கிறவருக்கும்
வாழ்க்கை பேரின்பங்கள் நிறைந்தது என்பவருக்கும்
மத்தியமான புன்னகையை வழங்குகிறேன்
என் செயல்களில் நடுமையத்தை தவறவிடுவதில்லை
ஆனால் உன்னதங்கள் நிகழ்ந்த போதெல்லாம்
ஓன்றின் ஏதோ ஒரு பக்கத்தின் ஓரத்தில் சரிந்து இருந்திருக்கிறேன்.
துறப்பது தப்பித்தல்
தப்பித்து செல்வதின் வழிகளில்
துறந்துகொண்டே இருக்க வேண்டியுள்ளது
துறப்பதனால் துன்பம் குறைகிறது
துன்பம் இருப்பதை ஏற்பதனாலும்
இருப்பதை அள்ளிப் பதுக்கி பாதுகாப்பதினாலும் ஏற்படுகிறது
இருப்பது தலைமுறையாக இருக்கிறது
தலைமுறையின் ஒரு புள்ளியில் சிக்கல் நிகழ்கிறது
இருப்பது மெல்ல மெல்ல இல்லாமல் ஆகிறது
பெருங்கோட்டை துார்ந்து அத்துவான வெளி அமைகிறது
அத்துவான வெளிக்கு அருகே வேறொன்றும் இல்லை
தொடுவானத்தின் திசைகள் திகைப்பை அளிக்கின்றன
நீண்டு செல்லும் பார்வைக்கோணங்களை
மட்டுப்படுத்தும் ஒன்றை யாரோ வழங்கிவிட்டார்கள்
ஒரு தொலைவிற்கு மேல் பார்வைக்கு துல்லியங்கள் சிக்குவதில்லை
மொண்ணையாக இந்த உலகம் காட்சியாகிறது
மொண்ணையாக புலன்களில் பதிவாகிறது
மொண்ணையாக நம்மை நம்பச் செய்கிறது
இங்கே மொண்ணை என்பதே எங்கும் இல்லை
இத்தனைத் துார பயணமும் அலைதலும் அதன் பொருட்டே
நெருங்கிச் செல்வதே சத்தியத்தை அறியும் உபாயம்.
3.
மேலும் முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன
மேலும் பேராபத்துகள் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன
ஒரு கவிதையை எழுதுவன் மூலம்
ஒரு கவிதையை வாசிப்பதன் மூலம்
இருள் கூர்ந்த அன்றாடத்தை சற்று ஏமாற்ற முயல்கிறேன்
ஒரு நேரத்தில் என்னால் ஒருஅறைக்குள் மட்டுமே நுழைய முடிகிறது
உலகம் முழுக்க அறைகள் நிரம்பியிருக்கின்றன
அத்தனை அறைகளையும் வெற்றிடம் நிரப்பியிருக்கிறது
வெற்றிடத்தை கொலைசெய்தே நாம் பிரவேசிக்கிறோம்
அது தவிரக்க இயலாத வன்முறை
மெல்லிய காலடிகளை வைத்து
ஒலி எழுப்பாமல் ஒரு அறையைத் திறந்து
உள்ளே நுழைவது எத்தனைப் பெரிய வன்முறை என்பதை
ஒரு நாள் உணர்ந்தேன்
என் இருப்பை பெரும் சுமையாக அறிந்த கணம் அது
மிகச் சிறிய நுண் துகளில் இருந்து
எண்பெத்தெட்டு கிலோ எடையுள்ள உடம்பாக
என் இருப்பை அஞ்சுகிறேன்
என் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை
உடலுக்குள் இருப்பவை ஒரு வன்முறைக் கும்பல்
அதன் அபிலாசைகளை சதா நிறைவேற்றத் துடிக்கும்
அப்பாவி நான்