1.நிகழ்தகவின் நிஜம்.
ஒவ்வொரு முறையும்
நான் ஏன்
அங்குப்
பார்க்கிறேன் என்பதற்கு
பெரிதாக காரணமொன்றும் இல்லைதான்.
ஆனால்
அங்கிருந்து
ஏதோவொன்று
என்னை அழைத்த வண்ணமிருக்கிறது என்பது மட்டும்
உண்மை.
2.அறியாமையின் பித்து.
ஏதோவொரு இடத்திலிருந்து
கத்தும் பல்லிக்கு
என்ன தேவையோ.
உச்சிக் கொட்டிக் கொண்டே இருக்கிறாள்
இவளின்
தேவைகளுக்கான
சமிக்ஞையென.
3.வீழ்த்தியதன் அறம்.
களைப்பின்
ஓட்டத்தில்
தொலையக் கொடுத்த
பரிவைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
இவர்கள் தான்
என்னைச் சிறந்த
ஆட்டக்காரனென
பாராட்டுகள் செய்கிறார்கள்
பாதகமாக.
4.இன்னொரு புரிதல்.
கலைந்து கிடந்த
உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்
எனக்குள் நிதானித்து.
எப்படி இருப்பினும்
வாகாய்ச் செதுக்கித்தான்
அடிக்கி வைத்தேன்
பொறுமையின்
சாந்தத்தில்.
அறியாமையின்
பதிவுகளில்
கலைத்துவிட்ட
பாங்கினை
யாதொன்றும்
சொல்வதற்கில்லை
கசிவது உதிரமானாலும்.
இரக்கத்தின் எல்லாக் கதவுகளையும்
உடைத்துவிட்டு
ஓடிவிட்ட
உனக்காக
கதவுகளற்றுக் காத்திருக்கிறேன்
யாவையும்
புறந்தள்ளியவனாக
புரிதலுக்குட்டுத்தும்
பொறுப்புகள்
மேவிக் கிடப்பதால்.
ஒன்றுனக்குத் தெரியுமா
முன் நாளின் பொழுதுகளில்
நான் வீடழித்தக் கொடும்பாவி
மேலான உனக்கு முன்.
எஞ்சிய கணங்கள்
யாவிலும்
உனக்கானக் காத்திருப்பானது
இவ்விருத்தலென
நீ
அறியும் தருணம்
சிந்தும் கண்ணீர் துளிகளில்
வியாபிக்கும்
பாந்தம்
நேற்றைகளில்
எனக்கொருவர்
கரிசனத்தில்
இட்டதுதான்
இணைவதன் பிரவாகத்தில்.
5.மடமையெனும்
மந்தகாச முறுவல்.
சற்றைக்கு முன்
சிந்தியச் சிரிப்பு
உன்னுடையதாகவே இல்லை.
நிரப்பிய நிறமிகளின்
புற
வண்ணமேனோ வசீகரிக்காது
வரவழைக்கிறது கண்ணீரை.
இனியொரு முறை
சிரிப்பதாக
எதுவும் செய்துவிடாதே.
நீ
விட்டுச்சென்ற இதயத்தில்
வேறொரு முகமிருக்கிறது
உறவாடி.
***